புதன், 3 ஏப்ரல், 2019

சிவ பூஜனம்

சிவ பூஜனம்

சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். அக்னிஹோத்ராதி கர்மாக்களை செய்வது சிரம சாத்தியம். அர்ச்சனை என்பது மிகச்சுலபம். அந்த அர்ச்சனம் சிவனுக்கே செய்ய வேண்டும். வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சிவனே உயர்ந்தவர் என்று பாராட்டுகின்றன. இதனுடைய விரிவை “சிவதத்துவ விவேகம்” என்னும் ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூலிலும் “சிவோத்கர்ஷமஞ்சரி” என்னும் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதரின் நூலிலும் காணலாம்
வைஷ்ணவ மரபிலேயே தோன்றி, சிவனையே வழிபடு தெய்வமாகக் கொண்டு வைஷ்ணவர்களோடு போராரி நெருப்புப் பாய்ச்சிய முக்காலியில் வைஷ்ணவர்கள் கோரியபடி பெருமாள் சந்நிதியிலேயே அமர்ந்து ஹரதத்தாசாரியார் அவர்கள், சிவனுடைய உயர்வைக்கொண்ட “ச்ருதி ஸூக்தி மாலா” என்னும் நூலைப் பிரகாசப்படுத்தினார்கள். சிவனருளால் தீயும் மலராக ஆகிவிட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நூலிலும் தெள்ளெனக் காணலாம். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றது
ஆதிசங்கராச்சாரியார் அவர்களும் சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல
பூஜை செய்யுங்கால் இதர எண்ணங்களைவிட்டு சிவனிடத்திலேயே மனதைச் செலுத்தி இருப்பது தான் முக்கியம். சிந்தை வேறிடத்தில் வைத்து பூஜை செய்வது பயனற்றது.

இத்தகைய சிவபூஜையிலும் ஶ்ரீ நடராஜர் வழிபாடே மிகச்சிறந்தது. அதை இங்கு சிறிது காண்போம். இவ்வுலகையே தெய்வ புருஷனாக உள்ளத்தில் எண்ணி அப்புருஷனுடைய தலையாக ஶ்ரீபர்வதத்தையும், நெற்றியாக கேதாரத்தையும், இரு புருவங்களின் நடுபாகமாக வாராணசி (காசி)யையும், குருக்ஷேத்திரத்தை குசஸ்தானமாகவும் [ஸ்தன ப்ரதேசம்], பிரயாகையை இருதயமாகவும், சிதம்பரத்தை உயிர் ஸ்தானமான ஹிருதய மத்யமாகவும் கருதி வழிபட வேண்டும்
மனிதன் கை, கால், கண், மூக்கு, செவி இல்லாமல் வாழ முடியும். ஆனால் உயிர் பிரிந்து விட்டால் சடலமாகி விடுகிறது. செயலற்று விடுகிறது என்பது உலகப் பிரசித்தம். தூங்குங்கால் மனிதனுடைய உள்ளத்தில் எல்லா புலன்களும் ஒடுங்குகின்றன. அதுபோல் ஶ்ரீ நடராஜருடைய அர்த்தஜாம காலத்தில் எல்லா க்ஷேத்ரங்களிலுமுள்ள தேவதைகளும் ஒடுங்குகின்றன. விழிக்குங்கால் எவ்வாறு அந்தப் புலன்களும் ஆங்காங்கு சென்று செயல்படுகின்றனவோ அவ்வாறே காலை விச்வரூப தரிசன பூஜையில் அந்தந்த தேவதைகள் தத்தமது இருப்பிடம் சென்று செயல்படுகின்றன. எனவே, சிதம்பரம் ஶ்ரீ நடராஜராஜ தரிசனம் ஒன்றே எல்லா ஸ்தலங்களில் உள்ள தேவதைகளின் தரிசனத்தால் ஏற்படும் பயன்கள் யாவற்றையும் அளிக்கவல்லது
லக்ஷ்மீபதியான மஹாவிஷ்ணுவினால் பூஜிக்கப்பட்டவர் நடராஜமூர்த்தி. வேதம் இதன் விளக்கத்தைத் தருகிறது. “அக்ஞானத்தைப் போக்கி, ஞானத்தை அளிக்கும் சிவனே! பிரம்மனுக்கு வேதத்தை உபதேசித்த சிவனே! அழகிய ரத்தினங்களாலும் கற்களாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பவழத்தினாலும் ஆகிய உனது லிங்கத்தை தேவர்கள் சிறந்த சம்பத்திற்காக அபிஷேகம் செய்து, ஆராதனம் செய்தனர். இச்சிவலிங்கத்தை பூஜை செய்ததின் பயனாகத்தான் விஷ்ணுவிற்கு வைகுண்டலோக நாயகராகும் தன்மை கிடைத்தது. [திருவீழிமிழலை] மாகாத்மியத்தில் விஷ்ணு ஐம்புலன்களையும் அடக்கி, ஆகாரமின்றி லக்ஷ்மியுடன் கூட இருந்து கொண்டு ஆயிரம் தாமரை மலர்களால் ஒவ்வொரு நாளும் பூஜை செய்தார். அப்பொழுது ஒரு நாள் சிவன் விஷ்ணுவை சோதனை செய்ய ஒரு தாமரை மலர் குறையும்படிச் செய்துவிட்டார். எந்த ஓடைகளிலும் ஒரு மலர் கிடைக்காததால் இன்று 999 மலர்கள் தான் கிடைத்துள்ளன, ஒன்று கிடைக்கவில்லையே என்று மிக வருந்தி வைராக்கியத்துடன் எப்படியாவது ஆயிரம் தாமரை மலர்களால் பூஜையை செய்துவிட வேண்டியதுதான் என்று பூஜையைத் துவக்கினார். 999 மலர்கள் பூஜித்தபின் தனது வலது கண்ணைப் பிடுங்கி தாமரை ஸ்தானத்தில் அர்ச்சனை செய்தார். இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், முன் கண்ணைக் காட்டிலும் மிக அழகான, பிரகாசமான கண்ணை அளித்துப் புண்டரீகாஷர் என்னும் பெயரையும் சூட்டினார். “உனது பூஜையினாலும், துணிவினாலும் மகிழ்ச்சியுற்றேன். எனவே தேவை யானதைக்கேள்” என்று வேண்ட சிவனும் அவ்வாறே பார்ப்பதற்கு அழகான “சுதர்சனம்” என்னும் சக்கரத்தை அளித்து உலகைக் காத்து அருள் ஆணையிட்டார். தேவீ பாகவதத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

சிவலிங்கம் அமைந்திருக்கும் ஸ்தானம் விஷ்ணுபீடம் என்று கூறப்படுகிறது. இதைத்தான் சக்தி உபாசகர்கள் ஶ்ரீ சக்கர உபாசனத்தில் நடுவில் விந்து ஸ்தானத்தில் சிவனைச் சேர்த்து ஒன்று படுத்தி வழிபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக