அம்மையப்பர் வடிவம்
இன்று ஒருவருடைய குடும்பத்தை பற்றி சாடையாக கேட்கும் போது உங்கள் வீடு மதுரையா? அல்லது சிதம்பரமா? என்று கேட்பதுண்டு வீடு மனைவியின் ஆட்சியில் இருந்தால் அது மதுரை என்றும் கணவர் ஆட்சியில் இருந்தால் அது சிதம்பரம் என்று கிண்டலாக பேசுவதை நாம் அறிந்திருக்கின்றோம். மதுரையில் மீனாட்சிக்கே முதலிடம் அங்கு மீனாட்சி அருளிக்கொண்டே இருக்கிறாள். அதாவது சிவனருளை என்றும் அவள் வழங்கிக்கொண்டே உள்ளாள். சிதம்பரத்தில் சிவனருள் பரிபூரணமாக என்றும் உள்ளது ஆயினும் சிவகாமியின் வழியில் தான் அவன் அருள முடியும். அருளை இறைவனிடம் இருந்து வாங்கித் தருவது அன்னைதானே. கூட்டிக்கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் வரும் வழி வேறுபாடாக இருந்தாலும் அருளும் பலன் ஒன்றுதானே. கூடுதல் குறைதல் எதுவும் அவர்களிடம் இல்லை, அவர்கள் இருவரும் என்றும் எங்கும் சமம்தான்.
நம்மிடையே ஆண் - பெண் என்ற வேறுபாடு இன்றி இரண்டும் சமம் என்று உணர்த்தும் விதமாகத்தான் தன்னுள் பாதியை பெண்ணுருவமாகவும் மறுபாதியை ஆண் உருவமாகவும் ஆனுக்குள் பெண்ணோ? அல்லது பெண்ணுக்குள் ஆனே இன்றி இரண்டும் சமமே என்று உணர்த்தவே அர்த்த நாரீஸ்வராக காண்கின்றார்.அந்த சம வடிவமே அம்மையும் அப்பனும் இணைந்து அம்மையப்பன் என்கிற அர்த்தநாரீசுவரர் வடிவம் அர்த்த என்றால் பாதி நரன் என்றால் ஆண் என்றும் நாரீ என்றால் பெண் என்றும் ஈசுவரன் என்றால் சகல ஐசுவரியமும் உடைய தலைவன் , தன் உடலில் பாதியை பெண்ணுக்கு தந்த தலைவன் என்பது பொருள். அந்நிலையில் அவனே மங்கைபாகன் எனப்படுகிறான்.
சிவன் தன் ஆற்றலோடு வந்தாலன்றி உலகம் இயங்காது ஆகவே அவன் பிரிக்க இயலாத தன் சக்தியோடு இணைந்து நமக்காக இறங்கி வரும் தோற்றமே அம்மையப்பர் உருவம், நாம் வழிபடும் சிவலிங்கத் திருமேனி ஆண்பாதி பெண்பாதி வடிவம் அதனால் தான் அவனோடு என்றுமுள்ள சக்திக்கு பிரியாவிடை என்று பெயர். உயிர்க்கூட்டம் அனைத்தும் தம்முள் ஆண் பெண் என்றே இயங்கிக் கொண்டுள்ளது. ஆணுக்கு பெண்ணும் , பெண்ணுக்கு ஆணும் அவர்களுக்கு உலகமும் இன்பமும் தருவதாக ( போகப் பொருள்களாக ) அமைந்துள்ளன, எனவே இந்த அம்மையப்பர் போகவடிவம் எனப்படுகிறது. இதுவே அவனுடைய கருணையை காட்டுகிறது. சிவன் உமையோடு கூடிய இவ் அருள்வடிவை ஞான சம்பந்தர் " வேயுறு தோளி பங்கன்" என்றும் மாணிக்க வாசகர் " மலைமாது ஒரு பாகா " என்றும் பாடியுள்ளனர். எனவே ஆணும் பெண்ணும் இணைந்ததே இவ்வுலகம் , என்றும் அதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்றும் ஆண், பெண் இருவரும் சமம் என்றும் உணர்த்துகிறது அம்மையப்பர் வடிவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக