சித்தர்களுக்கு வித்திட்ட ஞான குருவானர்கள்
பதினென் சித்தர்களின் வரலாற்றை நோக்கும் போது சித்தர்களுக்கெல்லாம் மூல காரணமாக ஆனவர்கள் மூன்று ஞானிகளான குருமார்கள்
1, குரு தட்சணாமூர்த்தி
2. சுப்பிரமணியம் ( சித்தர் )
3.நந்தி தேவர் ஆகிய மூவர்
இவர்கள் மூன்று பேரும் சித்தர் பரம்பரை சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் சித்தர் பரம்பரை தோன்றியதற்கே மூல காரணமானவர்கள்.
குருதட்சணாமூர்த்தி :
இவர் ஆதியும் அந்தமும் அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருள்களின் வெளிப் பாடே ஆவர். இவர் குருதட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரயனாக வெளிப்பட்டு சனாதி முனிவர்கள் (நந்தி நால்வர்) நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்ததே. பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரையை சேர்ந்தவர் அல்ல என்றாலும் சித்தர்கள் தோன்றுவதற்கு முதல் வித்திட்டவர் ஆவார்.
சிவ பரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி. இவர்தான் முதன்முதலில் ஞான உபதேசம் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபசேம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் , சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்பது திருமூலர் பாடல் வாயிலாகவே அறியலாம்.
" நந்தி அருள் பெற்ற நாதனை நாடினன்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னொடு எண்மரும் ஆமே." - திருமூலர் திருமந்திரம்
இரண்டாவதாக சுப்பிரமணியர்
சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப் பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுகச் சிவமாக இந்தச் சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணிய ஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை பெறுபவர்கள் யாவரும் அகத்தியர்கள்தான். அகத்தியா என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் - தீ - அர் என பிரித்தால் அது " ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் " என்ற பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணியர். இந்த காரணப்பெயர் சு - பிரம்மம் - மணி - அர் என்று பிரிந்து " தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் " என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவக வெளிப்பாடே "அகத்தியர்" . அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சத்திரமாக ஒளிவீசிக்கொண்டிருக்கிறது இன்றுவரை. அதுவே அகத்தியர் என்ற மாமுனிவர். சுப்பிரமணி ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு.
திருச்சிறறம்பலம்
சிவலாயங்களில் சித்தர்களின் அருள்
சிவன் கோவில்களில் உள்ள சிவன், நந்தி, முருகன்( சுப்பிரமணியர்) ஆகிய மூவருமே மூலப்பரம் பொருளின் புறவடிவங்கள் தான் என்பது எளிதில் விளங்கும். சித்தர்களில் பெரும்பாலோர் பிரசித்தி பெற்ற தமிழக கோவில்களில் சமாதி பூண்டோர் அல்லது சிவத்துடன் கலந்தோ இருந்து, அந் கோவில்களில் மூலவராகவே இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர். சில சித்தர்கள் தனித்தனியே சமாதிக் கோவில்களும் கொண்டுள்ளனர்.
இக்கோவில்களில் ஏதேனும் அருகில் வாழும் மக்களோ, அல்லது அக்கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்லும் பக்தர்கள் அக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவனையோ, முருகனையோ, அம்பாளையோ, சித்தரையோ, உண்மையான பக்தியுடன் அந்தக் கோவில் வளாகத்தில் உட்கார்ந்து தினமும், அரைமணி நேரம் கண்மூடி தியானம் செய்து வந்தால், கால்ப்போக்கில் அங்கு அருள் ஆட்சி செய்து வரும் சித்தர் பரம்பொருளின் திருவருள் துணைகொண்டு அந்த பக்தருக்கு அமைதியான வாழ்வை அளிப்பதுடன், மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான தவ நெறியை தொட்டுக் காட்டி அருள்புரிவார்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக