அகல் விளக்கின் அறிவியல் தத்துவம்
பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு மட்டும் ஒரு தனி மகத்துவம் உண்டு. தீயை மட்டும்தான் நம்மால் உருவாக்கவும் முடியும்; அணைக்கவும் முடியும். இதனாலேயே இந்துகளின் வழிபாட்டு முறையில் 'தீ' முக்கிய இடம் பெறுகிறது.
ஹோமம், யாகம், தீபம், கற்பூரம், சொக்கப்பனை என்று கையெடுத்து வணங்கும் சக்தியாக நெருப்பு விளங்குகிறது. வரலாற்றின் தொடக்க காலத்தைப் பார்க்கும்போது 'தீ' கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், மனிதகுல வாழ்வு மாறிப் போனது என்பதை அறிய முடியும்.'தீ' வழிபாட்டில், தீபாவளியின் அகல் விளக்கு வழிபாடு, சிறப்பிடம் பெறுகிறது. அகல் விளக்கை சிவ தத்துவமாக சிலர் கூறுவதுண்டு. வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி கடவுளாக தீயை வழிபட்டார். அகல் விளக்கு வழிபாட்டிற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, தீ எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு எதிரிகளுக்கு நடுவே எரியும் சக்தி படைத்ததாக இருக்கிறது.
அறிவியல் அடிப்படை சிறிய அறிவியல் விளக்கம் : அகல் விளக்கினை ஏற்றி வைக்கும் போது அகல் விளக்கின் சுடரைச் சுற்றிலும் (எரிதலின் விளைவாக) கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய இரண்டு பொருட்களும் உருவாகின்றன. இவை இரண்டும் தீயை அணைக்கும் சக்தி படைத்தவை. இந்த இரண்டு பொருட்களும், தீச்சுடரைச்சுற்றி உருவானவுடன், வெளிக்காற்று தீச்சுடருக்கு வருவது தடுக்கப்படும். முக்கியமாக ஆக்ஸிஜன் வருவது தடுக்கப்படுகிறது.எரிதலுக்கு துணைபுரியும் ஆக்சிஜன் வருவது தடுக்கப்பட்டுவிட்டால், உடனடியாக தீ அணைந்துவிட வேண்டும் இல்லையா?. ஆனால் அப்படி நடப்பதில்லையே!. அகல் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டுதானே இருக்கிறது.அப்படியென்றால் சூழ்ந்து நிற்கும் எதிரிக்காற்றினை துரத்திவிட்டுத்தானே தீச்சுடர் எரிகிறது.
முதல் தத்துவம் : அகல் விளக்கு எரியும்போது அந்த சுடரால் உருவாகும் கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி ஆகியவை அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பதில்லை. அதாவது தீச்சுடருக்கு பக்கத்திலேயே இருப்பதில்லை. வெப்பத்தால் சூடான அப்பொருள்களின் அழுத்தம் குறைந்து, எடையும் குறைகிறது. எனவே எடை குறைந்து, லேசான கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் இடப்பெயர்ச்சி அடைந்து மேலே சென்று விடுகின்றன. அந்த இடத்திற்கு ஆக்சிஜனுடன் கூடிய புதிய காற்று வந்து விடுகிறது. எனவே எரிதல் தொடர்ந்து நடைபெறுகிறது. அசுர சக்திகளை அப்புறப்படுத்திவிட்டு, தேவசக்தி தொடர்ந்து ஒளி வீச வேண்டும் என்பதே அகல்விளக்கின் முதல் தத்துவம்.
உயிர் வெப்பம் : இன்னொரு தத்துவமும் இருக்கிறது.எந்தவொரு வேதிவினை நிகழும் போதும் வெப்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது இக்கால விஞ்ஞானிகளின் கூற்று. உதாரணமாக டீசல், பெட்ரோல் இயந்திரங்கள், ஆகாய விமானம், ராக்கெட்டுகள், பேருந்து போன்றவை வெப்பத்தினால்தான் இயங்குகின்றன என்பது நமக்குத்தெரியும்.அதேபோல் நம் உயிரும் வெப்பத்தினால்தான் இயங்குகிறது. எங்கு வெப்பம் இருக்கின்றதோ அங்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒளி இருந்துதான் ஆக வேண்டும். வெப்பம் இல்லையென்றால் ஒளி இல்லை. ஒளியில்லை என்றால் வெப்பம் இல்லை. ஒன்றால்தான் இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று இணைபுரியாத சக்திகள். அதாவது, ஒரே சக்தியை விஞ்ஞானிகள் வெப்பமென்றும், ஆன்மிகவாதிகள் ஒளியென்றும் வருணிக்கிறார்கள்.
விஞ்ஞானம் : எப்படி வெப்பத்தினால் எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்களோ, அதுபோலவே, ஒளியாகிய ஜோதியே எல்லாம் செய்யவல்ல கடவுள் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். ஆகவே விஞ்ஞானம் கூறும் வெப்பமே ஆன்மிகவாதிகள் கூறும் ஜோதிக்கடவுள். அந்த ஜோதியைத்தான் வள்ளலார் அருட்பெருஞ்சோதி ஆண்டவன் என்று பெயரிட்டு அழைத்தார்.அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஆழ்ந்த பொருள் கொண்டு விளங்கும் அகல் விளக்கினை, தீப ஒளித் திருநாள் அன்று ஏற்றி, வைத்து அனைவரும் வழிபடுவோம். அகல் விளக்கு ஏற்றும் இந்த நன்னாளில் நம் அக விளக்கையும் ஏற்றுவோம்.
-- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்எழுத்தாளர், மதுரை.98654 02603.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக