திங்கள், 13 பிப்ரவரி, 2017

மிளகின் மகத்துவம்



மிளகின் மகத்துவம் : உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது .
தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.
வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்...
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.
மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு
வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்
சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் நியூஸ்10 /மருத்துவம்

தாயும் நீ

சனி, 11 பிப்ரவரி, 2017

" வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் "


" வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் "

உலகத்தில் புகழுக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு அடிமை ஆகாதவர்கள் மிகச் சிலரே. இதில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேடி அலைபவர்களே! மீதி இருப்பவர்களை இவ்விரண்டையும் காட்டித் தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு ஆதாயம் அடைபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் மாட்டிக்கொள்ளாத அந்த " மிகச் சிலர் " , இறைவனது அருட் செல்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததும் நிலையானதும் வேறு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த மனப்பான்மை உடையவர்கள். 


     இந்த உடல் அநித்தியமானது. பெயரும் புகழும் கூட வரப்போவதில்லை. ஆகவே, இப்போதே ஈசன் நாமத்தை நாவில் கொண்டு, அவன் உறையும் தலங்களுக்குச் சென்றால் உய்யலாம் என்று நமக்கு உபதேசிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவர் பல தலங்கள் மீது பாடியருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற தலத்தின் மீது அவர் பாடிய வெண்பாவை நாம் இப்போது சிந்திக்கத் திருவருள் கூட்டியுள்ளது. கூட்டை விட்டு உயிர் பிரிந்த பிறகு நிகழ்வதை அப்படியே காட்டுகிறார் நாயனார். உயிர் இன்னும் உடலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்களாம் காலமானவரின் உறவினர்கள். அவ்வுடலைத் தொட்டுப்  பார்த்து உடல் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உடல் குளிர்ந்து போனதை அறிந்தவுடன் அதனைத்  தடவியும் தேய்த்தும் சூடேற்ற முயலுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாததை அறிந்ததோடு , மார்பில் துடிப்பு நின்று போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை பெயரோடு திகழ்ந்த அவ்வுடலுக்குப் பிணம் என்று பெயரிடுகிறார்கள்.  பின்னர் அவ்வுடலைக் கட்டி எடுங்கள், இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அந்த நிலை நம் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் வரப்போவது தான். பிறருக்கு அந்நிலை வருவதைப் பார்த்தும் நமக்கும் ஒருநாள் இப்படி வரும் என்று எண்ணாமல் பெயருக்காக அலைகிறோமே என்ற எண்ணமும் வருவதில்லை. ஆனால் மெய் வடிவேயான ஞானிகள் அப்படி அல்ல. " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் " என்றார் மாணிக்க வாசகர். உலகியலைக் காட்டி நமக்கு உணர்த்தும் ஐயடிகள் காடவர்கோன் , நில்லா உடலைச் சுட்டிக்காட்டி , இப்போதே நெடுங்களத்தான் பாதத்தை நினைப்பாயாக என்று அறிவுறுத்துகிறார். 

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப்பிணம் என்று பேரிட்டுக் - கட்டி 

எடுங்கள் அத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே 

நெடுங்களத்தான் பாதம் நினை 

என்பது அவ்வுயரிய பாடல். நாமும் நெடுங்களத்தான் பாதம் நினைப்போம்.

 இதனையே பட்டிணத்து அடிகளும்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக 
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு 
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே! 
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! "

எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் 
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க 
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?

" ஐயுற் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவல்யான்
செய்யும் திருவொற்றியூர் உடையீர் திருநீறும் இட்டுக்
கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத்து ஓதுவும் கற்பியுமே. ..... பண்டிணத்தடிகள் தனிப்பாடல்


 அப்போது நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் பணத்தாசையும் புகழாசையும் அறவே நீங்கி விடுவதை உணர்வோம். 

