புதன், 8 ஜனவரி, 2014

வழிபாடு


வழிபாடு வழிபாடு என்பது "வழிப்படுதல்" என்பதன் சுருக்கமாகும். இறைவனை அடையும் வழியில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம், அவன் வழிப்படுகிறோம் என்று உணரவேண்டும். நம் வழிபாடுகள் மூன்று வகையாகும். முதலாவது நான் என்னும் அகங்காரத்துடன் செய்வது. கோவிலுக்கு என்று ஒன்றை செய்துவிட்டு பின் " உபயம்" என்று தன்பெயரை போடுவதும் தன்னை பெருமைப்படுத்தும் வியாபார நோக்கம் கொண்டதும் இவ்வகைதான், இது நான் செய்தேன் என்ற இறுமாப்பையே காட்டுகிறது. நம் பெயருக்கு நாமே செய்கின்ற அர்ச்சனையும் இதுபோன்றதுதான். இங்கும் நான் என்ற தன்முனைப்போ முன்னிற்கிறது. வழிபடும் போது நான் என்ற எண்ணம் வந்துவிட்டால் அது வழிபாடு அன்று. ஆனால் நமக்கு வழிபாடு என்கிற நெறியை ஊட்டுகிற முதற்படி இதுதான். நாம் அனைவரும் கடந்து வருகிற பாதையும் இதுதான், ஆனாலும் தவறில்லை. அடுத்தபடியாக தன்பெயர் வெளிவராது இறைவனை எண்ணி அவனுக்கே என அர்ப்பணித்து இறைவன் பெயரிலேயே நாம் செய்விக்கும் அர்ச்சனை, அபிசேக ஆராதனை மற்றும் தொணடுகள் , இவை பதிபுண்ணியம் இறைநல்வினை எனப்படும். இவை நாம் அனைவரும் பெறக் கூடிய புண்ணியமாகும். மூன்றாவதாக, மேனலையாக நாம் என்றும் அவனடிமை என்று அவனுக்கு நம் உடலால் செய்யும் தொண்டுகள், பணிவிடைகள், உழவாரப்பணிகள் , இவை மட்டுமே இறைத்தொண்டு எனப்படும். இதற்கு இணையே இல்லை இவையே உண்மை வழிபாடு இதுவே பக்தி பூர்வமான அருள் வழிபாடாகும். கோயிலை வலம்வருவது, சுத்தம் செய்வது, பூத்தொடுத்து அணிவிப்பது, தீபம் ஏற்றுவது, வாயாரப்பாடுவது, கேட்பது, அபிடேக ஆராதனைகளை தானே செய்வது, மனம் நிறைய அவனை எண்ணி பூரிப்பது, மந்திரம் உச்சரிப்பது தியானம், செய்வது, எனும் இவை யனைத்தும் நாம் செய்யக்கூடிய இறைத்தொண்டுகள் ஆகும், அவனை அடைய அவை நல்வழிகள் ஆகும். ஆனால் இவற்றில் எதைச் செய்யும்போதும், நான் செய்கிறேன் என்ற ஆணவம் சுயவேண்டுதல் புகுந்துவிடாது செய்யவேண்டும். இதற்கு நம் மனம் பக்குவப்பட வேண்டும். அப்பக்குவம் நம் வாழ்கையில் ஏற்ற இறக்கங்களினாலும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்தாலும் உண்டாகும், அதை வழிபாடு என்னும் இறைத்தொண்டின் வழியில் படிப்படியாகத்தான் பெறமுடியும், இறைத்தொண்டின்(வழிபாட்டின்) வழியில் மட்டுமே நாம்அவனை அடையமுடியும். இறைவழிபாட்டில் உழவாரப்பணிக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது, சைவ நாயன்மார்களில் இறைத்தொண்டில் ஈடுபடாதோர் யாரும்இல்லை, அனைவரும் மேற்கூறிய இறை வழிபாட்டுடன் சிவனடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிதான் சிறப்பு பெற்றது யாரும் அறிந்ததே. அன்பே சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக