பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு
தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார்.
இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல்,
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.
மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார்.
ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர்.
எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது.
ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான்.
அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார்.
அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.”
அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார்.
சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார்.
பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்
அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.
“சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான்.
“மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார்.
சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார்.
அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார்.
தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார்.
தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார்.
இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.
மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர்.
அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்
உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள்.
அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர்.
பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி.
உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள்.
அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார்.
அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள்.
மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது.
அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள்.
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன.
திரு சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் கடல்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக