சனி, 16 டிசம்பர், 2023

ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்


 ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்

  இறைவன் திருவருளால் ஆன்மா பல்வேறு பிறவிகளிலே பிறந்தும் இறந்தும் இரு வினைகளைப் புரிந்தும் அவ்வினைகளின் பயன்களை அநுபவித்து வருகின்ற சகல நிலை நீங்குவதற்கு, இருவினை ஒப்பு, மலபரிபாகம, சத்தி நிபாதம் இவற்றின்  வழி முதல்வனது ஞானம் விளங்க அந்தஞானத்தின் முன் மாயா கருவிகளும் மாயா உலகமும் புலனாகாது முதல்வனது நிறைவில் தோய்ந்து நிற்பது சுத்த நிலை எனப்படும் இந்நிலையில் தான் உயிராகி ஆன்மா முத்திக்கு தகுதியடைந்து தயாராக உள்ள நிலை

 பாசப்பற்று விடுதற்பொருட்டும், முதல்வன் பேரருளை அடைவதற்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகள் துணைபுரிகின்றன. உலகப்பயன் நோக்கி சிவனை வழிபடுதல் உபாயம் என்றும்,அப் பயன்கள் யாதொன்றயும் விரும்பாது அன்பே காரணமாக சிவனை வழிபடுதல் உண்மை என்றும் கூறப்படும். இச்செயலே சிவ புண்ணியத்தை விளைவிக்கும் இச் சிவ புண்ணியங்களால் இருவினை ஒப்பும், இருவினையொப்பால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் நிகழும், இம்மூன்றும் முன்னும்பின்னும் அல்லது ஏக காலத்தில் நிகழலாம் இதுவேஞானம் பெறுவதற்குரிய பக்குவ நிலையாகும். 

  இருவினையொப்பு ;சரியை, முதலிய தவங்களின் வழி நல்வினைப்பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப்பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது ஒன்றுபோல கருதி அவற்றின் மேல் பற்றுச் செய்யாது இருக்கும் மனநிலை உண்டாகும். அதுவே இருவினை ஒப்பு ஆகும். இது "ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நாேக்குதல் " என சொல்லப்படும். இதனால் ஆன்மாவிற்கு  ஞான வேட்கை உண்டாகும்.

மலபரிபாகம் 

   இருவினை ஒப்பாவது அனுக்கிரக காரணம் அன்று, மலபரிபாகம் படுவதற்கே துணையாகும்,இருவினை ஒப்பு நிகழவே ஆணவத்தின் சத்தி மெலிந்து ஆன்மாவின் அறிவைத் தடுத்து ைவத்திருந்த அதன்பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலையை அடையும், அந்நிலை " மலபரிபாகம்" எனப்படும். பரிபாகம் என்பதற்கு பக்குவம் என்று பொருள். மலசக்தி நீங்கக்கூடிய பக்குவத்தை அடைந்தள்ளது என்பதைக் குறிக்கும்.

சத்தி நிபாதம்

   மலப்பரிபாகம் சிறிது சிறிதாக நிகழ நிகழ அதற்கேற்ப அதுவரை ஆன்மாவில் மறைந்திருந்து பக்குவப்படுத்தி வந்த திரோதன சத்தி சிறிது சிறிதாகத் தன் தன்மை மாறி அருட் சக்தியாக மாறும். மலசத்தி தேய்நது வரும்நிலையை மலபரிபாகம் என்றாற்போல அருட்சத்தி விளங்கி வரும் நிலையை "சத்திநிபாதம்" என்பர் , இது மலபரிபாகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் சித்திநிபாதம் நிகழும்.இதனை சத்தி வீ்ழ்தல் என்பது பொருளாகும். இதனை சத்தி  வீழ்ச்சி என்பதற்கு மக்கள் கூட்டம் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு கல் அக்கூட்டத்தில் வீழ்ந்தால் என்னவாகும் மக்கள் எல்லாம் அஞ்சி அகல ஒதுங்குவார்கள். அதுபாேல சத்திநிபாதம்  ஒருவருக்கு நிகழுமாயின் உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சி உண்டாக உலகியலில் இருந்து நீங்குவதாகும். எனவே சத்தி வீழ்ச்சி என்றே கூறப்படுகிறது. இந்த சத்திநிபாதம் ஆன்மாவின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என படிமுறைகிளல் உயர்ந்து நிற்கும். இவ்வாறு ஆன்மா ஞானம் பெறுவதற்கு இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எல்லாம் ஆன்மாவின் அறிவினில் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஞானம் பெறுவதற்கான படி நிலையை அடையும்.

 குருவருள்

 இறைவனது அருளே உயிர்க்கு அருளவேண்டி வடிவு கொள்கிறது. உயிர் பெத்தநிலையில் திரோதன சத்தியையும், முத்தியில் தடையில்லாத சிவஞான சத்தியையும் உருவாகக் கொண்டு உயி்ர்கட்கு அருள்புரிய  கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் திருமேனி கொண்டு எழுந்தருளி மயக்கமாய் வந்து, தடுக்கும் கேவலம், விகற்பமாய் வந்து தடுக்கும் சகலம் ஆகிய நிலைகள் சேராதவாறு அருளில் நிறுத்தி மலங்களை போக்கியருள்வான். அதனால் ஆன்மா தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞானம்பெறும். பெருகிய ஞானத்தால் பெருமானின் திருவடியை அடைந்து பேரின்பத்தில் திளைக்கும். சுத்த நிலையாகிய இந்நிலையே பிறவி ஒழிந்த இறைவனோடு கலந்திருக்கும் அருள் நிலையாகும்.  இவ்வருள் நிலை, சரியை, கிரியை, யோகம் நிலைகளில் நின்று முதிர்ச்சி பெற்றயாளருக்கே வாய்க்கும் என்று சிவ ஆகமங்கள் சொல்லும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி சிவப்பிரகாசம் நன்நூல்


புதன், 13 டிசம்பர், 2023

சிவ பூசை தத்துவம்

சிவ பூசை தத்துவம்



* ஆச மனம் சமர்ப்பிப்பது * பூசை செய்பவனின் ஆனம்மாவை மலங்களிலிருந்து நீக்கு வதற்காக செய்வது
*அர்க்கயம் * / பூ சமர்ப்பித்தல் / சதாசிவனுடைய நிலையை அடைவதற்காக செய்வது
* ஸ்தானம் (கங்கை அபிசேகம் செய்வித்தல்) * / ஆன்மாவினுடைய மலங்களை போக்குவதற்காக செய்வது
* சந்தனம் பூசுதல்& வஸ்தரிம். ஆபரணம்,மலர் அலங்காரம், தூபமிடல், * / சுத்த வித்தியா புவனத்தல் ஆன்மா அடையும் போகம்
* தீபம் இடுதல்* மலங்கள் அற்று சுத்த ஞானத்தை கொடுக்க வல்ல செயல்

சிவபூசை ெசய்வது
ஆவாஹனம் , ஸ்தாபனம், ஸந்நிதானம், ஸந்நிரோதனம், முதலியன அதனதன் முத்திரைகளுடனும்,இருதயம் முதலிய அங்க மந்திரங்களாலும், தன்னுடைய மனதில் சிவபொருமானை முழுவதும் பாவிதது / பெருமானுடன் ஐக்கித்தை உணர்வதன் மூலமும் பாத்யம், அரக்கியம், ஆசமனம் முதலிய உபகரணங்களாலும் உன்னை வழிபடுவது ஒன்றே இந்த பிரவியின் பயன்
8ஆவாஹனம் *என்பது வழிபடுவோனின் ஆன்மாவல் சித்தாமாகிய (சிவபெருமானை) பிரகாசிக்க ெசய்வதே.
* ஸ்தாபனம்* ஆன்மாவில் ஈஸ்வரனைஸ்தாபித்து இருக்க செய்வதே
* ஸந்நிதானம் * ஆன்மாவை ஈஸ்வரனிடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்வதே
*நிரோதனம்* தன்னுடைய ஆன்மாவை சிவபொருமானிடத்தில் இலயத்து அடங்கி இருக்கச் செய்வதே


திருச்சிற்றம்பலம்

திங்கள், 4 டிசம்பர், 2023

* **வன்னிமரத்தின் சிறப்பு***

*  **வன்னிமரத்தின் சிறப்பு***



*வன்னிமரம் பல திருக்கோயிலில் இருக்கிறது  விருத்தாஜலம் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்      கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் விசேஷமானது                            அவிட்டம் நட்சத்திரம் பரிகார விருட்சம் வன்னிமரம்

 *வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.*

✰ வன்னிமரம் பூக்காது. காய் காய்க்காது. இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.

✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும்.  வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.

✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.

✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.



திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

 திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்









இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.


மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.


   விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.


திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்… தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.


1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.


1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.


2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.


3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.


     “நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்

      கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

      நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்

      குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”

                                           என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.

              நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.


பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,


     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்

      ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்

      ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்

      ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

                    என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.


பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

           பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.


உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.


“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;


     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்

      விளக்கினின் முன்னை வேதனை மாறும்

      விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

      விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”


என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.


பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.


நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.


ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.


ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.


1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.


கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.



தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.


தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.


     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட

      சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.


     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்

      பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 

      ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை

      நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ ?”         (தாயுமானவர்). 

–திருச்சிற்றம்பலம்–

மதுக்கடை இங்கே ! மருத்துவ நிலையம் எங்கே ???

 


வெள்ளி, 10 நவம்பர், 2023

புண்ணியம் செய்வர்க்கு பூவுண்டு நீருண்டு

 சீல மிகு பைந்தமிழர் போற்றும் செந்நெறியாகிய சித்தாந்த சைவம் வழிபாட்டை அன்றாட வாழ்வின் கடமைகளில் முதன்மையனது என்றே கூறுகின்றது. ‘மனம் வாக்கு…. என்ற மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியாரில் இடம் பெற்ற இப்பாடல் வரிகள் வழிபாடு செய்வதற்கே இறைவனால் இவ்வுடல் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் வழிபாட்டின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த விண்ணில் வாழ்கின்ற தேவர்களும் மண்ணுலகில் இறங்கி வந்து பூசனைகள் செய்கின்றனர். ஆனால் மண்ணிலே வாழ்வதற்கென்றே வந்த நம்மை போன்ற அறியாமையில் வாழும் மாந்தர்கள் வழிபாட்டின் முக்கியதுவத்தை உணராமல் இருக்கின்றோம் என்று வருந்துகின்றது.

திருமந்திரம் அருளிய திருமூல தேவ நாயனாரோ “எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நன்னறியாமல்  நலுவுகின்றாரே!” என்று வழிபாடு செய்யாதவர்களை பாவிகள் என்று கடுமையாக சாடுகின்றார். வழிபாடு செய்யாவிடில் கருணையே வடிவான பெருமானுடைய திருவருள் பேறு கிடைக்காமல் வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்க நேரும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டினை எப்படிச் செய்வது என்ற கேல்வி உடனே எழும். சீர்மிகு செந்தமிழர் போற்றும் சைவம் மிகவும் எளிய முறையில் வழிபாடு செய்யலாம் என்று திருமுறை வழி நமக்கு கூறுகிறது. தூய நீர், அன்றலர்ந்த மலர்கள், தூப தீபம் போன்றவை வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் என்று திருநாவுக்கரசு அடிகள் தாம் அருளிய திருமுறையின் முதல் பதிகத்தில் “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” என்கின்றார். “பூ தேர்ந்து ஆய் எனக் கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை என்னும் கால்” என்ற திருஞானசம்பந்தரின் பாடலில் நல்ல பூக்களைக் கொண்டு தாயே என்று மனமுருகி வழிபடுவதே வழிபாடு, அதனை செய்யாத ஒருவரும் உண்மை சைவர் ஆகார் என்கின்றார்.

மேழும் வழிபாட்டினை நாமே சொந்தமாகச் சேய்ய வேண்டும் என்பதனை திருமூலர் “புண்ணியம் செய்வர்க்கு பூவுண்டு நீருண்டு” என்கிறார். அவரவர் வாழ்வு மேம்படுவதற்கு அவரவரே வழிபாடு செய்ய வேண்டும் என்பது நால்வர் பெருமக்கள் நமக்குக் கூறிச் சென்றுள்ளார்கள். அவ்வாறு நாமே செய்யும் வழிபாடும் நமக்கு புரிந்த மொழியில் இருப்பது அதனிலும் முக்கியம் என்கின்றார்கள். தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அம்மொழியே வழிபாட்டிற்கு ஏற்ற மொழி என்பதனை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே சிவபெருமான் சுந்தர மூர்த்தி அடிகளை ஆட்கொண்ட போது “நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” என்று சிவபெருமானே கூறியதாக தெய்வச் சேக்கிழார் தாம் அருளிய பெரிய புராணத்தில் கூறியுள்ளார். பெருமானே தமக்கு தமிழில் அற்சனை செய்வதே விருப்பம் என்று கூறியதோடு மட்டும் நில்லாமல் சுந்தரருக்கு “பித்தா” என்று அடியும் எடுத்துக்கொடுத்து அவரை தமிழில் பாடவைத்தார் என்பது சைவம் காட்டும் வரலாற்றுச் சான்றாகும்.

மேழும் தமிழ்மொழியில் நாம் ஓதி இறைவனை வழிபடவேண்டும் என்று அற்சனைப் பாட்டுக்களாக பெருமான் 18 ஆயிரம் பாடல்களை 27 ஆசிரியர்கள் மூலம் நமக்கு அருளியுள்ளார். இத்திருமுறைகளில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும் கூட மந்திரமாகும். இவை நெருப்பில் வேகாது, நீரில் அழியாது, இறந்தவர்களை மீட்டுக்கொடுத்தது, சுண்ணாம்புக் காலவாயை பூ சொரியும் நந்தவனமாக மாற்றியது, மிதித்துக் கொல்ல வந்த யானையை வலம் வந்து வழிபடச் செய்தது. செந்தமிழர் போற்றும் தமிழ்மொழியே மந்திரமாக இருக்கும் பொழுது தமிழ்மொழியில் பெருமான் அருள்பெற்ற அடியார்கள் அருளிய திருமுறை மந்திரமாக இருப்பதில் வியப்பொன்றும் இருக்க முடியாது.

வழிபாட்டில் பாடப்பெறும் இவ்வரிய தமிழ்மறை பாடுபவர் பொருள் புரிந்து ஓதுவது சால சிறந்தது. நம்மைப் படைத்து, அன்பு செய்ய தாய் தந்தையைக் கொடுத்து, இன்றளவும் நாம் இருக்கும் இந்த நிலை பெருமானின் திருவருளாலே நமக்கு வந்தது என்று நினைந்து, ஒவ்வொரு வினாடியும் பெருமான் செய்கின்ற உதவிக்கு நான் எந்த வகையிலும் கைமாறு செய்ய முடியாது என்று உண்மையாக மனம் உருகி செய்வதே வழிபாடாகும். இவ்வாறு நாம் உணர்ந்தும் உருகியும் வழிபாடு செய்ய வேண்டுமானால் நாம் ஓதும் திருமுறைக்கு பொருள் தெரிய வேண்டும் என்கிறார் மணிவாசகப் பெருமான். “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா……. அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று  என்பால்” என்று மணிவாசகர் சிவபெருமானை நோக்கி உள்ளம் உருகிப் பாடுகின்றார். இவ்வரிகளில் பெருமன் உதவியால் நாம் இன்ப வாழ்வை அனுபவிக்கின்றோம், நமக்கு உதவுவதனால் பெருமானுக்கு எந்த நன்மையும் இல்லை, கைமாறு கருதாது உதவும் பெருமானுக்கு நம்மால் என்ன நன்மை செய்து விட முடியும்? என்று எண்ணி மணிவாசகப் பெருமான் அழுது புழம்புவதைத் திருவாசகம் முழுமையும் காணலாம்.

இவ்வாறு பெருமான் செய்த உதவிக்கு நன்றி கூற வேண்டும் என்று நமக்கு விளங்கும் போது பெருமான் மீதும், பெருமான் படைத்த பிற உயிர்கள் மீதும், நம் மீதும் நமக்கு அன்பு எற்படும். சைவம் கூறுவது மிகவும் எளிய வழிபாடு. அவ்வழிபாட்டின் பயனோ மிகவும் பெரியது. ஆடம்பர வழிபாடு சைவர்களுக்கு தேவையில்லை. புரியாத மொழியில் செய்யப்படும் வழிபாட்டிலும், நமக்காக மற்றவர் செய்யும் வழிபாட்டிலும் பெரிதாகப் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை. பைந்தமிழர் சமையமான சித்தாந்த சைவம் கூறும் எளிய வழிபாட்டினை பின்பற்றி கைமாறு கருதாத, நம்மால் கைமாறு செய்ய இயலாத பெருமானை நன்றியினால் வழிபட்டு, அன்பே சிவம் என்று உனர்ந்து உண்மை சைவர்களாக வாழ்ந்து, சைவம் கூறும் பேரின்ப நிலையை அடைவோமாக.

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”.

வெள்ளி, 13 அக்டோபர், 2023

 நவராத்திரி 


பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி -  அப்பர் சுவாமிகள்

சிவபெருமான் இலிங்கமாகவும், உமாதேவியார் பீடமாகவும் உள்ளார் என்பது இதனாற் பெறப்படும்.இதனாற், சிவலிங்கவழிபாடென்பது தனித்த ஈசுவர வழிபாடும் அல்ல.தனித்த சத்தி வழிபாடும் அல்ல.சிவசத்தி வழிபாடென்பது பெறப்படும்.இங்ஙனம் சிவலிங்க வழிபாடு, சிவசத்தி வழிபாடாகவே விளங்குகின்றது.

சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்"  என்னும் சித்தாந்தப்பிரமாணமும் இதனை நன்கு புலப்படுத்தும்.சத்தியென்றும் சிவனென்றும் பின்னமோ அபின்னமோ என்னில், பின்னமிலான் - வேறாயிருக்கிறவனல்லன்  எங்கள் கடவுள் என்பது,உமாபதி சிவாச்சாரியரின் திருவருட்பயன் நூலினால் உணர்த்தப்படுகின்றது.

 சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே - அப்பர் சுவாமிகள்

 சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்  - அப்பர் சுவாமிகள்

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன்  என்கின்றார் அப்பர் சுவாமிகள்.மேலும், ஒருநாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாரின் செம்மேனிக்கு, நம்மனோர் கடைந்தேறுவதற்காய் கடவுள் கொண்ட பெயர் சிவன் என்பதை, சிவன் என்பது பதிவாக்கியம் என்பதை அப்பர் சுவாமிகள் உணர்த்துகின்றார்.

இதில், "சி" என்பது சர்வேசுவரனையும் "வ" என்பது உமாதேவியாரையும் குறிக்கும். இவை சிந்தாந்த நூற்களில் இனிதே விளங்கும்.சிவபெருமான் என்னும்போதே, உமாதேவியாரைத் தனித்துக்கூறவேண்டிய தேவையில்லாதுபோகும் அருமையை "சிவ" என்னும் நாமத்தால் தெளியலாம்.

மேலும், சிவபெருமானுடைய மேனியை அருள் உடம்பு என்றே கூறுகின்றோம்.ஏனையோர் உடம்புகள் போன்று பௌதீக உடம்பன்று. அருட்திருமேனி என்பதால், சிவபெருமானுடைய அருளே அவரது மேனியாகும்.சிவபெருமானின் அருளையே உமாதேவியார் என்பதால், சிவபெருமானின் மேனியை தனித்து வழிபடினும், அது சத்தி வழிபாட்டினை நீக்கிய வழிபாடென்று கூறமுடியாது. இதனாற்றான், பண்டைய சிவாலயங்களில் சத்திகென்று தனிப்பிரகாரம் இல்லை.சத்திகென்ற தனிப்பிரகாரம் பிற்காலத்தையது. தனியே சத்தியை மட்டும் வழிபடுவோர் உருவாகியதால், அவர்களின் தாக்கத்தால் , சிவலிங்கவழிபாடு சிவசத்தி வழிபாடென்ற தெளிவு மங்கி விளைந்ததுவே  தனியான சத்திக்குரிய பிரகாரங்களாகும்.

இவ்வாறு பிரிக்கமுடியாத, பின்னப்படுத்தமுடியாத, சிவபெருமானுக்கும் சத்திக்கு முள்ள சம்பந்தத்தினை தாதான்மிய சம்பந்தம் என்று சைவசித்தாந்ததிற் சொல்லப்படும். 

ஒன்றாய்,உடனாய,வேறாய் விளங்கும் சுத்தாத்துவித சம்பந்தம் என்பது சிவபெருமானுக்கும் உயிர்களுக்குமானது.

அப்படியானால் சிவபெருமானுக்கும் சத்திக்கும் உள்ள தாதான்மிய சம்பந்தம் என்பது என்ன? என்று யோசிக்கலாம். இதனை இலகுவாக விளக்குவதென்றால்,

சூரியனும் சூரிய ஒளியும்போல்  என்று விளக்கலாம்.

சூரிய ஒளிச்சத்தியில் வெப்பசத்தி உண்டு.வெளிச்சம் தரும் ஒளிச்சத்தி உண்டு.  இவையே, தாவரங்களின் ஒளித்தொகுப்பு முதல் உலகத்தின் ஐம்பூதத்து தொழிபடு சத்தியாக உருமாறி, மின்சார சத்தியாக வெளிபட்டு, ஏனைய சத்திகளாக திரிபுகளடைந்து உலக இயக்கமாய் விளங்கியவாறுள்ளது.  உலகத்திற் உயிர்கள் வாழ்வதற்குரிய சூழல், சூரியனின் இருப்பினாலும் சூரிய ஒளியின் விளைவினாலுமே உருவாக்கப்படுகின்றது. 

அதுபோல், சிவபெருமான் உலக கர்த்தாவாகவும், அவரது அருள் உமாதேவியாராகவும் விளங்குகின்றது என்பதுவே சைவசமயக்கொள்கை.  அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் முடிக்கும் 

சிவபெருமானால் முடியாத காரியங்கள் சிலவுண்டு.அவற்றிலொன்று அவரின் அருளை நிறுத்துதல். அவர் அருளமாட்டாதவர் என்றால், முத்திபெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறத்தலை அடையும். அதுபோல், ஆன்மாக்கள் சிவபெருமானை அடையவேண்டிய தேவையும் இல்லாதுபோகும்.அரசன் சிம்மாசனத்தில் இருக்கும்வரைதான், மக்கள் அவனைக் கொண்டாடுவர். ஆக, பனிக்கட்டிக்கு குளிர் என்பது எங்ஙனம் இயற்கை குணமோ, நெருப்புக்கு சூடு என்பது எங்ஙனம் இயற்கைக் குணமோ, அங்ஙனம் சிவபெருமானுக்கு அருளல் என்பது இயற்கைக் குணம். இராட்சதம், தாமசம், சாத்வீகம் முதலிய குணங்களற்ற நிர்குணனாகிய சிவபெருமானின் இயற்கை இயல்பு (குணம்) அருளலாகும்.

அருள்(உமாதேவியார்) இல்லாவிட்டால் சிவபெருமானை அனுபவிக்கும் வாய்ப்பு உயிர்களுக்கு இல்லை. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது இதன் பொருட்டேயாகும்.  இன்பத்தாலும் துன்பத்தாலும் தாக்கப்படாத ஆன்மாவில் திருவருள் பதியும்.அங்ஙனம் திருவருள் பதிவதாலேயே, அந்த ஆன்மா சிவபெருமானை அனுபவிக்கும்(முத்தி) வாய்ப்பினைப் பெறும். அம்மாதான் அப்பாவினை இனங்காட்டுவர். அதுவே உலக வழக்கு. சூரிய ஒளியாலேயே சூரியனின் இருப்பு நமக்கு விளக்கமுறுகின்றது. அதுபோல், உமாதேவியாராலேயே(திருவருள்) சிவபெருமானை நாம் அனுபவிக்கலாம். இதனாலேயே, திருஞானசம்பந்தப் பெருமானும்  " தோடுடைய செவியன்" என்று பாடினார். தோடு பெண்கள் தம் காதுகளில் அணிவது. குழையே ஆண்கள் தம்காதுகளில் அணிவது. சிவபெருமானைப்பாடும்போது,குழையுடைய செவியனென்று பாடாது; தோடுடைய செவியன் என்று பாடியமையால் திருஞானசம்பந்தப்பெருமான் முதலிற் அனுபவித்தது சிவபெருமானின் இடப்பாகமாகிய உமாதேவியரின் பாகத்தையேயாகும்.இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமக்கு ஞானப்பால் தந்து , வலிய வந்து ஆட்கொண்ட சிவபெருமானின் அருளல் சிறப்பினையே திருஞானசம்பந்தப் பெருமான் நினைந்துருகித் தம்தேவாரத்தை ஓதியருளத் தொடங்கினார்.

"தமிழ் இந்துக்களின்" என்று ஆர்ப்பரித்தவாறு  வெளிவரும் பல்வேறு இதழ்களும் எழுத்தூடகங்களும் கலப்பட கருத்துக்களையே சுமந்துவருவதால்,சிவபெருமானின் அருளல் சிறப்பைக் கொண்டாடும் ஒன்பது திருநாட்களே இந்த நவராத்திரி விரதம் என்பதை சைவசமயத்தார் நன்கு விளங்கிநிற்றல் அவசியம்.

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி -  அப்பர் சுவாமிகள்