வியாழன், 5 மே, 2016

நயன்மார்கள் சிறுதொண்டர்

நயன்மார்கள் சிறுதொண்டர் - Siruthondar
குரு பூசை ; சித்திரை - பரணி

இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.

சோழமண்டலத்திலே, திருச்செங்காட்டங்குடியிலே, மகாமாத்திரர் குலத்திலே, பரஞ்சோதியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆயுள் வேதங்களிலும், படைக்கலத் தொழில்களிலும், குதிரை யேற்றம், யானையேற்றங்களிலும் மிகச் சிறந்தவர். வேதமுதலிய நூல்களை மெய்ப்பொருளை அறிதல் வேண்டுமென்னும் அவாவினோடு திருவருளை முன்னிட்டு ஓதியுணர்ந்தமையால், பரமசிவனே மெய்க்கடவுள் என்றும், அவருடைய திருவடிகளை அடைதலே முத்தி நெறியென்றுந் தெளிந்து, அவருடைய திருவடிகளை அகோராத்திரம் இடைவிடாது அன்பினோடு தியானிப்பவராயினார். சிவனடியார்களுக்கு எக்காலமுந் திருத்தொண்டு செய்பவர்.
அவர் அரசனிடத்திலே அணுக்கராகி, அவன்பொருட்டு யானை செலுத்திக் கொண்டு சென்று, அவனோடு மாறுபட்ட பலவரசர்களை வென்று, அவர்களை தேசங்களைக் கைப்பற்றி, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர். ஒருமுறை உத்தரதேசத்திலே வாதாவியென்னும் நகரத்திற்சென்று, அதனை வென்று, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும் யானைக்கூட்டங்களும், குதிரைக்கூட்டங்களும் அரசனுக்கு முன்கொண்டுவந்தார். அது கண்டு, அரசன் அவருடைய யானையேற்றத்தின் வலிமையை அதிசயித்துப் புகழ்ந்து பேச, அவரை அறிந்த மந்திரிகள் அரசனை நோக்கி "மகாராஜாவே! இவர் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்கையால் இவ்வுலகத்திலே இவருக்கு எதிராவார் ஒருவருமில்லை" என்றார்கள். அரசன் அதைக் கேட்டு அஞ்சி நடுநடுங்கி, இரண்டு கண்களினின்றுஞ் சோகபாஷ்பஞ் சொரிய, 'இவர் நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருத்தொண்டர் என்பதை உணராது, கொடிய போர்முனையிலே விட்டிருந்தேன், ஐயையோ! இது எவ்வளவு கொடிய பாவம்" என்று சொல்லி, பின்பு பரஞ்சோதியாரை நோக்கி "சுவாமீ! இக்குற்றத்தைப் பொறுத்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்து நமஸ்கரித்தான். பரஞ்சோதியார் அரசன் தம்மை நமஸ்கரித்தற்கு முன் தாம் அவனை நமஸ்கரித்து, "மகாராஜாவே! நான் எனது உரிமைத் தொழிற்கு அடுத்த திறத்தைச் செய்வேன். அதனாலே என்ன தீங்கு" என்றார். அரசன் அவருக்கு நிறைந்த நிதிக்குவைகளையும் விருத்திகளையுங்கொடுத்து, "நீர் உம்முடைய நிலைமையை நான் அறியாவண்ணம் நடத்திக்கொண்டு வந்தீர். இனி என் மனக்கருத்துக்கு இசைந்து, எனக்குப் பணிசெய்தலை ஒழிந்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்படத்ட் திருத்தொண்டு செய்யும்" என்று விடைகொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுக் கொண்டு, தம்முடைய திருப்பதியிற்சென்று, கணபதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வணங்கி, அவருக்குத் திருத்தொண்டுகளை வழுவாது செய்வாராயினார். திருவெண்காட்டுநங்கையாரென்னும் மங்கையாரோடு கூடி இல்லறத்தில் வாழ்ந்திருந்து, நாடோறும் முன்னே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, பின் தாம் உண்பார் சிவனடியார்களை மிகுந்த அன்பினோடு வழிபட்டு, அவர்கள் திருமுன்பே மிகச்சிறியராய் ஒழுகுகின்றமையால், அவருக்குச் சிறுத்தொண்டரென்னும் பெயர் கொடுக்கப்பட்டது கணபதீச்சுரருடைய திருவருளினாலே அவருக்குத் திருவெண்காட்டுநங்கையாரிடத்த்லே, சீராள தேவரென்னும் புத்திரர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயசிலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். அந்நாளிலே அத்திருப்பதிக்கு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்து, அவரை வணங்கித் துதித்து, அவராலே திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடியருளப்பட்டார்.
சிவபெருமான் சிறுத்தொண்டநாயனாருடைய மெய்யன்பை நுகர்ந்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, உட்சமயங்களாறனுள் ஒன்றாகிய வைரவத்துக்கு உரிய திருவேடங்கொண்டு, திருக்கைலாசத்தினின்றும் நீங்கி, திருச்செங்காட்டங்குடியை அடைந்து சிறுத்தொண்டநாயனாருடைய வீட்டுவாயிலிற்சென்று, "சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கின்றாரோ" என்று வினாவ; தாதியாராகிய சந்தனநங்கையார் முன் வந்து வணங்கி, "சுவாமீ! அவர் சிவனடியார்களைத் தேடிப் புறத்தே போய்விட்டார். தேவரீர் உள்ளே எழுந்தருளும்" என்றார். அதற்கு வைரவர் "பெண்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகோம்" என்று அருளிச்செய்ய; திருவெண்காட்டுநங்கையார் அதைக்கேட்டு, "இவ்வடியவர் போய்விடுவார் போலும்" என்று பயந்து, விரைந்து வந்து, "சுவாமீ! அடியேனுடைய நாயகர் எப்போதும் சிவனடியாரைத் திருவமுது செய்விப்பவர். இன்றைக்கு ஒருவரையுங் காணாமையால் தேடிப்போயினார். தேவரீருடைய திருவேடத்தைக் கண்டாராயின் மிகமகிழ்வர். இனித்தாழ்க்கார் இப்பொழுதே வந்து விடுவார் எழுந்தருளியிரும்" என்று விண்ணப்பஞ் செய்தார். வைரவர் "நாம் உத்தரதேசத்திலுள்ளேம். சிறுத்தொண்டரைக் காண வந்தேம். எப்படியும் அவர் இல்லாத போது நாம் இங்கே இரேம். கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் இருக்கின்றாம். அவர் வந்தமாத்திரத்திலே அவருக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லித் திருவாத்தியை அணைந்து அதன்கீழ் இருந்தருளினார்.

சிறுத்தொண்டநாயனார் சிவனடியார்களைத் தேடி எங்குங் காணாது, வீட்டுக்குத் திரும்பிவந்து, மனைவியாருக்குச் சொல்லித் துக்கித்தார். மனைவியார் "உத்தரதேசவாசியாகிய ஒரு வைரவர் இங்கு வந்து, தாங்கள் இங்கே எழுந்தருளியிருக்கும்படி சொல்ல, அது கேளாது கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தியின் கீழே போய் இருக்கின்றனர்" என்றார். உடனே சிறுத்தொண்ட நாயனார் மிகுந்த விருப்பத்தினோடு விரைந்து சென்று, அவரைக் கண்டு வணங்கி நிற்க, அவர் "பெரியசிறுத் தொண்டர் நீரோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். சிறுத்தொண்டநாயனார் அவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்கள் தங்கள் கருணை மேலீட்டினாலே அடியேனையே அப்படி அருளிச்செய்வார்கள். அது நிற்க. இன்றைக்குத் திருவமுதுசெய்யவேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். வைரவர் "அன்பரே! நாம் உத்தர தேசத்தில் உள்ளேம் உம்மைக் காண வந்தோம். நம்மை அமுது செய்வித்தல் உம்மால் முடியாது. அது மிக அருமை" என்றார். சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்தருளும் இயல்பை அருளிச்செய்யும். சீக்கிரம் பாகம் பண்ணுவிப்பேன். சிவனடியார்கள் தலைப்பட்டால் தேடுதற்கு அரியனவும் எளியனவாம்" என்று விண்ணப்பஞ் செய்ய; வைரவர் "நாம் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இந்நாளேயாம். அப்படியூட்டுதல் உம்மாலியலாது" என்றார். சிறுத்தொண்டநாயனார் "மிகநன்று, அடியேன் அநேக பசுக்களையுடையேன். தேவரீருக்குப் பிரீதியாகிய பசு இன்னது என்று அருளிச் செய்வீராகில், அடியேன் விரைந்து சென்று பாகம் பண்ணுவித்துக் காலந்தாழ்க்காமல் வருவேன்" என்று சொல்ல; "வைரவர் நாம் உண்பது நரபசு, அது ஐந்து வயசினையுடையதாயும், அவயவப் பழுதில்லாததாயும், ஒரு குடிக்குத் தான் ஒன்றேயாயும் இருக்க வேண்டும். அவ்வியல்புடைய சிறுவனை மனமகிழ்ச்சியோடு தாய் பிடிக்கத் தந்தை அரிதல் வேண்டும். இப்படிச் சமைக்கப்பட்ட கறியே நாம் இங்கு உண்போம்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்வீராகில், அடியேனுக்கு இதுவும் அரிதன்று" என்று சொல்லி, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினார்.
சிறுத்தொண்டநாயனாருடைய வரவை நோக்கி நின்ற மனைவியார் அவருடைய மலர்ந்த முகத்தைக் கண்டு அவரை வணங்கி, அடியாருடைய செய்கையை வினாவ; அவர் மனைவியாரை நோக்கி "ஒருகுடிக்கு ஒரே சிறுவனாகி ஐந்து வயசுடையனுமாய் அவயவப் பழுதில்லாதவனுமாய் இருக்கும் பிள்ளையை மனமகிழ்ச்சியோடு தாய்பிடிக்கத் தந்தையரிந்து சமைத்தால் திருவமுதுசெய்தற்கு உடன்பட்டருளினர்" என்றார் அப்பொழுது மனைவியார் "அவ்வடியவரை அவர் விரும்பியபடி திருவமுது செய்விக்கும்பொருட்டு ஒரு குடிக்கு ஒருவனாஞ் சிறுவனைப் பெறுவது எப்படி" என்று சொல்ல; சிறுத்தொண்டநாயனார் "என்பிராணநாயகியே! இத்திறத்துச் சிறுவனை வேண்டிய திரவியங்களைக் கொடுத்தால் தருவாருளராயினும், நேர்நின்று அச்சிறுவனை அரியத்துணியுந் தந்தை தாயாரோ இல்லை. இனித் தாழ்க்காது நாம் பெற்ற சிறுவனையே அழைப்போம்" என்றார். மனைவியார் அதற்கு இசைந்து, "நம்மைக் காக்கும் பொருட்டு அவதரித்த புதல்வனைப் பள்ளிக்கூடத்தினின்றும் அழைத்துக் கொண்டு வாரும்" என்று சொல்ல; சிறுத்தொண்ட நாயனார் மனமகிழ்ச்சியோடு பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று, தம்முடைய புதல்வராகிய சீராள்தேவரை எடுத்துத் தோண் மேல் வைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தார். மனைவியார் எதிர்வந்து புதல்வரை வாங்கி, திருமஞ்சன மாட்டி, கோலஞ்செய்து, நாயகர்கையிற் கொடுத்தார். அவர் அடுக்களையிற் செல்லாது உலகத்தவர்கள் அறியாவண்ணம் ஓர் மறைவிடத்திற் கொண்டு போனார். அப்பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு வந்தார். தந்தையார் புதல்வரை எடுத்து அவருடைய தலையைப் பிடிக்க; தாயார் அப்புதல்வருடைய இரண்டு கால்களையுந் தம்முடைய மடியிலே இடுக்கி, அவர் கைகள் இரண்டையும் தம்முடைய கைகளினாலே பிடிக்க, அப்புதல்வர் தம்முடைய தந்தை தாயார் மிக மகிழ்கின்றனரென்று மகிழ்ந்து நகை செய்ய, தந்தையார் மனமகிழ்ச்சியோடு ஆயுதத்தினாலே அவருடைய தலையை அரிதலாகிய அரிய செய்கையைச் செய்தார். திருவெண்காட்டு தங்கையார் அறுத்த தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று கழித்து, அதனை மறைத்து நீக்கும்பொருட்டுச் சந்தனநங்கையார் கையிற் கொடுத்துவிட்டு, மற்றையுறுப்புக்களின் இறைச்சிகளெல்லாவற்றையும் அறுத்துப் பாகம்பண்ணி, வேறுகறிகளும் அமைத்து, சோறுஞ் சமைத்துக்கொண்டு, நாயகனாருக்குத் தெரிவித்தார்.நாயகராகிய, சிறுத்தொண்டநாயனார் பெருங்களிப்புடையராகி, விரைந்து சென்று, திருவாத்தியின்கீழ் இருந்த வைரவரை வணங்கி, "சுவாமி! தேவரீர் பிரீதிப்படி பாகம் பண்ணுவித்தேன் எழுந்தருளிவந்து திருவமுது செய்தருளல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்து, அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், ஆசனத்தில் இருத்தி, அவருடைய திருவடிகளை ஜலத்தினால் விளக்கி, அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் சிரசின் மேலே தெளித்து, வீடெங்கும் புரோக்ஷித்து, அவரைப் புஷ்பங்களினால் அருச்சித்துத் தூபதீபங்காட்டி வணங்கினார். வணங்கியபின், நாயனாரும் மனைவியாரும் வைரவரை நோக்கி, "சுவாமீ! திருவமுது படைக்கும் வகை எப்படி" என்று கேட்க; வைரவர் "அன்னத்துடன் கறிகளெல்லாம் ஒருங்கே படைக்கவேண்டும்" என்றார். மனைவியாராகிய திருவெண்காட்டுநங்கையார் பரிகலந்திருத்தி, அன்னமுங் கறியமுதும் படைத்தார். வைரவர் அதைப் பார்த்து, "நாஞ் சொல்லியமுறையே கொன்ற பசுவினது உறுப்புக்களெல்லாவற்றையும் பாகம்பண்ணினீரா" என்று வினாவ; திருவெண்காட்டுநங்கையார் "தலையிறைச்சி மாத்திரம் திருவமுதுக்கு ஆகாது என்று கழித்துவிட்டோம்" என்றார். வைரவர் "அதுவும் நாம் உண்பது" என்றார். அதுகேட்டுச் சிறுத்தொண்டநாயனார் மனைவியாரோடுந் திகைத்து அயர; சந்தனநங்கையார் "நான் அத்தலை யிறைச்சியை அடியவர் திருவமுதுசெய்யும்பொழுது நினைக்கவரும் என்று முன்னமே பாகம் பண்ணி வைத்தேன்" என்று சொல்லி எடுத்துக் கொடுக்க; திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து, வாங்கிப் படைத்தார். அதன்பின் வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "நாந்தனியே உண்ணோம். சிவனடியார்களைக் கொண்டுவாரும்" என்று அருளிச்செய்ய; சிறுத்தொண்டநாயனார் ஏங்கி, "ஐயோ அடியவர் திருவமுது செய்தற்கு இடையூறு இதுவோ" என்று நினைந்து, வீட்டுக்குப் புறத்திலே போய் சிவனடியார்களைத்ட் தேடிக் காணாது துக்கத்தோடு திரும்பிவந்து, வைரவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்களைக் காணேன். அடியேனும் திருநீறிடுவாரைக் கண்டு அன்னங்கொடுப்பேன்" என்று விண்ணப்பஞ்செய்ய; வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "உம்மைப்போலத் திருநீறிட்டார் உளரோ? நீர் இருந்து உண்ணும்" என்று சொல்லி பின் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, "இவருக்கு வேறொரு பரிகலத்திருத்தி, அன்னமும் இறைச்சியும் நமக்குப் படைத்ததில் எடுத்துப் படையும்" என்று அருளிச்செய்ய; அவரும் அப்படியே எடுத்துப் படைத்தார். 
சிறுத்தொண்டநாயனார் வைரவரை ஊட்டவேண்டி, உண்ணப்புகலும், வைரவர் தடுத்தருளி; "ஆறுமாசத்துக்கு ஒருமுறை உண்ணுகின்ற நீர் முன் உண்பது என்னை! நம்முடன் உண்ணும்பொருட்டு உமக்குப் புத்திரன் உண்டேல் அழையும்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "இப்போது அவன் உதவான்" என்று சொல்ல; வைரவர் " அவன் வந்தாற்றான் நாம் உண்போம் தேடி அழையும்" என்றார். சிறுத்தொண்டநாயனார் தரியாது எழுந்து மனைவியாரோடு விரைந்து வீட்டுக்குப் புறத்திலே போய், "புதல்வனே வா" என்று அழைக்க; மனைவியாரும் நாயகரது பணியில் நிற்பாராகி, "சீராளனே! சிவனடியார் அடியேங்கள் உய்யும்பொருட்டு உடனுண்ண உன்னை அழைக்கின்றார் வா" என்று அழைத்தார். அப்பொழுது அப்புதல்வர் பரமசிவனது திருவருளினாலே பள்ளிக் கூடத்தினின்றும் ஓடி வருவார்போல வந்தார். தாயார் அவரை எடுத்துத் தழுவி நாயகர் கையிற்கொடுக்க; அவர் "இனிச் சிவனடியார் திருவமுது செய்யப்பெற்றோம்" என்று மனமிகமகிழ்ந்து, அப்புதல்வரை விரைவிற்கொண்டு அடியவரைத் திருவமுது செய்வித்தற்கு உள்ளே வந்தார். அதற்கு முன் வைரவர் மறைந்தருள; சிறுத்தொண்டநாயனார் அவரைக்காணாமையால் மனங்கலங்கித் திகைத்து விழுந்தார். கலத்திலே இறைச்சிக்கறியமுதைக் காணாமையால் அச்ச முற்றார். "வைரவர் அடியேங்கள் உய்யும் பொருட்டுத் திருவமுது செய்யாமல் எங்கே ஒளித்தனரோ" என்று தேடி மயக்கங்கொண்டு, புறத்திற்செல்ல; அச்சிறுத்தொண்ட நாயனார் செய்தது நிஷித்தானுட்டானமாயினும், அவர் சிவானந்தானுபவமேலிட்டு நிற்கையால் கருவிகரணங்கள் தற்போதச்சீவிப்பாய் நின்று செய்யாது சிவபோதச் சீவிப்பாய் எழுந்து செய்தமைபற்றி அதனை விகிதானுட்டமாகவே கொண்டருளிய சிவபெருமான். அரிபிரமேந்திராதிதேவர்கள் முனிவர்கள் முதலாயினோர் சேவிக்க, உமாதேவியாரோடும் சுப்பிரமணியசுவாமியோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். சிறுத்தொண்டநாயனாரும் மனைவியாரும் புதல்வரும் தாதியாருமாகிய நால்வரும் அவர்களைத் தரிசித்து ஆனந்தவருவி சொரிய, எலும்பும் மனமும் நெக்கு நெக்குருக, பரவசர்களாய் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலியஸ்தர்களாகி நின்று, தோத்திரம் பண்ணினார்கள் பின்பு பரமசிவனும் பார்வதியம்மையாரும் சுப்பிரமணிய சுவாமியும், அவர்கள் நால்வரையும், தங்களை எக்காலமும் பிரியாது வணங்கிப் பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் பொருட்டு உடன் கொண்டு திருக்கைலாசத்தை அடைந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன?

சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன?

இந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.

அர்த்தம் இந்த செய்கையானது ஒரு விழுந்த குச்சி எவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றதோ, அதே நிலையில் தான் இருக்கின்றேன்; எனக்கு உன்னைச் சரணடைவதைத் தவிர வேறு கதி இல்லை; நீயே எனக்குத் தஞ்சம் என இறைவனை நோக்கி இறைஞ்சுவதை குறிக்கின்றது. மேலும் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும் ஒரு சின்னமாக விளங்குகின்றது


அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம்:
 சில வழிகளில், இது இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. நாம் நிற்கும் நிலையில் இருந்து தரையில் விழும் பொழுது நமக்கு காயம்பட்டுவிடுமோ என்று சிலர் அஞ்சக் கூடும். நாம் உட்கார்ந்த நிலையில் இருந்தாலும் நமக்கு காயம்படும் சாத்தியங்களும் உள்ளது. ஆனால், நாம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் பொழுது, நாம் கீழே விழுந்து விடும் அபாயம் இல்லை, எனவே இங்கு நமக்கு காயம்படும் சந்தர்ப்பம் துளியும் இல்லை.



அடக்கத்தைக் குறிக்கும் சாஷ்டாங்க நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும். மேழும் இதைப் பின்பற்றும் நபரிடம் அடக்கம் உருவாகத் தொடங்குகின்றது. பிறர் முன் நாம் அவர்களின் செய்கையின் காரணமாக் நாம் தலை வணங்கினால் அது நமக்கு அவமானம். அதுவே நாம் பிறரை விட உயர்ந்து இருந்தும், அடக்கமாக தலை தாழ்த்தி இருந்தால் அது நமக்கு மரியாதை மற்றும் வெகுமதியைப் பெற்றுத் தரும்.


நமஸ்காரம்
இந்த நமஸ்காரத்தை ஒரு சன்யாசி/வயதில் பெரியவர்கள/குருவிற்கு செய்யும் போது, அவர்கள் நம்முடைய நமஸ்காரத்தை எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எடுத்துக் செல்லும் ஒரு ஊடகமாக செயல்படுகின்றார்கள். இந்த நமஸ்காரத்தை மறுமுனையில் பெற்றுக் கொள்பவர்கள், எதிரே உள்ளவர் தன்னை வணங்காமல் இறைவனை நோக்கி வணங்குவதாக கருதிக் கொள்வார்கள். எனினும், அவர் அந்த நமஸ்காரத்தை இறைவனிடம் எடுத்துச் செல்கின்றார். மேழும் அவர் அந்த நபரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார்.


எனவே, சாஷ்டாங்க நமஸ்காரம் எவ்வாறு செய்யப்படுகிறது? சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு தரையில் பட வேண்டும். மேழும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியலாமா?
இந்து மத மரபுகளின் படி, பெண்கள் இந்த வகை நமஸ்காரம் புரியக்கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக்கூடாது.


ஏன் பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதி இல்லை? பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்ந்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு தன் மதிப்பிற்குரியவர்களின் கால்கள் தொட்டு வணங்குவது 'பஞ்சாங்க நமஸ்காரம்' என அழைக்கப்படுகின்றது. இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை. பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

புதன், 4 மே, 2016

சிதம்பர தரிசனம்

சிதம்பர தரிசனம்


இன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார் குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது.

                          ஐந்து வயது வரை  வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை யருள வேண்டினார். அவர், குமரகுருபரரை ஸ்தல யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டார். காசிக் குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று வருந்திய குமரகுருபரரைச் சிலகாலம் சிதம்பரவாசமாவது செய்ய வேண்டும் என்று பணித்தார். குருவின் கட்டளைப் படியே குமரகுருபரர் சிதம்பரம் செல்கிறார்.

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். இது மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்த கோவையைப் போல நேரிசையாசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற செய்யுட்களால் இயற்றப்பட்டது.

இல்லறமும் துறவறமும்

தாம் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் இல்லறத்தின் பெருமையையும் மாண்பை யும் சிதம்பர மும்மணிக்கோவையில் விவரிக்கிறார்.

இல்லறத்தான் நல்ல நூல்களைக் கற்று, நற்குணம் நிறைந்த மனைவியோடு அன்போடு அரு ளும் சேர்ந்து இன்சொல் நிறைந்தவனாக விளங்க வேண்டும். வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும். அடி யார்களையும் பேண வேண்டும். ஐவகை வேள்விகளான பிரமம், தெய்வம், பூதம், பித்ருக்கள், மானிடம் என்னும் 5 வகையான வேள்விகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று என்ற முதுமொழிப் படி வாழ்ந்து பிறன் மனை நயவாமல் தன் மனைவியோடு இனிது வாழ்ந்து நன்மக்கட் பேறடைய வேண்டும்.

துறவறம் –  கல்வி கேள்விகளின் மூலம் சிறந்த பேறறிவு பெற்று, அருளும், புலன்களின் வழியே செல் லாத மனவலிமையும், பேரொழுக்கமும், வாய்மை, தவம் தூய்மையும் உடையவனாகி ஓரறிவுடைய மரஞ்செடி கொடி களிடமும் அன்பும் உடையவனாக வேண்டும். கால்நடை யாகவே செல்ல வேண்டும். தோலாடை அணிய வேண்டும். துன்பம் கண்டு துவளாமல் காடும் மலையும் கடக்க வேண்டும். காற்றையும் நீரையும் உண்டு வாழ வேண்டும். பனிக்காலத்தில் நீரில் நின்றும் வெயில் காலத்தில் தீயில் நின்றும் தவம் செய்ய வேண்டும்.

இல்லறம் துறவறம் இரண்டி லுமே பல பிரச்சனைகளும் துயரங்களும் இருப்பதால் இந்த இரண்டு நிலைகளையும் கடைப்பிடிக்க மனவலிமையும் உடல் வலிமையும் இல்லாததால் மனங்கலங்கி வேறு ஏதாவது எளிய வழி இல்லையோ என்று அறிஞர்களைக் கேட்க அவர்கள் முக்தித் தலங்களான திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்கவே முக்தி என்று சொன்னார்கள். நல்ல புண்ணியம் இருந்தால் (ஊழ்) மட்டுமே திருவாரூரில் பிறக்க முடியும். காசிக்குச் செல்வதோ மிகவும் கடினம், காடுகளைக் கடக்க வேண்டும். வழியில் பசியாகிய தீ வாட்டும். மிகவும் குளிராக இருக்கும். பலவிதமான நோய்கள் ஏற்படலாம். போய்ச் சேர நீண்ட காலம் பிடிக்கும்.

         காசியில் இறத்தல் நோக்கித் தேசம் விட்டு
         அறம்தலைத் தந்த அரும்பொருள் தாங்கிப்
         பிறன் பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
         கழி பெருங்கானம் நீங்கி வழியிடைத்

         தீப்பசிக்கிரங்கி நோய்ப்பிணிக்கு ஒதுங்கிப்
         பல்பிணிக்கு உடைந்து செல்லுங் காலத்து
         இடைச் சுரத்து இறவாது இன்னுயிர் தாங்கிக்
         கிடைத்தனனாயின் அடுத்த நல்லொழுக்கமோடு

         உடல் விடுகாறும் அத்தட நகர் வைகி
         முடிவது கடைபோக முடிவதோ அரிதே, அதனால்
         சிற்றுயிர்க்கிரங்கும் பெரும் பற்றப் புலியூர்
         உற்ற நின் திருக்கூத்து ஒருக்கால் நோக்கிப்
         பரகதி பெறுவான் திருமுன்பு எய்தப் பெற்றனன்
                                            அளியேன்

என்று தான் சிதம்பர தரிசனம் செய்து முக்தி பெற வந்தாகச் சொல்கிறார் குமரகுருபரர்.

தில்லைத் தாமரை

நடராஜப் பெருமான் நடமிடும் பொன்னம்பலத்தைத் தரிசித்தவருக்கு அது தாமரை மலர் போல் தோன்றுகிறதாம்.ங்குள்ள மாடங்கள் இதழ்களாக வும், மன்றம் தாமரையின் உட்கொட்டையாகவும், விண் தோய் மாடங்களில் படியும் மேகங்கள் வண்டாகவும் காட்சி யளிக்கிறதாம். திருமகள் வீற்றிருக்கும் புண்டரீகத்தோடு நடராஜப் பெருமான் ஆடும் புண்டரீகத்தை ஒப்பிடுகிறார்.

மன்றம் பொகுட்டா, மதில் இதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பரால்—பொன்தங்கும்
நற் புண்டரீகமே ஒக்கும் நடராசன்
பொற் புண்டரீகபுரம்.

ஐவகைத் தொழில்

தூக்கிய திருவடி துணையென நம்பி வந்தவர், பெருமான் ஆக்கி, அழித்து உலகை நீக்கி, மறைத்து, அருளும் ஐந்தொழிலையும் நிகழ்த்துவதைக் காண் கிறார்.  உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் தானே சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது. இதையே பின்னல் வந்த ஒரு புலவர்

ஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளும்
ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே
தூக்கிய திருவடி துணையென நம்பினேன்
தூய நடராஜனே

என்று நெகிழ்ந்து பாடினார். குமரகுருபரர்,

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்
தானே வகுத்தது உன் தமருகக் கரமே

தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே
தோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே

ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே

இத்தொழில் ஐந்தும் நின் மெய்த்தொழில்..


என்று போற்றுகிறார். ஐயன் ஐந்தொழில் புரிகிறான் அம்மை என்ன செய்கிறாள்? சிறு குழந்தைகளுக்குச் சில மருந்துகளை நேரடியாகக் கொடுக்க முடியாது. அதற்காகத் தாய் அந்த மருந்தைத் தான் உட்கொண்டு தன் பாலின் மூலம் மருந்தின் பயனைக் குழந்தைக்குக் கொடுப்பாள். அதேபோல உலகமாதாவான சிவகாமி அம்மையும் நடரஜப் பெருமானின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரும் படி செய்கிறாளாம்.

குமரகுருபரரின் பெருமிதம்

பெரிய தவத்தையுடைய தொண் டர்கள் தளராமல் பலகாலம் கற்று, உணர்ந்து, தெளிந்து, செம்பொருள் இதுவென்று பலமுயற்சிகளும் செய்து வீடு பெற்றனர். நானோ அம்பலம் தரிசனம் மாத்திரம் செய்தே பிறவா நெறி பெற்றேன்!

பாம்பு ஆட்டுவிக்க ஆடும் பெருமான்

அம்பலத்தாடும் நடராஜப் பெருமா னையும் சிவகாமி அம்மையையும் தரிசித்த குமரகுருபரர், அங்கு ஒரு பாம்பு ஐயனை ஆட்டுவிப்பதைக் கண்டு அதிசயிக்கிறார். இது என்ன அதிசயம்! ஐந்து இந்திரியப் பாம்புகளையும் ஆட்டுவிக்க வல்ல சித்தராகிய தில்லைக் கூத்தன் இங்கே ஒரு பாம்பு ஆட்டுவிக்க அதற்காக ஆடுகிறாரே என்று வியக்கிறார்.

பதஞ்சலி என்ற முனிவர் பாம்பு வடிவத்திலே ஐயனின் ஆடலைக் கண்குளிரக கண்டு களிக் கிறார். நடராஜப் பெருமான் பதஞ்சலி முனிவருக்காகவே ஆடல் நிகழ்த்துகிறார் என்பது வரலாறு. இதையே

ஓட்டுவிக்கக் கூட்டினை விட்டோடும் பொறியரவு
(ஐந்)தாட்டுவிக்கும் சித்தர் நீராக்கால்—கூட்டமிட்டு
மன்றாடும் உம்மை ஒரு மாசுணம் நின்றாட்டுவிக்க
நின்றாடுகின்றதென் கொல் நீர்?

என்று வினவுகிறார். மன்றில் ஆடும் மாசுணம் என்பது பதஞ்சலி முனிவரை. ஒரு பாம்பு உம்மை ஆட்டுவிக்கிறதே என்று அதிசயிக்கிறார்.

இடம் போதுமோ?

ஆடல் வல்லானைப் பார்க்கப் பார்க்க புலவருக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டாகிறது.

ஐயனுடைய தோள்கள் மலைகளைப்போல இருக்கின்றன வாம். திருமேனியே ஆகாயம்! திருமுடியோ மூதண்டகூடம்! வில்லோ மேருமலை! இவ்வளவு பெரிய திருமேனியுடைய பெருமானுக்கு கையைக் காலை வீசி ஆட இந்த அம்பலம் போதுமா என்ற கவலை உண்டாகிறது.

வேதண்டமே புயங்கள் விண்ணே திருமேனி
மூதண்டகூடமே மோலியாம்—கோதண்டம்
ஒற்றை மாமேரு உமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றம்பலம்.

இப்படித் தன் கவலையைத் தெரிவிக்கிறார் குமரகுருபரர்.

பாம்பு, கங்கை, சந்திரன்

இடம் போதுமா என்ற கவலை இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்க்கும் புலவருக்கு, பெருமானின் மேனியிலிருக்கும் பாம்பு, கங்கை, சந்திரனைப் பார்த்த்தும் இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.

ஐயனின் சடைமுடியிலுள்ள பாம்பு மூச்சு விடுகிறது. அந்த மூச்சுக் காற்றால் கங்கை அலையெறிகிறதாம். ஆனால் பாம்பின் கண்ணிலிருந்து உண் டான தீயால் வற்றி விடுகிறதாம். ஐயன் நெற்றிக் கண்ணிலி ருந்து படர்ந்தெழுந்த தீக் கொழுந்தால் சந்திரனிடமுள்ள அமுதம் உருகி கங்கையில் வற்றிய நீரைச் சமன் செய்து விடுகிறதாம்!
இடது பாதம் தூக்கி ஆடுவது ஏன்?

அம்பலத்தான் ஆட்டத்தில் ஈடு பட்ட குமரகுருபரருக்கு ஒரு கேள்வி பிறக்கிறது. ஐயன் ஏன் இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்? பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா? தனது வலது  பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா? அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ?  இப்படி எண்ணிப் பார்க்கிறார்.

தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர் முடித்த
நக்கனார் தில்லை நடராசர்—ஒக்கற்
படப்பாயலான் காணப் பைந்தொடி தாள் என்றோ
இடப்பாதம் தூக்கி ஆடியவா இன்று?

என்று தன் கற்பனையை விவரிக்கிறர்.

திருவடிச் சிவப்பு


தூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது? ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ? இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பதஞ்சலியார், பதம்+சலியார் ! 

நடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே! இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?

ஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+ சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்று கிறது!

சென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்? என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி சாடப் பதஞ்சலியார் தாம்

என்று நயம் படப் பேசுகிறார்  குமரகுருபர முனிவர்.

குமரகுருபரரின் விண்ணப்பம்

நட்டம் பயிலும் நாதனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் குமரகுருபரர். புலியூரில் ஆடும் ஐயனே! ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா? அன்று தொட்டு இன்று வரை ‘சுழலும் பிறப்புக்கு வருந்தவில்லை. பெருங்கடலையே நீந்திக் கடக் கும் வல்லமையுடைய ஒருவன் எப்படிச் சிறிய உப்பங் கழி யைக் கடக்க அஞ்ச மாட்டானோ அதுபோல இது வரை எண்ணிலடங்காத பிறப்புக்களை யெடுத்து உழன்ற நான் இனி வரும் பிறப்புக்களுக்கும் அஞ்ச மாட்டேன்.

ஆனால் இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் என்னைப் பற்றிப் பேசுவார்கள். உன் திரு நடனக் கோலத்தைத் தரிசித்த பின்னும்  நான் பிறவியைப் பெற்றால் நான் அஞ்ச மாட்டேன். ஒருமுறை திரு நடனம் தரிசனம் செய்த மாத்திரத்தில் முக்தி கிட்டும் என்று வேதம் சொல் வது உண்மையல்லவா? ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே?” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே! எனக்காக இல்லாவிட்டாலும் தேவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவாவது எனக்கு அருள் செய்ய வேண்டும்.
கேட்ட வரம்

தில்லை வாணா! எனக்கொரு வரம் தரவேண்டும். பெருங்குளிரில் அழுக்கடைந்த கந்தைத் துணியைத் தவிர உடுக்க வேறொரு துணியில்லாமல் போனாலும், படுப்பதற்கு வாயிற்புறத் திண்ணையைத் தவிர

வேறு போக்கிடம் இல்லாவிட்டாலும், கடும் பசி வேளையில் வாய்விட்டு அழுதபோதும் உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ் கூடக் கொடுப்பவர் இல்லாவிட்டாலும் ஒழுக்கமும் கல்வி கேள்விகளில் சிறந்த அடியார் கூட்டத்தோடு சேரும் பேறு வேண்டும். என் உயிர் நீங்கும் அளவும் உதவி உன் பெரும் பதத்தை அருள வேண்டும். உன் திருப்பாதமே முக்தி யாதலால். அதையே வேண்டுகிறேன். ஒருவேளை நான் அறியாமையால் வேறு எதையாவது கேட்டாலும் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்கிறார்.

இந்திர பதவியும் வேண்டாம்

புலியூர்ப் பெருமானுக்கு ஆட்படுவதன்றி இந்திரபதவியும் வேண்டாமாம் இவருக்கு.

“இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறுனும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”

என்று பாடிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல இவரும் தீவிரமாகப் பேசுகிறார்.திருமால் பதவியும் இவருக்குத் துச்சமே!

புனையேம் தருவுதவு பொன்னரிமாலை
வனையேம் பசுந்துழாய் மாலை—பனிதோய்
முடிக்கமலம் சூடினேன் மொய்குழலோடு ஆடும்
அடிக்கமலம் சூடினோமால்.

முடியிலே கங்கையையும், இடப் பக்கத்திலே உமாதேவியாரையும் கொண்ட சிவபெருமானு டைய அடித்தாமரையைச் சூடியதால் இந்திரலோகத்துப் பொன்னரி மாலையையும் திருத்துழாயையும் சூடமாட்டேன் என்கிறார்.

வீடுபேறு நிச்சயம்

இறைவனின் திருவடிகளே வீடு பேறு. இறைவனின் அடித்தொண்டு செய்யாத எனக்கும் அவன் தாள் நீழலின் கீழ்ப் பொலியும் சீருண்டு. ஏன் தெரி யுமா? சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால்! அமுதத்தை யார் உண்டாலும் அவர்கள் இற வாமை நீங்கப் பெற்று தேவர்களாகி விடுவதைப் போல், தில்லைக் கூத்தனின் திருநடனத்தை யார் தரிசித்தாலும் அவர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம்.

நீருண்ட புண்டரீகத் துணைத்தாள்
நிழற்கீழ்ப் பொலியும்
சீருண்டு, அடித் தொண்டு செய்யா எனக்கும்
சிற்றம்பலத்து எம்
காருண்ட கண்டனைக் கண்டனனால்
அக்கடலமுதம்
ஆருண்டனர் மற்று அவர் எவரேனும்
அமரர்களே.

இவ்வளவு பெருமைகளைப் பெற்றிருப்பதால் தான்

“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்,
சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ”

என்று நந்தனார் தவித்தாரோ? இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய சிதம்பரத்தை நாமும் ஒருமுறையாவது தரிசிப்போமே. 








திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
தகவல் ; தமிழ் ஹிந்து/சிதம்பர தரிசனம்

செவ்வாய், 3 மே, 2016

கல்லானாலும் ............ புல்லானாலும்..........

கல்லானாலும் ............ புல்லானாலும்..........


ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.

ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில்தான் அதிகம்.

இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள்.

குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்துமதம்.

கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது.

அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளரவேண்டு மென்பதற்கு, இந்துமதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.

`பிற புருஷனை அவள் மனத்தால் நினைத்தாலும் கற்புஇழந்து விடுகிறாள்’ என்று இந்துமதம் அச்சுறுத்துகிறது.

பெண் `தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று, இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத் தான்.

அழகான ஆடவன் முகத்தை அவள் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைக்கு மீண்டால்கூடக் `களங்கம்’ என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.

`காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும், வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்கும்கூட!

பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் `ஆணுக்கும் அது வேண்டும்’ என்கிறது இந்து மதம்.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் `மெட்டி’ போடுகிறார்கள். இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்து வரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். `அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரியவேண்டும்; `அவன் திருமணமானவன்’ எனத் தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

ஒரு பெண்ணும், காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒரு பெண்ணுக்கு பிரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்ட முடியாது.

தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் `தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

திருமணத்தின் போது `அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?

அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் `அக்கினி’ சாட்சியாகிறான்.

அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.

அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் `கற்புக்கனல்’ என்கிறார்கள்.

அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?

எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, `என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’ என்று சத்தியம் செய்வதே.

`படி தாண்டாத பத்தினி’ என்பது வழக்கு.

`படியைத் தாண்டமாட்டேன்’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.

அருந்ததியைப் பார்ப்பது ஏன்?

`அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’ என்று ஆணையிடுவதே.

`பால் பழம்’ சாப்பிடுவது ஏன்?

அது `பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்’ என்று கூறுவதே.

பூ மணம் இடுவது ஏன்?

`பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்’ என்றே!

மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ளவைப்பதே.

ஆம்; பெண்ணிற்குத் `தற்காப்பு’ வேண்டும்; தாய் தந்தை `காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் `காப்பு’ வேண்டும்.

இந்தக் காப்புகளுக்காகவே கையில் `காப்பு’ அணியப்படுகிறது.

`அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் `காப்பு’க் கட்டப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒரு பெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!

`கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.

`கற்புடைய பெண் விரும்பினால் சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.

`கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.

அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.

இவையெல்லாம் பொய்க்கதைகள் என்று வாதிக்கலாம். ஆனால் `அவர்களைப் போல’த் தன் மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்
கதைகளே!

கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரை நகர் வலம் வந்து, `செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?’ என்று நியாயம் கேட்டுத் துர்க்கை கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.

`அவள் இடது பக்கத்து மார்பைத் திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.

`மார்பைத் திருகி எறிந்தால் மதுரை எரியுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

`இடது பக்கத்து மார்பை’ என்று இளங்கோ சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது; அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.

`அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.

`கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது இந்துக்கள் பழமொழி.

`கல்லும் புல்லும் கணவனாகுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

வெறும் ஜடப் பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை.

`உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்குக் கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே’ என்பது அதன் பொருள்.

பெண்ணைத் தெய்வமாக்கிக் கணவனைப் பக்தனாக்கி வாழ்க்கையை சந்தோஷமாக்க, இந்துமதம் எடுத்துக் கொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.

அந்நியப் புருஷன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரி செய்துகொள்ளும் பெண்கள் இந்துமதத்தின் சிருஷ்டிகள்.

கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்காரமாக, வேறுவழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப் பரிகாரமென்ன?

இங்கே நிகழ்ச்சியொன்று பழைய தத்துவத்தை வலியுறுத்துகிறது.

1947-48ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.

`அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் கெடவில்லை. அவர்களை இந்து இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தியடிகள் வாதாடினார்.

எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.

ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராமபிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச் சாட்சியம் உண்டு.

அது அகலிகையின் கதை. அகலிகையை முனிவன் மணந்தான்.

ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது போலக் கூவினான். உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.

இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருங்கினான்.

திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.

ராமபிரானின் காலடி பட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.

ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகை மீண்டும் உயிர் பெற்றாள்.

முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் `பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.

அதற்கு ராமபிரான் சொன்னார்:

`கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப் புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால்தான் கெட்டாள்; ஆகவே ஏற்றுக்கொள்வது உன்
கடமை.’

முனிவன் அவளை ஏற்றுக்கொண்டுவிட்டான்.

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராமபிரான் வாதத்தின் எதிரொலியே!

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்பட வேண்டியவையே!

அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!

`அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!

கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்களைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய `ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’

திருசிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
***************************************************


நல்ல மனைவி 



மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’

என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை

வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும்,

யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,

அழகில் லட்சுமியைப் போலவும்,

மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,

அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,

மஞ்சத்தில் கணிகையைப் போலவும்

நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.

(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.


அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்.

`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப்பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.

`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்

முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

`தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.

“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி

முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்

அவசரத்தில் கல்யாணம்

என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)

குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,

ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

“விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்

ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே

வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்

தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்

கூறா மற் சந்நியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்

போல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே

- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்

பின்வந்(து)

உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்

தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு

ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்