வியாழன், 28 ஜூலை, 2022

பெண்மையை போற்றுவோம்...


 பெண்மையை போற்றுவோம்...

63 நாயன்மார்களின் புகழுக்குத் துணை நின்ற போற்றுதலுக்குரிய மகளிர்.....தில்லைவாழ் அந்தணர்களின் தொண்டு சிறக்க துணைநின்ற அவர்களின் மனைவியர்....
தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம் என்ற வைராக்கிய பெண்மணி திருநீலகண்ட நாயனாரின் மனைவி மணம் முடித்தவுடன் கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவனடியாருடன் செல்ல ஒத்துக் கொண்ட இயற்பகை நாயனாரின் மனைவி.
விதைத்த விதை நெல்லைக் கணவர் தர அதை அரிசியாக்கி வீட்டின் கூரையையே விறகாக்கி சிவனடியாராக வந்த இறைவர்க்கு உணவு சமைத்த இளையான்குடி நாயனாரின் மனைவி,
கணவரின் சொல்லை மதித்து, அடியாராக வந்த இறைவனாரின் கோவணத்துக்கு இணையாக தராசு தட்டில் தமது செல்வங்களுடன் தன்னுடைய மகனுடன் நிற்கத் துணிந்த அமர்நீதி நாயனாரின் மனைவி வறுமையிலும் செம்மை காத்த குங்கிலிய கலய நாயனாரின் மனைவி அடியாராக வந்த இறைவர், திருமணமாக வேண்டிய பெண்ணின் அழகிய கூந்தலை வேண்ட.
உடன் அதை அரிந்து கொடுக்க ஒப்புக் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் மகள் அரிவாட்ட நாயனாரின் ஆழ்பக்திக்குத் துணைநின்று வறுமையிலும் இறைவனாருக்கு அமுது படைத்த அவரது மனைவி சமணத்திலிருந்த தம்பியை திருநீறிட்டு சைவத்திற்கு கொணர்ந்து நாம் படித்து மகிழும் பல பதிகங்களை நமக்குக் கிடைக்கச் செய்த திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கை இறைவர்க்கு அமுதளித்து, இறைவரால் அம்மையே என்று அழைக்கப்பட்டு பேயுடம்புடன் தீந்தமிழ் பாடல்கள் பல பாடி இறைவனாரின் திருநடனத்தை தினம் கண்டு களிக்கும் பேறு பெற்ற நம் பாட்டியார் காரைக்கால் அம்மையார்.
பெற்றமகன் வாழை இலை கொணரச் சென்றபோது பாம்பு தீண்டி இறக்க, உடலை ஒரு அறையில் மறைத்து வைத்து தம் குல குரு அப்பர் பெருமானுக்கு உணவு பாறிமாறிய அப்பூதி அடிகளின் மனைவி
இறைவனாரின் மேலுள்ள ஆழமான அன்பாலும் கணவரின் சிவபக்திக்குத் துணை நிற்கும் தன்மையாலும் தான் சுமந்து பெற்ற மகனை மடியில் சுமத்தி கணவர் அரிய பிள்ளைக்கறி சமைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மனைவி.
கறியமுது சமைக்க உதவிய அவர்களது பணிப்பெண்
திருநீல நக்க நாயனார் வழிபாட்டில் இருந்தபோது இறைவர்மேல் சிலந்தி விழக்கண்டு வாயால் ஊதிய காரணத்தால் கணவரின் கோபத்திற்கு ஆளான திருநீலநக்க நாயனாரின் மனைவி
நாம் தமிழால் இறைவரைப் பாட பல பாடல்கள் தந்த திருஞானசம்பந்தரை ஈந்த தாயார் மறுநாள் மணமுடிக்கவுள்ள காதலரை பாம்பு தீண்ட அந்த துக்கத்திலும் இறைவரை அப்பெண் புகழ்ந்து அழ அதுகேட்டு ஞானசம்பந்தர் தேன்தமிழில் பதிகம் பாடி உயிர்பிக்கக் காரணமான அப்பெண்.
மயிலை செட்டியார் மகள் பூம்பாவையை பாம்புகடித்து இறந்து விட அப்பெண்ணினச சாம்பலை தீந்தமிழ் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஞான சம்பந்தப் பெருமான் . அவரது செந்தமிழ் பாடலால் உயிர்பெற்ற அப்பெண் பூம்பாவை.
மணமுடித்தவுடன் ஞானசம்பந்தப் பெருமானுடன் ஜோதியில் கலந்து இறைவரடி சேர்ந்த அவரது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை.
சமணத்தின் ஆதிக்கத்தால் சைவநெறி குன்றிய காலத்தில் ஞானசம்பந்தரை வரவழைத்து சைவத்தை தென்னகத்தில் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார்
பரவை நாச்சியாரிடம் இறைவரை தூது அனுப்பினார் சுந்தரர் என்பதறிந்து கோபிக்க, இரண்டு நாயன்மாரையும் இணைக்க விரும்பிய இறைவர் ஏயர்கோன் கலிக்காமருக்கு சூலை நோய் தந்து அது தீர சுந்தரர் பெருமான் நேரில் வந்து திருநீறு தரத் தீரும் என்றார். சுந்தரர் பெருமான் மேலுள்ள கோபத்தால் அவர் வரும் முன் தன்னை மாய்த்துக் கொண்ட கலிக்காமரின் உடலை ஒரு அறையில் கிடத்தி சுந்தரரை வரவேற்று உபசரித்த கலிக்காமரின் மனைவி
இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கும் மகன் கோயில்கள் பல எழுப்புவான் என்பதறிந்து தன்னை ஒருநாழிகை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்ததால் தனதின்னுயிர் துறந்த கோச்செங்க சோழரின் தாயார்.
அடியார்களுக்கு அமுது படைப்பதற்காகவே கணவர் சுந்தரப் பெருமானிடம் செல்வம் கேட்க அதற்காக பல செந்தமிழ் பதிகங்களை இறைவரிடம் பாடி பரிசுகள் பல பெற காரணமான பரவை நாச்சியார்.
இவரிடம் சுந்தரருக்காக இறைவனாரே தூது சென்றுள்ளார். இறைவர்க்கு பூமாலை செய்து வழிபட்டு அவரே தூதுசென்று சுந்தரரை மணமுடித்த சங்கிலியார்.
பரமன் தடுத்தாட்கொண்ட சுந்தரர் பெருமானாரிர் தாய் இசை ஞானியார்
உலகின் அனைத்து பெரியோர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார்.
ஆத்திச்சூடி வினாயகர் அகவல் என பல தேன்தமிழ் இலக்கியங்கள் தந்த ஔவையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக