தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
நல்ல எண்ணங்களை எண்ண வேண்டும். நம் மனதில் இன்ன எண்ணங்கள்தான் எழ வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரமும், அதற்கான திறமையும் இயல்பாகவே நமக்கு அமைந்திருக்கிறது. நம் உள்ளத்தில் எழுகின்ற எந்த எண்ணமும் தானாக எழுவதில்லை. அது ஏற்கனவே சம்ஸ்காரங்களாக, நம் எண்ணங்கள் மற்றும் வினைகளின் வித்துக்களாக நம் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன. இனி இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களும் அழுத்தம் பெறும் பொழுது சித்தத்தில் போய் பதிகின்றன. ஆனால், அவை தானே வலிய வந்து எண்ணங்களாக ஆவதில்லை. நம் புற மனதின் செயல்பாடுகள் மற்றும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைச் சூழல்கள் இவற்றிற்கு ஏற்பதான் அவை எண்ணங்களாக எழுகின்றன. அல்லாத பட்சத்தில் இந்த சம்ஸ்காரங்கள் முளைக்காத விதைகள்தான். இதில் ''அழுத்தம் பெறும் பொழுது'' என்று சொல்வது எதனால் என்றால், நம் வாழ்க்கை என்கிற குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட எண்ணங்களையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம். மீண்டும் மீண்டும் எண்ணுவதே அழுத்தம் பெறுவது என்கிறோம். இதைப் பழக்கம் என்பார்கள். இந்த பழக்கமே எண்ணங்கள் வாயிலாக நம் இயல்பாக அமைகின்றது. எனவே உயர்வான எண்ணங்களை எண்ணப் பழகிக் கொண்டால், அதுவே நம் இயல்பாக ஆகி விடும்.
''உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.'' என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத்தான்.
எனவே நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ நம் விருப்பமின்றி நம் மனதில் தோன்றுவதில்லை. மற்றவர்கள் வலிந்து அதை நம் மனதில் திணிக்க முடியாது. நாம் நமது சுயநலம் மற்றும் சுகபோக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோம். ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் விலை குறைவாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறோம். அதுவே நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் மட்டமானதாக இருந்தாலும் ஏதேதோ பொய்களைச் சொல்லி அதை அதிக விலைக்கு விற்க நினைக்கிறோம். பெரும்பாலானவர்கள் மன நிலை இவ்வகையில்தான் இருக்கிறது. இங்கே சுயநலம் மனதில் தீய எண்ணங்களுக்கு வித்திடுகிறது. அதாவது நமக்கு நல்ல எண்ணங்களை எண்ணக் கூடிய அதிகாரமும், சுதந்திரமும் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் லாபம் அடையும் சுயநல நோக்கில் தீய எண்ணங்களை எண்ணுகிறோம். சிலர் பேசும் பொழுது ''நல்லவனுக்கு ஏது காலம், தீயவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்று சொல்லக் கேட்கிறோம். இந்த எண்ணம் தவறானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீ நல்லவனாக, உயர்ந்த எண்ணம் உடையவனாக இருந்தும் வாழ்வில் உயர்ந்த நிலை வாய்க்கவில்லை என்று உன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதே. நிச்சயமாக அதன் பலன் கிடைக்காமல் போகாது என்பதை உறுதி செய்கிறார்.
நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் எண்ணுவேன் என்று நாம் உறுதியாக இருந்தால் தீய எண்ணங்கள் உள்ளே நுழையவே முடியாது. நல்ல எண்ணங்களைத் தவிர எதிர்மறையான சிந்தனைகளுக்கு மனதில் இடங்கொடுக்க மாட்டேன் என்று நமக்கு நாமே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ''உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள்.'' அதாவது நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களை நல்ல விதமாக இருப்பதும், தீயைவைகளாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதே அதற்குச்சரியான அர்த்தமாகும். நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படும் இயல்பைப் பெற்றவர்கள். எனவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று பழகிக் கொண்டோமென்றால் தீய எண்ணங்கள் மனதில் எழுவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக