புதன், 6 மே, 2015

ஆதி சங்கரருக்கு அருள் செய்த சங்கரன்


ஆதி சங்கரருக்கு அருள் செய்த சங்கரன் எவன் பிரம்மத்தைப் பிரம்மமாக அறிகிறானோ அவன் பிரம்மாமாயிருந்தே பிரம்மத்தை அடைவான் என்பது சிவனார் வாக்கு. அந்த வாக்கியத்தின்படி நடந்த சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் நெருப்பிலும், தண்ணீரிலும் முட்களிலும் சாதாராணமாக நடக்கும் ஆற்றலையும் பிராணிகள் பேசுவதையும் அறியும்சக்தியும பெற்று இருந்தார்கள். ஆதிசங்கரருக்கு வேதத்தை போதித்தவர் சிவபெருமான். ஒரு முறை ஆதி சங்கரர் ஆற்றில குளித்து விட்டு வரும்போது அருவருப்பான தோற்றத்தோடு கள் (மது) குடத்தை தூக்கிக் கொண்டு ஒரு புலையன் வந்தான். அவனை சுற்றி நான்கு நாய்கள் வந்து கொண்டு இருந்தன. அவனையும் நாய்களையும், பார்த்த ஆதி சங்கரர்" எட்டிப்போ" என்றார், அதற்கு அந்த புலையன் " சாமி, எதிலிருந்து எதை விலகிப் போகச் சொல்கிறீர்கள்?" "சாப்பாட்டினால் ஆன எலும்பு , சதை இவற்றால் ஆன கூட்டை விட்டு போகச் சொல்கிறீர்களா?கூட்டில் இருக்கும் ஞான மயமான ஆத்மாவை விட்டு விலகிப் போகச் சொல்கிறீர்களா? நீர் என்ன வேதாந்த பாடம் கற்றீர்? அதில் அவன் வேறு இவன் வேறு என்று சொல்லி இருக்கிறதா? நீயும் கடவுள், நானும் கடவுள், ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தில் இருந்து எப்படி வேறுபடும்? என்றான் புலையன். அந்த வார்த்தையை கேட்ட ஆதிசங்கரர், புலையன் சாதாரணமான மனிதன் அல்ல என்று எண்ணி அவன் காலில் விழுந்தார். தலையைத் தூக்கிப் பார்த்தார் அப்போது புலையன் இருந்த இடத்தில் சிவபெருமான் என்ற சங்கரர் புன்னகையோடு நின்று ஆசீர்வதித்தார். அவர் வைத்து இருந்த கள் குடம், கங்கையாக மாறியது, அவரோடு இருந்த நாய்கள் வேதங்களாயின. வேதங்களை ஆதிசங்கரருக்கு உபதேசித்து மறைந்தார் சிவபெருமான். வேதங்களை அறிந்த ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம் என்ற நூலில் உடல் தத்துவத்தையும், மனித வாழ்க்கையைப் பற்றியும் கூறி இருப்பது நாம் அறிய வேண்டிய தத்துவமாகும். பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றை அடக்குவதையும், பிரத்தியாஹாரம் என்னும் புலனடக்கத்தையும் , நிலையான பொருள் எது - நிலையற்ற பொருள் எது என்ற பாகுபாட்டை யோசித்தலையும் ஜபத்தையும், சமாதி என்னும் அசையா நிலையையும் மனதின் ஒருநிலைப்பாட்டையும், நீ ஏற்று செய்தல் வேண்டும் என்று கூறி இருக்கிறார். மனித வாழ்க்கையை பற்றி கூறியதைப் பார்ப்போம். " தாமரை இலை மீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர் போல், மனித வாழ்க்கை நிலையற்றது. உலகில் எங்கு பார்த்தாலும் நோயும், செருக்கும் தான் காணப்படுகிறது. எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை. ஒருவன் பணம் சம்பாதிக்கும் போது மட்டும் தான் அவனிடம் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் அன்போடு பழகுகிறார்கள், அவன் உடல் தளர்ந்து பணத்தை இழந்தாலோ, அவன் சம்பாதிப்பதை விட்டுவிட்டாலோ அவனை மனிதனாகக் கூட அன்பு செலுத்துவதில்லை. அவனும் யாரும் பேசவும் மாட்டார்கள் இந்த உடலோடு உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் வரைதான் உன் சேமத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். உன் உயிர் உன் உடலிலிருந்து போய் விட்டால் அந்த உடலுக்கு பெயரில்லை, சுற்றமில்லை, பந்த பாசமில்லை, அவனுக்குள்ள பெயரும் இல்லை, அவனையே சவம் அல்லது பாடி , பிணம் என்று தான் கூறுகிறார்கள், உயிருடன் இருக்கும் போது அவனோடு ஒட்டி உறவாடிய மனைவியும் அவன் உடலை தொடு அஞ்சுகிறாள். அவளும் அந்த உடடலைப் பார்த்து பயப்படுகிறாள். ஆகவே உறவை சதமென நினைக்காதே ! நீ யார்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? தந்தையார்? இதெல்லாம் கனவுக் காட்சி போன்ற மாயை அல்லவா? என்று உன் மனதில் பாவனை செய்து இந்த உலகம் சாரமற்ற பொருள் என்று முடிவு செய், நீ உண்மைப் பொருளை அறிந்த நல்லோர்களுடன் சேர்ந்து பழகினால் உலகப் பற்றை அறுப்பாய். உலகப் பற்று நீங்கினால் உன் மயக்கம் தொலையும், மயக்கம் தொலைந்தால் சாசுவதமான பரம்பொருளை அறிவாய், அதை அறிந்தால் நீ இந்த உலகில் வாழ்ந்திருக்கும் போதே ஞானியாக அதாவது ஜீவன் முக்தனாக ஆகிவிடுவாய், இவ்வுலகிலேயே பேரின்பத்தை அடைவாய் என்று ஆதிசங்கரர் கூறி இருக்கிறார், சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பதைப் போல சிவனருள் கிடைத்த ஆதிசங்கரரின் வாக்கு உண்மையின் தத்துவத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது அல்லவா? இதைப் போன்ற கருத்தை சிவவாக்கியர் என்ற சித்தர் அவரது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார், " ஆன்மா நுழைக்க பெற்ற பச்சை மண் பதிப்பு இந்த மானிட தேகம், ஆன்மாவாகிய வேட்டுவன் நினைக்கின்றவாறே மனிதன் இயங்குவான். உடம்பு அழிந்தபின் உயிரானது பறந்து போகின்ற தும்பியைப்போல பறந்து போகும். பித்தர்களே சிருஸ்டியின் விளையாட்டை அறிந்து கொள்ளுங்கள், மஞ்சன நீரும் இறைவனும் நமக்குள்ளே இருப்பதை உணருங்கள். காலையும் மாலையும் தியானம் செய்வீர்களானால் சகஸ்ர தளத்தில் இருக்கிற ஜீவத்மா முக்தி அடையும், மண்பாண்டம் உடைந்தால் உதவுமென்று ஓட்டை அடுக்கி வைப்பார்கள் எவரும் உண்டோ? வெண்கலம் உடைந்தால் வேண்டிய பொருளாக உருக்கி படைப்பார்கள், நன்கலமாகிய உடம்பு அழிந்தால் அது நாறும் என்று மண்ணில் புதைப்பார்கள். இந்த எண் ஜான் உடம்புக்குள்ளே இருக்கிற மாயமாவது என்ன? என்று கேட்கிகறார் சித்தர. மனிதன் மனதை சுத்தப்படுத்த ஏற்றவாறு சித்தர்களின் பாடல்கள் அமைந்துள்ளன. சித்து விளையாட்டுகளால் மட்டும் அவர்கள் பெருமை அடைந்து விடவில்லை. உடல்கூறுகளின் வழியால் இறைவனைக் காண முடியும் என்றே உணர்த்தினார்கள். திருச்சிற்றம்பலம ஒம் நமசிவாயம் மேலும் ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக