சனி, 7 ஜூலை, 2012


ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சதுரகிரிக்கு(வத்ராப்)ச் செல்லும் வழியில் இருக்கும் கிராமம் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இந்த கிராமத்தில் கண்மாய்க்கு அருகில் அமைந்திருக்கும் சிவாலயமே சடையாண்டி கோவில் ஆகும்.இந்த சடையாண்டி கோவில் ஒரு ஜீவசமாதி ஆகும்.மிகவும் சக்தி வாய்ந்த,மிகவும் சிவ அருளாற்றல் மிக்க ஜீவசமாதியாக அமைந்திருக்கிறது. சடையாண்டி என்பவர் ஒரு பழுத்த சிவபக்தர் ஆவார்;இவர் 1700களின் இறுதியில் சதுரகிரியில் முக்தியடைந்தார்;அந்த முக்தியடைந்த இடத்துக்கு அவரது அடியார்கள் அமாவாசை தோறும் சென்று வழிபட்டு வந்தனர்;ஒரு கட்டத்தில் சதுரகிரியின் மலை மீது சென்று வழிபட முடியாத சூழ்நிலையில்,சடையாண்டி சாமிகளிடமே அவரது பக்தர்கள் ஆலோசனை கேட்டனர்;அதன்படி,அவர் சதுரகிரியில் முக்தி அடைந்த இடத்திலிருந்து பிடி மண் எடுத்துக்கொண்டு வந்து,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் கி.பி.1812 ஆம் ஆண்டில் சடையாண்டி கோவிலைக் கட்டினர்;அதே ஆண்டில் மேலும் விரிவாக இரண்டாவதாகவும் கட்டினர். நூறாண்டுகளுக்குப் பின்னர், கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவிலை புனர்நிர்மாணம் செய்யும் சூழ்நிலையில்,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் தெருவுக்குள் அவரது பிடிமண்ணைக் கொண்டு வந்து வழிபட்டனர்.இவ்வாறு வழிபட்டவர்கள் புலவர் வீட்டு வகையறாக்கள் ஆவர்.இவர்கள் காலப்போக்கில்,பிழைப்புக்காக சுந்தரபாண்டியம்,சக்கம்பட்டி என சில ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.அவ்வாறு சென்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து வழிபட்டனர்.கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவில் மறுநிர்மாணம் ஆனது;கி.பி.2002 இல் புதுப்பிப்புப் பணி நடைபெற்றது.தற்போது சடையாண்டி சாமிகளை வழிபடும் குடும்பங்கள் சக்கம்பட்டியில் சுமார் 100 குடும்பங்களும்,சுந்தரபாண்டியம் மற்றும் எஸ்.ராமச்சந்திராபுரத்தில் சுமார் 75 குடும்பங்களும், W.புதுப்பட்டியில் சுமார் 45 குடும்பங்களும் இருக்கின்றன.சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இந்தக் குடும்பங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால்,இவர்களின் குடும்பங்களில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சடையாண்டி என்ற பெயரையே சூட்டினர்.பெண் எனில்,சடைபாக்கியம் அல்லது சடையம்மாள் என்று சூட்டினர். எந்த ஒரு முக்கிய காரியமாக இருந்தாலும்,பூ கட்டி பார்ப்பது இந்த குடும்பங்களின் வழக்கம் ஆகும்.அப்படி பூகட்டிப் பார்த்ததில்,வெள்ளைப் பூ வந்தால்,சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இருப்பதாக அர்த்தம் ஆகும். சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும் ,அன்னதானமும் இங்கு நடைபெற்றுவருகிறது.ஒவ்வொரு மாதாந்திர வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நாட்களில் விரதம் இருப்பவர்களும் உண்டு.நாமும் இதே போல விரதம் இருந்து இவரை வழிபட்டால்,சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் அருளாசி கிடைக்க இவர் வழிகாட்டுவார். இந்த சடையாண்டி சுவாமிகளை வழிபட்டவர்கள்,மதுரையில் மஹால் வடம்போக்கித் தெருவில் சடையாண்டி டெக்ஸ் என்ற பெயரிலும்,ஜக்கம்பட்டியில் சடையாண்டி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் வர்த்தக நிறுவனங்கள் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி நிறைவடைந்ததும் வரும் கார்த்திகையன்று வருடாந்திரகுருபூஜை விழா நடைபெற்றுவருகிறது. சதுரகிரிக்குச் செல்லுவோர்,க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி வத்ராப் செல்லும் பேருந்தில் செல்வர்;அப்படிச் செல்லும்போது வரும் நான்காவது நிறுத்தமே எஸ்.ராமச்சந்திராபுரம் என்னும் பட்டியக்கல் ஆகும்.இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி,ஊருக்குள் சென்றால் இந்த ஜீவசமாதியை அடையலாம். ஓம்சிவசிவஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக