வெள்ளி, 15 ஜூலை, 2022

மானிடப்பிறப்பின் மாண்பு

 மானிடப்பிறப்பின் மாண்பு

  ஆதியாய் நடுவும் ஆகி, ஜோதியாய் உணர்வுமாகிய தில்லைப்பாெருமானின் கருணையினால் இந்த பெறுதற்கும் அரியதாய் உள்ள இந்த மானிடப்பிறப்பு நமக்கு கிடைத்துள்ளது. இப்பிறப்பில் ஊனமின்றி பிறந்து தவம் செய் வகுப்பில் இந்த தென்னாட்டில் பிறந்தது அவன் அருளால் அவன் தாள் வணங்கவல்லவா நாம் இப்பிறப்பில் மானிட உடல் தாங்கி பிறந்திருக்கிறோம்.இனி அடுத்த பிறப்பு நமக்கு நம் வினையின் பாெருட்டு என்ன பிறப்பு கிடைக்குமோ என்பது நமக்கு தெரியாது.எனவே கிடைத்த இப்பிறப்பிலே இறைவனின் கருணையை பெற்று அவன் தாள் சேர்ந்தால் இனி பிறவாமை என்ற முக்தியை அடையலாம். இதற்கு வழிசெய்யும் பொருட்டே தேவார திருவாசகம் மற்றும் சாஸ்திர நூல்கள் மூலம் நமக்கு வழிகாட்டியுள்ளனர் அதன் அருளாளர்கள்.

  உயிரோடு கலந்து நிற்கும் ஆணவ மலத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் தன் கருணையால் உயிர்களை பிறப்பு இறப்பிற்கு உட்படுத்துகின்றார். அவ்வாறு உயிர் பிறக்கும் போது நான்கு வகை தோற்றமும்,ஏழு வகை பிறப்பும் எண்பத்து நான்கு லட்சம்யோனி பேதமாகப் பிறந்து இறந்து உழல்கின்றன உயிர்கள்.

  நான்கு வகை தோற்றமாவது, உயிர்கள் முட்டையில் தோன்றுவது,(பாம்பு, பல்லி, ஆமை பாேன்றவை) வேர்வையில் அல்லது அங்கங்கள் மூலம் தோன்றுவது,(கிருமி, பேன்,விட்டில் பூச்சி போன்றவை), வித்துக்களில்,வேர்களில் தோன்றுபவை, ( மரம், செடி,கொடிவகைகள்), கருப்பையில் தோன்றுபவை, நான்கு கால் விலங்குகள்,மனிதர், தேவர் முதலான உயிர்கள், 

இந்த நான்கு வகையிலிருந்து தோன்றும் எழுவகைப்பிறப்பாவான. தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவர வகைகள்.

  மானிடப் பிறவியிலும் சைவ நெறி சார்ந்து திருநெறிய தமிழால் கோகழி ஆண்ட குருமணியை போற்றுவது நமது மேலைத் தவத்தால் அன்றி கிட்டா. உயிர் ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்த முன் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது,

  வினை = நல்வினை, தீவினை, 

நல்வினை = புண்ணியம் = இன்பம்

தீவினை = பாவம்= துன்பம்

  நாம் செய்த வினைகளை ஒரே பிறவியில் அனுபவித்து கழிக்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை, எனவே இறைவன் நம்மீது கருணை கொண்டு, நம்முடைய வினை முழுவதையும் ஒரே பிறவியில் கொடுக்காமல் நம்முடைய வினைத் தொகுதியில் ஒரு சிறிதளவே எடுத்து பிறவிக்கு அனுப்புகிறார். அந்த வினைத் தொகுக்கு நிகழ்வினை அல்லது பிரார்த்த வினை என்று பெயர்.

   நாம் கொண்டு வந்தது போக மீதமுள்ள வினைத்தொகுதி சஞ்சித வினை அல்லது பழவினை எனப்படும். நிகழ் வினையைக் கொண்ட நாம் செய்யும் வினை ஆகாமியம் எனப்படும். நம்முடைய பழவினை குருவிடம்தீக்கை பெறும் போது முற்றிலுமாக நீங்கப்பெறுகிறது.இறைப்பணியில் நாம் செய்யும் சிவத்தொண்டு ஆன்மீகப்பணிகள் மூலமாகவும், நாம் செய்யும் வினைகள் அனைத்தும் இறைவன் செயலாகவே நடக்கிறது இவ்வினையை நீக்குபவன் இறைவனே என்ற எண்ணப்பாங்கில் நாம் செய்யும்புண்ணிய செயல்களால் ஆகாமிய வினை ஏறாமல் தடுக்கப்படுகிறது. நாம் கொண்டு வந்த பிரார்த்த வினை அருளாளர்கள் அருளிச்செய்த பன்னிரு திருமுறைகள் ஓதியுணர்தலே வழி, நம்முடைய திருமுறைகள் திருவருளோடு ஒன்றி, காதலாகி கசிந்து கண்ணீர்மல்க பாடி வழிபடும் போத நிகழ் வினை மெலிந்தும், நீங்கவும் செய்கிறது.நம்முடைய திருமுறை பாடல்கள் 75 சதவிகிதம் வினை நிக்கம் பற்றியே பாடப்பட்டவை என்றும் அவைகள் பழவினையையும், வருவினையையும்நீக்க வல்ல ஆற்றலுடையவை என்பதை அருளாளர்களே தங்கள் வாக்கால்  அருளியுள்ளார்கள்

  திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே தி,மு, 1/11 பதிகம்

 பாடல் வல்லார்க்கு அறும்நீடு அவலம் அறும் பிறப்புத்தானே ,,,,.. தி,மு, 1/ பதி11

 பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே   சம்பந்தர் தேவாரம்

 உடைய தமிழ° பத்தும்உணர்வர்  தொல்வினை ஒல்கும் உடனே   சம்பந்தர் தேவாரம்

 நமச்சிவாய பத்தும் ஏத்த வல்லார்க்கு இடுக்கண் இல்லையே   அப்பர் தேவாரம்

 நாணனை தொண்டன் ஊரன் சொல்.... சொல்வார்க்கு இல்லை துன்பமே  சுந்தரர்


  எனவே நம்முடைய துன்பத்தை நீக்க ஞானமே வடிவான பன்னிரு திருமுறைகளை அன்றி பிறிதாென்றால் ஆகாது. தாயின் கருப்பைக்கு நாம் வரும்போது நமக்கு முன்பே காயக் கருக்குழியில் நம்மை ஆட்கொண்டு நம் வினைக்கு ஒப்ப தனு கரண புவனம் போகங்களை நமக்கு ஊட்டிவித்து வினைப்பயனை நுகர வைக்கிறார் நம் இறைவன். நம்முடைய பருவத்தை நான்காக வகுத்து அந்தந்த பருவத்தில் நாம்விரும்பியவற்றை அருளுவதைக் கண்டு நாம் தெளிவடைய வேண்டும்.

  நாம்இல்லறத்தில் இருந்து கொண்டே துறவியர் பெறும்வீடு பேற்றை அடைய முடியும் என்பது தமிழர் கண்ட நெறி,இதனை பட்டினத்தடிகள் மும்மணிக்கோவையில் அருளி செய்துள்ளார்.துறவியானாலும், இல்லறத்தான் ஆனாலும் மறவாது ஐந்தெழுத்தை சொல்லும்ஒருவர் நிச்சயமாய் வீடுபேறு பெறலாம் என்பது திண்ணம்.

 நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியைஅடையும் வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளை பாடிப் பரவுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வுலகிற்கு தேவையான பொருட் செல்வத்தையும், அருள் உலகிற்கு தேவையான அருளையும் ஒரு சேர தருவது நமது திருமுறைகளே என்பது திண்ணம். கருவாகிப் பின் உருவாகி பிறவியில் உழன்று கொண்டிருக்கும் நாம் மீண்டும் கருவாகாமல் உருவாகமல் இருக்க ஒரே வழி தில்லை அம்மலவாணர் அருள் பெறுதலே, நள்ளிருளில்நட்டம் பயின்றாடும் நாதனை வாழ்த்தவும், வணங்கவும் அவர் நமக்கு தந்த அருட் கொடையே திருமுறைகள். நவக்கோள்களால் வரும் துன்பததை நீக்க வல்லன நம் திருமுறைகள் ஒன்றே. எனவே நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் பன்னிரு திருமுறைகளை பாடி அருள் பெறுவோம், திருமுறைகளே நமது தமிழ° வேதம்.திருமுறைகளே நமது நாதம். 

திருச்சிற்றமபலம்

நன்றி கருமுதல் திருவரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக