செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஞாலத்தைக்காக்க குமரன் எடுத்த பற்றற்ற கோலம்" பழனிஆண்டி"


ஞாலத்தைக்காக்க குமரன் எடுத்த பற்றற்ற கோலம்" பழனிஆண்டி" முருகன் ஒரு ஞானக் கடவுள். உலகை சுற்றுவதற்கு பதிலாக உமா மகேஸ்வரனை சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த் அம்மையப்பனையே சுற்றி வந்து கனியை பெற்றுக் கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவமான குமரன் கோபம் கொள்வானா? இப்படிப் பட்ட வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொன்னால் கடவுளிடம் கோபமும் தாபமும் இருந்தால் மனிதர்களிடம் இருக்காதா? என்று எண்ண மாட்டார்களா?. இந்த சம்பவத்தை ஆராய்ந்து பார்த்த பெரியவர்கள், அதில் அடங்கியுள்ள தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள். நாரதர் தேவலோக மாங்கனியைக் சிவனாரிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக்குழந்தைகளான கணபதி, முருகன் இருவரும் சட்டென்று " தாங்கள் ஸர்வேஸ்வரன் இது தங்களுக்கே உரியது " என்றார்கள். ஆனால் ஈஸ்வரனோ, மூத்தவன் நீ இந்தா, கனி உனக்கு என்று கணபதியிடம் கொடுத்தார். இல்லை, இளையவன் அவன், அவனுக்குக் கொடுங்கள் என்றார் முருகப்பெருமான். இப்படிப்படித்தான் ஆரம்பித்தது, அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார் நாரத முனி. இது வெறும் பழமன்று, ஞானப்பழம் தகுதி உடையவர்களுக்கே இது சேர வேண்டும் என்றார். ஈசன் சிந்தித்தார், உங்களில்உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்த பழம், அப்புறம் போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும் என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமானத்தை உருவாக்கினார். உலகை சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி. கந்தன் வந்தார், அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டார். உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார், அண்ணன் கணபதி பிரணவ வடிவம், ஞானஸ்வரூபன், அவரிடமே இதற்கு காரணம் கேட்டார், அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது, தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்கு காரணம் என்பதை உணர்ந்தார். அதன் தொடர்பாக ப்ரம்மண்யனான தாம், ஸூப்ரமண்யமாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக் கோலமே பழனியாண்டி ரூபம். அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தை காக்க எடுத்துக் கொண்ட பற்றற்ற திருக்கோலம் பழநி ஆண்டிக் கோலம், " கனி கிடைக்கவில்லை " என்ற கோபத்தில் ஆண்டியாக வில்லை. தன்னை வழிபடுவோர்க்கு எல்லாம் அதனை வழங்குவதற்காக விரும்பி, ஏற்றுக் கொண்ட வடிவமே அந்த பரதேசி வடிவம். கந்தனின்தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது, ஞானம் அவர் மூச்சாயிற்று. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன் தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகன் குமரனை அழைத்தார். " ஓம்கார பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா? என்று வினவினார். ஆம் தந்தையே என்றார் குமரன். எங்கே கூறு பார்க்கலாம் என்றார் ஈஸ்வரன். ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து " பத்தும் இரண்டும் எத்தனை?" என்று கேட்டால் கூட்டல் கணக்கு ஆசிரியருக்கு தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்கு தெரியுமா? என்று சோதித்து பார்க்கத்தான் அந்த கேள்வி. இப்போது அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் கேட்டார். கேள்விக்கு பதில் தெரிந்த மாணவன் போன்று தான் முருகன் பதில் கூறினார். ஆனால் பிரணத்தை எங்கே எப்படி, எந்த பாவத்தில் சொல்ல வேண்டும் என்ற நியதியில் தான் ஈஸ்வரன் மடியில் அமர்ந்து, காதில் ஓதினார், குருவாக அல்ல, குருவுக்கு சீடனாகத்தான், ஓதினார் குமரன். இதனை தவறாக " ஈஸ்வரனுக்கே ஓம்கார பொருள் கூறினார் " என்பது சிவ அபஸ்தம். நடந்த சமயத்தின் மூலம் தந்தைக்கு தன் அறிவின் திறத்தை உணர்த்தினார் முருகன். ஈஸ்வரனும், ப்ரம்மண்யனை ஸூப்ரமண்யன் என்று உணர்ந்து கொண்டார். இது வே சுப்ரமண்யன் சிவபெருமானுக்கு ஓம்கார பிரணவத்தை உபதேசித்த வரலாறு, இந்த நிகழ்வே தஞ்சை மாவட்ட த்திலுள்ள சுவாமிமலை. அசுரர்களை அழிக்க மட்டுமல்ல, தர்மத்தை காக்கவும், தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கவும், சக்தியை பிறக்கும் போதே பெற்றவர் இவர். பின்னர் தர்மத்தைக் காக்கும் ஞானத்தை தன் தவத்தினால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கி கொண்டே தனிப்பெரும் தெய்வம் முருகப் பெருமான். திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக