திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மயிலே தூது செல்லாயோ?


மயிலே தூது செல்லாயோ? மயிலே தூது செல்லாயோ - மால் மருகனிடம் சேதி சொல்லாயோ! உயிராய் என்னை உணர்ந்திருந்தான் - இந்த உலகம் தனைநான் மறந்திருந்தேன் ! இனிக்கவே பேசி எனக்கவர்ந்தான் - என்றன் எண்ண மெலாம் நிறைந்திருந்தான் ! கனிவாய் பேசிக் கவர்ந்திருந்தான் - அவன் நினைவால் நானு மறந்திருந்தேன் உண்ணவும் என்மனம் விரும்பவில்லை - இமை மூடினும் துயில்கொள்ள முடியவில்லை பண்ணும் எனக்கே இனிக்கவில்லை - ஆவின் பாலும் ஏனோ சுவைக்க வில்லை நடை தளர்ந்தேன் பண் பாடும்இழந்தேன் காண கண்ணும் தளர்ந்தேன் - உன்புகழ் கேட்கும் தயவிழந்தேன் தவிக்கிறேன் உன்தலைவனிடம் என்னிலை சொல்லோயோ

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள்


பஞ்ச பூதக் கோவில்கள் சிறப்புமிகு ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் நாம் அறிவோம் இந்த ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலங்கள் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள் சிவலிங்கம் அகண்டமானது பிருதிவி ( மண்), அப்பு (நீர்), தேயு ( நெருப்பு) , வாயு ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும், இவ்வுண்மையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு ஐம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர், அவையாவன காஞ்சிபுரம், திருவாரூர் (மண்) , திருவானைக்கால் (நீர்) திருவண்ணாமலை (நெருப்பு), காளகஸ்தி (காற்று -வாயு) சிதம்பரம் ( வானம்) ஆகும், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்த ஆலங்கள் ஆகும், இவை போன்ற தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள் அமைந்துள்ளன, அவை சங்கரன்கோவில் - (மண்) தாருகாபுரம் - நீர் கரிவலம்வந்தநல்லூர் - நெருப்பு தென்மலை ( காற்று) இவை அனைத்துமே சிவன் கோவில்கள் ஆகும் சங்கரன்கோவில் ( மண் - பிருதிவி) இறைவன் : சங்கரலிங்கர் இறைவி : கோமதி அம்பாள் உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான், மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் இம்மண்ணில்தான். இத்தகு மண்ணின் சிறப்பை உயர்த்த மண் தத்துவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன, இத்தத்துவத்திற்கிணங்க அமைந்ததுதான் சங்கரன்கோவில் என்ற சஙகரநயினர்கோவில் ஆகும், சங்கரரும், நாராயணரும் வேறுவேறு அல்லர், இருவரும் ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவம் ஆகும், இங்கு இறைவர் சிவன் பாதியாகவும், திருமால்(நாராயணன் ) பாதி உடம்பாகவும் மக்கட்கு காட்சி அளிக்கின்றனர், பாண்டிநாட்டின் அரசனான உக்கிரன் என்ற அரசனால் பாண்டியநாட்டின் தென்பகுதியில் அசிரீரி வாக்கு கேட்டு அம்மன்னன் புன்னவனக்காடாக இருந்தஇந்த இடத்தில் சிவாலயம் அமைத்து, அதற்கு ராஜகோபரமும், இறைவன் இறைவிக்கு தனித்தனி