திங்கள், 22 டிசம்பர், 2014

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம்


மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? சத்குரு: காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத் தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள் இருக்கின்றன. ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?” என்றார். தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள் மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள் பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால், அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும் அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும். மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்? ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். பொதுவாக ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள் மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது. ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்; கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து நையாண்டி செய்கிறார்கள். ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று, “உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில் ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது. ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச் சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில் ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி, “அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’ என்று சொல்லுங்கள்” என்றார். அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி. “என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார். அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக் கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா, “முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி, அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி, “இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான் செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப் பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்பவில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும் கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார். அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக் குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார். சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி, சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன். நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால் ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை அடைய விரும்புகிறேன்,” என்றது. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான் என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக் கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில் அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில் கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு போனால்? சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும், கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள் எங்குதான் செல்ல முடியும்? சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.

திங்கள், 15 டிசம்பர், 2014

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள் பைரவர்


சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள் பைரவர் சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார். மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை. முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே. “ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா” மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம். கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது. “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா” மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம். தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! ஓம் அண்ணாமலையே போற்றி…!!! ஓம் சிவ சிவ ஓம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014


மாணிக்க வாசகர் கண்ட அதிசயம் உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார். நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும். வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார் மணிவாசகர். " எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே " என்பது அவ்வுயர்ந்த வரிகள் கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள். " கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு. ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின் அருள் கிடைக்கும். அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான், " நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன. உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா? கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர். " மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே." என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன. முழுப்பாடல் இதோ: " எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது


மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது ஞானசம்பந்தனின் திருநீற்றுப்பதிகம் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பதினென் திருமுறையில் போற்றி புகழப்படும் தென்பாண்டி நாட்டில் சைவ சமயம் வலிவிழந்து சமண சமயம் பரவி சமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய நேரத்தில் பாண்டிய மன்னாக இருந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை தழுவிஇருந்த காரணத்தால் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்கி நின்றதோடு, திருநீறு பூசிய சைவ சமயத்தை சார்ந்தவர்களைக் கண்டால் சமணர்கள் கண்டுமுட்டி என தீண்டத்தாகாதவர்களாக அவமரியாதை செய்து வந்தனர், அந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்தரசி மங்கையர்கரசியாரும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்றார்கள், அத்தருணத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் தங்கி இருந்தனர், அப்போது பாண்டியனின் பட்டத்தரசியும் அமைச்சரும் சமணர்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் சைவ சமயத்தை தழைத்திட செய்ய தம் பணியாட்களை அவர்களின் பால் அனுப்பி பாண்டிய நாட்டிற்கு அழைத்து வரும்படி செய்தார்கள், அப்போது அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரிடம் பாண்டியநாட்டில் சைவம் மறைந்து தீவிர வாத சமணம் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில் சமணர்கள் எதையும் செய்வார்கள் எனவே நாளும் கோளும் அறிந்து சென்று சைவத்தை நிலைநிறுத்த வேண்டினார், அப்போது நாள் என்செய்யும் கோள் என்செய்யும் நமச்சிவாய என்பதற்கு என கூறி கோளாறு பதிகம் பாடி பணியாட்களிடம் மதுரையில் சைவத்தின் நிலையினையும் அறிந்த பின் பாண்டிய நாட்டு பணியாளர்களுடன் பாண்டியநாட்டு மதுரை சென்றார்,மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் மதுரை சொக்கநாதர் ஆலகயத்தில் சம்பந்தரின் வருகைக்காக காத்து இருந்தனர், ஞானசம்பந்தர் வருகைகண்டு இருவரும் கண்களில் நீர்பொழிய சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினர் , பின் அவர்கள் இருவரையும் திருமடத்தில் தங்க வைத்தனர், இதை அறிந்த சமணர்கள் மன்னனிடம் ஒடோடி வந்து " மதுரைக்கு அந்தன சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவனாம் அவன் சமண சமயத்தை அவதூறு செய்யும் நோக்கில் எங்களை வாதில் வெல்ல வந்துள்ளானாம் ' என வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் கூறினார்கள், இதைக் கேட்ட மன்னன் மனம் கொதித்தது. அவனை வேரிலே கிள்ளியேறிய யாதாவது செய்யுங்கள் என சமண மதத்துறவிகளிடம் கூறினார், உடனே சமணர்கள் தங்கள் மந்திரத்தால் சம்பந்தர் தங்கிய மடம் தீ பிடிக்குமாறு மந்திரம் செபித்தனர், ஆனால் ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் பார்க்கும் திசையில் கூட மற்ற மந்திரங்கள் வலிமை நிற்காதல்லவா? சமணர்களின் மந்திரம் பலிக்கமாற் போயிற்று, அடியார்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவோடு இரவாக அம்மடத்திற்கு ஆட்களைக் கொண்டு தீயிட்டார்கள், அப்பாதர்களின் செயலை அறிந்தார் சம்பந்தர், ஆ என்ன கொடுமை எனப்பதறினார், உடனே திரு ஆலவாய் மேவிய ஐயனை எண்ணித் துதித்தார், பைந்தமிழ் பதிகம் பாடினார். "செய்யனே திரு ஆலவாய் மேவிய ஐயனே அஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே - த, வேதம் 3 இதற்கெல்லாம் காரணம் பாண்டிய மன்னன் தான் என உணர்ந்தார் சமணர்கள் இட்ட தீ பையவே சென்று பாணடியற்காக என பாடிய உடனே பாண்டியனை வெப்பு நோய் பற்றியது, வெப்பு நோய்யால் மன்னன் உடல் கருகியது, அனல் பெருகியது, அருகில் எவரும் நெருங்க முடியவில்ைல், என்ன மருந்தும் பயனில்லை, சமணர்கள் மயிற் தொகையால் தடவியும் மந்திரங்கள் பல கூறியும் அரசரின் வெப்பு நோயினை குறைக்க முயற்சித்தார்கள் ஆனாலும் பயனின்றி வெப்பு நோய் கூடியது, நடந்த செய்தியெல்லாம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்கள் அரசியும் மந்திரியாரும், வேந்தனுக்கு வெப்பு நோய் வந்ததை கேட்டனர் பரிதவித்தனர், செய்வதறியாது திகைத்து மன்னனிடம் ஞான சம்பந்தரின் வரவும் அவரின் பெருமையினையும் பக்குவமாக எடுத்துரைத்தனர், அச்செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னனின் வெப்பு நோயின் தாக்கம் குறையும் தன்மையினை மன்னன் உணர்ந்தான், எனது வெப்பு நோயை நீக்குபவர் யாரோ அவர் பக்கம் சேர்வேன் என மன்னன் முடிவு செய்தான், அமைச்சரும் அரசியாரும் திருஞானசம்பந்தரிடம் சென்று விழுந்து வணங்கி " பெருமானே சமணர்கள் செய்த தீமை வெப்பு நோயாக மன்னனை பற்றிக் கொண்டது சமணர்களால் அந்நோயை தீர்க்க முடியவில்லை, தேவரீர் உடற் பிணியை அகற்றியருளல் வேண்டும் என கண்ணீர் மல்க விண்ணப்பம் செய்து மன்னனிடம் அழைத்து வந்தார்கள், மன்னரின் எதிரே இருந்த மணிப்பீடத்தில் அமர்ந்தார் சம்பந்தர், சிவஞானச் செல்வரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வெப்பு நோய் தீவிரம் அடங்கியது, மன்னரின் இடபக்கத்தில் உள்ள நோயை சமணர்களும் வலது பாகத்தில் உள்ள நோயை சம்பந்தரும் நீக்குவது என முடிவு செய்தார்கள், சமணர்கள் தமது மந்திரத்தை சொல்லி மயிற்பீலியால் தடவினார்கள், வெப்பு நோய் மேன்மேலும் வளர்ந்தது, சம்பந்தர் " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செநதூர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே" எனும் பதிகம் பாடி திருநீற்றை மன்னின் வலப்பக்கத்தில் பூசினார் வெப்பு நோய் இருந்த இடம்தெரியாமல் நீங்கிற்று, இடப்புறத்தில் மேலும் அதிகமாயிற்று, மன்னனின் வேண்டு கோளின்படி இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசினார், மன்னன் உய்ந்தான், சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள், கண்டுமுட்டி எனக்கூறும் சமணர்கள் திருநீற்றைக்கண்டதும் ஓடி ஒதுங்கினர்,மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சரும் மனம் மகிழ்நதனர், பாண்டியநாட்டில் சமயம் தழைக்க இவ்வாறு நீர்விட்டு சமயம் தழைக்க செய்தனர், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

திங்கள், 1 டிசம்பர், 2014

Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்

Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்: விபஸ்ஸனா என்றால் என்ன? விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான...