புதன், 30 டிசம்பர், 2015


காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 2 காஞ்சி மாமுனிவர், சிவிகைக்குப் பின்னால் வந்த ஒதுவாமூர்த்திகளைக் காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம். காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம் பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது. காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக. தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன் என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது. பொய்யிலியாகவும் மெய்யர் மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன ! அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள். சேக்கிழாரும் அவளைப் " பெருந் தவக் கொழுந்து " எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான் " செல்வியைப் பாகம் கொண்டார் " என்று நமக்குக் காட்டுகின்றார். முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார். கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து. நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம் எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது? " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது. இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர். இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில் வரும் " எல்லியை விளங்க நின்றார் " என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்: செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே. கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.

நம் இல்லம் - ஒன்பது வாயில் கோவில்


நம் இல்லம் ஒன்பது வாயில் கோவில் மன்னாதி மன்னர்கள் கட்டிய மாளிகைகள் எல்லாம் பகைவர்களால் தரை மட்டமாக்கப்பட்டு அழிந்து போயிருக்கின்றன. எஞ்சிய சிலவும் இயற்கைச் சீற்றங்களாலும், கவனிப்பாரின்றி மரம் முளைத்துப் போயும் மறைந்து விடுகின்றன. இப்படி இருக்கும் போது நம் போன்ற சாமானியர்கள் வசிக்கும் வீடுகள் நிலைத்து நிற்குமா என்ன? அதிலும் பாமர ஏழை கட்டிய மண் சுவரும், மேற்கூரையாக வேயப்படும் மூங்கில்களும் ஓலைகளும் காற்றுக்கும் மழைக்கும் எப்படித் தாங்கும்? அந்த எழையும் தன்னால் முடிந்தவரை மண் சுவற்றைப் பலமாகக் கட்டியிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? அப்படி இருந்தாலும் அக்குடிசைவாசி அந்த வீட்டை எனது இல்லம் என்று தானே சொல்லிக் கொள்கிறான்! அதே போலத்தான் மனித உடலும்! அந்த ஏழை கட்டிய வீட்டைப்போல எளிதாக அழியக் கூடியது. உடலில் உள்ள எலும்புகள் அந்தக் குடிசையின் கால்கள் போன்றவை. மாமிசத்தாலான உடலோ மண் சுவற்றுக்கு சமம். இப்படிப்பட்ட புலால் நாறும் உடம்பைத் தோலாகிய போர்வையால் மூடிக்கொண்டு, " இது எனது " என்று கூறிக் கொண்டு அதை அழகு படுத்திப் பார்க்கிறோம். வயது ஆக ஆக அழகும் குறைந்து, தோல் சுருங்கி, உடல் தளர ஆரம்பித்து விடுகிறது. ஏழைக் குடிசைக்காவது வேறு ஓலை வேயலாம். வேறு மூங்கில்களைக் கொண்டு தாங்கச் செய்யலாம். ஆனால் மனித உடலாகிய வீட்டுக்கு என்ன செய்ய முடியும்? மனிதக் குடிலுக்கு ஒன்பது வாசல்கள் வேறு. ஐம்புலன்கள் படுத்தும் பாடோ கொஞ்சநஞ்சமல்ல. அவை நம்மைப் பெரும்பாலும் தீய வழிக்கே இழுத்துச் செல்வன. இதிலிருந்து விடுபடும் மார்க்கமோ தெரியவில்லை. " சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய " என்று திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார். இப்படி ஐம்புலனாகிய சேற்றில் அழுந்தி ஒரேயடியாக மூழ்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் இதிலிருந்து விடுபட வழியே இல்லையா என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது என்று நமக்கு அபயம் அளிக்கிறார் திருஞானசம்பந்தப்பெருமான். திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டு அருளும் தியாகேச வள்ளலைத் தொழுதால் உய்ந்து விடலாம் , அஞ்ச வேண்டாம் என்று நல்வழி காட்டுகிறார் குருநாதராகிய ஞான சம்பந்தக் குழந்தை. அப்பாடலை இங்கு சிந்திப்பதால் நாமும் உய்ந்து விடலாம். என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையால் முகடு கொண்டு முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே. --- சம்பந்தர் தேவாரம்

ஞாயிறு, 27 டிசம்பர், 2015


இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி - நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். பொருளடக்கம் • 1 சொல்லிலக்கணம் o 1.1 கூத்தன் o 1.2 சபேசன் o 1.3 அம்பலத்தான் • 2 தோற்றம் • 3 தோற்ற விளக்கம் • 4 ஐந்தொழில்கள் • 5 சிதம்பரம் • 6 திருஉத்தரகோசமங்கை • 7 மதுரை • 8 CERN ஆய்வகத்தில் நடராசர் சிலை • 9 உசாத்துணை • 10 இவற்றையும் பார்க்க சொல்லிலக்கணம் நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கூத்தன் கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்வன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் வழங்கப்படுகிறார். சபேசன் சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. அம்பலத்தான் அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார். தோற்றம் சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது. மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன. தோற்ற விளக்கம் நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது. ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது. பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தி ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்! அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன. பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம். ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார். வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி. தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும். முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது. பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள். அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது! பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்! பரத நாட்டியத்தில் ஒற்றைக் காலில் நின்ற நிலையிலான நடனத் தோற்றம் (நடராசரை குறிக்கிறது) ஐந்தொழில்கள் சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு. நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு[1]: 1. ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்) 2. ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும் 3. இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும் 4. இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும் 5. தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும். சிதம்பரம் நடராசர் என்றாலே தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. பஞ்ச சபைகளில் இத்தலம் கனக சபை என்று பொற்றப்படுகிறது. அம்பலத்தில் இது பொன்னம்பலமாகும். திருஉத்தரகோசமங்கை தில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர்.இங்குள்ள நடராசர் ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சியளிக்கிறார்.மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார். அம்பலவாணர் அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தை தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது மதுரை எப்போதும் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவ பெருமான், இச்செப்புத் திருமேனியில் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகின்றார். ஒரே காலை ஊன்றி ஆடினால் இறைவனுக்குக் கால் வலிக்குமே என்றெண்ணிப் பாண்டிய மன்னன் கால்மாறி ஆடும்படி வேண்டியதால் சிவ பெருமான் கால்மாறி ஆடியதாகக் புராணங்கள் சொல்கின்றன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் , சுவாமி சன்னதியில், வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய நடராசர் திருமேனி உள்ளது. CERN ஆய்வகத்தில் நடராசர் சிலை 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் ஜெனிவாவில் உள்ள CERN (European Center for Research in Particle Physics) ஆய்வகத்திற்கு ஆறு அடி உயரம் கொண்ட நடராசர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நடராசர் நடன கோலத்தில் காட்சி தரும் இச்சிலை அந்த ஆய்வகத்திற்கு இந்தியாவுடன் இருந்த பல்லாண்டு கால தொடர்பை சுட்டிக்காட்டும் பொருட்டு வழங்கப்பட்டது. உலகத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணமாக கருதப்படும் இந்த பிரபஞ்ச நடனத்திற்கும், நவீன இயற்பியலுக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டும் விதமாக முனைவர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா (Fritjof Capra) விளக்கியுள்ள சிறப்பு வாய்ந்த வரிகளும் அதில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." அதாவது, "நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றினைக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் "TAO OF PHYSICS" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார். Kumar Mohan's photo.

இயற்பகை நாயனார்


இயற்பகை நாயனார் - Iyarpagai Nayanar (குருபூசை: மார்கழி - உத்திரம் ) “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” - திருத்தொண்டத் தொகை ********************************************************************* காவிரி கடலுடன் கலக்குமிடம் பூம்புகார். இந்நகரில் தோன்றியவர் இயற்பகை நாயனார். உலக இயலுக்குப் பகையானவர் என்பதால் இப்பெயர் பெற்றார். அடியார்க்கு வேண்டுவன கொடுத்து வந்தார். இக்காலத்தில் இறைவன் காமுக வேதியர் வேடங்கொண்டு இயற்பகையார் இல்லம் வந்தார். உம் மனைவியை எம் பணியின் பொருட்டு வேண்டுகிறோம் என்றார். கணவனார் கொடுக்க மனைவியார் வேதியருடன் சென்றார். உறவினர் தடுத்தனர். கடல் போல் பெருகி வந்து வில், வாள், வேலொடு எதிர்த்தனர். வேதியவர் அஞ்சியவர் போல் நடித்தார். அம்மையார், இறைவனே அஞ்ச வேண்டா இயற்பகை வெல்லும் என்றார். எதிர்த்த சுற்றத்தாரை எல்லாம் இயற்பகையார் வீழ்த்தினார். வேதியர் அம்மையாரை அழைத்துக் கொண்டு சென்றார். சாய்க்காட்டுத் திருக்கோயிலுக்கு அருகில் சென்றவுடன் வேதியர் ஓலமிட்டார். செயற்கரும் செய்கை செய்த தீரனே! ஓலம்! ஓலம்! என்றார். மீண்டும் யாரோ துன்பம் செய்கின்றனர் என இயற்பகையார் விரைந்து வந்தார். முனிவரைக் காணவில்லை. மனைவியார் மட்டுமே நிற்கக் கண்டார். இறைவன் அம்மையுடன் விடையின் மேல் எழுந்தருளினார். எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி! தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி! எனத் திருநெறிய தீந்தமிழில் இயற்பகையார் போற்றித் துதித்தார். நாயனாரும் மனைவியாரும் சிவனுலகு சேர இறைவன் அருள் புரிந்தான். இவர் சோழநாட்டிலேகாவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார். சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அதுகேட்ட வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன் எனச் சொன்னார்’. நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி, ‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார். மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார். வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார். அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும் தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார். இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார். மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர். எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி! தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி! திருச்சிற்றம்பலம் தொகுப்பு .வை.பூமாலை

உத்திரகோசமங்கை தலம்

உத்திரகோசமங்கை தலம் இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :- 1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. 2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது. 4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். 5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது. 6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது. 7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. 8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும். 9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். 10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. 11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. 12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன. 13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது. 14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது. 15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர். 16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். 17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர். 18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது. 19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது. 20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. 21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். 22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். 23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். 24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம். 26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். 27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும். 28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும். 29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன. 30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம். 31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை. 32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம். 33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. 34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர். 35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள். 37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். 38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும். 39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. 40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும். 41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. 42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம். 44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. 45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர். 46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம். 47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது. 48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. 49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார். 50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம். 51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார். 52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. 53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம். 54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது. 55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா 56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது. 57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். 58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும். 59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும். 60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். சமய குறவர்களில் நால்வரில் மாணிக்கவாசகருக்கு காட்சி தந்த இடம் மாணிக்கவாசகர் மிகவும் விரும்பிய தலங்களில் இதுவும் ஒன்று மிகப்பெரும்கோவில் இந்த உத்திரகோசமங்கை தலம் திருச்சிற்றம்பலம

வெள்ளி, 25 டிசம்பர், 2015


தில்லை ஆருத்ரா திருநடனம் மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் முக்கிய விரதம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரம் பிறப்பற்ற சிவபெருமானின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தான் மகா முனிவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதா் என்ற முனிவர்களுக்கு ஆருத்தரா நடனம் காட்டி காட்சி தந்ததாக வழங்கப்படுகிறது. ஒரு தடவை மகாவிஷ்ணு திடீரென ஆதிசேசன் படுக்கையிலிருந்து இறங்கி செல்லும் போது , ஆதிசேசன் மகாவிஷ்ணுவிடம் காரணம் கேட்க, அதற்கு விஷ்ணு பிரான் நான் தில்ைல சிதம்பரத்தில் நடராஜ பெருமானின் ஆருத்ரா நடனம் காண செல்கிறேன் என்று கூற, இதைக் கேட்ட ஆதிசேசனுக்கு இந் நடனத்தை காண விருப்பம் ெகாண்டு அதற்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்க, அதற்கு தில்ைல சென்று சிவபெருமான் மேல் பக்தி கொண்டு கடும்தவம் மேற்கொண்டால் இத்தரிசனம் கிடைக்கும் என்றார், அதன்படி ஆதிசேசனும் தில்லை சென்று சிவனாரை நினைந்து கடும்தவம் செய்தார். இத்தருணத்தில் தான் வியாக்கிர பாதார் என்ற புலிக்கால் முனிவரும் நீண்ட நாள் தவம் இருந்தார் இவர்களுக்கும் இந் நாளில் தான் சிவனார் இந்த ஆருத்ரா நடனக்காட்சியை அளித்தார் என்பது வரலாறு. ஆருத்தரா நடனம் புரிந்த வரலாறு தாருகா வனத்து முனிவர்கள் யாவரும் சிவனாரை நிந்தித்து பெருவேள்வி ஒன்று நடத்தினர். அப்போது சிவனார் பிச்சாடனர் வேடம் பூண்டு முனிவர்களின் இல்லங்களுக்கு சென்றார், அப்போது முனிவர்களின் மாத்ர்கள் யாவரும் பிச்சாடனர் பின்னால் செல்வது கண்டு வெகுண்ட முனிவர்கள் யாகத்த்தில் மதயானை, முயல், மான் முதலிய மிருங்களை ஏவினார்கள், சிவனார் அம் மிருங்களான யானையின் தோலை உரித்து போர்வையாகவும்,மான் முதலியனவற்றை கையிலும், முயலகனை காலிலும் மிதித்து திருநடனம் ஆடினார். இக்காட்சி நடந்த நாளே மார்கழிதிருவாதிரை நட்சத்திர காலமாகும். இதுவே திருவாதிரை ஆருத்ரா நடனம் என்பது. இக்காட்சியே மகா முனிவர்கள் கண்டுகழித்தனர். இந்நாளில் தேவரகளும் இங்கு வந்து இந் நடனத்தை காண்பதாக ஐதிகம். திருவாதிரை களி பிறந்த கதை தில்லை அருகில் உள்ள ஒரு குக் கிராமத்தில் சேந்தனார் என்ற சிவபக்தர் அனுதினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்தான் தான் உண்பார். இவ்வாறு செய்துவரும் காலத்தில் வறுமை வாட்டியது, சிவனடி யார்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் மழைகாலத்தில் ஒருநாள் சிவனாரே அவர் வீட்டிற்கு வந்தார், அந்நேரத்தில் சிவனடியாருக்கு உணவளிக்க முடியாத நிலையில் யாது செய்வதென்று அறியாத நிலையில் அவர் வீட்டிலிருந்த மாவை களியாக்கி சிவனடியாரான சிவனாருக்கு படைத்தார், அவரும் அந்த களியை விரும்பி உண்டு, தனது இல்லத்திறகும் கொண்டு செல்லவேண்டுமென்று கேட்டு மீதமுள்ள களியையும் வாங்கி சென்றுவிட்டார். மறுநாள் காலையில் தில்லை யில் உள்ள சிவலாயத்ததில் சிவாச்சாரியார்கள் கோவிலை திறந்தபோது கருவறையில் களி ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை அறிந்தார்கள். இதுகுறித்து சிவனாரிடம் அடியார்கள் வேண்ட என்பத்தன் சேந்தனார் அளித்த அமுது இந்த களி என்றாராம். அது முதல் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பகவானின் பிரசாதமாக திருவாதிரைக் களி என்றே இன்றும் சிவலாயங்களில் வழங்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம்

புதன், 23 டிசம்பர், 2015


கோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை. கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும். குறள் அதிகாரம்: துறவு பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 350 குறள் விளக்கம் : மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்

தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? நல்ல எண்ணங்களை எண்ண வேண்டும். நம் மனதில் இன்ன எண்ணங்கள்தான் எழ வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரமும், அதற்கான திறமையும் இயல்பாகவே நமக்கு அமைந்திருக்கிறது. நம் உள்ளத்தில் எழுகின்ற எந்த எண்ணமும் தானாக எழுவதில்லை. அது ஏற்கனவே சம்ஸ்காரங்களாக, நம் எண்ணங்கள் மற்றும் வினைகளின் வித்துக்களாக நம் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன. இனி இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களும் அழுத்தம் பெறும் பொழுது சித்தத்தில் போய் பதிகின்றன. ஆனால், அவை தானே வலிய வந்து எண்ணங்களாக ஆவதில்லை. நம் புற மனதின் செயல்பாடுகள் மற்றும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைச் சூழல்கள் இவற்றிற்கு ஏற்பதான் அவை எண்ணங்களாக எழுகின்றன. அல்லாத பட்சத்தில் இந்த சம்ஸ்காரங்கள் முளைக்காத விதைகள்தான். இதில் ''அழுத்தம் பெறும் பொழுது'' என்று சொல்வது எதனால் என்றால், நம் வாழ்க்கை என்கிற குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட எண்ணங்களையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம். மீண்டும் மீண்டும் எண்ணுவதே அழுத்தம் பெறுவது என்கிறோம். இதைப் பழக்கம் என்பார்கள். இந்த பழக்கமே எண்ணங்கள் வாயிலாக நம் இயல்பாக அமைகின்றது. எனவே உயர்வான எண்ணங்களை எண்ணப் பழகிக் கொண்டால், அதுவே நம் இயல்பாக ஆகி விடும். ''உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.'' என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத்தான். எனவே நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ நம் விருப்பமின்றி நம் மனதில் தோன்றுவதில்லை. மற்றவர்கள் வலிந்து அதை நம் மனதில் திணிக்க முடியாது. நாம் நமது சுயநலம் மற்றும் சுகபோக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோம். ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் விலை குறைவாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறோம். அதுவே நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் மட்டமானதாக இருந்தாலும் ஏதேதோ பொய்களைச் சொல்லி அதை அதிக விலைக்கு விற்க நினைக்கிறோம். பெரும்பாலானவர்கள் மன நிலை இவ்வகையில்தான் இருக்கிறது. இங்கே சுயநலம் மனதில் தீய எண்ணங்களுக்கு வித்திடுகிறது. அதாவது நமக்கு நல்ல எண்ணங்களை எண்ணக் கூடிய அதிகாரமும், சுதந்திரமும் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் லாபம் அடையும் சுயநல நோக்கில் தீய எண்ணங்களை எண்ணுகிறோம். சிலர் பேசும் பொழுது ''நல்லவனுக்கு ஏது காலம், தீயவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்று சொல்லக் கேட்கிறோம். இந்த எண்ணம் தவறானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீ நல்லவனாக, உயர்ந்த எண்ணம் உடையவனாக இருந்தும் வாழ்வில் உயர்ந்த நிலை வாய்க்கவில்லை என்று உன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதே. நிச்சயமாக அதன் பலன் கிடைக்காமல் போகாது என்பதை உறுதி செய்கிறார். நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் எண்ணுவேன் என்று நாம் உறுதியாக இருந்தால் தீய எண்ணங்கள் உள்ளே நுழையவே முடியாது. நல்ல எண்ணங்களைத் தவிர எதிர்மறையான சிந்தனைகளுக்கு மனதில் இடங்கொடுக்க மாட்டேன் என்று நமக்கு நாமே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ''உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள்.'' அதாவது நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களை நல்ல விதமாக இருப்பதும், தீயைவைகளாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதே அதற்குச்சரியான அர்த்தமாகும். நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படும் இயல்பைப் பெற்றவர்கள். எனவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று பழகிக் கொண்டோமென்றால் தீய எண்ணங்கள் மனதில் எழுவதில்லை

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ் 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர் கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே ... கரிய மையிட்ட இரண்டு கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும் பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற ஒப்பற்ற புன்னகையாலே, களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி ... கழுத்தில் நின்று எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய், நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் ... மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல் மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும், மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே ... கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே. நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என ... நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும், வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும், வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக் கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா ... மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரிய வெட்டித் துணித்த தீரனே, திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன கணபதியுடன் வரும் இளையோனே ... ஒளியும் கருமையும் கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற விநாயகருடன் வரும் தம்பியே, சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே. ... கோபத்துடன் யமனை உதைபட வைத்த சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச் சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே. திருச்சிற்றம்பலம் ஓம் முருகா ஓம் சண்முக சரணம் தொகுப்பு .வை.பூமாலை

மனம் ஒரு குரங்கு போடவேண்டும் ஒரு கடிவாளம.


மனம் ஒரு குரங்கு போடவேண்டும் ஒரு கடிவாளம. நமது உடம்பு எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; மனம் எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம். உடம்பு போகின்ற இடங்களுக்கெல்லாம் மனது தொடர்ந்து வருவதில்லை. உடம்பை மயிலாப்பூரிலே உட்கார வைத்து விட்டு, மனது சிங்கப்பூர் வரையிலே சென்று திரும்பிவிடும். மனது போகின்ற வேகம் மிகப் பெரியது என்பதாலே தான் `வாயு வேக மனோ வேகம்…’ என்றெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வருணித்தார்கள். அதைத்தான் சிவவாக்கியர் மிக அழகாகச் சொன்னார், `மனத்திலே அழுக்கைச் சுமந்தவன் காட்டிலே போய் இருந்தால் கூட அந்த அழுக்கு அவனோடேயே இருக்கும்’ என்று. மனத்திலே அழுக்கில்லாதவன், ஒரு தாசியின் மார்பின் அருகிலே அமர்ந்திருந்தால் கூட, அவன் அந்த மார்பகத்தைப் பார்ப்பதில்லை. அவன் மனது அந்த தாசியை நாடுவதில்லை. பிறப்பை அறுத்து விட்ட பிறவியாகவே அவன் அங்கே காட்சியளிக்கிறான். ஆகவே, நன்மைகள் தீமைகள் அனைத்துமே மனத்தின் கண் தான் இருக்கின்றன என்பதனை, நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்தும் துறந்தும் கூட, கூட வந்த நாயைத் துறக்க முடியாத பத்ரகிரியாரைப் போல, எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனது செய்கின்ற வேலையைத் துறக்க முடியாமல் நாம் அவதிப்படுகிறோம். `காதி விளையாடி இருகை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்குடத்தே தான்’ என்றார் பட்டினத்தார். என்னதான் ஆட்டம் போட்டுக் கொண்டு போனாலும், தாதி நீர்க் குடத்திலே தான் மனத்தை வைத்திருப்பாள். தாதி என்றால் வேலைக்காரி.தண்ணீர் தூக்கி வருகின்ற வேலைக்காரி, என்னதான் வேடிக்கைப் பேச்சுப் பேசட்டும், விளையாடட்டும், அவள் இடுப்பிலே இருக்கிற குடத்தின் மீதும், தண்ணீரின் மீதும்தான் மனது லயித்திருக்கும். ஞானிகளுடைய உள்ளமும் அப்படியே தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதிலே லயித்து விடுவார்கள். ஆனால், சராசரி மனிதன் அவஸ்தைப்படுவதெல்லாம் இந்த மனத்தின் போக்கினாலே தான். கல்யாணத்தில் ஒரு கருப்புப் பெண் கிடைத்தால், மனது சிவப்புப் பெண்ணுக்காக ஏங்குகிறது; சிவப்புப் பெண் கிடைத்து விட்டால், கருப்புப் பெண்ணைக் காணும் போதெல்லாம் ஏங்குகிறது. ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக தோன்றுகிறது. வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு ஓட்டல் பலகாரம் மிக அற்புதமாகத் தோன்றுகிறது. மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள். மனிதன் தன்னை அறியும்படி வைப்பதும் அந்த மனதுதான்; தன்னை அறிய விடாமல் தடுப்பதும் அந்த மனதுதான். நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும் அந்த மனதுதான்; நான் எல்லாரையும் விடத் தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனதுதான். `நாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், பணிந்து போக வேண்டும்’, என்ற பணிவை உண்டாக்குவதும் அந்த மனதுதான். ஆகவே, தன்னை அறிய வேண்டிய மனிதன், முதன் முதலிலே வெல்ல வேண்டிய பெரிய எதிரி மனது. உடம்பிலே ரத்தக் கொதிப்பு ஏறுவதற்கு உடம்பு மட்டும் காரணமல்ல; மனத்தின் டென்ஷன் தான் முக்கியமான காரணம் என்று மருத்துவ நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். ஒரு மனிதனைப் பார்த்து அனைவரும், `அடடா! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அவன் மனது அதைக் கேட்டுக்கேட்டு, தான் அழகாக இருப்பதாகவே நினைத்து, பூரித்துப் பூரித்து அவனுக்கு இல்லாத ஒரு அழகு முகத்திலும், மனத்திலும் வந்து விடுகிறது. புவனத்திலுள்ள நிபுணர்களில் விஞ்ஞான நிபுணர்களைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை; ஆனால், மனோதத்துவ நிபுணர்களையே உலகம் பெரிதும் மதிக்கிறது. காரணம், மனத்தை நன்றாக அறிந்து கொண்டவன்தான், உலகை வெல்ல முடியும்; எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது; ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கருதுகிறது. திருமூலர் திருமந்திரத்திலே சொன்னார்: `தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமற் தானே கெடுகின்றான். தன்னையே அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந் தானே!’ `தானே தனக்குப் பகைவனும், நண்பனும் தானே தனக்கு மறுமையும், இம்மையும் தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே!’ தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை. மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான். தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்து விடுமானால், எல்லோரும் தன்னை அர்ச்சிக்கும்படியும், தானே தனக்குப் பூஜை செய்யும்படியும் வளர்ந்து விடுவான். உனக்குப் பகைவன் யார்? நீயே! உனக்கு மரணம் எது? நீயே! உண்மை எது? நீயே! நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே! உனக்குத் தலைவன் யார்? நீயே! உனக்குத் தொண்டன் யார்? நீயே! எல்லாம் நீயே! எல்லாம் நானே என்பதற்கு மூலம் எது? மனது! `மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற’ என்றான் வள்ளுவன் உடம்பு களங்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மனது களங்கப்படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது. முதலில் யார் மீதாவது நீ குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே குற்றம் சாட்டிப் பழகு. ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொள். அதில் உன்னுடைய பிரதிபிம்பம் தெரியும். அதைப் பார்த்துக் கையைக் காட்டி, `நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ குற்றவாளி’ என்று மூன்று முறை சொல். நீ சொல்வது கண்ணாடியைப் பார்த்து; கண்ணாடி சொல்வது, உன்னைப் பார்த்து. அதாவது, நீ உன் மனதுக்குச் சொல்கிறாய்; உன் மனது உனக்குச் சொல்கிறது. மனது உனக்குச் சொல்கிறது என்னும் போது மனதுக்கு அப்பாற்பட்டது எது? உன் உடம்பு; உன் கண்; உன் உயிர்; அனைத்துக்குமே அந்த மனது சொல்கிறது, `நீ தான் குற்றவாளி’ என்று. `நான் குற்றவாளி, நான் தவறானவன், நான் சிறியவன், நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உணர, தன்னை உணர்ந்து கொள்கின்ற தன்மை என்பது ஒரு லயமாக, ஒரு ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவமாக நம் மனதுக்குள்ளேயே எழுந்து விடுகின்றது. எப்போது மனிதன், தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது. பச்சை இலை தான் புகையிலை. அது பாடம் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் இருக்கின்றது? ஒரு வெற்றிலையை எடுங்கள்; அதை ஒரு புத்தகத்துக்குள் வையுங்கள்; பல காலம் கழித்துப் பாருங்கள்; அந்த வெற்றிலையின் நிறம் மாறி, அது காய்ந்து போயிருந்தாலும் கூட அப்படியே, அதன் தன்மை கெடாமல் இருக்கும். இதுதான் மனத்தைப் பாடம் பண்ணுகிற முறையாகும். மனது பாடமாகி விட்டால், யார் இறந்தாலும் கூட அழுகை வராது; எது நிகழ்ந்தாலும் கூட அதிலே போய் மனது ஒட்டிக் கொள்ளாது. காஞ்சிப் பெரியவர்களோ, மற்ற ஞானிகளோ எந்த மரணத்திற்காவது துக்கம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருடைய மரணத்திற்காவது அவர்களுடைய கண்களிலே இருந்து கண்ணீர் வந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மரணம் ஏன் அவர்களை அழச் செய்யவில்லை? மனது மரத்துப் போய் விட்டது; மனம் பாடமாகி விட்டது. மனத்தைப் பாடம் செய்து கொண்டு விட்டால், தன்னை உணருகின்ற தன்மை, மிகச் சுலபமாக வந்து விடும். ஆயிரம் பேர் கூடி, நம் மீது குற்றம் சாட்டினால் கூட, நமக்குச் சிரிப்பு வரும். பத்தாயிரம் பேர் கூடி நமக்குப் புகழ் மாலை சூட்டினாலும், நமக்கு உடம்பிலே புல்லரிப்பு ஏற்படாது. அதனால்தான், மனத்தைப் பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றனர் ஞானிகள். கீழே உள்ள பாடல்களைப் பாருங்கள்: `மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள் வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார் மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள் முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே!’ – சிவவாக்கியர் `அலையுமனத்தை யகத்தடக்கு மவனேசரியை கடந்தோனா மலையுமனத்தை யகத்தடக்கு மவனேகிரியை முடிந்தோனா மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்’! – நிட்டானுபூதி `ஓங்கிய பரசீ வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச் சாங்கிய மகத்தி னாலுஞ் சார்ந்திடு மியோகத் தாலும் வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையி னாலு மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!’ – விவேக சூடாமணி மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன், எதற்கும் வளைந்து கொடுக்கிறவன், எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு ஓடினாலும் கூட, அவனுடைய ஆசை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்தக் காட்டிலே இருக்கின்ற மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற நிலங்களையும் பார்த்தால், இதில் கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா என்று தோன்றும். எவளாவது ஒரு பெண் வழியிலே போனால் கூட, `இவளை வைத்து நாம் குடும்பம் நடத்தக் கூடாதா?’ என்று தோன்றும். ஓடியது காட்டுக்கு; பாடியது துறவறப் பாட்டு; ஆனால், தேடியதோ பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை. காட்டுக்குப் போனாலும் கூட மனது அப்படி ஆகி விட்டால், அந்த லயத்துக்கு ஆட்பட்டு விட்டால், அது இந்த உடம்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. ஆனால், `மனது பக்குவப்பட்டு விட்டால், அவன் காட்டுக்குப் போக வேண்டியதில்லை’ என்பது தான் சிவவாக்கியர் வாக்கு. அவன் அங்கே இருக்கட்டும், பங்களாவிலே இருந்தாலும் அதைக் காடாக மாற்றிக் கொள்ள முடியும்; காட்டிலே இருந்தாலும் அதைப் பங்களாவாக மாற்றிக் கொள்ள முடியும். ஓடுகின்ற வண்டிக்குள் இருந்து கொண்டே, ஓடாமல் இருப்பவனே உண்மை சந்நியாசி; உண்மையில் மனத்தை அடக்கியவன். சாப்பாட்டைக் காணும் போது பசி எடுக்காதவன், மனத்தை அடக்கியவன். பெண்ணைக் காணும்போது இச்சை கொள்ளாதவன் மனத்தை அடக்கியவன். பணத்தைக் காணும் போது, இது நமக்கு இருக்கிறதா என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன். அடுத்தவனுடைய வீட்டைப் பார்த்து, `ஐயோ! இவ்வளவு பெரிய வீடா!’ என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன். எந்த ஞானியைப் பார்த்தாலும், `மனத்தை அடக்கு, மனத்தை அடக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள்? சகல துன்பங்களுக்கும் அதுதான் காரணம். நான் ஏற்கெனவே அர்த்தமுள்ள இந்துமதத்தின் இதர பகுதிகளில் விவரித்துள்ளபடி, `இந்த மனத்தின் லயத்தினாலே தான்’ மனிதன் கெடுகிறான்.அதனால்தான், `மனஸ்’ என்ற மூலத்தைக் கொண்டு `மனுஷ்யன்’ என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று. கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். `ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்’ என்று கேட்டான்.அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான். `நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?’ என்று கேட்டான் அந்த நோயாளி. `பத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்!’ என்று மருத்துவன் சொன்னான். நடந்தது அவ்வளவுதான். பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்; கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை. ஏன்? `குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது’ என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று. லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது. அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் `குரங்கு, குரங்கு’ என்கிற எண்ணமே வந்தது. அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை. சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். `ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?’ என்று கோபத்தோடு கேட்டால், `ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்’ என்கிறான். மனது எதற்குக் கேட்கும்? யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது மனது.மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம். பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை; நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை. இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது. சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம். நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள். `என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது; என் மனது இப்படிச் சொல்கிறது’ என்று நாம் அடிக்கடி பேசுவோம். மனது சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா? அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது. ஏன், அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு, உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்’ என்று? முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி, `மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய் ஒன்றைய பற்றி யூசலாடுவாய்’ என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது. கோடை வரலாம்; வசந்தம் வரலாம்; பனிக்காலங்கள் வரலாம்; பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலைமை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்

திங்கள், 21 டிசம்பர், 2015

வாழ்வும் ஆன்மீகமும் - LIFE AND SPIRITUAL : சித்தர்கள் சொன்னவை - 2

வாழ்வும் ஆன்மீகமும் - LIFE AND SPIRITUAL : சித்தர்கள் சொன்னவை - 2: அஷ்ட கணபதி மந்திர தீட்சை  சித்தர்கள் மணி,மந்திரம்,ஔஷதம் என்ற மூன்று கலைகளிலும் வல்லவர்கள்.அவர்களின் கூற்றுப்படி, அவர்களின் துறையில...

வியாழன், 17 டிசம்பர், 2015

கே எம் தருமா..(KeyemDharmalingam): போகர் - சித்தர்கள் வரிசையில்

கே எம் தருமா..(KeyemDharmalingam): போகர் - சித்தர்கள் வரிசையில்: போகர் – அகத்தியரும் போற்றிய மகா சித்தர்- வரலாறு. போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச் சென்று புலப்படும் ஒர...

கே எம் தருமா..(KeyemDharmalingam): ஜோதிர்லிங்கங்கள் 01/12 ஆன்மீக வரிசையில்.

கே எம் தருமா..(KeyemDharmalingam): ஜோதிர்லிங்கங்கள் 01/12 ஆன்மீக வரிசையில்.: ஜோதிர்லிங்கம் கோவில்கள் - 001/012 இருப்பிடம் : குஜராத் மாநிலத்தில் துவாரகைக்குச் செல்லும் வழியில் தாருகாவனம் என்ற இடத்தில் இந்த ஆலயம...

புதன், 16 டிசம்பர், 2015

பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை


திரு நீறு ( தொடர்ச்சி) பகுதி 2 பெரியபுராணம் காட்டும் அருளாளர்கள் வாழ்வில் திருநீற்றின் பெருமை சேரமான் பெருமான் நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமான் நண்பர், எம்பெருமானின் பெரும் பக்தர், சேரமான் பெருமான், எம்பெருமான் தன் நண்பர் சுந்தரனுக்கு சேரமான் பெருமானை அறிமுகம்செய்து, சுந்தரர் சேரமான் பெருமானுக்கும் நண்பராக்கினார். இதனால் இருவரும் சிவதொண்டில் இணைபிரயா நண்பர்களானர், சேர நாட்டு மன்னர் சேரமான் அரச முடிகொண்டு திருவீதி உலா வந்த போது, எதிரே ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண் சுமையோடு வரும் போது, அவர் உடம்பெல்லாம் உவர்மண் (வெண்மையானது) படிந்து உடலெல்லாம் திருநீறு பூசியது போன்று காட்சி கண்ட, மன்னர், அவரை வெண்ணீறு அணிந்த சிவனடியார் எனக் கொண்டு யானை மீதிலிருந்து கீழ் இறங்கி, எதிரே சென்று, தொழுதார், இக்து கண்ட சலவைத் தொழிலாளி மனங்கலங்கி, மருண்டு, " அடியேன் , அடி வண்ணான், என்றார், அவர் யாரென்றும், அவர் மீதுள்ளது திருநீறு அன்று தெரிந்த பின்னும், அடிசேரன் என்றார், அரசர். திருநீற்றை பூசிய தோற்றத்திற்கே நாயனார் அளித்த மரியாதை மதிப்பு மிக்கது, என்பதை எண்ணி உவப்போம். "சேரர் பெருமான் றொழக்கண்டு சிந்தை கலங்க முன்வணங்கி யாரென் றடியேனைக் கொண்ட தாயேனடி வண்ணா னென்னச் சேரர் பிரானு மடிசேனடியே னென்று திருநீற்றின் வாரவேட நினப்பித்தீர் வருந்தா தேகுமென மொழிந்தார் " கழறிற்றறிவார் புராணம் -19 ஏனாதிநாத நாயனார்: ஏனாதிநாத நாயனார் அரச குலத்தவர்களுக்கு வாட் பயிற்சி தந்து, அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத்தொண்டாற்றி வந்தார். நாயனாரின் உறவினரான அதிசூரன் என்பவன் அவர் பால்பொறாமை கொண்டும், அவரிடம் பலமுறை சண்டையிட்டு தோல்வியும் தழுவியும், அவரை எப்படியும் நயவஞ்சனையால் கொல்ல தீய எண்ணம் கொண்டு, தான் ஒரு போலி சிவனடியார் வேடம் கொண்டு, நெற்றியில் திருநீறு அணிந்து அதனை கேடயத்தால் மறைத்துக் கொண்டு நாயனாருடன் வாட்போர் புரிய அழைத்து, வாட் போர் இடும் போது, தன் கேடயத்தை சற்று விலக்கி நெற்றியில் அணிந்த திருநீற்றை நாயனார் முன் காட்டி, தான் ஒரு சிவனடியார் என்பது போல் வஞ்சனை செய்தான், இதனைக்கண்ட ஏனாதிநாத நாயனார், திருநீற்றுடன் கண்ட நெற்றியினை சிவனடியார் என்றே எண்ணி, சிவனடியாரை வாட்போர் புரிந்து வெற்றி கொள்வது, எம்பொருமான் சிவனாரையே போர்புரிவதாக ஆகும் என்று எண்ணி , வஞ்சகனை கொல்வது சரியன்று, எனவே தன்போர்புரிவதை தவிர்த்தும், தன் ஆயுதங்களை கீழே போட்டால் , நிராயுத பாணியான தன்னை கொன்ற குற்றம் போலி சிவனடியாரான அதிசூரனுக்கு உண்டாகும் என்று எண்ணியவாராய், ஆயுத ஙகளுடனே நின்று தன்னை கொல்ல ஒத்திருந்தார், இதன் பொருட்டு நாம் காண்பது திருநீறு அணிந்த நெற்றியைக் கண்ட மாத்திரத்திலேயே சிவனடியாருக்கு யாதொரு தீங்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி தன் உயிர் துறக்க வஞ்சகனுக்கு உடன் இருந்த நிலை நீறுபூசிய தன்மைக்கு அவர் அளிக்கும் மரியாதை நன்கு புலப்படுகிறது. திரு நீறு இட்டாரை ஈசனாகவே கண்டார், அதன்வழீ வீடுபேறு அடைந்தார். உள்ளத்தில் வஞ்சனையுடன் போலி சிவவேடம் தறித்த அதிசூரன் கடுநரகம் அடைந்தான். சிறுத்தொண்டர்: அடியாருக்கு உணவளிக்காமல் தாம் உண்ணா பெருந்தகையாளர் சிறுத்தொண்டர். பயிரவர் வேடத்தில் வந்த ஈசன் தன் உடன் உணவு உண்ண ஒரு அடியார் வேண்டுமென்ற போது, " எங்கு தேடினும் சிவனடியார்களே இல்லை, யானும் யாதும் கண்டீலன் , நான் அறியாதவனாயினும், உலகில் திருநீறிடும் மற்றவர்களைக் கண்டு நானும் இடுபவன்," என்று இறைஞ்சி நின்றார், உடனே இறைவன் திருநீற்றை சிறப்பிக்கும்வகையில் , உம்மைப்போல் திருநீற்றை சிறக்க இட்ட அடியார்களும் உண்டோ? என்று அருளி, தன்னும் உணவு உண்ண இச்சயத்து, அதன் பொருட்டு ஈசனே திருநீற்றை அணிந்தவர்களுக்கு கொடுத்த சிறப்பினை உலகுக்கு உணர்த்தினார், இதன் மூலம் திருநீற்றின் பெருமை ஈசன் வழங்கியது நன்கு விளங்கும். மெய்பொருள் நாயனார்: திருக்கோவலூர் மலையமான் மரபில் வந்த அரசர் மெய்பொருள் நாயனார். இணையிலாத வீரர். பலமுறை அவரிடம் போரிட்டு தோல்வியுற்று,பின், அவரை எப்படியும்வஞ்சனையால் வெல்ல எண்ணிய முத்தநாதன் என்ற மாற்றரசன், உடம்பெல்லாம், திருநீறு பூசியும், சடைமுடி புணைந்து கையில் ஓலைச் சுவடி ஏந்தி, அதனுள் மறைத்த கத்தியுடன், வந்து ஆகம நூல் உபதேசிப்பவன் பேல் நாயனாரின் அந்தப்புறம் வரை வந்து நாயனாரை கத்தியால் குத்தினான். பகைவனை வாளினால் வெட்ட வந்த மெய்க்காப்பாளனை, தடுத்து, " தத்தா, நமர் " எனக்கூறி அவனை பாதுகாப்புடன் நாட்டின் எல்லையில் விடப்பணித்தார். பகைவன் என்று அறிந்தும் திருநீறு பொலிந்த அவன் சிவவேடம் கண்ட நாயனார், அவன் கருதியது முடிக்க உகந்ததுடன், தன் இளவரசர், தேவிமார், அமைச்சர் அவர்களிடம் " திருநீறு பூண்ட சிவவேடம் பூண்டாரை காத்தருள்க, " என வினவி , தான் வீடுபேறு பெற்றுய்தினார். திருஞான சம்பந்தர் : ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தர் வாழ்வில் திருநீறு மிகவும் சிறப்பு பெற்றது. அவர் சிறுகுழந்தைப்பருவத்திலேயே அவர் குழந்தை அழுகையை கட்டுப்படுத்த அவருக்கு அவர் அன்னையார் அளித்த திருமருந்து திருநீறே ஆகும். மேலும் அவர் குழந்தைப்பருவத்தில் திருத்தலங்களில் தேவாரம் பாடிவருங்கலாத்தில் அவருக்கு இறைவன் அளித்த முத்துச் சிவிகை, முத்து தாளம், முத்துப்பல்லாக்கு பெற்று சீர்காளி திரும்பி வரும்போது அங்குள்ள மாதர்கள் அவரை வரவேற்க பொற்கிண்ணம், பொற்தட்டுகளில் ஆராத்தி எடுத்து வரவேற்க சென்றபோது, அவரின் அன்னையார் மட்டும் ஒரு தாம்பளத்தில் இறைவனின் திருநீறுமட்டும் கொண்டுவந்து அவரை வரவேற்று சிறப்பித்தார் என்பதை சேக்கிழார்தனது காவியத்தில் விளக்குகின்றார். பாண்டியம்பதியில் சமணர்களின்ஆதிக்கம் வலுபெற்று, சைவத்தை அழிக்கும் நோக்கில் செயல்பட்டது கண்டு மனம் வறுந்திய பாண்டியநாட்டு அரசி ஞானசம்பந்தரை அழைத்து சமணர்களின் தீங்குகளை நீக்க வேண்டியபோது, அங்கு வந்த சம்பந்தரை அழிக்க அவர் தங்கிருந்த மாடலாயத்திற்கு தீ வைத்த சமணர்களால் பட்ட துன்பம் கண்டு பாண்டிய மனனனுக்கு வெப்பு நோய் கண்டபோது, அதனை நீக்க ஞானசம்பந்தரை அழைத்து திருநீறு அணிவித்து, திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதி வெப்பு நோய் நீங்க, திருநீற்று பதிகம் " மந்திரமாவது நீறு வானவர் மேவது நீறு என்று பதிகம் பாடி திருநீற்றுக்கு பெருமைசேர்த்தது இறைவனின் திருவருளால் அன்றோ! திருநாவுக்கரசர்: திருமுனைப்பாடியில் திலகவதியாரின் தம்பியார் தருமசேனர் என்ற நாவுக்கரசர் சிவநெறியை புறக்கணித்து சமண மதம் சார்ந்து, வாழ்ந்து வந்தமை கண்டு மனம் கலங்கிய தமக்கையார், வீரட்டானத்துறை ஈசரிடம்வேண்டி , புலம்ப, இதன் பொருட்டு இறைவன் தம்பியார் தருமசேனருக்கு சூலைநோய் கொடத்து யாரும் குணப்படுத்த வண்ணம் துன்பம் மிகக் கொண்ட தருமசேனர் உன்னிடம் சேர்வார் என்று அருள்புரிந்தார். அதன்படி தருமசேனர் தமக்கையை அண்டி, சூலைநோய் நீங்க உதவ வேண்டினார். தமக்யைார் வீரட்டானத்து இறைவன்பால் அன்பு கொண்டு இறைவனிடம்சூலை நோய் நீங்க தொழுதெழ கூறினார், அதன்படி தருமசேனர் வீரட்டானத்து இறைவனிடம் "கூற்றாயினவாறு விலக்கலீர் " என தேவாரப்பாடல் பதிகம் பாடி இறைவனின் திருநீற்றை வழங்கியும் அணிவித்து திருஐந்தெழுத்து மந்திரம் ஓதியும் தீராத சூலை நோய் நீங்கப் பெற்றார். இதன் பொருட்டு இறைவர் இவருக்கு நாவுக்கரசர் என்ற பெயரையும் சூட்டினார். திருநீறும் ஐந்தெழுத்தும் சார்பு கொள்ளாதோர் திருக்கோவில் புக தகுதி யற்றவர் என்பது இதன் குறிப்பு. அவ்வாறு நீறு அணிந்து நிறைவாகிய மேன்மையும் நாவுக்கரசர் பெற்றார். திரு நீற்றின் பெருமைகளை இன்னும் பல தகவல்களையும் சொல்லலாம். எம்பெருமான் தன் பெருங்கருனையினால், நம்மையெல்லாம் இந்த மண்ணில் பிறக்கச் செய்திருப்பதே நாம் செய்த புண்ணிய பலனாகும். அதிலும் சைவர்களாக பிறக்கச் செய்திருக்கிறார் நாம் அதன் பயனை நன்கு உணர்ந்து திருநீற்றின் நெறியை நம் வாழ்வின் நெறியாக கொள்வோம். நலம் பல பெறுவோம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!! நன்றி : திருவாளன் திருநீறு மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://poomalai-karthicraja.blogspot.in https://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in

திங்கள், 14 டிசம்பர், 2015

Aanmigam: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...

Aanmigam: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்...: நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்   1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்கள...

தெய்வீகத் திருநீறு "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே. திருமந்திரம் 1666 சைவர்களாகிய நம் அனைவருக்கும் திருநீறு , உத்திராட்சம் ஆகிய சிவச்சின்னங்களுக்கு மேலான வேறு செல்வமில்லை. எம்பெருமானையும் , சிவ வேடந்தாங்கிய அவனடியார்களையும் விட மேலான தெய்வமில்ல. ஆயினும் சைவர் பலருக்கு இந்த மேலான சிவச் சின்னங்களைப்பற்றிய தெளி முழுமையாக இருப்பதில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு அதற்கான நேரம் குறைவாவே உள்ளது. இந்நிலையில் ஆகம விதியினை அறிந்த சான்றோர்களின் வாயிலாக, இதனை எடுத்துயம்புவது அவசியமாகிறது. எனவே இதனைப் பற்றி நான் அறிந்த - படித்த -" திருவாளன் திருநீறு " என்றுகுறு நூலிருந்து கற்றதை இங்கு விளம்புகிறேன். சைவர்களாகிய நாம் அனைவருக்கும் பெருஞ்செல்வம், திருநீறே. இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நாம் அனைவரும் தினமும் விபூதி இட்டுக் கொள்பர்கள்தாம். இருப்பினும் முறைப்படி அதனை அணிவது எப்படி, அதன் பெருமை என்ன? என்பது பற்றி அறிந்ததில்லை. சிவாலயத்திற்கு செல்லும் போதோ, சிவனடியார்களைத் தரிசிக்கும் போதோ, தரப்படும் திருநீற்றை வாங்கி அணிந்து கொள்கிறோம். பூசியது போக மீதமுளள விபூதியை தூணிலோ, சுவற்றிலோ, கொட்டிவிடுவதுண்டு. திருநீற்றின் பெருமை அறியப்படாமையே இத்ற்கு காரணமின்றி வேறில்லை. செல்வத்திற்கெல்லாம் பெரும் செல்வம் இறைவன் அருளிய திருநீற்றை, அவன் அணிந்த செல்வத்தை வீணாக்குதல் முறையன்று, திருநீற்றை விபூதி என்று வழங்குவர்.. பூதி என்பது செல்வன் - " வி " - என்பது மேலானது என்பதாகும். தனக்கு மேலான செல்வம் வேறில்லை . முழுமுதற் பெருளாகிய இறைவன் ( விநாயகன் )தன் வடிவங்களில் ஒன்று. அது நான்கு கரங்களும் ஒரு துதிக்கையும்,, கொண்டது, திருஐந்தெழுத்தே. முழுமுதற் பொருளாகிய இறவன் என்ற அருட்குறிப்பானது . ஆதலின் விநாயகன் தனக்கு மேலாக வேறு ஒரு நாயகன் இல்லாதவன் என்பது அறியப்படும் (வி - நாயகன் ) அவ்வாறே தனக்கு மேற்பட்ட வேறேரு அருட் செல்வமான பரம்பொருள் இல்லாத தாகிய விபூதியாகிய திருநீறே சிவபரம் பொருள் என்று கொள்க. சிவலாயங்களில் திருநீற்றைப் பிரசாதமாக வழங்கும் மரபு , இல்லங்களில் ஆன்மார்த் சிவபூசை செய்வோர் திருநீற்றையே சிவலிங்கமாக வடித்துக்கொண்டு வழிபட்டு உய்வது நாம் பல வீடுகளிலும் காணும் காட்சி. ஆதி விபூதி , அநாதி விபூதி பேருழிக் காலத்தில் புவனங்கள் அணைத்தையும் இறைவன் நீராக்கி (சாம்பலாக்கி )அந்த நீற்றை, நித்தியப் பதப்பொருளாகிய சிவபெருமான் தன் திரு மேனியில் தரிப்பதால் இஃது ஆதி விபூதி எனலாயிற்று. வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பாராய் எந்தை யாரவ ரெங் வடைகயார் கொலோ. முதல் திருமுறை பதி 5. பாடல் 3 தம் திருவுருவின் பேரொலிப் பிழம்பின் முன் பிரளாயக் காலத்து, உலகெலாம் வெந்த ஒளி, ஒரு சிறு ஒளியாகவும்,, சாலாமையை விளக்கி, அதன் அறிகுறியாக, அச்சாம்பலைச் சாந்தமாய் பூசினார். உலகை ஒடுக்கி மீளத் தோற்கு வித்தலால், உலகிற்கு தாமே தாயும், தந்தையும் ஆவதல்லது தாம் பிறப்பு, இறப்பு இல்லாதவர் என்க. இதுவே ஆதி விபூதி என்பர். இனி அனாதி விபூதி பற்றி காண்போம். ஒரு பேருழி முடிந்தபின் ஓயாமல் பிறப்பு, இறப்புகளில் களைப்புற்ற உயிர்கள், போதிய அளவு ஓய்வு பெற்று களைப்பு நீங்கியபின், மீண்டும் பிறவி எடுக்கும் வண்ணம் பரமபதி திருவுள்ளம் பற்றுகின்றார். அஃது அவர் பேரருளினால் ஆகும். அவ்வாறு அவர் திருவுள்ளம் பற்றியபின் அம்பிகையின் வேறு அல்லாத திருவருளே விபூதி வடிவில் அவர் தடத்தத் திருமேனியின் உள்ளிலிருந்து வெளிவரும் விபூதியே அனாதி விபூதியாகும். இதனை திருஞானசம்பந்தரும் திருநாரைபூர்ச்சி தீச்சரப்பதிககககம் - 7 வது பாடலில் " தமலார் மேனித் தவறநீற்றார் " என்கிறார் ( தவளம் - என்றால் வெண்மை ) அம்பிகையே விபூதி என்பதை ஞான சம்பந்த பெருமானனின் திருநீற்றுப்பதிகம் 8ம் பாடல் "பராவணமாவது நீறு " என்கிறார் திருநீறு உயிர்களைக் காப்பதால் திருநீற்றை ரட்சை என்றும், பாவங்களை நீறு செய்து அழித்தலால் நீறு என்றும் உயர்ந்த செல்வமாதலால் - விபூதி என்றும் அஞ்ஞான அழுக்கை போக்குவதால் சாரம் என்றும் ஞான ஒளியை தருவதால் பசிதம் என்றும் பல காரணப் பெயர்களைக் கொண்டது இத்திருநீறு. திரு நீறு நான்கு வகைப்படும் அவை, கற்பம், அனுகற்பம், உபகற்பம், இவை மூன்றும் தீட்சை பெறுவதற்குரிய சைவர்களுக்குரியது. நான்காவதான அகற்பம் தீக்கைக்குரியவர் அல்லாதவர்க்குரியது. இஃது அசைவ விபூதி எனப்படும் இதனை ஆகா தென்று அக்குரைத்த அகற்பம் என்கிறார் பெரியபுராணம்இயற்றி சேக்கிழார். திருநீறு தயாரிக்கும் முறை கற்பம் வகை விபூதி தயாரிக்கும் முறை: திருகயிலையில் இடப தேவருடன் வாழ்கின்ற , நந்தை, பத்திரை, சுரபி, சுகிலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாக சிவன் ஆனைப்படி வழிவழி வரும் பசுக்களுக்களுள் , ஈன்று 10 நாட்களுக்குட்பட்டதும், ஈனாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழடும், மலடும், மலந்தின்பதும், ஆகிய இவற்றை நீக்கி, சிறந்தவற்றுள் பங்குனி, தை, மாதங்களில் வைக்கோலை மேய்ந்த பசுக்களின் சாணத்தை அட்டமி, அமாவாசை, பெளர்ணமி சதுர்த்தி, இந்நாட்களில் சத்யோசாத மந்திரத்தால் ஏற்று, மேலிருக்கும் வழும்மை ஒழித்து, வாமதேவத்தால் பஞ்சகவ்யம் விட்டு அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்ததில் உருண்டை செய்து, ஈரமாக வேணும், உலர்ந்த பின்னரேனும், ஓமத்தீயினுள் ஈசானத்தால் இட்டு சுட்டு எடுத்த நீறு கற்ப விபூதியாகும். இனி அனுகற்ப விபூதி தயாரிக்கும் முறை: காட்டில் உலர்ந்த பசுஞ் சாணத்தைக் கொண்டு வந்து, நுண்ணிய பொடியாக்கி, பசுவின் கோசலத்தை விட்டு பிசைந்து, அத்திர மந்திரத்தால் உருண்டையாகப் படித்து ஓமத்தீயில் இட்டு சிறப்புற வெந்த பின் கிடைக்கும் செல்வ நீறு - அனுகற்ப திரு நீறு ஆகும். உபகற்ப விபூதி : பசுக்கள் மேயும் காடுகளில் மரங்களின் உரைவினால் உண்டாகிய தீயினால் வெந்த நீறும், பசுக்கள் தங்கும் இடங்கள் தீப்பற்ற வெந்த நீறும், செங்கற்கற்சூளை தீயினை உண்டாகிய நீறும், தனித்தனியே கொண்டு சிவகாமங்களில் விதித்த உரிய மந்திரங்களாலே கோசத்ததினாாலே பிசைந்து உருண்டைட செய்த , திருமடங்களில் வளர்ககப்படும் வேள்வித்தீயான சிவாக்கினினால் விதிப்படி நீற்றப்படுவது உபகற்ப நீறு ஆகும். இது தவிர வங்க தேசத்தில் காணப்படும் அகோரிகள் பூசும் சுடுகாட்டு சாம்பலும் நீறாக பயன் படுத்தப்படுகிறது. இதனை அவர்கள் மட்டும் கையாண்டு வருகின்றனர். திருநீறு அணியும் முறை : மேற்கண்ட வாறு தயாரித்த புனித நீற்றை அணியும் முறையினை சேக்கிழார் கூறும் முறையாவன : சிவன் சந்நிதி முன்னும், தீ முன்பும், நடந்து செல்லும் வழியிலும் தூய்மையற்ற இடத்திலும், உபதேச குருவின் முன்பாகவும், திருநீறு அணியலாகாது. ஈசன் சந்நிதியில் பெறும் நீற்றை உடனே அங்கேயே பூசாமல், பிரகாரத்தில் சண்டிகேசர் சந்நிதி சென்று அவர் அனுமதி பெற்று அணிதல் வேண்டும். கீழே சிந்தலாகாது. ஒரு கையால் வாங்குவது கூடாது. உடல் முழுவதும் பூசிக் கொள்ளல் , திரி புண்டரமாக ( மூன்று கீற்றாக ) இடல், பிறை வடிவமாக இடல், வட்ட வடிவில் இடல், என்ற முறைகள் பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளன. "திருநுதல் மேல் திரு நீற்றைத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க " - பெரிய புராணம் பாடல் 28. திரு நீற்றை நீரில் குழைத்து வலது கை மூன்று விரல் களால், உச்சி, நெற்றி, மார்பு, நாபி, இடது முழந்தாள்களிலும், இடது முழங்கை, மணிக்கட்டு, வலது முழந்தாள்களிலும், அணிய வேண்டும். இரு கைகளின் நடு மூன்று விரல் நுனிகளால் முதுகின் இடுப்பு, இரு செவி நுனிகள், கழுத்தை சுற்றி, அணிந்து கொண்டு வலது கையால் சிறிது நீர்விட்டு சிரசில் தெளித்து கொளல் வேண்டும். இவ்வாறு சமய தீட்சை விசேட தீட்சை, பெற்றுள்ளோர், காலை, மாலை, இருபொழுதிலும், நிர்வான தீட்சை பெற்றவர்கள், காலை நண்பகளல் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தாங்கள் உபதேசம் பெற்ற மந்திரங்களை கூறி அணிந்து கொள்ளவேண்டும். திருச்சிற்றம்பலம் நன்றி : திருவாளன் திருநீறு ( திரு நீற்றின் பெருமை பற்றி பனிரெண் திருமுறைகளில் காணும் குறிப்புகள் அடுத்த கட்டுரையில் காண்போம்.) மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://poomalai-karthicraja.blogspot.in https://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in

வியாழன், 10 டிசம்பர், 2015


தினம் ஒரு தேவாரம் திருநாவுக்கரசர் தென்கூடல் திருஆலவாய் மதுரையில் அருளியது / வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொழிப்புரை : அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல் . கருதப்பட்டதே சொல்லப்படுதலின் , ` வாயுள் நின்ற சொல்லானை ` என்று அருளிச் செய்யாராயினார் அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு அதிகாரச் செருக்கினால் அவனை , எண்ணாதொழிதலால் என்க . இறைவன் , தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும் , செருக்குடையார்கட்குத் சேயனாகி இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே . திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

புதன், 9 டிசம்பர், 2015


தினம் ஒரு திருப்புகழ் அருணகிரியார் அருளியது திருப்பரங்குன்றத்தில் அருளியது ......... பாடல் ......... உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. பொருளுரை ; யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்இல்லை. ஆர்வத்தோடு உன்மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன்,கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்றபாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்துசிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்லகுயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகுசந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும்,நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து,பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்துவிட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத்தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே. திருச்சிற்றம்பலம் தொகுப்பு , வை. பூமாலை

Sadhananda Swamigal: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்

Sadhananda Swamigal: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்: சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல் சின்மயானந்தர்! ஆன்மிக உலகில் அனைவராலும் அறியப்பட்ட பெயர்! இவரது பகவத்கீதை ஆங்கில சொற்பொழி...