குறிப்பு; மரணம் நேரிடும்பொழுது அறிவு வேலை செய்யாது, ஆதலால் நலல நினைவு உள்ள பொழுதே இறைவரிடம் அன்றாடம் இப்பாடலை சொல்லி வேண்டுதல் வேண்டும், மரண காலத்தில் அருள் செய்வார், எந்த நினைவுடன்உயிர் பிரிகின்றதோ அதே நிலையில் மறுபிறப்பும் அமையும். இதனைத்தான் கிராமப்புறங்களில் மரணப்படுக்கையில் உள்ளபோது காலம் தாழ்ந்து உயிர் பிரியும் நிலை ஏற்படும் தருணத்தில் " சாகப்போகும் போது சங்கரா, சங்கரா " என்றால் பல்ன கிடைக்காது எ்ன்பனர் பெரியோர்க்ள.
" புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அமந்த போதாக அஞ்சே்ல் என்று அருள் செய்வான் ... " திரு ஞான சம்பந்தர் / திருவையாறு பதிகம்
திருசிற்றம்பலம் / ஓம்நமசிவாய ஓம்

எது கெளரவம்?

எது கெளரவம்?
நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து அவர்கள் மீது வெறுப்பு ஏளனம் காட்டாமலும், எவராக இருந்தாலும், சமமாக பாவித்து அன்பு செலுத்துவது ஒரு வகை பண்பு நன்று, இத்தகையஇனிய பண்பு நலன்கள் நம் மனத்தின் அடி ஆழத்தில் நீர் ஊற்றுப்போல் இருக்கிறது, நம் மனதில் நாம் சேர்த்துக் கொண்ட போட்டி, பொறாமை, வறட்டுக் கெளரவம், போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன. பெரிய மகான்கள், ஞானிகள், குருமார்கள் தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள், அவர்கள் கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், ஏற்றத் தாழ்வு காணாமல் சாதி இனம் பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்பு காட்டுவார்கள். நமக்கு தான் எத்தனை ஆணவம், அகம்பாவம், வறட்டுக்கெளரவம் உள்ளது. சக மனிதர்களையே பேதம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் நம்மை விட மேலான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள்புரிய வேண்டும்என ஆசைப்படுகிறோம். இது நியாயம் தானா? 

இது பற்றிய சிறிய வரலாற்கு கதையை காண்போம்
பாரதப் போர் முடிவடைந்த தருணம், கிருஷ்ணன் களைபடிந்து தன் கண்களில் ஒளியிழந்து உடல் சோர்உற்று காணப்பட்டார், இதற்கு காரணம் , பாரதப் போருக்காக , துரியோதனனும் அர்ச்சுனனும் கிருஷ்ணனிடம் நாடியபோது, கிருஷ்ணனிடமிருந்து துரியோதனன் தனக்கு கிருஷ்ணனின் அனைத்து சேனைகளையும், அர்ச்சுனன் தன்னையும் பெற்றார்கள், இறுதியில் வெற்றியும் கண்டனர் பாண்டவர் வம்சவழியினர், தனது படைகள் போரில் மடிந்தன, இந்த பாவம் அவரைத் தாக்கியது, இதன் பொருட்டு கிருஷ்ணன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டனர். அப்போது விருந்துண்பவர்களிடம் கிருஷ்ணன் ஒரு வரம் கேட்டார், அதற்கு யாவரும் சம்மதம் தெரிவித்தனர். திடீரென்று விருந்து முடிந்தவுடன் கிருஷ்ணன் விருந்துண்டவர்களின் இலையை எடுத்துக் கொண்டிருந்தார் அதை எல்லோரும் தடுத்தனர். அதற்கு கிருஷ்ணன் எனக்கு தாங்கள் எல்லோரும் வரம் கொடுத்துள்ளீர்கள் அதனை மறக்கக் கூடாது. அதுதான் இது, என்றார். எனவே தான் நானே இலையை எடுக்கிறேன் என்றார். இச்செயல்கள் முடிந்தவுடன் கிருஷ்ணன் உற்சாகம் கொண்டவராக காணப்பட்டார். அவர் முகத்தில் அழகு கலை பிறந்தது. தன் பாவம் நீங்கியது நான் ஒவ்வொரு இலையை எடுக்கும் போது பாவம் நீங்கி புண்ணியம் கிடைத்தது. உண்ண உணவு கொடுப்பதைவிட உண்ட இலையை எடுப்பதில் பாவம் விலகி புண்ணியம் பெருகிறது என்பதை எல்லோருக்கும் விளக்கினார். இதனை உணர்த்தவே இச்சம்பவம் உருவாக்கப்பட்டது. நாம் வறட்டு கெளரவம் சாதி இனம் ஏழை செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்காதிருக்கவே இந்த நிகழ்வை நடத்தி உணர்த்தினார் பகவான்.


திருச்சிற்றம்பலம்

போகரின் சீடர் புலி்ப்பாணி சித்தர்

போகரின் சீடர் புலி்ப்பாணி சித்தர்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருக்கும் புலிப்பாணி சித்தர் ஆசிரமம், 
யார் இந்த புலிப்பாணி சித்தர்?

புலிப்பாணி சித்தரின் குருவாகத் திகழ்ந்தவர் போகர். போகர்தான் பழநி மலையில் முருகக்கடவுளின் நவபாஷாண சிலையை புலிப்பாணிச் சித்தரின் உதவியுடன் வடிவமைத்தவர். அங்கே இவருக்கு தனிச் சந்நிதியே உண்டு. பழநி மலையை அருவுருவமாக இருந்து காத்து வருபவர். நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர். போகர், திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர்.
போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். 
போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி சித்தருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது.

ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
போகர், நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர். போகர், திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர். போகரின் பிரதான சீடர்தான் புலிப்பாணி சித்தர்.
‘கொங்கு மண்டல சதகம்’ என்ற நூலின் 36 -ம் பாட்டில் இருந்து கிடைக்கும் தகவலைக் கொண்டு, இவர் தமது குருநாதரான போகருடன் பழநிமலை அடிவாரத்தில் உள்ள வைகாவூரில் வாழ்ந்திருக்கக்கூடும் எனபதை நாம் அறிய முடிகிறது.
‘பாணி’ என்ற சொல் ‘பாதம்’ என்ற பொருளைக் குறிக்கும். புலியின் பாதத்தைப் போன்ற பாத அமைப்பு இவருக்கு இருந்ததால் ‘புலிப்பாணி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம். ‘வியாக்கிரபாதர்’ என்ற இவரது வடமொழி பெயரே தமிழில் புலிப்பாணி என்று மாறியதாகச் சொல்லப்படுகிறது.
ஐதீகக் கதை - புலி வாகனன்
இவரது இயற்பெயர் புலிப்பாணி அல்ல என்றும், இது ஒரு காரணப்பெயர் என்றும் செவி வழித் தகவல்கள் கூறுகின்றன.
இவர் புலி ஒன்றை தமது சக்தியால் வசியப்படுத்தி, அதன் மேல் ஏறிக்கொண்டு காட்டுக்குள் சுற்றி, மூலிகைகளைத் தேடிப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், தனது குருநாதர் போகருடன் புலிப்பாணி காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அது மிகுந்த கோடைக் காலம் என்பதால், நீர்நிலைகள் பலவும் காய்ந்து காணப்பட்டன. அந்த நேரத்தில் போகருக்கு தாகம் ஏற்பட்டு குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.
பக்கத்திலோ நீர்நிலைகள் எதுவுமில்லை. குருநாதரின் தாகத்தை தாமதிக்காது தணிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில், தான் வசியப்படுத்திய புலியின் மீது ஏறிச்சென்று தண்ணீர் தேடினார் புலிப்பாணி.
புலிப்பாணி
ஒரு சிறு ஓடையில் ஓடும் தண்ணீரைக் கண்டு முகமலர்ந்த அவர், தனது கைகளிலேயே தண்ணீரை அள்ளிக்கொண்டுவந்து குருநாதரின் தாகம் தணித்தார்.
‘புலி’ என்பது தமிழ்ச் சொல். ‘பாணி’ என்பது இந்துஸ்தானியச் சொல். இந்தச் சொல்லுக்கு ‘தண்ணீர்’ என்று பொருள். புலிமேல் சென்று தனது குருநாதருக்கு தண்ணீர் எடுத்து வந்ததால் ‘புலிப்பாணி’ என்று அழைக்கபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு போகருடன் மேலும் நெருக்கமான, நம்பிக்கைக்கு உரிய சீடராக புலிப்பாணி விளங்கினார்.
பழநிமலை முருகனின் கட்டளைக்கு இணங்க, தண்டயுதபாணி சிலையை செய்வதற்கு உதவி புரிந்தவர் புலிப்பாணி என்றும், அந்தச் சிலை செய்வதற்குத் தேவையான நவபாஷாண மூலிகைகளை, தமது புலி வாகனத்தில் ஏறிச்சென்று காடுகளில் தேடித் திரிந்து சேகரித்து வந்தவர் என்றும் கூறுகிறார்கள்.
வைத்திய சாஸ்திரத்தில் 500 பாடல்களும், பல திரட்டுகளில் இடம்பெற்றதாக 100 பாடல்களும், ஜாலத் திரட்டில் 200 பாடல்களும் இவர் பெயரில் உள்ளன. இவருடைய சிறப்புத் திறமைகளாக, 'கண்கட்டு வித்தை', 'பச்சைப் பாம்பு வித்தை', 'மாம்பழ ஜாலம்', 'தேங்காய் ஜாலம்' ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இருந்ததாக ‘புலவர் சரித்திர தீபகம்’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமூலர் காலத்தைச் சேர்ந்தவராகப் புலிப்பாணி இருப்பார் என்பதற்கு, வேறு சித்தர் பாடல்களிலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இதனால், இவரது காலம் கி.பி. 5-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரையறுக்க முடிகிறது.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, இன்றளவும் பல்வேறு அற்புதங்களை தமது தவ வலிமையால் ஆற்றி வருபவர் புலிப்பாணிச்சித்தர். சுதாகரன் தனக்கு பிர்சனைகள் ஏற்படும்போது, மனம் கவலையடையும் போதெல்லாம் இங்கு வந்து ஆசி பெறுவது வழக்கம்.இத்தனை சிறப்பு வாய்ந்த புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில்தான், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளை செய்து வருகிறராம்,
பழனி செல்லும் போது நீங்களும் கட்டாயம் சென்று புலிப்பாணி சித்தரின் அருள் ெபறுங்கள்
திருச்சிற்றம்பலம்
நன்றி ; ஆனந்தவிகடன் ஆன்மீக மலர்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

குருவின் மகிமைகள்


குருவின் மகிமைகள்


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாடு அனைத்து மதங்களிலும் உண்டு. குரு உபதேசம் பெற்றால்தான் தெய்வத்தை தெரிய முடியும்,குரு சுட்டிக்காட்டினால்தான் ஜோதியை உணர முடியும்.
' குரு இல்லாத கல்வி கரு இல்லாத விதை ' என்பதும் " சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது " என்பன நம் முதுமொழிகள் காட்டும் குருவின் பெருமை.
" தொட்டவுன் ஜோதி தட்டவும் சிவராஜ யோகம் கிட்டவும் " என்று குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்.
குரு நினைத்தால் ஒரு சிஷ்யனுடைய ஞானக் கண்ணை உடனே திறக்கலாம். சில குருமார்கள் சிஷ்யனுடைய புருவ மத்தியை அவர்களது வலது கட்டை விரலால் அழுத்துவார்கள், அந்த நொடியிலேயே சிஷ்யனுடைய தலையில் ஒரு பெட்மாக்ஸ் ஒளி மாதிரி ஒரு ஒளிபிளம்பு தலையில ஏற்பட்டு பின் குரு சிஷ்யனின் தலையில் கையை வைத்து மறைத்து விடுவார், பின் சிஷ்யனும் தனது யதார்த்த நிலைக்கு திரும்பி விடுவார். இந்த ஒளி நிலையினை பெற நிரந்தரமாக பெற நீ தவம் செய்ய வேண்டும் என அறிவுரை கூறி தீட்சை கொடுப்பார்.
மந்திரம் - யந்திரம் மூலிகைகள் , தந்திரம் ஆகியவை மூலம் தீட்சை கொடுப்பது சக்தி மார்க்கமாகும்,இதற்கு அஸ்ட கர்மம்எனப்படும்.
மோகனம், வசிகம், தம்பனம், ஆகர்ஷனம் , உச்சாடனம், பதனம் வித்வேடனம், மாரணம் என்னும் எட்டு வித்தைகளும் இதில் அடங்கும். 
ராஜயோகம், சிவராஜயோகம், ஹடயோகம், மற்றும் குண்டலியோகம் என்பன சிவ மார்க்க தீட்சைகளாகும், இவை அஷ்டாங்க யோகம் என்னும் அட்டவனையில் அடங்கும். இவற்றில் மூச்சுப் பயிற்ச்சியும் ஆசனங்களும் முக்கியம்.
ஒரு மனிதன் ஆன்மீக நிலை அடைய வேண்டுமானால் ஒரு குருவிடம் சக்தி மார்க்கத்திலோ, அல்லது சிவ மார்க்கத்திலோ தீட்சை பெற வேண்டும்.
எந்த குருவிடம் போனாலும் நம் கர்மாவை அவர்கள் மாற்ற மாட்டார்கள், அப்படி மாற்றினால் நம் கரமாவானது அவர்களது தவபயனை குறைத்து விடும், அதனால்தான் அவர்கள் நமக்கு வழியைத்தான் காட்டுவார்கள், ஆசிர்வாதம் செய்வார்கள், அவ்வளவுதான், அவர்கள் காட்டிய இலக்கை நோக்கி நாம்தான் பிரயாணப்பட வேண்டும். இதுதான் உண்மை, தீட்சை பெற்றுவிட்டால் கர்ம விவை தீர்ந்துவிடும் என்ற எண்ணம் கூடாது.
தர்மம் செய்தால்தான் கர்மம் நீங்கும், வெறும் புத்தக்படிப்பும், மந்தப்படிப்பும் பலன் தராது. இதனை வழிகாட்டும் குருவிற்கு காரணக்குரு என்பதாகும், இந்த காரண குருதான் உங்கள் தவத்தை பொறுத்து அமைவது, உங்களின் தவ வலிமையில்தான் ஒரு கட்டத்தில் பூமியிலிள்ள ஆகர்ஷன சக்தியிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்,
குருமார்கள் பலவிதம், அவர்கள் அனுபவம் மூலம் பலருக்கு வழிபாட்டுவார்கள், பலவித தீட்சைகள் மூலம் சிஷ்யனை பக்குவப்படுத்திக் காட்டுவார்கள்.
1, ஒரு மந்திரத்தை சிஷ்யனுடைய வலது காதில் உபதேசித்தல் மந்திர தீட்சை எனப்படும். சிஷ்யன்அம்மந்திரத்தை நம்பிக்கையுடன் உபதேசித்தால் அவன் சித்தி அடைவான்,
2, சிஷ்யனை ஒரு சுலோகத்தை மனம் உருகி சொல்லச் செய்து வாசக தீட்சை
3, உடலைத் தொட்டு அவனுள் முடங்கிக் கிடக்கும் சக்தியை தட்டி எழுப்பி விடுவது ஸ்பரிச தீட்சை
4, தான் உண்ட - பருகிய உணவை கொடுப்பது அமிர்த தீட்சை
5, ஆசனப்பயிற்சி மூலம் மூலதார சக்தியை கிளப்பி விடுவது யோக தீட்சை
6. தன்னுடைய காந்தப் பார்வையால் சிஷ்யனின் காந்த சக்தியை வெளிக் கொணர்வது நயன தீட்சை
7. மெளன நிலையில் சின் முத்திரை காட்டி உபதேசிப்பது மெளன தீட்சை, ( தட்சிணா மூர்த்தி தன் சிஷ்யர்களுக்கு உபதேசித்தது)

மேலும் இது போன்று இன்னும் 64 தீட்சைகள் உண்டு எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

இப்போது நடப்பது கலியுகம் இந்த கலியுகத்தில் சில நல்லனவாகவும் சில தீயனவாகவும் நடைபெற்று வருகின்றன.ஆன்மீகம் என்னும் புனிதத்ததில் காசு பணத்திற்காக பல போலியான குருமார்கள் தோன்றியுள்ளது இக்கால கட்டயாயத்தின் விதியாகும், இதனால் இந்து மதத்தின் புனிதமும், இந்திய நாட்டின் பெருமையும் பெயரும் கெட வாய்ப்புள்ளது, இக்கால கொடுமையான நேரத்திலும், உண்மையான குருமார்களை தேடி இனம் கண்டு அவரை சரணாகதி அடையும் பேறு பெறும் சிஷ்யர்கள் உண்மையில் மிக்பெரிய பாக்கியவான்களாகவே இருப்பார்கள் 
சிவ- சக்தி தீட்சை பெறுவோம், ஆன்மீகத்தின் வழி நடப்போம், சித்தியோகம் அடைவோம்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம் 

புதன், 8 பிப்ரவரி, 2017

கடவுளைக் காண உதவும் கண்ணாடி

ஓம் நமசிவாய நம
கடவுளைக் காண உதவும் கண்ணாடி 

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மிடுக்கும், சொல் துடுக்கும் உடைய மாணவன் சென்றான்.

"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கலாமே'' என்றான்.

"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''

"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் இல்லை. நூலறிவு படைத்தவன். கடவுள், கடவுள் என்று நீங்கள் கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

"தம்பீ! காண முயலுகின்றேன்.''

"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''

"இல்லை.''

"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் நுகர்ந்திருக்கின்றீரா?''

"இல்லை.''

"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை; கையால் தொட்டதில்லை; காதால் கேட்டதில்லை; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு இந்த அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்திருந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம் போன்றவர்களைக் காட்சிச் சாலையில்தான் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?''

"தேன் பாட்டில்.''

"தேன் இனிக்குமா, கசக்குமா?'

"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்காக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று கேட்கின்றீரே! உணவுப் பொருள்களிலேயே தேன் முக்கியமானது. இது அருந்தேன், இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காகத்தான் இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.''

"தம்பீ! தித்திக்கும் என்றாயே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா? சற்று விளக்கமாகக் கூறு! நீதான் நன்கு படித்த அறிஞனாச்சே!.''

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

"ஐயா! தேனின் இனிமையை எப்படச் சொல்வது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவன்தான் உணர்வான்.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்த மருத்துவப் பொருளாகவும் உணவாகவுமுள்ள தேனின் இனிமையையே சொல்ல முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றாயே? ஞானப் பொருளாக, அனுபவப்பொருளாகவும் விளங்கும் இறைவனை அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

-என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. 

"பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் பேசுகிறேன்.''

"தம்பீ! சற்று நில். பசி என்றாயே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா?''

"இல்லை.''

"என்ன தம்பீ! உன்னைப் படித்த அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை, கையால் தொட்டதில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று சொல்லி உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று இல்லவே இல்லை. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அனுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அனுபவப் பொருள். அதைத் தவம் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.''

மாணவன் உடம்பு வியர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம்! கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''

"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' 

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?''

"என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''

"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

"ஆம்! தெரிகின்றன.''

"முழுவதும் தெரிகின்றதா?''

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான். 

"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''

மாணவன் விழித்தான்.

"ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே. சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?'' 

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.''

"அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.

பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.''

"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''

அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.

திருச்சிற்றம்பலம்
படித்ததில் பிடித்தது