சனி, 28 நவம்பர், 2015


காஞ்சி கருணைக்கடல் இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள் மதச்சின்னங்கள் மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது. இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம் விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி, கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும் அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு, பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன. தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம் நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது. 1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம் 2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும் 3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும். இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர், ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா். இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார். அவை ; 1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு 2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம் 3.அனுசூயை / பொறாமையற்ற குணம் 4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம் 5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு 6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம் 7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம் 8.அப்பிரஹா / ஆசையற்ற குணம் இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

புதன், 25 நவம்பர், 2015


திருமுறை 11 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திரத் திருவெண்பா (இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது. ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர். உடலின் வலிமை இழந்த பின் முப்பு வந்தபின் மனைவி,மக்கள் சுற்றத்தார் யாவரும் நம்மைவிட்டு விலகும் மனம் மாறிவிடுகின்றனர், மூப்பும் நம்மை தழுவிற்று, வரும் என்று அஞ்சப்பட்டவையாவும் வந்துவிட்டது. இனி சேரும் இடம் தில்லை சிற்றம்பலமே என்று உணர் குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. பொருள் ; தட்டுதடுமாறி நடந்து போகும் போது கையால் கோல் ஊன்றி ,உடல் வலியால் நொந்து இருமி இருமி ஏங்கி கோவழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்`இப்படி வாயால் வந்து நொந்தி திணரும் முன் என் ெநஞ்சமே ஐயாறு (சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லு தலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லி இறைவரை வாயால் அழை என்கிறார் தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை. தொகுப்பு; வை. பூமாலை

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும். கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர். தொல்காப்பியர் கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும் ‘நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகி புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை‘ எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது. ‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள். இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர். ‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’ (சாறு- திருவிழா; கழி- கூட்டம்) karthikaideepam1இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர் ‘கார்த்திகைத் தீபவெண்பா‘ எனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார். ‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர். இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள், ‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில் வெண்பாப் பயிராய் விளையுமலை,’ எனக்கூறினார். திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார். கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா, கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு) உற்றதுணையாய் உறுதீபம்- சொற்றகதிக்(கு) ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும் பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43) அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல் என்கின்றது. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம். எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்! சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும். முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது. கங்கையணிதீபம் கற்பூர தீபமலை மங்கையொருபங்கில் வளர்தீபம் – பங்கயன்மால் விண்பாரு நேடும்வண மேவியவண் ணாமலையிற் பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1) கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம். சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல் இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது. பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும் கூடலிலே வந்து வளையல் விற்ற மாதீபம்- கொது மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப் பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4) http://www.tamilhindu.com/wp-content/uploads/2015/11/karthikaideepam1.jpg கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்; அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார். நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந் தோடுகவர்ந்த தாண்ட வொருதீப – மாடுமயிற் கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப் பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7) இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம். உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங் கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்-வெள்ளமதி மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற் பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13) திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல் இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது. ‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்; நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்; வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்; புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார். போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்-சாற்றுமறை யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம் பன்னரிய கார்த்திகைத்தீ பம். (15) இடையே ஒரு திருவிளையாடல் கதை: பாணபத்திரர் மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்; அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம். பாணனுக்கோர் சத்துருவாம் பாடகனைக் கூடலிலே நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்-பேணி அயனுமரி யும்காணா அண்ணா மலையிற் பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23) ‘நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம் ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார். அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்-எஞ்ஞான்றுஞ் சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும் பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27) ‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’ சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங் கன்மவினை போக்குங் கனதீப-மன்பதனை அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம் பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31) இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி. எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்; தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம். கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர் தந்தனையுஞ் சேயாத் தருதீப-மெந்தமைக்க ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப் பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39) இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம். விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம். பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான் பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்-விண்ணுடனே சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப் பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43) அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம். தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை கூருகிரினா லுரித்துக் கொள்தீப-மேருமுக லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமரு ணாசலத்திற் பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52) இடையிடையே திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார். நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்; வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார். சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம். நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற் சென்றுரச வாதமது செய்தீபங்-கன்றுகளுக் கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப் பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53) ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம். செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ? பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ் சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்- செந்நெற் கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63) கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம். கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும் கார்த்திகைத்தீபம். கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ் சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்-கொல்லா விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற் பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85) அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்; பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள் ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம் பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார் தாம்பணியுந் தீபந் தனித்தீப- மாம்பல் விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற் பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91) தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம். மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம். பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ ராதார மாகி யருடீபம்-போதாருங் கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென் பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94) நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்; நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம். புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல் சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக் குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப் பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100) இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது. தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம். விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்) தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே! தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை

Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர்....

Aanmigam: அகத்தியரை “நாடியில்” …

Aanmigam: அகத்தியரை “நாடியில்” …: அகத்தியரை “நாடியில்” … வணக்கம் அகத்தியர் அடியவர்களே! எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை “நாடியில்” நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் ...

குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,


குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம், ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில் கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு. எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார் அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :- இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம். இத்திருத்தலத்தில் உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார். வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத் தோஷங்கள் யாவும் நீங்கும். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம் இது மட்டுமே. இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வழிபாட்டின் பயன்கள் :- திருமணத்தடை நீங்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும். பல ஜோதிடர்கள் பரிகார ஸ்தலமாக இவ்வாலய தரிசனத்தைப் பரிந்துரைப்பதால் பல அன்பர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து கிரக தோஷங்கள் நீங்கிப் பலன் பெற்று வருகின்றனர். இவ்வாலயத்தில் ராஜகோபுரம் எழுப்பும் திருப்பணி பல நல்ல உள்ளங்களின் உதவியினாலும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி அருளாலும் இனிதே நிறைவடைந்துள்ளது.ஏனைய திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்து கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், திருப்பராய்த்துறை துணைத்தலைவரும் திருநெல்வேலி சாரதா கல்லூரியின் தாளாளருமான ஸ்ரீ மத் சுவாமி சங்கரானந்தா அவர்களை புரவலராகக் கொண்டு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd) அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரம்,சுற்றுச்சுவர் மற்றும் ஆலய நிர்மாணம் தொடர்பான எந்த சிறிய பெரிய திருப்பணி புரிபவர்களும் முன்னே அவற்றைச் செய்தவர்கள் பெற்ற புண்ணியத்தைப் போல் நான்கு மடங்கு அதிகமாக புண்ணியம் பெறுவார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன. இத்தனை சிறப்புகள் கொண்ட இவ்வாலயத் திருப்பணிக்கு தாங்கள் மனநிறைவோடு தாராளமாக நிதி வழங்கி அல்லது ஒரு பகுதி திருப்பணியை ஏற்று செய்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிபெருமானின் அருளால் எல்லா வளங்களையும் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்காணும் வங்கி கணக்கில் தங்களின் நன்கொடையை நேரடியாகவும் செலுத்தலாம். கனரா வங்கி,திருநெல்வேலி ஜங்ஷன் A/C NO:1119101044777 ஆலயத்திற்கு வரும் வழி :- ரயிலில் வருபவர்கள் :- திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது. பஸ்ஸில் வருபவர்கள் :- திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .

தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது


தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது திருக்கன்றாப்பூர் பதிகம் 61, பாடல் 2 சிவனாடியார் வேடம் தரித்தவர்கள் யாவரும் சிவனாகவே பாவித்து அவர்களை உபசரித்து வழிபாடும் அடியார்கள் நினைவை விட்டு நீங்கான் இறைவன் என்கிறார், அடியார்களையும், தம்மையும் வெவ்வேறாக காணக்கூடாது. இருவரும் ஒருவரே என்பதைக் கொளல் வேண்டும் என்கிறார். விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே . பொழிப்புரை: பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே .யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். `திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும். இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித் துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். விருத்தனே வேலைவிட முண்ட கண்டா விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந் தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங் கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை.பூமாலை