வியாழன், 12 ஜனவரி, 2023

உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

 உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும், உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.
இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.
இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத் திரிகிறார்களே! தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.
மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.
தன்னைத் தயாராக (முக்தி) ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது. இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.
திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத் திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் (3 பதிக) அறியலாம். தன் நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது. “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.
“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”
“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”
“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”
“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “
“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”
“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”
“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “
“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”
“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”
“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”
என்ற வரிகள், நமக்கு எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
May be an image of 2 people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக