சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்
சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும்ங நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக