நயன்மார்கள் சிறுதொண்டர் - Siruthondar
குரு பூசை ; சித்திரை - பரணி
இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.
சோழமண்டலத்திலே, திருச்செங்காட்டங்குடியிலே, மகாமாத்திரர் குலத்திலே, பரஞ்சோதியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆயுள் வேதங்களிலும், படைக்கலத் தொழில்களிலும், குதிரை யேற்றம், யானையேற்றங்களிலும் மிகச் சிறந்தவர். வேதமுதலிய நூல்களை மெய்ப்பொருளை அறிதல் வேண்டுமென்னும் அவாவினோடு திருவருளை முன்னிட்டு ஓதியுணர்ந்தமையால், பரமசிவனே மெய்க்கடவுள் என்றும், அவருடைய திருவடிகளை அடைதலே முத்தி நெறியென்றுந் தெளிந்து, அவருடைய திருவடிகளை அகோராத்திரம் இடைவிடாது அன்பினோடு தியானிப்பவராயினார். சிவனடியார்களுக்கு எக்காலமுந் திருத்தொண்டு செய்பவர்.
அவர் அரசனிடத்திலே அணுக்கராகி, அவன்பொருட்டு யானை செலுத்திக் கொண்டு சென்று, அவனோடு மாறுபட்ட பலவரசர்களை வென்று, அவர்களை தேசங்களைக் கைப்பற்றி, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர். ஒருமுறை உத்தரதேசத்திலே வாதாவியென்னும் நகரத்திற்சென்று, அதனை வென்று, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும் யானைக்கூட்டங்களும், குதிரைக்கூட்டங்களும் அரசனுக்கு முன்கொண்டுவந்தார். அது கண்டு, அரசன் அவருடைய யானையேற்றத்தின் வலிமையை அதிசயித்துப் புகழ்ந்து பேச, அவரை அறிந்த மந்திரிகள் அரசனை நோக்கி "மகாராஜாவே! இவர் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்கையால் இவ்வுலகத்திலே இவருக்கு எதிராவார் ஒருவருமில்லை" என்றார்கள். அரசன் அதைக் கேட்டு அஞ்சி நடுநடுங்கி, இரண்டு கண்களினின்றுஞ் சோகபாஷ்பஞ் சொரிய, 'இவர் நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருத்தொண்டர் என்பதை உணராது, கொடிய போர்முனையிலே விட்டிருந்தேன், ஐயையோ! இது எவ்வளவு கொடிய பாவம்" என்று சொல்லி, பின்பு பரஞ்சோதியாரை நோக்கி "சுவாமீ! இக்குற்றத்தைப் பொறுத்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்து நமஸ்கரித்தான். பரஞ்சோதியார் அரசன் தம்மை நமஸ்கரித்தற்கு முன் தாம் அவனை நமஸ்கரித்து, "மகாராஜாவே! நான் எனது உரிமைத் தொழிற்கு அடுத்த திறத்தைச் செய்வேன். அதனாலே என்ன தீங்கு" என்றார். அரசன் அவருக்கு நிறைந்த நிதிக்குவைகளையும் விருத்திகளையுங்கொடுத்து, "நீர் உம்முடைய நிலைமையை நான் அறியாவண்ணம் நடத்திக்கொண்டு வந்தீர். இனி என் மனக்கருத்துக்கு இசைந்து, எனக்குப் பணிசெய்தலை ஒழிந்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்படத்ட் திருத்தொண்டு செய்யும்" என்று விடைகொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுக் கொண்டு, தம்முடைய திருப்பதியிற்சென்று, கணபதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வணங்கி, அவருக்குத் திருத்தொண்டுகளை வழுவாது செய்வாராயினார். திருவெண்காட்டுநங்கையாரென்னும் மங்கையாரோடு கூடி இல்லறத்தில் வாழ்ந்திருந்து, நாடோறும் முன்னே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, பின் தாம் உண்பார் சிவனடியார்களை மிகுந்த அன்பினோடு வழிபட்டு, அவர்கள் திருமுன்பே மிகச்சிறியராய் ஒழுகுகின்றமையால், அவருக்குச் சிறுத்தொண்டரென்னும் பெயர் கொடுக்கப்பட்டது கணபதீச்சுரருடைய திருவருளினாலே அவருக்குத் திருவெண்காட்டுநங்கையாரிடத்த்லே, சீராள தேவரென்னும் புத்திரர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயசிலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். அந்நாளிலே அத்திருப்பதிக்கு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்து, அவரை வணங்கித் துதித்து, அவராலே திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடியருளப்பட்டார்.
சிவபெருமான் சிறுத்தொண்டநாயனாருடைய மெய்யன்பை நுகர்ந்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, உட்சமயங்களாறனுள் ஒன்றாகிய வைரவத்துக்கு உரிய திருவேடங்கொண்டு, திருக்கைலாசத்தினின்றும் நீங்கி, திருச்செங்காட்டங்குடியை அடைந்து சிறுத்தொண்டநாயனாருடைய வீட்டுவாயிலிற்சென்று, "சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கின்றாரோ" என்று வினாவ; தாதியாராகிய சந்தனநங்கையார் முன் வந்து வணங்கி, "சுவாமீ! அவர் சிவனடியார்களைத் தேடிப் புறத்தே போய்விட்டார். தேவரீர் உள்ளே எழுந்தருளும்" என்றார். அதற்கு வைரவர் "பெண்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகோம்" என்று அருளிச்செய்ய; திருவெண்காட்டுநங்கையார் அதைக்கேட்டு, "இவ்வடியவர் போய்விடுவார் போலும்" என்று பயந்து, விரைந்து வந்து, "சுவாமீ! அடியேனுடைய நாயகர் எப்போதும் சிவனடியாரைத் திருவமுது செய்விப்பவர். இன்றைக்கு ஒருவரையுங் காணாமையால் தேடிப்போயினார். தேவரீருடைய திருவேடத்தைக் கண்டாராயின் மிகமகிழ்வர். இனித்தாழ்க்கார் இப்பொழுதே வந்து விடுவார் எழுந்தருளியிரும்" என்று விண்ணப்பஞ் செய்தார். வைரவர் "நாம் உத்தரதேசத்திலுள்ளேம். சிறுத்தொண்டரைக் காண வந்தேம். எப்படியும் அவர் இல்லாத போது நாம் இங்கே இரேம். கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் இருக்கின்றாம். அவர் வந்தமாத்திரத்திலே அவருக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லித் திருவாத்தியை அணைந்து அதன்கீழ் இருந்தருளினார்.
சிறுத்தொண்டநாயனார் சிவனடியார்களைத் தேடி எங்குங் காணாது, வீட்டுக்குத் திரும்பிவந்து, மனைவியாருக்குச் சொல்லித் துக்கித்தார். மனைவியார் "உத்தரதேசவாசியாகிய ஒரு வைரவர் இங்கு வந்து, தாங்கள் இங்கே எழுந்தருளியிருக்கும்படி சொல்ல, அது கேளாது கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தியின் கீழே போய் இருக்கின்றனர்" என்றார். உடனே சிறுத்தொண்ட நாயனார் மிகுந்த விருப்பத்தினோடு விரைந்து சென்று, அவரைக் கண்டு வணங்கி நிற்க, அவர் "பெரியசிறுத் தொண்டர் நீரோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். சிறுத்தொண்டநாயனார் அவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்கள் தங்கள் கருணை மேலீட்டினாலே அடியேனையே அப்படி அருளிச்செய்வார்கள். அது நிற்க. இன்றைக்குத் திருவமுதுசெய்யவேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். வைரவர் "அன்பரே! நாம் உத்தர தேசத்தில் உள்ளேம் உம்மைக் காண வந்தோம். நம்மை அமுது செய்வித்தல் உம்மால் முடியாது. அது மிக அருமை" என்றார். சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்தருளும் இயல்பை அருளிச்செய்யும். சீக்கிரம் பாகம் பண்ணுவிப்பேன். சிவனடியார்கள் தலைப்பட்டால் தேடுதற்கு அரியனவும் எளியனவாம்" என்று விண்ணப்பஞ் செய்ய; வைரவர் "நாம் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இந்நாளேயாம். அப்படியூட்டுதல் உம்மாலியலாது" என்றார். சிறுத்தொண்டநாயனார் "மிகநன்று, அடியேன் அநேக பசுக்களையுடையேன். தேவரீருக்குப் பிரீதியாகிய பசு இன்னது என்று அருளிச் செய்வீராகில், அடியேன் விரைந்து சென்று பாகம் பண்ணுவித்துக் காலந்தாழ்க்காமல் வருவேன்" என்று சொல்ல; "வைரவர் நாம் உண்பது நரபசு, அது ஐந்து வயசினையுடையதாயும், அவயவப் பழுதில்லாததாயும், ஒரு குடிக்குத் தான் ஒன்றேயாயும் இருக்க வேண்டும். அவ்வியல்புடைய சிறுவனை மனமகிழ்ச்சியோடு தாய் பிடிக்கத் தந்தை அரிதல் வேண்டும். இப்படிச் சமைக்கப்பட்ட கறியே நாம் இங்கு உண்போம்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்வீராகில், அடியேனுக்கு இதுவும் அரிதன்று" என்று சொல்லி, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினார்.
சிறுத்தொண்டநாயனாருடைய வரவை நோக்கி நின்ற மனைவியார் அவருடைய மலர்ந்த முகத்தைக் கண்டு அவரை வணங்கி, அடியாருடைய செய்கையை வினாவ; அவர் மனைவியாரை நோக்கி "ஒருகுடிக்கு ஒரே சிறுவனாகி ஐந்து வயசுடையனுமாய் அவயவப் பழுதில்லாதவனுமாய் இருக்கும் பிள்ளையை மனமகிழ்ச்சியோடு தாய்பிடிக்கத் தந்தையரிந்து சமைத்தால் திருவமுதுசெய்தற்கு உடன்பட்டருளினர்" என்றார் அப்பொழுது மனைவியார் "அவ்வடியவரை அவர் விரும்பியபடி திருவமுது செய்விக்கும்பொருட்டு ஒரு குடிக்கு ஒருவனாஞ் சிறுவனைப் பெறுவது எப்படி" என்று சொல்ல; சிறுத்தொண்டநாயனார் "என்பிராணநாயகியே! இத்திறத்துச் சிறுவனை வேண்டிய திரவியங்களைக் கொடுத்தால் தருவாருளராயினும், நேர்நின்று அச்சிறுவனை அரியத்துணியுந் தந்தை தாயாரோ இல்லை. இனித் தாழ்க்காது நாம் பெற்ற சிறுவனையே அழைப்போம்" என்றார். மனைவியார் அதற்கு இசைந்து, "நம்மைக் காக்கும் பொருட்டு அவதரித்த புதல்வனைப் பள்ளிக்கூடத்தினின்றும் அழைத்துக் கொண்டு வாரும்" என்று சொல்ல; சிறுத்தொண்ட நாயனார் மனமகிழ்ச்சியோடு பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று, தம்முடைய புதல்வராகிய சீராள்தேவரை எடுத்துத் தோண் மேல் வைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தார். மனைவியார் எதிர்வந்து புதல்வரை வாங்கி, திருமஞ்சன மாட்டி, கோலஞ்செய்து, நாயகர்கையிற் கொடுத்தார். அவர் அடுக்களையிற் செல்லாது உலகத்தவர்கள் அறியாவண்ணம் ஓர் மறைவிடத்திற் கொண்டு போனார். அப்பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு வந்தார். தந்தையார் புதல்வரை எடுத்து அவருடைய தலையைப் பிடிக்க; தாயார் அப்புதல்வருடைய இரண்டு கால்களையுந் தம்முடைய மடியிலே இடுக்கி, அவர் கைகள் இரண்டையும் தம்முடைய கைகளினாலே பிடிக்க, அப்புதல்வர் தம்முடைய தந்தை தாயார் மிக மகிழ்கின்றனரென்று மகிழ்ந்து நகை செய்ய, தந்தையார் மனமகிழ்ச்சியோடு ஆயுதத்தினாலே அவருடைய தலையை அரிதலாகிய அரிய செய்கையைச் செய்தார். திருவெண்காட்டு தங்கையார் அறுத்த தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று கழித்து, அதனை மறைத்து நீக்கும்பொருட்டுச் சந்தனநங்கையார் கையிற் கொடுத்துவிட்டு, மற்றையுறுப்புக்களின் இறைச்சிகளெல்லாவற்றையும் அறுத்துப் பாகம்பண்ணி, வேறுகறிகளும் அமைத்து, சோறுஞ் சமைத்துக்கொண்டு, நாயகனாருக்குத் தெரிவித்தார்.நாயகராகிய, சிறுத்தொண்டநாயனார் பெருங்களிப்புடையராகி, விரைந்து சென்று, திருவாத்தியின்கீழ் இருந்த வைரவரை வணங்கி, "சுவாமி! தேவரீர் பிரீதிப்படி பாகம் பண்ணுவித்தேன் எழுந்தருளிவந்து திருவமுது செய்தருளல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்து, அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், ஆசனத்தில் இருத்தி, அவருடைய திருவடிகளை ஜலத்தினால் விளக்கி, அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் சிரசின் மேலே தெளித்து, வீடெங்கும் புரோக்ஷித்து, அவரைப் புஷ்பங்களினால் அருச்சித்துத் தூபதீபங்காட்டி வணங்கினார். வணங்கியபின், நாயனாரும் மனைவியாரும் வைரவரை நோக்கி, "சுவாமீ! திருவமுது படைக்கும் வகை எப்படி" என்று கேட்க; வைரவர் "அன்னத்துடன் கறிகளெல்லாம் ஒருங்கே படைக்கவேண்டும்" என்றார். மனைவியாராகிய திருவெண்காட்டுநங்கையார் பரிகலந்திருத்தி, அன்னமுங் கறியமுதும் படைத்தார். வைரவர் அதைப் பார்த்து, "நாஞ் சொல்லியமுறையே கொன்ற பசுவினது உறுப்புக்களெல்லாவற்றையும் பாகம்பண்ணினீரா" என்று வினாவ; திருவெண்காட்டுநங்கையார் "தலையிறைச்சி மாத்திரம் திருவமுதுக்கு ஆகாது என்று கழித்துவிட்டோம்" என்றார். வைரவர் "அதுவும் நாம் உண்பது" என்றார். அதுகேட்டுச் சிறுத்தொண்டநாயனார் மனைவியாரோடுந் திகைத்து அயர; சந்தனநங்கையார் "நான் அத்தலை யிறைச்சியை அடியவர் திருவமுதுசெய்யும்பொழுது நினைக்கவரும் என்று முன்னமே பாகம் பண்ணி வைத்தேன்" என்று சொல்லி எடுத்துக் கொடுக்க; திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து, வாங்கிப் படைத்தார். அதன்பின் வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "நாந்தனியே உண்ணோம். சிவனடியார்களைக் கொண்டுவாரும்" என்று அருளிச்செய்ய; சிறுத்தொண்டநாயனார் ஏங்கி, "ஐயோ அடியவர் திருவமுது செய்தற்கு இடையூறு இதுவோ" என்று நினைந்து, வீட்டுக்குப் புறத்திலே போய் சிவனடியார்களைத்ட் தேடிக் காணாது துக்கத்தோடு திரும்பிவந்து, வைரவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்களைக் காணேன். அடியேனும் திருநீறிடுவாரைக் கண்டு அன்னங்கொடுப்பேன்" என்று விண்ணப்பஞ்செய்ய; வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "உம்மைப்போலத் திருநீறிட்டார் உளரோ? நீர் இருந்து உண்ணும்" என்று சொல்லி பின் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, "இவருக்கு வேறொரு பரிகலத்திருத்தி, அன்னமும் இறைச்சியும் நமக்குப் படைத்ததில் எடுத்துப் படையும்" என்று அருளிச்செய்ய; அவரும் அப்படியே எடுத்துப் படைத்தார்.
சிறுத்தொண்டநாயனார் வைரவரை ஊட்டவேண்டி, உண்ணப்புகலும், வைரவர் தடுத்தருளி; "ஆறுமாசத்துக்கு ஒருமுறை உண்ணுகின்ற நீர் முன் உண்பது என்னை! நம்முடன் உண்ணும்பொருட்டு உமக்குப் புத்திரன் உண்டேல் அழையும்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "இப்போது அவன் உதவான்" என்று சொல்ல; வைரவர் " அவன் வந்தாற்றான் நாம் உண்போம் தேடி அழையும்" என்றார். சிறுத்தொண்டநாயனார் தரியாது எழுந்து மனைவியாரோடு விரைந்து வீட்டுக்குப் புறத்திலே போய், "புதல்வனே வா" என்று அழைக்க; மனைவியாரும் நாயகரது பணியில் நிற்பாராகி, "சீராளனே! சிவனடியார் அடியேங்கள் உய்யும்பொருட்டு உடனுண்ண உன்னை அழைக்கின்றார் வா" என்று அழைத்தார். அப்பொழுது அப்புதல்வர் பரமசிவனது திருவருளினாலே பள்ளிக் கூடத்தினின்றும் ஓடி வருவார்போல வந்தார். தாயார் அவரை எடுத்துத் தழுவி நாயகர் கையிற்கொடுக்க; அவர் "இனிச் சிவனடியார் திருவமுது செய்யப்பெற்றோம்" என்று மனமிகமகிழ்ந்து, அப்புதல்வரை விரைவிற்கொண்டு அடியவரைத் திருவமுது செய்வித்தற்கு உள்ளே வந்தார். அதற்கு முன் வைரவர் மறைந்தருள; சிறுத்தொண்டநாயனார் அவரைக்காணாமையால் மனங்கலங்கித் திகைத்து விழுந்தார். கலத்திலே இறைச்சிக்கறியமுதைக் காணாமையால் அச்ச முற்றார். "வைரவர் அடியேங்கள் உய்யும் பொருட்டுத் திருவமுது செய்யாமல் எங்கே ஒளித்தனரோ" என்று தேடி மயக்கங்கொண்டு, புறத்திற்செல்ல; அச்சிறுத்தொண்ட நாயனார் செய்தது நிஷித்தானுட்டானமாயினும், அவர் சிவானந்தானுபவமேலிட்டு நிற்கையால் கருவிகரணங்கள் தற்போதச்சீவிப்பாய் நின்று செய்யாது சிவபோதச் சீவிப்பாய் எழுந்து செய்தமைபற்றி அதனை விகிதானுட்டமாகவே கொண்டருளிய சிவபெருமான். அரிபிரமேந்திராதிதேவர்கள் முனிவர்கள் முதலாயினோர் சேவிக்க, உமாதேவியாரோடும் சுப்பிரமணியசுவாமியோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். சிறுத்தொண்டநாயனாரும் மனைவியாரும் புதல்வரும் தாதியாருமாகிய நால்வரும் அவர்களைத் தரிசித்து ஆனந்தவருவி சொரிய, எலும்பும் மனமும் நெக்கு நெக்குருக, பரவசர்களாய் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலியஸ்தர்களாகி நின்று, தோத்திரம் பண்ணினார்கள் பின்பு பரமசிவனும் பார்வதியம்மையாரும் சுப்பிரமணிய சுவாமியும், அவர்கள் நால்வரையும், தங்களை எக்காலமும் பிரியாது வணங்கிப் பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் பொருட்டு உடன் கொண்டு திருக்கைலாசத்தை அடைந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக