திங்கள், 30 டிசம்பர், 2013


சும்மா இரு ..... சொல் அற ! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும். நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார். பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும். இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக