வியாழன், 26 மார்ச், 2015

நடராஜ பத்து....


நடராஜ பத்து..... பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே, பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பேன் ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே பாடல் : 2 மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட, மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட, கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட, குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட, ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட, நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட, வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் : 3 கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும் உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே! தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் : 4 வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய் ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் 5: நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ, விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏ இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் 6: வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும் மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் : 7 அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று உணர்வனோ தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் : 8 காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை யென்றனோ தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் 9 : தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ ‏ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் 10 : ‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏ இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ ‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ, ஓஹோ ‏ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. பாடல் 11 சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பனியொத நட்சத்திரங்கள் இருபதிஎழையும் பக்குவப்படுத்தி பின்னால் பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டி பலரையும் அதட்டி என்முன் கனிபோலவே பேசி கடுநினைவு நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டர்கள் தொண்டர்கள் தொழுதனாக்கி இனியவள மருவு சிருமணவை முனுசாமிஎனை ஆள்வதினி உன்கடன்காண் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே மேற்கண்ட இந்த பத்து பாடல்களும் நடராஜ பத்து. பாடலாசிரியர் - சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

திங்கள், 23 மார்ச், 2015

நேச நாயனார் குரு பூசை நாள்


நேச நாயனார் குரு பூசை நாள் நேச நாயனார் குரு பூசை நாள் நாள் ; 25.03.2015 புதன் கிழமை நாமும் வணங்குவோம் அவர் அருள் பெறுவோம் அன்னார் வரலாறு; பெரிய புராணம் கூறு்ம் வரலாறு சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங் கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக் கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார் சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந் திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப் பரலோக முழுதாண்ட பான்மை யாரே. காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார். திருச்சிற்றம்பலம். சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல் சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது, "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார்" எனத் திருத்தொண்டர் புராணத்தும், "மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏலவே அறியப்பட்டதொன்றே. நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்திமை யொழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, "ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும். திருச்சிற்றம்பலம். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 19 மார்ச், 2015

இறைவன் கருணையே கருணை


இறைவன் கருணையே கருணை சிவபெருமானார் பக்தர்களுக்காக பழி ஏற்றது அளவிடற்கரியது வில்லால் அடித்தான் விஜயன்; அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியது: பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் தெய்வப் படைக் கலங்களைப் பெற வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் முன்னிலையில் வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி, ஒரே சமயத்தில் ஒரு பன்றியைத் தாமும் அருச்சுனனுமாக எய்து வீழ்த்தி, அதனால் மாறுகொண்டு, இருவரும் ஒருவரோடொருவர் போர் செய்து, அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பினை ஏற்று, பின்னர், தம் தெய்வக் காட்சியோடு அவனுக்குப் பாசுபதக் கணையையும் அம்பறாத் தூணியையும் அருளினார். கல்லான் அடித்தான் சாக்கிய நாயனார்; 21. சாக்கிய நாயனார்: இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தும் பேரின்பப் பேற்றை அருளவல்லது சிவலிங்க வழிபாடே எனத் தேர்ந்து, தன் சமயத்துப் புறத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமலேயே சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். கல்லையே மலராகக் கொண்டு, ஒரு நாளும் தவறாமல் வழிபட்டு, சிவபெருமான் திருவருளில் கலந்தார். சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவர். காலால் மிதித்தான் கண்ணப்பன்; கொடுமரக் கிராதன்: வில் தாங்கிய வேடன் என்னும் பொருள்படும் இச் சொல் கண்ணப்பரைக் குறிக்கும். கண்ணப்பர் வேடர் குலத்தினர்; காளத்தி மலைக்கு அருகில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றிருந்தார்; அப்பொழுது தற்செயலாகக் காளத்திநாதர் திருவுருவை மலை உச்சியில் கண்டு, அவரிடம் ஈடுபாடு கொண்டார்; மெய்யன்பினால் வழிபட்டார்; வழக்கமாக அங்குச் சிவகோசரியார் செய்து வந்த மறை விதி வழிபாடு ஏற்றது அன்று என்று எண்ணினார். தமக்கு உவப்பானவற்றையே இறைவனுக்கும் உவப்பாக எண்ணிப் படைத்தார். சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வரக்கண்டு, தம் கண்ணைப் பெயர்த்துச் சிவபெருமான் வலது கண்ணில் வைத்து மகிழ்ந்தார்; பின் சிவனாரின் இடது கண்ணிலும் குருதி வருவதை அறிந்த கண்ணப்பர், தனது இன்னாெரு கண்ணையும் பியர்தது எடுத்து இறைவரின் கண்ணை அடையாளம் காண தன் காலால் சிவனாரின் இடது கண்ணில் ஊன்றி அடையயாளம் இட்டு தன் கண்ணை அவ்விடதத்தில் இதனால் கண்ணப்பர் ஆறு நாட்களில் திருவருளுக்கு இலக்கானார்; அன்பின் எல்லையாகப் போற்றப் பெறுபவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். பிரம்பால் அடித்தான் பாண்டியன்; மண் சுமந்தது: வையை நதியில் வெள்ளம் பெருகி, மதுரையை அடுத்து வந்தது. அரசன் ஆணையால் குடிமக்கள் எல்லாரும் கரையைப் பங்கிட்டு, அணையிட்டார்கள், வந்தி என்னும் கிழவிக்கு ஆள் இல்லாமையால், அவள் கூலிக்கு ஆள் தேடினாள். அப்பொழுது அவள் விற்கும் பிட்டையே கூலியாக ஏற்றுக் கொண்டு, கரையிடுவதாக ஒரு கூலி ஆள் கிடைத்தான்; ஆனால் மற்றையார் பங்கெல்லாம் அடைபடவும், வந்தியின் பங்கு மட்டும் அடைபடாதிருந்தது. அவள் அனுப்பிய ஆள் ஆடுவதும் பாடுவதும் பிட்டு உண்பதும் ஆக இருக்கின்றானே அல்லாமல், வேலை செய்யவில்லை என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன், அந்தக் கூலி ஆளை வெகுண்டு, முதுகில் அடித்தான். அந்த அடி எல்லா உலகிலும் எல்லார் மேலும் பட்டது; வெள்ளமும் வடிந்தது; கூலிஆளும் மறைந்தான். இது இறைவன் திருவிளையாடல் என்பதை யாவரும் உணர்ந்தனர்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

உங்கள் சிந்தனைக்கு சில:


உங்கள் சிந்தனைக்கு சில: அலைகள் நிறைந்த கடலில் அல்லி தோன்றாது. ஆசைகள் அலைபாயும் மனத்தில் ஆண்டவன் தோன்றுவதில்லை. ஆசைகள் குறையகுறைய ஆண்டவனை நெருங்கலாம் மதம் என்பது மனத்தில் ஓழுக்கத்தை வளர்க்க ஏற்படுத்தப்பட்டவையே. சமரசம்தான் சமயத்தின் அடிப்படை அஞ்சாமை ஆயுளை வளர்க்கும் அச்சம் ஆயுளை குறைக்கும் நல்லவர்கள் ஒழுக்கசீலர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே நாம் செய்யவேண்டும் அவரவர் தகுதிக்கேற்ப தான தருமங்கள் செய்யவேண்டும். நம் மனச்சாட்சி என்ற கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு செயல் செய்யும் போதும் எண்ண வேண்டும். கோபம் அன்பை அழிக்கின்றது. ஆணவம் அடக்கத்தை அழிக்கின்றது, நிதானமும் கடின உழைப்பும் வெற்றியின் வேர்கள் துன்பத்தை மறக்கலாம், ஆனால் அதன் மூலம் பெற்ற பாடத்தை மறக்கக் கூடாது. துன்பங்கள்நிறைந்த மனிதப்பிறவியை கடக்க இறைவனை செபித்துக்கொண்டே இருக்க வேண்டும் இறைவிடம் சரணடைந்தால் விதியே மாற்றப்பட்டு விடும் பிற உயிர்கள் நம்மால் எவ்விதத்திலும் துன்பப்படக்கூடாது பொது சொத்தில் ஆசை வைக்கவே கூடாது. எல்லாம் இறைவருடைய செயல் என்று கவலையின்றி வாழ்க்கை நடத்த வேண்டும். திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 13 மார்ச், 2015

சித்தர்கள் யார்?


சித்தர்கள் யார்? சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்… தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே! என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். அகத்தியரும்.. மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; ……………. மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே! என்கிறார். ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே! சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும். “ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “ - இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம். ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள். சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 12 மார்ச், 2015

திருஐந்தெழுத்தின் ஆற்றல்


திருஐந்தெழுத்தின் ஆற்றல் " நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத் (து) அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே." - திரு ஞானசம்பந்தர் தேவாரம் 3 நல்லவர, தீயவர், என்பது இன்றி அன்புடன் விரும்பி திருஐந்தெழுத்தை செபிப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கட்குச் சிவமுத்தியை (பிறவாமை) அளிக்கும் ஆற்றலுடையவன திருஐந்தெழுத்தாகும் ( சிவாயநம) எமதூதர்கள் உயிரைக் கொண்டு செல்லும் மரணத்தறுவாயில் உண்டாகும் துன்பத்தை போக்குவனவும் திருஐந்தெழுத்தே ஆகும். "ஆதி மந்திரம் ஐந்தெழுத்து" என்பார் சேக்கிழார் சுவாமிகள். எல்லா மந்திரங்கட்கும் மூலமாய மந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும். இம்மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரம் உலகில் வேறு இல்லை. இதைச் செபித்தால் மற்ற எல்லா மந்திரங்களையும் செபித்தது போல ஆகும். புண்ணியர்கள், பாவிகள், யாவரும் இம்மந்திரத்தை செபிக்கலாம். என்பது திருஞானசம்பந்தரின் திருவுள்ளமாகும். தீயவரையும் புண்ணியவானாக மாற்றும் அரும்பெரும் ஆற்றல் இம்மகாமந்திரத்திற்கு உண்டு என்பதை அவரவர் அனுபவத்தால் உணரலாம், மரணத்தின் போது ஏற்படும் துன்பத்தையும் இல்லாமல் செய்யும் வலிமை உடையன திருஐந்தெழுத்து ஆகும். காலை , நண்பகல், மாலை உறங்குவதற்கு முன் ஆகிய காலங்களில் 108 முறை செபித்தால் நல்ல பலன் பெறலாம். இது குறித்து ஞானசம்பந்தன் கூறிய கருத்துக்கு மறுப்பு ஏது இவ்வுலகில், திருச்சிற்றம்பலம், ஓம் நமசிவாய ஓம் நன்றி: தமிழ் வேதம்