தேர்களும் உருவாக்கினான், இக்கோவிலில் ஒருநாள் தங்கினால் மோட்சம் அடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்களும் நீங்கும், இறைவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் - விஷ்ணுவுடன் கூடியிருக்கும திருக்கோலத்தினை காட்டியருள வேண்டிக்கொண்டதன் பேரில் கோமதியம்மாள் பொதிகைமலை அருகில் ஒரிடத்தில் புண்னைமர வடிவில் தவமிருக்க வேண்டியதிற்கிணங்க ஆடித்தவசு கோலம் பூண்டு கடுந்தவம் புரிந்ததால் இறைவிக்கு சங்கரநாராயணனாக காட்சி அளித்து மறுபடியும் சிவ உருவத்தில் காட்சி அளிக்க வேண்டியதன் பெயரில் சங்கரலிங்கமாவும் காட்சி அளித்தார், இக்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாகும் இவ்விழா ஆடித்திங்கள் பெளர்ணமியன்று நடைபெறும், இத்துடன் இங்கு சிறப்பாக நடைபெறும் விழா வசந்த உற்சவ திருவிழாவும் சிறப்பு பெறறது, தாருகாபுரம் - (நீர் - அப்பு) இறைவன் : மத்தியஸ்தநாதர், பிணக்கறுத்த பெருமான் இறைவி : அகிலாண்ட ஈஸ்வரி நீர் தத்துவத்தை உணர்த்தும் இத்திருக்கோவில் வாசுதேவநல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கே சுமார் 6 கி,மீ. தூரத்தில் அமைந்துள்ளது,இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும், அதனைக்கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டல் செய்தனர்என்றும் கூறப்படுகிறது, ஆனால் மீண்டும்மீண்டும் அந்நீரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தகாது என அவ்வூற்றினை கல்கொண்டு மூடி விட்டனர், ஆயினும் இன்றும் இங்குள்ள கருவறை சுவர்கள் நீர்ப்பிடிப்புடனே தோன்றுகின்றன,இங்குள்ள தீர்த்தத்தில் கெளதமர், சனகாதியர் ,வசிட்டர், வால்மீகி அகத்தியர் போன்ற முனியவர்கள் தவம் புரிந்துள்ளனர் மூர்த்திகளில் மிகச் சிறப்புடையது அப்புலிங்கம் ஆகும், மத்தியஸ்தர் தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர,சோழ பாண்டியர் நில வேட்கையால் ஒரு காலத்தில் மாறுபட்டனர் ஒருவருக்கொருவர் போரிட்டனர், அதைக் கண்ட இறைவன் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்த எண்ணி அகத்தியர் வடிவில் வந்து சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, எல்லைப்பகுதியினை வரையறுத்துக் கொடுத்து மத்தியஸ்தம் கொடுத்து பிணக்கினை தீர்த்தருளினார் இவ்வாலயம் தாருகாபுரத்திலிருந்து மேற்கே சமார் அரை கி,மீ, தூரத்தில் உள்ளது, இறைவர் பிணக்கறத்த பெருமாள் என்றும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகிறது, இறைவி அகிலாணட ஈஸ்வரி தல விருட்சம் மா மரம் ஆகும், இது பழமைவாய்ந்த நில வருவாய் தவிர வேறு வருவாய் இல்லாத காரணத்தால் இக்கோவில் இன்னும் அபிவிருத்தி அடையவில்லை, இருகால பூசை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது, கரிவலம்வந்த நல்லூர் - (நெருப்பு) இறைவன் : பால்வண்ண நாதர் இறைவி : ஒப்பணையம்மாள் இக்கோவில் திருவண்ணாமலைக்கு நிகரானது, தென்பாண்டி நாட்டில் நிட்சேபநதி கிருபாநதி எனத்தெய்வத் திருநாமம் பெற்ற ஆறுகள் பாய்வதும் அரி, பரமன், தேவர், அகத்தியா, நாரதர், வசிட்டர் முதலியோர்களால் வழிபடப்பட்டதும், சிவபெருமான் நித்திய தாண்டவம் புரிய அம்பலமாகக் கொண்டதும் ஆன தலம் கரிவலம்வந்த நல்லூர் ஆகும, தென்பாண்டிய நாட்டில் இந்நகரில் ஆண்டு வந்த வரதுங்க பாண்டியன் என்பான் தனக்கு பத்திர பாக்கியம்இல்லாமை கண்டு மனம் மிக வருந்தினான், அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி மனக்கவலையை நீக்கும்படியும் தாமே அந்தியக்காலத்தில் அவனுக்கு செய்யவேண்டிய தகனக்கிரியைகளைச் செய்து முக்தி தருவதாக கூறி அதன்படி மன்னன் பால சந்நியாசியை ஞானாசிரியராகக் கொண்டு இல்லற ஞானியாய் விளங்கி , ஐந்தெழுத்து மந்திரத்தை உசசரித்து நிட்டை புரியலானான், அரசன் சோதியிற்கலந்தான் அப்போது அரசனுக்கு பிதுர்காரியம் செய்ய ஒருவரும் இல்லாத நிலை அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர், அப்போது பாலவண்ண நாதர் வயதோகிய பரம்மச்சாரி வேடத்தில் வந்து ஈமக்கிரிகளைச் செய்து மூன்று நாள் காரியமும் முடித்து கோவிலுள்ள கர்ப்ப கிரகத்திற்கு சென்று சிவலிங்கத்துடன் கலந்தார், இக்கோவில் சூரியன் பூசை புரிந்த இடம், அக்கினி பாவம் நீங்கப்பெற்ற இடம், அகத்தியர் பூசித்த தலம் போன்ற பெருமையுடையது, இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இலங்கேசுவரர் ஆலயமும் உள்ளது, தல மரம் களாமரம், இங்கு காவடி திருவிழா மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தேவதானம் ( வானம்) இறைவன் : நச்சாடைத் தவிர்த்தவர் இறைவி : தவம் பெற்ற நாயகி இத்தலம் சிதம்பரத்திற்கு நிகரானது, இறைவன் நச்சாடை தவிர்த்தவர், இறைவி தவம் பெற்ற நாயகி, இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம், திருக்கண்ணீஸ்வரரை வணங்கினால் முக்தி கிட்டும், பாண்டி சோழ மன்னர்களின் போர் நிகழ்வில் பாண்டியன் இறைவனை வேண்ட சோழன் தனது இரு கண்களையும் இழக்கவே, பின் சோழன் வேண்ட கண்பார்வை வழங்கி அருளினார், சோழன் பாண்டியனை வெல்லக்கருதிய போது அவனுடைய நச்சாடையை தவிர்த்து பாண்டியனை காத்தருளினார், ஐம்பூதக் கோவில்களில் இங்கு மட்டுமே கொடிமரத்ததின்கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது,சிவலிங்கம் மிக சிறியதாக அமைந்துள்ளது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ,இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் அஸ்டபந்தன கும்பாபிசகம் நடைபெற்றது, தெனமலை - வாயு இறைவன் : திரிபுர நாதர் இறைவி : சிவபரிபூரணி இத்தலம் வாயுத்தலமாகும் காளகஸ்திக்கு நிகரனாது, இது கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கே 5 கி,மீ, தூரத்தில் உள்ளது, இக்கோவில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது, இங்கு அம்மன் சந்நிதி வாயில் தான் பிரதான வாயிலாக உள்ளது, முதலில் திரிபுரநாதரை வணங்கி பின் அம்பாள் சிவபரிபூரணியை வணங்க செல்ல வேண்டும், இங்குள்ள லிங்கமும் மாறுபட்டு காணப்படுகிறது, இங்குள்ள அகத்தியர் பீடத்தை வணங்கினால் தடைபெற்ற திருமணம் நடைபெறும் குழந்தை பேறு கிட்டும் பேறு பெற்றது, ஐம்பூதக் கோவில்களின் சிறப்பு: ஐம்பூதக்கோவில்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றுவிளங்குகிறது, மகாசிவராத்திரி அன்று இவ்வைந்து கோவில்களுக்கும் சென்று வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும் ஒம் சிவ சிவ ஓம் - திருச்சிற்றம்பலம் வை.பூமாலை சுந்தரபாண்டியம்

புதன், 14 ஆகஸ்ட், 2013

பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்


பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும் இளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளையரே சுந்தரரே பாட்டுடைத்தலைவனாக கொண்டது பெரிய புராணம், இது ஒரு பக்தி நூல்- அன்பு நூல் அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள், அன்பின் நிறையுருவமாக இறைவனை சிவமாக கண்டார்கள் சைவர்கள், அன்பும் சிவமும் ஒன்றே - அன்பே சிவம் - என்கிறார் திருமூலர், அந்த அன்பின் நிறைவுருவமாக இறைவனை அன்பால் ஆராதித்த 63 நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் அன்பு காவியம் தான் பெரியபுராணம், இதில் கூறும் 63 பேரும் அன்பு வழி நின்ற சிவனடியார்கள், அந்த அன்பு கனிந்து முற்றி, பழுத்து - பக்தி -அன்பாக பர்ணமித்தருக்கிறது, இளமை காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றிவதை அடியார்களின் வாழ்வில் காணமுடிகிறது, சம்பந்தரின் இளமை துணிந்து நின்று சமண மதத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தழைக்க செய்தது, பாட்டுடைத்தலைவனான சுந்தரரின் வாழ்ககையில் தன்னை கையாயத்தில் பரமனிடம் வேண்டிக்கொண்டதிற்கிணங்க ஆதிசிவன் பரமனும் இப்பூவுலகில் முதிய அந்தணர் வேடங்கொண்டு மணக்கோலத்திலிருந்த சுந்தரரிடம் நீ எனக்கு அடிமை என்று வழக்கு தொடுத்து சுந்தரரை ஆட்கொள்ள எண்ணிய பரமன் திருமணத்தை நிறத்தியோடு தன்னுடன் வழக்கு தொடுத்து அடிமைப்படுத்திய பரமனை தன்னுடைய செந்தமிழ் தோத்திர பாடல் களினால் பாடி அன்பு செலுத்தியதால் அந்த பரமனே சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார், நட்பின் மிகுதியால் தான் வேண்டுவன குறித்து வேண்டியும், துன்பம் வருங்கால் இடர் கலையார் என்றும் நீர் வாழ்ந்து போதிரே! என்று தயங்காமல் - கூறும் வன்தொண்டராக காண்கிறார், இறைவழிபாடானது வெறும் பூசித்தல், வாசித்தல், போற்றி பாடுதல், செபித்தல், ஆசையற்ற நல் தவம் மேற்கொளல் வாய்மை, அழுக்கின்மை ஆகியவற்றோடு வழிபட்டால் மற்றும் போதாது இறைவனை திருமூலர் கூற்றின்படி இறைவின் திருவருளை பெற பல வழிகள் உள்ளன, அவற்றுள் 1, சர்புத்திர மார்க்கம், - இறைவனை தந்தையாகவும் ஆன்மாவை புத்திரனாகவும் பாவித்து வழிபடுதல் - இது சம்பந்தர் வழி 2, தாச மார்க்கம் - இறைவனை ஏஜமானனகவும், உயிர்கள் பணியாளர்களாகவும் இருந்து வழிபடுதல் - இது நாவுக்கரசர் வழி 3. சக மார்க்கம் - இறைவனை தோழனாகக் கொண்டு வழிபடுதல் - இது சுந்தரர் வழி 4, - சன்மார்க்கம் - இறைவனை ஞானி - குருவாக கொண்டு ஆத்மா வை சீடனாக கொண்டு வழிபடுதல் - இது மாணிக்கவாசகர் வழி மேற்கண்ட வழிமுறைகளில் சுந்தரர் இறைவனை சமமார்க்கமான வழிமுறையில் உற்ற உயிர் தோழனாகவே கொண்டு அன்பின் வழியாக பக்தி கொண்டு, தனக்கு வேண்டுவனே கூறித்து வேண்டும் போதெல்லாம் வேண்டியும், வேண்டியனவற்றை பெற்றும், வழிபட்ட முறைகள் உற்ற நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது, தன்னை தடுத்தாட்கொள்வதற்காகவே வந்த அந்தணர் உருவிலான பரமனை நோக்கி தேவரீர்! பிராமண வடிவங் கொண்டு தமயேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமை அறியாத சிறியேனுக்கு பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையில் மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் உமது அநந்த குணங்களை எதையறியேன்? என்ன சொல்லி பாடுவேன்? என கேட்க அதன் பொருட்டு சிவனாரும் நீர் என்னை பித்தனென்று சொன்னயே எனவே பித்தனென்றே பாடுக! என்று சொல்லியருளியவுடன் சுந்தரரும் பித்தா பிறைசூடி பெருமானே என்று பாடியருளினார், பின் பல புண்ணிய யாத்திரியை மேற்கொண்டு விட்டு பரமனின் வேண்டுகோளின்படி திருவாரூர் வந்தடைந்தார், அவ்வண்ணம் திருவாரூரிலே குடிகொண்ட வன்மீகநாதர் தன் பக்தர்களிடம் நம்பியாரூரான் என் அழைப்பிற்கிணங்க இங்கு வருகின்றார் நீங்கள் அவனை எதிர் கொள்வீர் என பணிக்கிறார், இங்கு இறைவன் தனது பக்தன் தன்னை காண வந்தாலும் , இறைவர் சுந்தரரை தோழனாகவே கொண்டு தான் வரவேற்கும் முகமாக செயல் படுவதோடு வன்மீகநாதருடைய திருவருளினாலே நாம் உனக்கு தோழரானோம் என்று சுந்தரருககு கேட்கும்படியான அசிரீரி வாக்காகவே தெளிவாக்குகிறார், இதன் தன்மையாலேயே அன்றுமுதல் அடியார்கள் எல்லோரும் சுந்தரரை - தம்பிரான் தோழர் - என்று சொல்லிக் கொள்ளலானர் இறைவரும் பக்தரும், மனதால் கொண்ட அன்பின் மிகுதியால் வெளிப்படையாகவே தோழமை ஆகிவிட்டனர், இத்தருவாயில் கைலங்கிரியில் பார்வதி தேவியாரின் சேடியர்களில் ஒருவரான கமலினி என்ற மங்கை , பரவையாராக அவதரித்து பருவமங்கையராக, திருக்கோவிலியே தினசரி தரிசனம் பண்ணிவரும் பொழுது சுந்தரரும் பரவையாரும் எதிர் கொள்கின்றனர் இருவரும் முற்பிறவி அன்பு - காதல்- தொடர்பினால் காதல் வசப்படுகின்றனர் பரவையார் மேல் காதல் கொண்ட சுந்தரர் தனது காதலை வன்மீகநாதரிடம் பரவையாரை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டினார் அதன்படி தன் நண்பர் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று தன் தொண்டர்கள் மூலம் மணமுடித்துவைத்து நட்பினை மிகைப்படுத்துகின்றனர் தோழர்கள் சுந்தரரின் காதலுக்கு தோள் கொடுத்த பரமன் - வன்மீகநாதர் பொருளாதார உதவிக்கும் உடன்படுகிறார், பரவையார் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுந்தரரிடம் பணம் கேட்க, சுந்தரர் யாது செய்வதென அறியாது, சிவலாயங்கள் தோறும் பதிகம் பாடி வரும் காலத்தில் ஒரு திருக்கோவிலிலி துயில் கொள்ளும் போது தனக்கு தலையணையாக வைத்திருநத செங்கள் பொற்கற்களாக மாறியது இறைவன் அருளால் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறார், பரமன்பால் கொண்ட தோழமையால் தான் நொந்து உருகி வேண்டியதன் பலனாக நண்பரான பரமன் தனக்க பொற்கற்களை கொடுத்து பொருளுதவினார், அதுமட்டுமன்றி பின் திருமுதுகுன்றம் சென்று பதிகம் பாடி பன்னீராயிரம் பொன் பெற்று இதனை இறைவர் கூற்றுப்படி மணிமுத்த நதியிலிட்டு திருவாரூர் குளத்தில் போய் எடுத்துக் கொள் என்றபடி திருவாரூர் சென்று குளத்தில் தேடினார் நதியில் போட்டுவிட்டு குளத்தில் தேடினால் கிடைக்குமா? என்று ஏளன கோபம் கொண்டார் இருப்பினும் சுந்தரர் மனம் தளராது நண்பர் - இறைவரை வேண்டி மனமுறுகி பதிகம் பாடியதன் மூலம் பன்னீராயிரம் பொன்னும் கிடைக்கப் பெற்றார், பின் திருவொற்றியூர் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்காலத்தில் கைலங்கிரியில் அனிந்திதை என்ற மங்கை இங்கு சங்கிலியாராக தோன்றி, சுவாமிக்கு மலர் பணிவிடை செய்யும் வேளையில் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார் சங்கிலியாரும் சுந்தரரின் ேம்ல் காதல் கொண்டார், இருவரும் சில சபதங்களுடன் மணமுடிக்கப்பெற்றனர் மணமுடித்து சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்து வரும் காலத்தில் திருவாரூர் வன்மீகநாதர் சுவாமிகளை இவ்வளவு காலம் மறந்திருந்ததை நினைத்து மனமுருகி திருவாரூர் செல்ல முனைகையில் தனது சபத்தை மீறியமையால் சுந்தரர் கண்களை இழந்தார், இத்துடன் கொடிய நோய்களுடனும் அல்லல்கள் பல பட்டார், அப்போது தன் தோழர் வன்மீக நாதரை வேணடி என்னை மன்னித்து எனக்கு கண் தருவாயோ ! நீரோ முக்கண் கொண்டுள்ளீர் எனக்கு ஒரு கண்ணாவது தர உமக்கு மனம் வரவில்லையோ என தோழமையுணர்வுடன் கண்டிப்பது போன்று வேண்டினார் தோழன் அருளால் பார்வை கிடைத்தது,பின் பரவையாரை காண துடிக்கிறார் பரவையாரோ சுந்தரர் சங்கிலியாருடன் வாழந்ததையால் சுந்தரரை கணவராக ஏற்க மறுக்கிறார், எனவே சுந்தரர் தனது தோழனான பரமனை பரவையாரிடம் சென்று தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக பரவையாரிடம் தூதுவனாக செல்ல வேண்டுகிறார் தூது சென்றுவந்த பரமனும் பரவையார் தங்களை ஏற்க மறுக்கிறார் என்று கூறியவுடன் பரமனிடம் நானே சங்கிலியாரை ஊரறிய முறைப்படி மணம் முடித்துக்கொண்டவன் நீர் உமாதேவியாருடன் கங்கையை சடையில் மறைத்து வைத்திருக்கிறீர் இப்படி இருக்க நான் என்ன தவறிழைத்தேன் ஏன் என்னை பரவையாருடன் சேர்தது வைக்க முடியவில்லை என நண்பரோடு வாதம் செய்து அழுது புலம்பி தோழமையின் மிகுதியால் இருவரையும் பரமனே சேர்த்து வைக்கிறார், இவ்வாறு சகமார்க்கமாக இறைவனிடம் சுந்தரர் அன்புகொண்டு சுகவாழ்வு பெற்று முக்தியடைகிறார், இத்துடன் நட்பு பரமனிடம் இருந்தோடு இன்றி சேரமான் நாயனரையும் பரமன் மூலம் நட்பாகி இருவரும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று பின் தான் முக்தியடையும் காலத்தில் கைலியங்கிரியில் தன் நண்பரையும் சேர்த்து கைலாசம் சேர உதவினார், இதுவும் சுந்தரரின் தோழமை பாங்கிற்கு முத்தாய்ப்பாக அமைகிறது, திருசிற்றம்பலம்