சனி, 23 டிசம்பர், 2023

நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:

 நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:


எங்கும் நிறைந்த இனிய ஈசனின் பேரருளால்
பரமன் பாலைக்கொடுத்து திருஞானசம்பந்தரை ஆட்கொண்டாா்.
"போதையாா் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத், தாதையாா் முனிவுறத் தான்எனை ஆண்டவன்" என்பது திருஞானசம்பந்தா் அகச்சான்று.
சூலைகொடுத்து திருநாவுக்கரசரை ஆட்கொண்டாா்
"சூலை தீா்த்து அடியேனை ஆட்கொண்டாரே" என்பது திருநாவுக்கரசா் நற்சான்று.
ஓலை கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டாா்.
"அன்று வந்தெனை அகலிடத்தவா் முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி" என்பது சுந்தரா் சொல்மாலை.
காலைக்காட்டி மணிவாசகரை ஆட்கொண்டாா்.
"இணையாா் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்" என்பது மணிவாசகா் மணிமொழி.
இந்நால்வரும் சைவசமய ஆசாாியா்களாவா்.
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அவரவா் தன்மைக்கு ஏற்ப ஆட்கொண்டுள்ளாா்.
"ஆட்பாலவா்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா" என்பது ஞானசம்பந்தாின் நல்வாக்கு.
திருஞானசம்பந்தா் வாழ்வில் துன்பமே இல்லாத நிலையைக் காணமுடிகிறது.
திருநாவுக்கரசா் வாழ்வில் அடிமுதல் முடிவுவரை துன்பங்கலந்த நிலையையே காண்கிறோம்.
"என்னை வகுத்திலனேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே" என்பது அப்பா் அநுபவ வாக்கு.
சுந்தரா் வாழ்வில் துன்பமும் இன்பமும் கலந்தே நடையிடுகிறது.
"பாடிய அடியேன் படுதுயா்களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்பதும் "கஸ்தூாி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்" என்பதும் சுந்தரா் அநுபவ அருள்மொழி.
மணிவாசகா் வாழ்வில் முன்னா் இன்பமும் பின்னா்த் துன்பமும் கலந்து வருவதைக் காண்கிறோம்.
"இன்றோா் இடையூறு எனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்பது மணிவாசகாின் மணிமொழிச்சான்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக