ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உண்மையான அன்பு திருமணமான புதிய தம்பதியர் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது முள் ஒன்று அந்த பெண்ணின் காலில் தைத்தது. அதை கண்டு பதறிப்போன அவன் கணவன் , அவளது பிஞ்சு காலில் இருந்த அம்முள்ளை பிடிங்கி "சனியனே " என்று அந்த முள்ளை ஏசிக் கொண்டு தூக்கி எறிந்தான். பின் பத்து வருடம் கழித்து அதே பாதையில் கணவன் மனைவி இருவரும் நடந்து வரும்போது ஒருநாள் அதேபோல ஒரு முள் அவளது காலில் முள் ஒன்று குத்தியது, அவள் கத்தினாள் அவள் குரலைக் கேட்ட கணவன் திரும்பிப்பார்த்து அவன் முகம் சுளித்தான் அன்று அவளை பார்த்து " சனியனே " பார்த்து வரக்கூடாது?" என்றான், ஆக பத்து வருடத்தில் சனி இடம் பெயர்ந்து விட்டதே முள் மீது இருந்த சனி மனைவி மீது பெயர்ச்சி ஆகி விட்டதே. நாளாக ஆக மனத்தில் அன்பு தேய்ந்து விட்டது குறைந்து விட்டது என்பதே உண்மை. நாம் இறைவனை வழிபடும் போது நிறைந்த அன்புடனே அவனை வழிபட வேண்டும் அதாவது என்றும் மாறத குறையாத அன்புடன் வழிபட வேண்டும். சாக்கிய நாயனார் புத்த சமயம் தழுவியவர், அவர் பின்னாளில் சிவனிடம் நீங்காத அன்பு கொண்டார். சிவனை வணங்கினார். தான் சார்ந்த சமய உடையையே அணிந்து வந்தார். தன் சமயவாதிகளுக்கு தெரியா வண்ணம் சிறுகல்லை எடுத்து பூவாக எண்ணி அதை சிவலிங்கத்தின் மீது போட்டார். தொடர்ந்து அவ்வாறே வழிபட்டு வந்தார். இறைவனும் அதனை ஏற்றுக் கொண்டார். மாறாக மன்மதன் ஒருமுறை மலர்களை ஆணவ மிகுதியுடன் மலர்களை அம்பாக எண்ணி இறைவன் மீது தொடுத்தான் அதை உணர்ந்த இறைவன் அவனை தண்டித்தார். வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பர் சிவன்மேல் அளவிலா காதல் கொண்டார். வேடுவராக பிறந்த அவருக்கு சிவவழிபாடு செய்து பழக்க மில்லை இருந்த போதும் சிவன் மீது கொண்ட காதல் மிகுதியானது. பெருமானை நீராட்ட எண்ணினார் தன் வாய் நிறைய ஆற்று நீரை எடுத்து வந்து உமிழ்ந்து அவரை நீராட்டினார், பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்து அவற்றில் நல்லலைகளை மட்டுமே படைத்தார். நல்ல மலர்களை தன் தலையில் சூடிக் கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டினார், இறைவன் கண்ணில் இத்தம் வந்ததைக் கண்டு சற்றும் தளராது உடனே தன் ஒருகண்ணை ஈட்டியால் தோண்டி ஈசனக்கு ஈந்தார் மேலும் இறைவனின் இன்னொரு கண்ணிலும் ரத்தம் வருவதை கண்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வழங்க முற்பட்டார் அப்போது அடையாளமாக தனது செருப்பணிந்த காலை இறைவன் கண் அருகில் ஊன்றி தனது கண்ணை பிடுங்கி இறைவனுக்கு ஈந்தார்.இதனை மாணிக்க வாசகர் " செருப்புற்ற சீறடி வாய்கலசம் ஊண் அமுதம் விருப்புற்று வேடனார்" என்றும், கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்றும் பாடுகிறார். நாம் செய்யத்தகாதன என்கிற செயல்களையும்கண்ணப்பர் அன்பின் மிகுதியால் செய்திறார். அடியார்களது செயல்களை காட்டிலும் அவர்கள் எண்ணமே முதன்மை ஆகிறது நம்உள்ளக்கிடக்கை அறிந்து அருள்பவன் அல்லவா இறைவன்? பச்சிளம் குழந்தை நம்மார்மீது உதைக்கும்போது அதன் உள்ளக் கிடக்கையான அன்பு ஒன்றையே நாம் காண்கிறோம். இறைவனை நோக்கும்போது நாம் அனைவரும் அவனுக்கு குழந்தைகள்தானே நமது உண்மை அன்பினால் தவறு செய்தாலும் நம்வழிபாட்டை அவன் ஏற்றுக் கொள்வான் அந்த அன்பு என்றும் நீங்காத மாறாத தேயாத அன்பாக இருக்க வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக