வெள்ளி, 20 நவம்பர், 2015

தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது


தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது திருக்கன்றாப்பூர் பதிகம் 61, பாடல் 2 சிவனாடியார் வேடம் தரித்தவர்கள் யாவரும் சிவனாகவே பாவித்து அவர்களை உபசரித்து வழிபாடும் அடியார்கள் நினைவை விட்டு நீங்கான் இறைவன் என்கிறார், அடியார்களையும், தம்மையும் வெவ்வேறாக காணக்கூடாது. இருவரும் ஒருவரே என்பதைக் கொளல் வேண்டும் என்கிறார். விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே . பொழிப்புரை: பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே .யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். `திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும். இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித் துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். விருத்தனே வேலைவிட முண்ட கண்டா விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந் தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங் கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை.பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக