எறிபத்த நாயனார் / குரு பூசை மாசி - ஹஸ்தம்
(கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக்(பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.)
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை
சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று கருவூர். இத்தலத்தில் ஆனிலையப்பர் எழுந்தருளியுள்ளார். இவ்வூரில் பிறந்தவர் எறிபத்தர். அடியார்களுக்கு வரும் துன்பத்தை நீக்குவதில் சிங்கம் போன்றவர். கையில் மழு ஏந்தியவர். இந்நகரில் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர் திருமாலைப் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள் நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டு வந்தார். வழியில் புகழ்ச்சோழரின் பட்டத்துயானை பூக்கூடையைப் பறித்து கீழே எறிந்து. தொண்டர் மூப்பினால் தளர்ந்து கீழே விழுந்தார். சிவதா! சிவதா! என அழுது முறையிட்டார்.
அங்கே வந்த எறிபத்தர் யானையையும், பாகரையும் கொன்று வீழ்த்தினார். பிறர் இதனை அரசரிடம் அறிவித்தனர். அரசர் கோபம் கொண்டு விரைந்தார். அடியவர் நிற்கக் கண்டு அடியார் தவறு செய்யார் என எண்ணினார். யானை செய்த குற்றத்திற்கு அதனையும் பாகரையும் கொன்றது போதுமோ? என்றார். அரசரிடம் நாயனார் நிகழ்ந்தது கூறினார். அரசர் இக்குற்றத்திற்காக என்னையும் கொல்ல வேண்டும் எனத் தன் உடை வாளைக் கொடுத்தார். வாளை வாங்காவிட்டால் அரசர் தம்மை மாய்த்துக் கொள்வாரென்று நாயனார் வாளை வாங்கினார். இவர்க்குத் தீங்கு நினைத்தேனே என்று நாயனார் தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார். அரசர் அவர் கையைப் பற்றி நிறுத்தினார். இறைவன் திருவருளால் யானையும் பாகரும் உயிர் பெற்றனர். பூக் கூடையில் பூ நிறைந்தது. சிவகாமியாண்டார் முன்பு போல் பணி புரிந்தார். எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் பேறு பெற்றார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக