புதன், 11 மார்ச், 2015


நாலுபேர் சென்ற வழியில் தான் நாமும் செல்லவேண்டும் நம்முடைய பெரியவர்கள் " நாலுபேர் போன வழியில் செல்லுங்கள் , புதிய வழி தேவையில்லை," என்று கூறியுள்ளார்கள். இதன் உட்பொருள் தெரியாத காரணத்தால் இன்று மக்கள் பலப்பல வேண்டாத வழிகளில் சென்று பொருள் நட்டமும், துன்பமும் அனுபவிக்கின்றார்கள். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும். இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும். ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும். தேனைப்படும் மேல் வினையும் செய்யும். அறிந்தும், அறியாமலும் செய்த நம்முடைய பழைய வினைகள் யாவும் நீக்கி, இம்மையில் நலன்களையும், மறுமையில் முத்தியையும் அளிக்கும் கடவுள் சிவபெருமானார் ஒருவரே ஆகும். ஒரு ஊருக்கு ஒரே தலைவர்தான். ஒரு மாவட்டத்திற்கு ஒரே ஆட்சியர் தான். ஒரு மாநிலத்திற்கு ஒரே முதலமைச்சர்தான். ஒரு நாட்டிற்கு ஒரே பிரதம மந்திரிதான். இதைப்போல உலகைக் காத்தருளுவதற்கும் ஒரே கடவுள்தான். இரண்டு இருக்க முடியாது. அத்தகைய கடவுளை நால்வர் பெருமக்கள் " சிவம்" என்றார்கள். சிவபெருமான் அன்றி மற்ற தெய்வங்களை மறந்தும் தொழாதவர்கள் இப்பெருமக்கள். " பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்" - சம்பந்தர் தமிழ் திருமுறை 3 சிவபெருமானாரை வணங்கினால் திதிகள், கோள்கள், நட்சித்திரங்கள் ஆகிய யாவும் நல்லவனவே செய்யும் என்கிறார் ஓதாமல் உணர்ந்த திருஞான சம்பந்தர் சுவாமிகள். " என்பொடு கொம்பொடு ஆமை இவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." - சம்பந்தர் ( கோளாறு பதிகம்) இதன் தெளிவுரை: எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, ஆகியன மார்பில் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்த மலர் மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்து, உமையுடன் சிவபெருமானார் எருதேறி வந்து உள்ளத்ததில் எழுந்தருளியிருப்பதால், அசுவனி முதலாக உள்ள நட்சத்திரங்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு,பதிென்ட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் , பிறவுமான நட்சித்திரங்கள் அடியார்கட்கு நல்லனவற்றையே செய்யும். "உருவளர் பவளமேனி யொளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே." சம்பந்தர் தெளிவுறை:அழகிய பவளம் போன்ற திருமேனியல் ஒளியுடைய திருவெண்ணீற்றை அணிந்து, நறுமணம் பொருந்திய கொன்றை, சந்திரன் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபெருமானார் உமையுடன் வெள்ளை விடைமீது ஏறிவந்து, என் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காரணத்தால் திருமகள் துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையும், மற்றும் பிற நல்லனவற்றையும் அடியார்கட்டு அளிப்பார். திருநாவுக்கரசர் சுவாமிகள் காட்டிய வழி: " என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்குஎதிர் ஆவரும் இல்லை சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார் பொற்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து ளோமே," தெளிவுரை: இறந்த பிரம்ம விட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்துள்ள புண்ணியராகிய சிவபெருமானாருடைய திருவடியே சேரப் பெற்றோம், ஆதலால் யாவர்க்கும் என்றும் நாம் பின் வாங்க மாட்டோம். நமக்க இப்பூமியில் இணையானவர் யாரும் இல்லை. சிறுதெய்வங்களை வணங்கவே மாட்டோம். ஒரு குறையும் இல்லை. நோய்களும் நம்மை விட்டுத் தொலைந்தன. சுந்தரமூர்த்தி சுவாமிகள்: " விரையார் கொன்றையினாய் விமலா இனி உன்னையல்லால் உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும் திரையார் தண்கழனித் திருமேற்றளி உறையும் அரையா உன்னையல்லால் அறிந்து ஏத்துமாட்டேனே." - சுந்தரர் த,வே, 7 தெளிவுரை: நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவரே, தூயவரே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகள், நிறைந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற முழுமுதற் பொருளே, அடியேன் என் உடலில் உள்ளவரையில் தங்களையன்றி பிறரை "கடவுள்" என்று என் நாவினால் சொல்ல மாட்டேன். தங்களையன்றி பிறரை மதித்து போற்றவும் மாட்டேன். மாணிக்க வாசகர்: "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே." தெளிவுரை: சிறந்த தலைவரே, இறைவரே, இந்திரன் திருமால், பிரமன் ஆகியோர்களின் பதவியைக் கொடுத்தாலும், கொள்ள மாட்டேன் என் குடிப்பெருமையே அழிந்தாலும் (அழியாது என்பது பொருள்) தங்களுடைய அடியார்களுடன் மட்டுமே நட்பு கொள்வேன், அதனால் நரகமே வந்தாலும் அதனை ஏற்பேன். தங்களுடைய திருவருளால் இருக்க நேர்ந்தால் தங்களையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன். " சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்" - தமிழ் திருமுறை 8 நால்வர் பெருமக்கள் காட்டிய பாதை அல்லது நாலு பேர் சென்ற பாதை முழுமுதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரை மட்டுமே வழிபட்டு நலம் பெறுவதாகும்,மறந்தும் பிற சிறு தெய்வங்களை எந்நிலையிலும் வழிபடாத நிலையாகும். நால்வரும் கூறியுள்ள மந்திரம்: நால்வரும் "சிவாய நம " என்னும் மகாமந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார்கள், "கொலவாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத்தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே," - சம்பந்தர் தேவாரம் கொலைத் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், நற்குணமும், நல்லொழுக்கமும் இல்லாவர் ஆயினும் திருஐந்தெழுத்தை ( சிவாயநம) உச்சரிப்பார்களேயானால் எல்லா விதத் தீங்குகளின்றும் நீங்குவர், செலவில்லாத எளிய வழி, உரிய வழியும் இதுவே ஆகும். சடங்கு, சம்பிரதாயம், ஆகியவற்றை விடுத்து, நாலுபேர் ( நாலவர் பெருமக்கள்) சென்ற வழியில் நாமும் சென்று பிறவிப் பயனை அடைவோம். திருச் சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!! மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக