சனி, 8 அக்டோபர், 2016

நவராத்திரி நவ தகவல்கள்..!

நவராத்திரி நவ தகவல்கள்..!

1) நவராத்திரி நாட்களில், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலமாகும்.  நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பெண்கள் ‘கன்யா பூஜை’ செய்வதால், சகல செல்வங்களையும் பெறலாம்.

2) கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்வது நலம்.

3) ‘சர்வமும் சக்தி மயம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளிவிட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

4) நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று பூஜை செய்து வழிபட்டால், ஶ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்றைய நாளில் ஶ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தை  சொல்லி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

5) நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால்,  அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.



6) நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை அன்று கடலை, சுண்டல் மற்றும் பழங்கள் கொடுக்கலாம்.  நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

7) அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் பக்திப் பாடலகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். நவராத்திரி  ஒன்பது நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால், முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி  நாட்களும், வாசலில் தினம் தினம் புதிய புதிய மாவிலைத் தோரணங்கள் கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்.

8) விஜய தசமி தினத்தன்று ஶ்ரீஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

9) நவராத்திரி பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்ற பலவிதமான மங்கலப் பொருட்களைப் பரிசளிக்கலாம். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடையை பரிசாக அளிக்கலாம். ஏழைகளுக்கு உடைகள், உணவு வகைகள் முதலியவற்றை தானமாக அளிப்பது சிறப்பான பலன்களைத் தரும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜையை நிறைவுசெய்ய உதவுகின்றன. எல்லோர் மனத்திலும் அன்பை விதைத்து, அகிலம் சிறக்கச்செய்திடுவோம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை 


நவராத்திரி பூஜை ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய கருத்து இதுதான்; 

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.

இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.

இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.

துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.

செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.

ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.

இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.

சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.

ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.

இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டும்.


நவராத்திரி தினங்களில் வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்தும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நலம் தரும் நவராத்திரி விழா!


 
கில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் ஒப்பற்ற விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன. 
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும். ஆனால் இந்த ஆண்டு ஒன்பது நாட்களோடு இன்னும் இரண்டு நாட்கள் சேர்ந்து நவராத்திரியை சிறப்பாக்குகிறது. ஆம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படவிருக்கிறது. 
நவராத்திரி நாட்களில், ஒவ்வொரு நாட்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக, பெண் குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். குழந்தைகள் முதல் மூதாட்டி வரையான பெண்களை அம்பாளாகவே கண்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட அலங்கரிக்க வேண்டும். பலவித பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு தகுந்த உபசரிப்பு செய்து, அவர்களை மகிழ்விக்கிறோம். இதனால், முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.  
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.
அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள். 
ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள்,  திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது  விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் தாத்பரியம்

திருச்சிற் ற மபலம் 

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

ஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர். 
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். 
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. 
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 
மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 
8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள் (theni Anandham SK)


சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்   (theni Anandham SK)







ஏழுர் சாலியர் சமுதாயத்தில் அவதரித்த ஸ்ரீவி. போத்தீஸ் நிறுவனத்திற்கு அடித்தபடியில் ஜவுளித்துறையில் வெற்றிகண்டவர்கள் தேனி ஆனந்தம் என்ற ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு, எஸ்கே என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜி. நடராஜன் அவர்களும் மற்றும் அதன் பங்குதாரர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய எம் மண்ணின் மைந்தர்களானவர்கள் தான் சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி தாலுகா, சுந்தரபாண்டியத்தை சிறப்பு செய்யும் திரு நடராஜன் அவர்கள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தாலும், இளவயதிலேயே வேளாண்மையிலும், வணிகத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என கொண்டு எத் தொழிலையும் சிறப்புடன் நடத்தும் பாங்கு அவருக்கு உண்டு, கல்வியிலும் எம். காம் படித்து அரசு வேலை வாய்ப்பிற்கு செல்லாமல் வணித்தில் நாட்டம் கொண்டு அவர்களுடைய மளிகைக்கடை, சுந்தரமகாலிங்கம் எண்டர்பிரைசஸ் என்ற உரக்கடை மற்றும் கற்பகம் டெக்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவத்தினை அவர்களின் கூட்டுக் குடும்பத்துடன் சிறப்புடன் நடத்தி வெற்றிபெற்ற அனுபவம் கொண்டவர். எத்தொழில் செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிக்கும் திறன் கொண்டவர் எஸ்கே. அவர்கள். உரக்கடை நடத்தும் போதும் சரி ஜவுளி வியாபாரத்திலும் சரி வாடிக்கையாளர்களை கவரும் மனப்பாங்கு அவருடைய தனி சிறப்பு, உரக்கடையில் வேளாண்மருந்து, உரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடை திருப்தியே தனது திருப்தி என்று செயல்படும் தன்மை கொண்டவர் , வியாபாரம் முக்கியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர், இதற்காக வேளாண் துறை அலுவலர்களிடம் தானே பயிற்சி கொண்டு செயல்படுவது அவரின் தனி சிறப்பு, இத்தன்மை கொண்டதால்தான் திரைகடல் ஒடி திரவியம் காண்பதுபோல் தேனி தனக்கு வியாபார தலமாக கொண்டு தேர்வு செய்து, தேனி ஆனந்தம் என்ற பட்டு ஜவுளி ஸ்தாபனம் அமைத்து முதல் சிகரம் தொட்டார்,

இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தனது மைத்துனர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் அவர்கள்தான், இவர்கள் இருவரும் அந் நிறுவனத்தின் தூண்காளாக இருந்து தோள் கொடுத்தவர்கள்.

    தேனியில் வளர்ச்சி கண்டபோது தினமலர் நாளிதழ் க்கு பேட்டி கொடுத்த செய்தியையும் இங்கு வைத்துள்ளேன், அவர் அந்நாளில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கைத்தறி தொழில் நலிவுற்றபோது அரசு கஞ்சித்தொட்டியில் கஞ்சிவாங்கிக் குடித்த அனுபவத்தையும் காட்டியுள்ளார். தேனி நகரில் வளர்ச்சி கண்டபோது புதிய ஜவுளி ஷோரூம் திறப்பு விழாவிற்கு அமைச்சரர் திருமிகு பன்னீர்செல்வம் திறந்து சிறப்பு பெற்றதையும் காணலாம்,


அவரின் வளர்ச்சி சாலியர் சமுதாயத்தினரின் போத்தீஸ் நிறுவனத்திற்கு அடுத்த படிக்கல்லாக சிகரம் தொட்டு வருகிறார் என்பது மிகையாகாது, அதன் அடிப்படையில்தான் தற்போது காணும் திண்டுக்கல் புது ஜவுளி மாளிகை திறப்பு விழா



 வளரட்டும் அவ்வணிய வளாகம், அதன் அடிப்படையில் உயரட்டும் வேலை வாய்ப்பும் அதனைச்சார்ந்த சமுதாய வளர்ச்சியும்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்



திங்கள், 26 செப்டம்பர், 2016

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் நவராத்திரி கொலு பூசை விழா

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் நவராத்திரி கொலு பூசை விழா

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்


இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி பெயர்:
 
ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி
எப்படிப் போவது?
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில், சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மீ. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்துக்குச் செல்லலாம்.
ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,
மேலக்கடம்பூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 304.
இவ்வாலயம், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பிரதோஷ பூஜை
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபடுவதும், அவரது வாகனமான நந்திதேவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொள்வதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்புபெற்றது. இந்தச் சிறப்புக்குக் காரணமானவர், இவ்வாலயத்தில் உள்ள ரிஷபதாண்டவமூர்த்தி உற்சவர்.

பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். இந்த உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாம் காண இயலாது.

தல வரலாறு
பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச் சென்றனர். இதைக் கண்ட விநாயகர், தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதக் கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர், சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி, சிவனை இந்திரன் வேண்ட, அவர் இந்திரனுக்கு அமுதக் கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். சிவனும் அங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.

 
இந்திரனின் தாய் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது, விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், தேர்ச்சக்கரத்தை விநாயகர் தன் காலால் மிதித்துக்கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்தின், இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்து "தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி" இங்கு வந்து தன்னை வணங்கும்படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
கோவில் அமைப்பு
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது.
அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரம் இல்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன.
கருவறை, தேர்ச் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வர வேண்டும். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும்போது, விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார்.
கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர், நந்தியுடன் இருக்க, அவருக்குக் கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன் தொடை மீது இருத்தி, ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
ரிஷபதாண்டவமூர்த்தி
இத்தலத்தில், நந்தி மீது நடனமாடிய கோலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி  10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்கமுடியும். இவருக்குக் கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

ஆரவார விநாயகர்

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர்ச் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் மற்ற சிறப்புகள்
  • சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்.
    கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான்.
  • அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.
  • அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • கடம்பவன தலமாதலால், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
  • காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி.
  • சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை.
  • அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம்.
  • ஸ்ரீ முருகப்பெருமான், சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம்.
     
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சுவாமி மீது சந்திர ஒளி விழுவதும் சிறப்பு.
ஒரு பிரதோஷ நாளில் திருக்கடம்பூர் சென்று பிரதோஷ கால பூஜையில் கலந்துகொண்டு ரிஷபதாண்டவமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.