வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தமிழ் மக்களின் தவப்பயனாகத் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள் பன்னிரு திருமுறைகள். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங் களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஷ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார்

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.

இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும். பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864)இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவி னார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதார மாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக்கூடத்தி லும், புட்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக் கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக