புதன், 3 ஏப்ரல், 2019

நரசிம்மரின் ஆக்ரோஷம் தணிய சிவாபெருமான் எடுத்த அவதாரம்!!

Image result for சரபேஸ்வரர்


சரபேஸ்வரர்– சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் சரபரை வழிபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வியாசர். பக்த பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்தருளிய திருக்கதை நாமறிந்ததே. அவ்வாறு அசுரனை அழித்தும் நரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லை. இதனால் அஞ்சி நடுங்கிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே சரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.

சரபரின் திருவடிவம் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். பறவை போன்று பொன்னிறம், இரண்டு இறக்கைகள், செந்நிற கண்கள், கூரிய நகங்களுடன் கூடிய- சிங்கத்துக்கு இருப்பது போன்ற நான்கு கால்கள், மனித உடல், கிரீடம் தரித்த சிங்க முகம் மற்றும் தந்தங்களுடன் பயங்கரமாகக் காட்சி தருவார் சரபர் என்று விளக்குகிறது காமிக ஆகமம். எட்டு கால்கள் கொண்டவர் என்று வேறு சில நூல்கள் விவரிக்கின்றன. ஸ்ரீதத்வ நிதி எனும் நூல் 32 திருக்கரங்களுடன் திகழும் சரபத்தின் ஒரு திருக்கரம் துர்கையை அணைத்தவாறு இருக்கும் என்று விளக்குகிறது. பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ தொடையில் நரசிம்மரைக் கிடத்தியபடி காட்சியளிப்பதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. சரப மூர்த்தியின் சக்தி- அரிப்ரணாசினி.
தமிழகத்தில் கும்பகோணம் அருகிலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்திருக்கும் விக்ரமசோழீச்வரம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில்தான் சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, மதுரை கோயில்கள், சென்னையில் குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோயில், திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோயம்பேடு- குசலவபுரீஸ்வரர் கோயில், திரிசூலம் ஆகிய தலங்களில் சரபேஸ்வரரைத் தரிசிக்கலாம்.
சரபேஸ்வரரை வழிபடுவதால் பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும் நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம் கூறுகிறது. நாமும் சரபேஸ்வரர் அருள் வழங்கும் கோயில்களுக்குச் சென்று அவரை வழிபடுவோம். இயலாதவர்கள் அனுதினமும் அவரின் திருவடியை மனதில் தியானித்து சரபர் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வணங்கி, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.
ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக