செவ்வாய், 12 அக்டோபர், 2021

அன்னத்தின் பெருமை

 அன்னத்தின் பெருமை 



முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார். சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை. அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் . “யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே… அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். “பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…" என்றார் முனிவர். “அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…" என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக