புதன், 24 பிப்ரவரி, 2016

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள் 2

அண்டப்பகுதியின் உயிர்நாடியாகவுள்ள ஒன்றை பாடலில் காணப்பெறும் முன்னும் பின்னுமாகிய சில அடிகளைக் ‘கொணடுகூட்டுச்‘ செய்தவன் மூலம் ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். இறைவன்,
      மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்                                
     மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழ             (124-125)
ஒளிவடிவாக விளங்குகின்றான். ஆனால் இந்த ஒளிவடிவம் திசைமுகன் தேடி முயன்றபொழுது ஒளித்துக் கொண்டது. (126). அம்மட்டோடு இல்லை, முயன்றவர்க்கு ஒளித்தும் (127), உறைப்பவர்க்கு ஒளித்தும் (129), வருந்தினர்க்கு ஒளித்தும் (130), அவ்வயின் ஒளித்தும் (132), வாள் நுதல் பெண் என ஒளித்தும் (138), உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் (139), பற்றுமுற்று ஒளித்தும் (145) விளையாடி ஒளிக்கும் சோரன், மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஏன் ஒளித்துக் கொண்டான்?
      ஒளிந்திருப்பவனைத் தேடிச் செல்பவரிடம் விளக்கு ஒன்று இருத்தல் இன்றியமையாதது. இத்தனைபேரிடமும், ஒளித்து நிற்கும் சோரணைக் காண ஒரு குறிப்பிட்ட ஒளி பொருந்திய விளக்குத் தேவை. அந்த விளக்கு இருந்தால், அவனை எளிதாகக் கண்டுவிடலாம். அந்த ஒளி விளக்கிற்குப் ‘பக்தி‘ என்று வடமொழியிலும் ‘இறை அன்பு‘ என்று தமிழிலும் பெயருண்டு. மேலே கூறப்பெற்றவர் அனைவரும் எத்தனையோ பெரு முயற்சிகைளைச் செய்து அவனைத் தேடமுயன்றார்களே தவிர, இந்த ஒளிவிளக்கைக் கையில் ஏந்தவில்லை. அதனாலேயே அவன் ஒளித்துக் கொண்டான்.
                இத்தகையவனைப் பிடித்துக்கொள்ள ஓர் அருமையான வழியை அடிகளார் கூறியுள்ளார். நம்மால் தேடப்படும் பொருள், சித்தமும் செல்லாத தூரத்தில் (41) உள்ளது. அவனை எப்படிப் பற்றுவது? சித்தமும்  செல்லாத் தூரத்தில் இருப்பவனைச் சென்று பற்றுவது என்பது இயலாத காரியம். அப்படியானால், வேறு வழியென்ன? அடுத்த அடியில் அடிகளார் தம் அனுபவத்தாற் கண்ட வழியை மிக அழகாக எடுத்து உரைக்கின்றார். நீ தேடிச் சென்றால் அவன் ஒளித்துக்கொள்வான், அன்றியும் சித்தமும் செல்லாத் தூரத்தில் உள்ளான். அவனைத் தேடிச் செல்லும் முயற்சியை விட்டுவிட்டு இருந்த இடத்திலேயே ஒரு வலையை விரிப்பாயாக. அந்த வலை ‘பக்தி‘ என்னும் ஒளிமயமான வலையாகும். அந்த ஒளி வலையை விரித்துவிட்டு அமைதியாக இருப்பாயாக. மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஒளித்து நின்றவன், தானே வந்து உன்னுடைய பக்தி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வான் (படுவோன்–42) என்று முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக