திங்கள், 28 நவம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருஆவடுதுறை

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருஆவடுதுறை

இறைவர் திருப்பெயர் : மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் (மூலவர்), 
  அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த 
  கோலமாக இருப்பவர்; (திருவிழாவின் முடிவில் கோமுத்தி 
  தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.), செம்பொன் தியாகர் 
  (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்).

இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குஜாம்பிகை. 

தல மரம்  : அரசு (இது படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.)
தீர்த்தம்  : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் 
வழிபட்டோர்  : அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், 
  போகர்

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - இடரினும் தளரினும்.

  2. அப்பர்   - 1. மாயிரு ஞால மெல்லாம், 
2. மஞ்சனே மணியுமானாய், 
3. நிறைக்க வாலியள், 
4. நம்பனை நால்வேதங்கரை, 
5. திருவேயென் செல்வமே. 

  3. சுந்தரர்  - 1. மறைய வனொரு மாணி, 
2. கங்கை வார்சடை யாய்.

  4. திருமூலர் - 1. திருமந்திரம் 

5. சேந்தனார்- 1. திருவிசைப்பா. ஸ்தல புராணம் -





தல வரலாறு

அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். 
எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு).

  ஒரு சமயம் சிவனும் பார்வதியும் சொக்கப்பான் விளையாடிக் கொண்டிருந்தார்கள், அப்போது எல்லா விளையாட்டிலும் சிவனே ஜெயித்துக் கொண்டதாகக் கூறிக்கொண்டதால் அவர்மீது பார்வதி கோபம் கொண்டாள், உடனே இறைவன் தேவியரை நீ பசுவாகப் பிறந்து தவமிருந்து என்னைச் சேர்வாயாக என சாபமிட்டார், அதன்படி உமா தேவியார் இங்கு வந்து பசுவாக  இருந்து தவமிருந்து இறைவனை வேண்டினாள் அதன்படி இங்கு ஈசுவரர் உமையாளுக்கு காட்சி அளிக்க உடனே உமாதேவியார் இறைவரை அனைத்துக் கொண்டார்,அணைத்தெழுந்தநாயகர் 
  (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்; (திருவிழாவின் முடிவில் கோமுத்தி   தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.) கோவாகிய பசுவிற்கு காட்சி தந்தமையால் இவர் கோமுத்தீஸ்வரானார்,


தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.

தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால், இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).

நந்தி தருமநந்திதேவராவார்.
முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்: ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)

திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகம சாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.

நந்தியம் பெருமானிடம் அருள் பெற்ற சிவயோகியார் சுந்தரநாதர் என்பவர், பொதியமலையை நோக்கிச் செல்லும்போது சாத்தனூர் (திருவாவடுதுறைக்கு மிக அருகில் உள்ள புராணச் சிறப்புடைய ஒரு ஊராகும்) என்னுமிடத்தில் பசுக்கள் மேய்ப்பன் ஒருவன் இறந்து கிடப்பதையும், அதனால் அப்பசுக்கள் உறும் துயரத்தையும் கண்டு, மூலன் என்னும் அம்மேய்ப்பனின் உடலில் தன் உயிரைச் செலுத்தி திருமூலர் என்னும் பெயர் கொண்டார்.

திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் சில காலம் தங்கியிருந்த புண்ணிய பூமி - சாத்தனூர் என்னும் ஊராகும்.
அவதாரத் தலம் : சாத்தனூர் (சுந்தரநாதராக இருந்து திருமூலராக மாறியத் தலம்).
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம்  : திருவாவடுதுறை.
குருபூசை நாள்  : ஐப்பசி - அசுவினி.
போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
சிறப்புகள்

சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்.
திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் பதி.

பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்

அ/மி. மாசிலாமணிசுவரர் திருக்கோயில், 
திருவாவடுதுறை - 609 803.

மேலாளர்   : 04364 - 232055 / +91-94439 00408.
மாநிலம் : தமிழ் நாடு 
இஃது, நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. 

 இங்குதான் திருவாடுதுறை ஆதினம் உள்ளது, இவர்கள் நிர்வாகத்தில் பல திருத்தலங்கள் உள்ளன, சைவ சித்தாந்த பணிகளை செவ்வனே செய்துவருகிறது,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக