திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மந்திரங்களில் பல


மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. மந்திரங்களை சாத்விக, ராஜச, மற்றும் தாமச குணங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கலாம். பிரயோக மந்திரங்கள், சரணாகதிக்கான மந்திரங்கள், தத்துவ ரீதியிலான விசாரத்தைத் தூண்டும் மந்திரங்கள், தெய்வ சக்திகளை நம் வசம் ஈர்க்கும் மந்திரங்கள் என்று மந்திரங்களின் செயல்பாட்டை வைத்தும் பாகுபடுத்தலாம். யோக சாத்திரம் பரிந்துரைக்கும் பிரணவம் மாதிரியான பவித்திரமான மந்திரங்கள் என்றால், சத்வ குண இயல்புடைய, மற்றும் சத்வ குணத்திற்கு துணை போகும் வகையிலான ரஜோ குணத்தை மட்டும் கொண்ட, தமோ குணத்தை முற்றிலும் தவிர்த்த மந்திரங்களை மட்டுமே குறிக்கும். சித்த சுத்தி, சரணாகதி, இறை பக்தி, அறிவுத் தெளிவு ஆகியவற்றை நோக்கியே ஒரு யோகியின் மந்திர ஜெபம் இருக்க வேண்டும். காம்யமான பிரயோகங்கள் எதுவும் ஸ்வாத்யாயத்திற்குள் சேராது. குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும், குழந்தை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ள பெண்களும் ஓம் என்னும் பிரணவத்தை மட்டும் தனியாக ஜெபம் செய்யக் கூடாது என்று மந்திர சாஸ்திரம் எச்சரிக்கிறது. வெறும் பிரணவ ஜெபம் சன்யாசிகளுக்கு உரியது. மற்றவர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நம குமாராய, ஓம் சரவண பவ, ஓம் ஸ்ரீமாத்ரே நம என்று ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தைச் சேர்த்த, சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் ஒன்றை ஜெபம் செய்யலாம். ஒரு சரியான குருவின் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜெபம் செய்வது விரைவில் பயன் தரும் என்றும் கூறப்படுகிறது. காயத்ரீ மந்திரம் என்று அழைக்கப்படும் சாவித்ரீ மந்திரம் கூட ஸ்வாத்யாயத்திற்கு மிகவும் ஏற்ற மந்திரம். அம்மந்திரம் உபதேசிக்கப் பெற்றவர்கள் அதையே தொடர்ந்து, சரியான முறையில் ஜெபம் செய்யலாம். ஓம் என்னும் பிரணவம் பேரறிவான, பரம்பொருளை, இறைவனைக் குறிக்கும் மந்திரம். “தஸ்ய வாசக: பிரணவ:” என்பது யோக சூத்திரம். அது போன்ற, அந்த நிலையில் உள்ள, அதற்குச் சமமான மந்திரங்களை மட்டுமே ஸ்வாத்யாயம் செய்பவர் ஜெபிக்க வேண்டும். அப்படியென்றால் பரம்பொருளான இறைவனைக் குறித்தே அம்மந்திரம் அமைய வேண்டும். குட்டித் தெய்வங்களின் மந்திர ஜெபமும் உபாசனையும் சில அன்றாட வாழ்வின் சிக்கல்களை வேண்டுமானால் தீர்க்கலாமே ஒழிய, மனத் தூய்மையோ, இறை உணர்வோ தராது. வேண்டும் தருணங்களில் இம்மந்திரங்களை சில காலம் உபயோகித்துப் பயனடைந்ததும் விட்டுவிடலாம், தவறில்லை. இருப்பினும், ஸ்வாத்யாயத்திற்காகச் செய்யும் மந்திர ஜெபத்தை மட்டும் செய்து, மனதை சரணாகதியில் வைத்து, தன்முனைப்பில்லாத, நிஷ்காம்யமான வாழ்க்கையை வாழ்வது யோகத்திற்கு உத்தமம். முடிந்தவரை இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக