சனி, 21 மார்ச், 2026

சித்தர்

 சித்தர்




அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப் பொருளாகச் சித்தன் கிருத கிருத்தியன்செய்ய வேண்டுவன வற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன் எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கின்றவன் என்று விளக்குகிறார்.

சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துகளை உண்டாக்கி, பக்தி நெறியல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தனர் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும், மு. அருணா சலமும் தெரிவிக்கின்றனர்.

சித்தர் தன்மைகள்

சித்தர்கள் சமயக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கென்றொரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழி ஒழுகினர். மத மாச்சரியங்கள், சாதி பேதங்கள், உயர்வு தாழ்வு இவை அனைத்தையும் கடந்து நின்றார்கள். சித்தர்களைப் பற்றிய பல்வேறு கதைகளும் கருத்துகளும் நாட்டில் நிலவி வருகின்றன. சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் செவி வழியாகவும் நூல் வழியாகவும் மட்டுமே கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
சித்தர்கள், உலகத்தின் பொருள் வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வழியை வகுத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் காணப்படுகின்றனர்.

நோயற்ற வாழ்வும் சாகாநிலையும் மனிதன் அடையக் கூடிய இடம் என்று நிரூபித்தனர். சித்தர்களின் முறைகள் அறிவியல் பார்வைக்கு உடன்பாடாக இருக்கின்றன.
சித்தர் செயல்களைத் தோற்றுவித்தவராகச் சிவனையும், தமிழகத்தில் சித்தர் மரபை உருவாக்கியவராகத் திருமூலரையும் குறிப்பிடலாம்
திருச்சிற்றம்பலம்

சிவ மானஸ பூஜா

 சிவ மானஸ பூஜா – தமிழில்


பூஜா என்றால் தெய்வத்தின் மீதான பக்தியில், பிரேமையில் மனம் மலர்தல் என்பது பொருள். முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம் – அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
இத்தகைய பூஜா-தியான மனப்பாங்குக்கு உதவும் வகையில் தெய்வங்களைக் குறித்து மானஸ பூஜா ஸ்தோத்திரங்களை ஆசாரியர்களும் மகான்களும் அருளியுள்ளார்கள்.
ஸ்ரீ சங்கரர் அருளியவற்றில் சிவனைக் குறித்து கீழ்க்காணும் சிவ மானஸ பூஜா & ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம், தேவியைக் குறித்து மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா & த்ரிபுரஸுந்தரி மானஸபூஜா ஸ்தோத்ரம், விஷ்ணுவைக் குறித்து பகவன் மானஸ பூஜா ஆகியவை இந்த வகையானவை. ஆழ்ந்த பக்தியுணர்வும் கவிதை நயமும் சொல்லழகும் கொண்ட அற்புதமான ஸ்தோத்திரங்கள் இவை. இவற்றில் தனது இஷ்ட தெய்வத்தைக் குறித்த மானஸ பூஜா ஸ்தோத்திரத்தை பொருளறிந்து தொடர்ந்து பாராயணம் செய்து வருபவர்களுக்கு, காலப்போக்கில் இயல்பாகவே மானஸ பூஜைக்கு உகந்ததான தியான மனநிலை கைகூடி வரும் என்பது பெரியோர்களின் உபதேசம்.
சிவ மானஸ பூஜா – ஸ்ரீ சங்கரர் அருளியது
(தமிழாக்கம் எனது).
இரத்தினங்கள் இழைத்த இருக்கை
பனிநீராடல்
திவ்யமான ஆடைகள்
பல்வேறு மணிகளால் அணிகலன்கள்
கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம்
மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள்
தூபம் தீபம்
தேவா தயாநிதி பசுபதி
இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும்
ஏற்றிடுக. (1)
நவரத்தினங்கள் மிளிரும் பொற்பாத்திரத்தில்
நெய்ப் பாயசம்
ஐந்துவித பக்ஷணங்கள்
பாலும் தயிரும் கலந்தவை
கதலிப்பழம் பானகம்
நிறைந்த காய்கறிகள்
கற்பூரம் கமழும் சுவைமிகு தண்ணீர்
தாம்பூலம்
பக்தியினால் மனத்தில் சமைத்தவை
பிரபுவே
சுவீகரித்திடுக. (2)
குடை இருபுறமும் சாமரம் மென்விசிறி
மாசற்ற கண்ணாடி
வீணை பேரிகை மிருதங்க கோலாகலம்
கீதம் நடனம்
சாஷ்டாங்க நமஸ்காரம்
துதிகள் பலவிதம்
இவையனைத்தும் உனக்கென
எனது சங்கல்பத்தால்
சமர்ப்பித்தவை
எங்கும் நிறைந்தோனே விபுவே
பூஜையை ஏற்றிடுக. (3)
ஆத்மா நீ
அறிவு மலைமகள்
பரிவாரங்கள் பிராணன்
உடல் கோயில்
புலன்களின் இன்பநுகர்ச்சி உனது பூஜை
உறக்கம் சமாதி நிலை
கால்கொண்டு நடத்தல் பிரதட்சிணம்
பேச்செல்லாம் துதிப்பாடல்
என் செயல்களென எவை எவை உண்டோ
சம்போ
அவையனைத்தும் உனக்கு ஆராதனம். (4)
கால்கள் கைகளால் செய்ததோ
வாக்கில் உடலில் செய்கையில் விளைந்ததோ
செவிகளில் விழிகளில் தோன்றியதோ
மானசீகமானதோ
அறிந்ததோ அறியாததோ
அக்குற்றங்கள் அனைத்தையும்
பொறுத்தருள்க.
ஜெய ஜெய கருணைக்கடலே
ஸ்ரீமகாதேவ சம்போ. (5)
நன்றி தமிா்இந்து

சனி, 21 பிப்ரவரி, 2026

மானிடப்பிறப்பின் மாண்பு

 மானிடப்பிறப்பின் மாண்பு



எண்ணரிய பிறவிதனில் மானிட பிறவிதான் யாதினும்அரிது அரிது எண்கிறார் தாயுமானவர்

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை


எல்லா பிறவிகளையும்தவிர்த்து மனிதப்பிறப்பு எடுத்தது கடலைக் கையால் நீந்துவதற்கு சமம் என்பர் சான்றோர்

 திருநாவுக்கரசு சுவாமிகள் வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்கிறார்

வாய்த்தது என்றால்நம்முடைய நல்வினைப்பயனால் இறைவரால் கொடுக்கப்பட்டது என்ற பொருளாகும்நாமாகக் கேட்டு பெற்றதல்ல இந்த மானிடப் பிறப்பு

இதனை சம்பந்த பெருமானார் அருந்திரு நமக்கு ஆக்கிய அரன் என்கிறார்

 நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததே மிகப்பெரிய செல்வம்இந்த மண் உலகில் வேறு எங்கு பிறந்திருந்தாலும் பிறவா நெறி அடைவது இயலாததாகும்

  மனிதப்பிறவியின் நோக்கம்மனித பிறப்பு எடுத்ததன் நோக்கமேஇனி பிறவாமை பெறுவதுதான்இறைமை என்னும்பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்துவந்த ஒரு துளிதான் நாம்

 கடல்நீர் ஆவியாகி மழை நீராக மாற்றமடைந்து நதிகளின் வழியே மீண்டும் கடலில் வந்து கலந்து விடுகிறதுஇதுதான் உலக இயல்பாக இருக்கிறதுஇதைப்போல இறைமையினின்று பிரிந்து வந்த ஓர் துளியாகிய நாமும் இறைமையில் கலந்து விட வேண்டும்இதுதான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவாகும்இதுவே பிறவா நிலை என்றும் முக்தி பேறு என்றும் கூறப்படுகிறது

  பிறப்பின் இரகசியம் இப்படி இருக்கும் போது மனிதன் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கிறான் என்கிறார் அப்பர் அடிகள்

பிறவியின் நோக்கமே தெரியாமல் வாழ்கிறோம்அதனால் தான் ஆசையின் வயப்பட்டு பலப்பல வினைகளை செய்கிறோம்இவ்வினைப்பயனாக நாம் மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகிறோம்நம் செயல்கள் எல்லாம் இறைவன் செயலாக அவனிடம் நம்மை தந்து இறைவனை முழு மனத்தோடு எண்ணி அவன் தாள்பணிந்து பிறவா நெறி பெறுவோம்

திருச்சிற்றம்பலம்


செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

குருலிங்க சங்கம வழிபாடு


 குருலிங்க சங்கம வழிபாடு

குரு வழிபாடு : மன, மொழி, மெய்களால் வணங்குதற்குரிய சிவசொரூபமாக இருப்பதோடு குருவானவர் வாழ்வில் பின்பற்றுதற்குரிய சிறந்த இலட்சியமாகவும், ஆன்மிகத்துறையில் சந்தேகங்களைப் போக்கி நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றார். குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும்போது அடக்கத்துடனும், பக்தியுடனும் இருந்து, கவனம் முழுவதையும் சொல்லப்படும் விடயத்திற் செலுத்திக் கேட்க வேண்டும். குருவுக்குச் செய்யும் சேவை மிகச்சிறந்த திருத்தொண்டாகும். குருவின் உபதேசப்படி ஒழுகுதல் அவர்க்குச் செய்யும் வழிபாடுகளுளெல்லாம் முதன்மையானது. அவரவருடைய குருவை உள்ளன்போடு வழிபடுவதுடன், சமய குரவர், சந்தானகுரவர் ஆகியோருக்கும் குருபூசை செய்து வருவது அவசியம். நாயன்மார்களுள் திருமூலார், மங்கையற்கரசியார், குலச்சிறையார், அப்பூதியடிகள் ஆகியோர் குருவழிபாட்டால் வீடுபேறடைந்தோருட் சிலராவர். சந்தானகுரவர் முதலானோர் குருவழிபாட்டினாலேயே உயர்பதம் எய்தியவர்கள். தங்கள் குருவின்பால் தாங்கள் கொண்டிருந்த பக்தியையும் பெருமதிப்பையும் தங்கள் நூல்களிலும் அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

இலிங்க வழிபாடு: சிவலிங்கம் சிவபெருமானின் அருவுருவத் திருமேனி. அது ஞானசோதி வடிவானது. பீடம் சக்தியையும், இலிங்கம் சிவத்தையும் குறிப்பது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்திலுள்ளவர்களும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளை அவரவர் பக்குவத்திற்கேற்ற முறையில் வழிபடுதற்குரியவர். சரியையாளர் இறைவனது உருவத் திருமேனிகளைச் சிவனெனக் கொண்டு வழிபடுவர் கிரியையாளர், அருவமாகிய பரம்பொருளே இலிங்கம் முதலிய திருவுருக் கொண்டருளினார் என்று தெளிந்து மத்திரத்தினால் சிவலிங்கத்தில் சிவபெருமானைப் பதித்து வழிபடுவர். யோகிகள் தமது உள்ளத்தில் நிலைத் இருக்கும் இறைவனே சிவலிங்கத் திருமேனியிலிருந்து பூசை கொண்டருள்வன் எனத் தெளிந்து வழிபடுவர். ஞானிகள் அன்பினால் வழிபடுவர். இவர்களுள் சரியையாளருக்கு வெளிப்படாது நின்றும், கிரியையாளருக்கும் யோகிகளுக்கும் அவர்கள் விரும்பிய வடிவாய்த் தோன்றி நின்றும், ஞானிகளுக்கு அவர்களது அன்பே தாமாக எப்போதும் வெளிப்பட்டு நின்றும் சிவபெருமான் அருள்செய்வார். நாயன்மாருள் சேரமான் பெருமான், சாக்கியநாயனார், கலிக்காமர், பூசலார் முதலானோர் இலிங்க வழிபாடு செய்து வீடு பேறடைந்தவர்.

சங்கம வழிபாடு: சிவனடியார் திருக்கூட்டம் சங்கமம் எனப்படும். சிவபெருமானிடம் மெய்யன்பு பூண்டொழுகுவோர் சிவனடியார் ஆவர். அவர்கள் சிவபெருமானை நினைத்தாலும், அவரைப்பற்றிக் கேட்டாலும், அவரது தெய்வத் திருமேனிகளைக் கண்டாலும் தம்வசமிழப்பர்; சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தும், அவரது புகழ் பாடியும், திருவைந்கெழுத்தை ஓதியும் இன்புறுவர் சிவபெருமானை நினைக்கச் செய்யும் சிவசின்னங்களணிந்த திருமேனியுடையவராக இருப்பர்; அடியார்க்குரிய பாவனை, செயல், வேடம் இவற்றையுடைய எவரும் சிவமாகக் கருதி வழிபடுதற்குரியவரேயாவர். சிவனடியார்களைக் காணச் செல்லுங்கால் கையில் யாதேனும் கொண்டு செல்லுதலும், அதனை அவர்முன் வைத்து. வணங்கலும், அவர் அனுமதியுடன் இருந்து அவர் கூறும் நல்லுரைகளைக் கேட்டலும் முறையாகும்; நமது இல்லத்துக்கு வரும் அடியாரை எதிர்கொண்டு வரவேற்று, இன்சொல் கூறி, ஆசனத் இருத்து உபசரித்து வணங்கி, அவர் செல்லுங்கால் வழியனுப்பி வருதல் வேண்டும். நாயன்மாருள் திருநீலகண்டர், இயற்பகையார், திறுத்தொண்டர், இளையான்குடிமாறனார் முதலியோர் சிவனடியார்களை வழிபட்டு வீடுபேறு எய்தியவர்களாவர்.

சங்கம வழிபாட்டின் சிறப்பு

“ஆடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்” என்று வேண்டுகின்றார் மணிவாசகப்பெருமான் “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே” என்கிறார் அப்பர்பெருமான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகையில் ஒவ்வொரு நாயன்மாரையும் விதந்தோதி, அவர்களுக்குத் தாம் அடியாரெனக் கூறியதோடு, அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கெல்லாம் தம்மை அடியாரெனளவும் கூறிக்கொள்கிறார். சிவபிரானிடம் உள்ள அன்பு, அவரது அடியாரிடமும் பரவுவதால், அவர்மேலுள்ள அன்பு மேலும் வளர்ந்து உறுதிப்படுத்துகின்றது.

சிவனடியார் சங்கமம் எமது உள்ளத்திலுள்ள கீழ்த்தர எண்ணங்களையகற்றி, உயர்தர எண்ணங்களை உண்டாக்குகின்றது. உலகப் பற்றை நீக்கத் தெய்வப்பற்றை வளர்க்கின்றது. சிவனடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டும், வழிபாடும் உள்ளத்தை விரைவில் தூய்மைப்படுத்திப் பத்தியையும் வைராக்கெயெத்தையும் வளர்க்க உதவுகின்றன.

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 23 டிசம்பர், 2025

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே


பரம்பொருள் ஒன்றே

மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.


பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.


இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.


ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.


மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால் தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப் படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.

              சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய சமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.


செவ்வாய், 18 நவம்பர், 2025

"அஞ்சேல் "என்று அருளுவான்


 "அஞ்சேல் "என்று அருளுவான்

 நாம் மானிடப்பிறப்பு எடுத்ததின் பலனே நம் வினைப்பயனை நீக்கி இறைவன் தாள் அடைவதுதான், அதன் பொருட்டே நாம் வினைகள் தீரும் வரை இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டே தான் இருக்கும். நல்வினையால் புண்ணியமும், இன்பமும், தீவினையால் பாவமும், துன்பமும் நம் வாழும் போது அனுபவிக்கிறோம், இந்நிலையில் நாம் வாழும் வாழ்வில் முதுமையில் படும் அவஸ்தை கொடிது கொடிது, அந்நிலையில் அதைத் தாங்கும் சக்தியும் நம்மிடம் இருக்காது, நம் பொருட்டு உதவும் ஜீவனும் இருக்காது, உற்றாரும் உறவினர்களும் இருக்கமாட்டார்கள். அதனால் தான் பட்டிணத்துஅடிகள் நம்முடன் கூட வருவது நாம் சேர்த்த செல்வமோ, உறவோ வருவதில்ைல நாம் செய்த புண்ணிய பாவங்கள் தான் நம்முடன் வரும் என்றார். எனவே தான் தனக்கு இன்னும் ஒர் கருப்பை ஊர் வராது ஆக்கு என்று வேண்டுவார். 

  நம் வினையின் பயனால் நாம் முதுமையில் படும் துயரத்தை அருளாளர்கள் யாவரும் எனக்கு மரண அவஸ்தை இன்றி உன் திருவடியை தா என்று வேண்டினார்கள், அத்துடன் அந்நிலையில் எனக்கு அஞ்சேல் என்று அருள் தர வேண்டிய தேவாரப்பாடல்கள் ஏராளம் உள்ளன, இதனை உணர்ந்து தன் இளம்பருவத்திலேயே ஞானசம்பந்த பெருமான் திருவையாற்று பதிகத்தில் ஒரு பாடலில்

புலனைந்தும்பொறிகலங்கி நெறி மயங்கி

அறிவழிந்திட்டு ஐம்ேமல்உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று 

அருள்ெசய்வான் அமரும் கோயில் 

என்று இந்த ஊன் உடம்பில் உள்ள பொறிகள் எல்லாம் செயல் இழந்த நிலையில் எனக்கு அஞ்ேசல் என்று அருள் தர வேண்டும் பாடலாக அமைந்துள்ளது.


  மேலும் மரண அவஸ்தை பற்றி ஐயடிகள் காடவர்கோன்

குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி

நாெந்து இருமி ஏங்கி நுரைதேறி வந்து உந்தி

ஐயாறு வாயாறு பாயா முன் ெநஞ்சே 

ஐயாறு வாயால் அழை     என்கிறார்

     ஐயாறப்பரை நீ அழைத்தால் உனக்கு அஞ்சேல் என்ற அருள் கிடைக்கும் என்கிறார்.

  மரண அவஸ்தையை உணர்த்த வள்ளல் பெருமான் அவர்கள்  

  "படமுடியாது அரசே இனித்துயரம் படமுடியாது அரசே 

    பட்டதெல்லாமம் போதும் ,,,,,,,,,, 

  என் உடல் பொருள் ஆவி எல்லாம் 

  நீ எடுத்துக்கொண்டு உன் உடல் ஆவியை 

   உவந்து எனக்கு அருள்"  என்று வேண்டுவார்.


  3ம் திருமுறை தேவாரப்பாடலில் சம்பந்த பெருமானார்

  .....பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்ெசய்யும்  அந்தனார்  உறைவிடம் 

      என்று மழப்பாடி இறைவன் பெருமையை அருள் செய்யும் கோயிலாக காட்டுகிறார்.

  

 மாணிக்க வாசக பெருமான் அருள் செய்வாய் என்பது குறித்து ஒரு பதிகமே பாடியுள்ளார்.

   மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்றும் 

  அவரது அச்சோப் பதிகத்தில்  

" சித்தமலம் அறிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

  அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே " என்கிறார் 

 திரு வேசறவு பதிகத்தில்

    தானே வந்து எனது உள்ளம் பகுந்து அடியேற்கு அருள் செய்தான் " என்கிறார்

 அருள் பத்து பதிகத்தில்

 ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்று அருளாயே " என்கிறார்

 தேவாரம் தந்த அப்பர் அடிகள் தனது திருவையாற்று பதிகத்தில்

    இரப்பவருக்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்

   ----------

   அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயனையாறனாறே "  என்று  யார் யாருக்கு ஈசன் அருள் செய்தார் என்கிறார்

 எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகர் அருள் பத்து என்று ஒரு பதிகம் பாடியுள்ளார், இறைவனது அருளை வேண்டும் பத்துப் பாடல்களின் தொகுதி அருட்பத்து. இதன் எட்டாம் திருப்பாடலில், `பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுப்பவன் இறைவன்`  இப்பதிக பாடல்களில் அருள் புரிய வேண்டி----,

    "அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.

என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` 

தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.

அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!. என்று தனது பத்துப்பாடல்களிலும் இறைவனின் பேருமையை கூறி  இதன் பொருட்டு எனக்கு அருளாமல் இருந்துவிடுவாயே  அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல்    விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.என்று கூறி தன்பொருட்டு அடியார்களுக்கும் அருள் செய்வேண்டி பாடியுள்ளார்

     மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 2 நவம்பர், 2025

அன்னாபிஷேகம்

 

கோடி லிங்க தரிசனத்தை தரும் அன்னாபிஷேகம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலமும் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு மிகவும் சிறப்பு மிகுந்த விசேஷம் இருக்கிறது. அன்றைய தினம் தான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் என்பது நடைபெறும்.
அன்னாபிஷேகம் பூஜை வழிபாடு யார் ஒருவர் கோடி லிங்க தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி அற்ற நிலை உண்டாகும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அனைவராலும் சுலபத்தில் கோடி லிங்க தரிசனத்தை காண இயலாது அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்தை யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் கோடி லிங்க தரிசனத்தை செய்த பலனை பெறுவார்கள். ஒவ்வொரு அரிசியும் சிவலிங்கமாக பாவிக்கப்பட்டு அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதால் தான் கோடி லிங்க தரிசனத்தை நம்மால் அன்றைய தினம் செய்ய இயல்கிறது
ஐப்பசி மாத பௌர்ணமி திதி என்பது நவம்பர் மாதம் நான்காம் தேதி இரவு 9:42 மணிக்கு தொடங்கி நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை 7:27 வரை இருக்கிறது. அதனால் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 மணிக்குள்ளோ அல்லது காலை 11:45 மணியிலிருந்து 12:45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியிலிருந்து இரவு 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். வீட்டில் சிவபெருமானின் படம், சிலை, லிங்க ஸ்வரூபம் என்று எது இருந்தாலும் அன்னாபிஷேக நாளில் கண்டிப்பான முறையில் பூஜை செய்ய வேண்டும்.
எந்த வடிவத்தில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்கத்தை முதலில் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பசும்பாலால் அபிஷேகம் செய்து பிறகு பச்சரிசி சாதத்தை வடித்து ஆறவைத்து அதை வைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து பச்சரிசி சாதத்தை அதில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்து முடித்த பிறகு சிவபெருமானுக்கு முன்பாக 5 விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பிறகு “ஓம் லிங்கேஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்து 2 மணி நேரம் கழித்த பிறகு தான் சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பொழுது லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுக்காமல் ஆவுடையின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி கலந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது காக்கை குருவிகள் போன்றவற்றிற்கோ தானமாக தர வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அன்னாபிஷேக நாளில் அனைவரும் சிவ ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கும் இந்த முறையில் வழிபாடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்