புதன், 11 மார்ச், 2015


நாலுபேர் சென்ற வழியில் தான் நாமும் செல்லவேண்டும் நம்முடைய பெரியவர்கள் " நாலுபேர் போன வழியில் செல்லுங்கள் , புதிய வழி தேவையில்லை," என்று கூறியுள்ளார்கள். இதன் உட்பொருள் தெரியாத காரணத்தால் இன்று மக்கள் பலப்பல வேண்டாத வழிகளில் சென்று பொருள் நட்டமும், துன்பமும் அனுபவிக்கின்றார்கள். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும். இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும். ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும். தேனைப்படும் மேல் வினையும் செய்யும். அறிந்தும், அறியாமலும் செய்த நம்முடைய பழைய வினைகள் யாவும் நீக்கி, இம்மையில் நலன்களையும், மறுமையில் முத்தியையும் அளிக்கும் கடவுள் சிவபெருமானார் ஒருவரே ஆகும். ஒரு ஊருக்கு ஒரே தலைவர்தான். ஒரு மாவட்டத்திற்கு ஒரே ஆட்சியர் தான். ஒரு மாநிலத்திற்கு ஒரே முதலமைச்சர்தான். ஒரு நாட்டிற்கு ஒரே பிரதம மந்திரிதான். இதைப்போல உலகைக் காத்தருளுவதற்கும் ஒரே கடவுள்தான். இரண்டு இருக்க முடியாது. அத்தகைய கடவுளை நால்வர் பெருமக்கள் " சிவம்" என்றார்கள். சிவபெருமான் அன்றி மற்ற தெய்வங்களை மறந்தும் தொழாதவர்கள் இப்பெருமக்கள். " பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்" - சம்பந்தர் தமிழ் திருமுறை 3 சிவபெருமானாரை வணங்கினால் திதிகள், கோள்கள், நட்சித்திரங்கள் ஆகிய யாவும் நல்லவனவே செய்யும் என்கிறார் ஓதாமல் உணர்ந்த திருஞான சம்பந்தர் சுவாமிகள். " என்பொடு கொம்பொடு ஆமை இவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." - சம்பந்தர் ( கோளாறு பதிகம்) இதன் தெளிவுரை: எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, ஆகியன மார்பில் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்த மலர் மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்து, உமையுடன் சிவபெருமானார் எருதேறி வந்து உள்ளத்ததில் எழுந்தருளியிருப்பதால், அசுவனி முதலாக உள்ள நட்சத்திரங்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு,பதிென்ட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் , பிறவுமான நட்சித்திரங்கள் அடியார்கட்கு நல்லனவற்றையே செய்யும். "உருவளர் பவளமேனி யொளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." சம்பந்தர் தெளிவுறை:அழகிய பவளம் போன்ற திருமேனியல் ஒளியுடைய திருவெண்ணீற்றை அணிந்து, நறுமணம் பொருந்திய கொன்றை, சந்திரன் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபெருமானார் உமையுடன் வெள்ளை விடைமீது ஏறிவந்து, என் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காரணத்தால் திருமகள் துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையும், மற்றும் பிற நல்லனவற்றையும் அடியார்கட்டு அளிப்பார். திருநாவுக்கரசர் சுவாமிகள் காட்டிய வழி: " என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்குஎதிர் ஆவரும் இல்லை சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார் பொற்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து ளோமே," தெளிவுரை: இறந்த பிரம்ம விட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்துள்ள புண்ணியராகிய சிவபெருமானாருடைய திருவடியே சேரப் பெற்றோம், ஆதலால் யாவர்க்கும் என்றும் நாம் பின் வாங்க மாட்டோம். நமக்க இப்பூமியில் இணையானவர் யாரும் இல்லை. சிறுதெய்வங்களை வணங்கவே மாட்டோம். ஒரு குறையும் இல்லை. நோய்களும் நம்மை விட்டுத் தொலைந்தன. சுந்தரமூர்த்தி சுவாமிகள்: " விரையார் கொன்றையினாய் விமலா இனி உன்னையல்லால் உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும் திரையார் தண்கழனித் திருமேற்றளி உறையும் அரையா உன்னையல்லால் அறிந்து ஏத்துமாட்டேனே." - சுந்தரர் த,வே, 7 தெளிவுரை: நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவரே, தூயவரே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகள், நிறைந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற முழுமுதற் பொருளே, அடியேன் என் உடலில் உள்ளவரையில் தங்களையன்றி பிறரை "கடவுள்" என்று என் நாவினால் சொல்ல மாட்டேன். தங்களையன்றி பிறரை மதித்து போற்றவும் மாட்டேன். மாணிக்க வாசகர்: "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே." தெளிவுரை: சிறந்த தலைவரே, இறைவரே, இந்திரன் திருமால், பிரமன் ஆகியோர்களின் பதவியைக் கொடுத்தாலும், கொள்ள மாட்டேன் என் குடிப்பெருமையே அழிந்தாலும் (அழியாது என்பது பொருள்) தங்களுடைய அடியார்களுடன் மட்டுமே நட்பு கொள்வேன், அதனால் நரகமே வந்தாலும் அதனை ஏற்பேன். தங்களுடைய திருவருளால் இருக்க நேர்ந்தால் தங்களையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன். " சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்" - தமிழ் திருமுறை 8 நால்வர் பெருமக்கள் காட்டிய பாதை அல்லது நாலு பேர் சென்ற பாதை முழுமுதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரை மட்டுமே வழிபட்டு நலம் பெறுவதாகும்,மறந்தும் பிற சிறு தெய்வங்களை எந்நிலையிலும் வழிபடாத நிலையாகும். நால்வரும் கூறியுள்ள மந்திரம்: நால்வரும் "சிவாய நம " என்னும் மகாமந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார்கள், "கொலவாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத்தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே," - சம்பந்தர் தேவாரம் கொலைத் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், நற்குணமும், நல்லொழுக்கமும் இல்லாவர் ஆயினும் திருஐந்தெழுத்தை ( சிவாயநம) உச்சரிப்பார்களேயானால் எல்லா விதத் தீங்குகளின்றும் நீங்குவர், செலவில்லாத எளிய வழி, உரிய வழியும் இதுவே ஆகும். சடங்கு, சம்பிரதாயம், ஆகியவற்றை விடுத்து, நாலுபேர் ( நாலவர் பெருமக்கள்) சென்ற வழியில் நாமும் சென்று பிறவிப் பயனை அடைவோம். திருச் சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!! மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வியாழன், 5 மார்ச், 2015

VASI YOGAM TAMIL: வாசி-யோகப்-பயிற்சி

VASI YOGAM TAMIL: வாசி-யோகப்-பயிற்சி: வாசி-யோகப்-பயிற்சி     ஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதி...

செவ்வாய், 3 மார்ச், 2015

"முருகா" என்றால்...........................


"முருகா" என்றால்........................... வரும் மாசி பெளர்ணமியன்று மாசிமகத் திருநாளில் "முருகா" என்னும் திருநாமத்தை மனம் உருகி ஒருமுறை கூறினாேல போதும் அவன் மயிலேறி ஓடி வந்து மனிதர் தம் மனக் குறைகள் அனைத்தையும் நீக்கியரு்ள்கிறான். முருகு என்ற சொல்லுக்கு அழகு , மணம், இளமை, கடவுள் தன்மை என்னும் பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்களுக்கெல்லாம் இலக்கணமாய் திகழும் திருவுருவம் முருகப் பெருமானின் பேரழகு்த் திருவுருவம். பார்த்தவுடன் மனதுக்கு அமைதியைத் தரக் கூடியது முருகப் பெருமானின் கருணை ததும்பும் முகம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஞானத்தின் உருவாய் தோன்றியவர் முருகன். மனிதர் மனத்தில் தோன்றும் அறியாமை, அகந்தை, முதலிய இருளை போக்கும் ஞானப் பேரொளியே முருகன். உலகம் உய்வதற்காக சிவப் பரம்பொருளே முருகனாகத் தோன்றினார், அன்னை பராசக்தியே கந்தன் கையில் வேலாக இருக்கிறாள். ஆதலால் முருகன் சிவசக்தி ஐக்கிய சொரூபனாக இருக்கிறான். " முருகா" என்னும் திருநாமத்தை உள்ளம் உருக உருகினாலே போதும் உருகியவரின் மனக்கவலைகள் யாதும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்பிறப்பில் தேவையான அனைத்து அன்பங்களையும், இப் பிறவி முடிந்து விண்ணுலக இன்பங்களையும் அருள்கிறான். அதாவது இகபர சுகங்கைள அருள்வதில் நிகரில்லாதவன் முருகன். சிவனுக்கும் அம்பிகைக்கும் மைந்தனாக விளங்கும் முருகன் திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் மருமகனாக விளங்குபவன். எனவே முருகனை வணங்குபவரகளுக்கு அவர்களும் எல்லா செல்வ வளங்களையும் வாரி வழங்கு கின்றனர், சூரபத்மனையும் அவன் கூட்டத்தினரையும் அழிப்பதற்காகவே முருகப் பெருமான் திருவ வதாரம் நிகழ்ந்தது. எனினும் இதன் மூலம் நாம் அறியும் உண்மை யொதெனில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழிப்பதற்காக தோன்றிய ஞானமே முருகன் என்பது. மேலும் முருகன் தமிழக் கடவுள் என்று அழைக்கப்படுவதன் காரணம் வள்ளி தெய்வானை என்ற தேவியா்களின் மகிமைகள் முருகனின் அடியார்களான நக்கீரர், ஆதிசங்கரர், குமரகுருபரர் ஆகியவர்களின் நூல்கள் வரலாற்றிலும் மருகனின் தனிப்பெரும் கருணையினை அறியலாம், ஞான சொரூபமான முருகனை வணங்குவோர்க்கு ஞானம், முக்தி, போன்ற கிடைத்தற்கறிய பேறுகள் அனைத்தும் கிடைக்கும், இந்த மாசி மகத் திருவிழா திருச் செந்தூர் மிகவும் சிறப்பு பெற்றது. மாசி மகத்தன்று பெருந்தேர் விழாவும், அதனை அடுத்து தெப்ப திருவிழாவும் சிறப்பு பெற்றது. கண்டு சுப்பிர மணி என்ற குமரபெருமான் அருள் பெற்றுய்ய் அன்புடன் வேண்டுகிறோம். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com