செவ்வாய், 23 டிசம்பர், 2014

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை


பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். "வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம். "தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து " முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள். அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால், 1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர் " பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே" என்கிறார் தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார். 2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும் " பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே" - சம்பந்தர் கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ! நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும் 3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும் " ஞானசம்பந்ன் சொல் சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே" " அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே" மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம். 4. மறுபிறப்பு இல்லையாகும், திருஞானசம்பந்தரிடம் ஒருவர் " இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் " எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் " இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது" என்றார், அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் " தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், " என்றார் சம்பந்தர் "கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே" வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா? 5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும் துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும் அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" - அப்பர் அடிகளார் சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர் சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம் அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர் இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார் " கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே" என்றாகும் 6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம் "செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ் செல்வமாம் இவை செப்பவே" - சம்பந்தர் அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம், இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள் வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !! திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக