புதன், 3 ஏப்ரல், 2019


சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு " இவ்வூரை விட்டு போகேன் " என செய்த சத்தியம் மீரப்பட்டதால் , இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் ெசன்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே " ஆலந்தான் உகந்து அமுது செய்தானை " என்ற பதிகம் திரு கச்சி ஏகம்பரஈஸ்வர் முன் நின்று பாடிய பதிகம் இறைவரும் சுந்தரரின் அன்பிற்கு பணிந்து அவருக்கு கண் பார்வை அளித்த வரலாறு . எனவே நாம் இப்பதிக பாடல்களை மனம் உருக வேண்டி பாடினால் கண் சம்பந்தப்பட்ட கண்நோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கப்பட்டு பூரண குணமைடவர் என்பது உறுதி. சுந்தரரரின் திருவாக்குப்படி இப்பதிகப் பாடல்கள் பத்தும் பாடுவோர் "நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே " திருக்கச்சி ஏகம்பம் பாடல் எண் : 1 ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 2 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள் உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 3 திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 4 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 5 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும் , அரிய வேதங்களையும் , அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய , அளவற்ற புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் , துதித்து வழி படப்பெற்ற , நன்மையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 6 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 7 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாமுகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 8 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , பாடல் எண் : 9 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுர மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 10 எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 11 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் . திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் .......... தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

 http://vpoompalani05.blogspot.in/ http://
vpoompalani05.wordpress.com http:/

/www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக