புதன், 24 ஜூன், 2015

ஆனி திருமஞ்சனம்.


நாளை (24.06.15) – ஆனி திருமஞ்சனம். கோடையின் கடும் வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் துவங்குவது ஆனி மாதம் தான். ஆகவே அகில உலக நாயகனாகிய சிவபெருமானை குளிர்விக்கும் பொருட்டு, வெம்மையின் நாயகனாகிய சூரிய பகவானின் ஆதிக்கம் பொருதிய உத்திர நட்சத்திரத்தன்று அவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மேலும், பெருமானின் திருமேனி குளிர்ந்தால் அண்ட, சராசரமும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம். சிவ பெருமான் கோவில்களில் 6 கால பூசைகள் நடப்பது முறை. ஆனால் இங்கே சிதம்பரத்தில் நடராஜராக இருக்கும் பெருமானுக்கு தினமும் அபிஷேகம் இல்லை. வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை,இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த வகையில் தேவர்களுக்கு : • வைகறை – மார்கழி மாதம். • காலை - மாசி மாதம் • உச்சி காலம் – சித்திரை மாதம் • மாலை - ஆனி மாதம் • இரவு - ஆவணி மாதம் • அர்த்த ஜாமம் – புரட்டாசி மாதம் இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்தசிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது. சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடைபெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். ஆலய விசேஷங்கள் : ஆனி திருமஞ்சன தினத்தன்று, தில்லை நடராஜப் பெருமானின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, இறை மூர்த்தங்களை திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். 100 தீட்சிதர் பெருமக்களால் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்று அதன் பின்பு, சுமார் 2 மணி நேரத்திற்கு பெருமளவிலான பொருட்களால் மகா அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். அதன் பின்னர் நிறைவாக, பலவித மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடத்தபெறும். அதன் பின்னர், மகா தீபாராதனை ஆன பின், அம்மையும், அப்பனும் ஆனந்த நடனம் புரிந்தவாறே, சித்சபைக்கு எழுந்தருள்வதை காணக் கண் கோடி வேண்டும். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம்மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர். இதனை தரிசிப்பவர் வேண்டும் வரங்களையும், பிறவி பயன்களையும், பெரும் புண்ணியங்களையும் அடைவர் என்று பல்வேறு புராண நூல்கள் தெரிவிக்கின்றன. பூஜை முறை : புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும்,இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழிவகுக்கும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறையை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவனது நாமத்தை போற்றியும் பாடலாம். இந்த தரிசனத்தை தில்லையில் காண இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனமுருகி துதித்து வணங்கினாலும் ஈசனின் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. தில்லை அம்பல நடராஜா போற்றி !! போற்றி !! ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக