திங்கள், 30 டிசம்பர், 2013


சும்மா இரு ..... சொல் அற ! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும். நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார். பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும். இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,

புதன், 25 டிசம்பர், 2013

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உண்மையான அன்பு திருமணமான புதிய தம்பதியர் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது முள் ஒன்று அந்த பெண்ணின் காலில் தைத்தது. அதை கண்டு பதறிப்போன அவன் கணவன் , அவளது பிஞ்சு காலில் இருந்த அம்முள்ளை பிடிங்கி "சனியனே " என்று அந்த முள்ளை ஏசிக் கொண்டு தூக்கி எறிந்தான். பின் பத்து வருடம் கழித்து அதே பாதையில் கணவன் மனைவி இருவரும் நடந்து வரும்போது ஒருநாள் அதேபோல ஒரு முள் அவளது காலில் முள் ஒன்று குத்தியது, அவள் கத்தினாள் அவள் குரலைக் கேட்ட கணவன் திரும்பிப்பார்த்து அவன் முகம் சுளித்தான் அன்று அவளை பார்த்து " சனியனே " பார்த்து வரக்கூடாது?" என்றான், ஆக பத்து வருடத்தில் சனி இடம் பெயர்ந்து விட்டதே முள் மீது இருந்த சனி மனைவி மீது பெயர்ச்சி ஆகி விட்டதே. நாளாக ஆக மனத்தில் அன்பு தேய்ந்து விட்டது குறைந்து விட்டது என்பதே உண்மை. நாம் இறைவனை வழிபடும் போது நிறைந்த அன்புடனே அவனை வழிபட வேண்டும் அதாவது என்றும் மாறத குறையாத அன்புடன் வழிபட வேண்டும். சாக்கிய நாயனார் புத்த சமயம் தழுவியவர், அவர் பின்னாளில் சிவனிடம் நீங்காத அன்பு கொண்டார். சிவனை வணங்கினார். தான் சார்ந்த சமய உடையையே அணிந்து வந்தார். தன் சமயவாதிகளுக்கு தெரியா வண்ணம் சிறுகல்லை எடுத்து பூவாக எண்ணி அதை சிவலிங்கத்தின் மீது போட்டார். தொடர்ந்து அவ்வாறே வழிபட்டு வந்தார். இறைவனும் அதனை ஏற்றுக் கொண்டார். மாறாக மன்மதன் ஒருமுறை மலர்களை ஆணவ மிகுதியுடன் மலர்களை அம்பாக எண்ணி இறைவன் மீது தொடுத்தான் அதை உணர்ந்த இறைவன் அவனை தண்டித்தார். வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பர் சிவன்மேல் அளவிலா காதல் கொண்டார். வேடுவராக பிறந்த அவருக்கு சிவவழிபாடு செய்து பழக்க மில்லை இருந்த போதும் சிவன் மீது கொண்ட காதல் மிகுதியானது. பெருமானை நீராட்ட எண்ணினார் தன் வாய் நிறைய ஆற்று நீரை எடுத்து வந்து உமிழ்ந்து அவரை நீராட்டினார், பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்து அவற்றில் நல்லலைகளை மட்டுமே படைத்தார். நல்ல மலர்களை தன் தலையில் சூடிக் கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டினார், இறைவன் கண்ணில் இத்தம் வந்ததைக் கண்டு சற்றும் தளராது உடனே தன் ஒருகண்ணை ஈட்டியால் தோண்டி ஈசனக்கு ஈந்தார் மேலும் இறைவனின் இன்னொரு கண்ணிலும் ரத்தம் வருவதை கண்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வழங்க முற்பட்டார் அப்போது அடையாளமாக தனது செருப்பணிந்த காலை இறைவன் கண் அருகில் ஊன்றி தனது கண்ணை பிடுங்கி இறைவனுக்கு ஈந்தார்.இதனை மாணிக்க வாசகர் " செருப்புற்ற சீறடி வாய்கலசம் ஊண் அமுதம் விருப்புற்று வேடனார்" என்றும், கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்றும் பாடுகிறார். நாம் செய்யத்தகாதன என்கிற செயல்களையும்கண்ணப்பர் அன்பின் மிகுதியால் செய்திறார். அடியார்களது செயல்களை காட்டிலும் அவர்கள் எண்ணமே முதன்மை ஆகிறது நம்உள்ளக்கிடக்கை அறிந்து அருள்பவன் அல்லவா இறைவன்? பச்சிளம் குழந்தை நம்மார்மீது உதைக்கும்போது அதன் உள்ளக் கிடக்கையான அன்பு ஒன்றையே நாம் காண்கிறோம். இறைவனை நோக்கும்போது நாம் அனைவரும் அவனுக்கு குழந்தைகள்தானே நமது உண்மை அன்பினால் தவறு செய்தாலும் நம்வழிபாட்டை அவன் ஏற்றுக் கொள்வான் அந்த அன்பு என்றும் நீங்காத மாறாத தேயாத அன்பாக இருக்க வேண்டும்


வெள்ளி, 20 டிசம்பர், 2013


பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம் பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. பன்னிரு திருமுறையில் முதலாவது வரும் பாடல் "தோடுடைய " என்று துவங்கினார் திருஞானசம்பந்த பிள்ளயார், இதன்பால் சேக்கிழார் பெருமான் விளக்கம் தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது. மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும். உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு. இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள். ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு. தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது. குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார். `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013


தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,: எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ? தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ? கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ? இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்? பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்? மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்? கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்? ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்? இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், " நான்" என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ? ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்? ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?