சனி, 11 பிப்ரவரி, 2017

" வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் "


" வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் "

உலகத்தில் புகழுக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு அடிமை ஆகாதவர்கள் மிகச் சிலரே. இதில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேடி அலைபவர்களே! மீதி இருப்பவர்களை இவ்விரண்டையும் காட்டித் தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு ஆதாயம் அடைபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் மாட்டிக்கொள்ளாத அந்த " மிகச் சிலர் " , இறைவனது அருட் செல்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததும் நிலையானதும் வேறு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த மனப்பான்மை உடையவர்கள். 


     இந்த உடல் அநித்தியமானது. பெயரும் புகழும் கூட வரப்போவதில்லை. ஆகவே, இப்போதே ஈசன் நாமத்தை நாவில் கொண்டு, அவன் உறையும் தலங்களுக்குச் சென்றால் உய்யலாம் என்று நமக்கு உபதேசிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவர் பல தலங்கள் மீது பாடியருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற தலத்தின் மீது அவர் பாடிய வெண்பாவை நாம் இப்போது சிந்திக்கத் திருவருள் கூட்டியுள்ளது. கூட்டை விட்டு உயிர் பிரிந்த பிறகு நிகழ்வதை அப்படியே காட்டுகிறார் நாயனார். உயிர் இன்னும் உடலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்களாம் காலமானவரின் உறவினர்கள். அவ்வுடலைத் தொட்டுப்  பார்த்து உடல் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உடல் குளிர்ந்து போனதை அறிந்தவுடன் அதனைத்  தடவியும் தேய்த்தும் சூடேற்ற முயலுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாததை அறிந்ததோடு , மார்பில் துடிப்பு நின்று போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை பெயரோடு திகழ்ந்த அவ்வுடலுக்குப் பிணம் என்று பெயரிடுகிறார்கள்.  பின்னர் அவ்வுடலைக் கட்டி எடுங்கள், இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அந்த நிலை நம் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் வரப்போவது தான். பிறருக்கு அந்நிலை வருவதைப் பார்த்தும் நமக்கும் ஒருநாள் இப்படி வரும் என்று எண்ணாமல் பெயருக்காக அலைகிறோமே என்ற எண்ணமும் வருவதில்லை. ஆனால் மெய் வடிவேயான ஞானிகள் அப்படி அல்ல. " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் " என்றார் மாணிக்க வாசகர். உலகியலைக் காட்டி நமக்கு உணர்த்தும் ஐயடிகள் காடவர்கோன் , நில்லா உடலைச் சுட்டிக்காட்டி , இப்போதே நெடுங்களத்தான் பாதத்தை நினைப்பாயாக என்று அறிவுறுத்துகிறார். 

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப்பிணம் என்று பேரிட்டுக் - கட்டி 

எடுங்கள் அத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே 

நெடுங்களத்தான் பாதம் நினை 

என்பது அவ்வுயரிய பாடல். நாமும் நெடுங்களத்தான் பாதம் நினைப்போம்.

 இதனையே பட்டிணத்து அடிகளும்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக 
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு 
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே! 
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! "

எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் 
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க 
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?

" ஐயுற் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவல்யான்
செய்யும் திருவொற்றியூர் உடையீர் திருநீறும் இட்டுக்
கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத்து ஓதுவும் கற்பியுமே. ..... பண்டிணத்தடிகள் தனிப்பாடல்


 அப்போது நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் பணத்தாசையும் புகழாசையும் அறவே நீங்கி விடுவதை உணர்வோம். 

குறிப்பு; மரணம் நேரிடும்பொழுது அறிவு வேலை செய்யாது, ஆதலால் நலல நினைவு உள்ள பொழுதே இறைவரிடம் அன்றாடம் இப்பாடலை சொல்லி வேண்டுதல் வேண்டும், மரண காலத்தில் அருள் செய்வார், எந்த நினைவுடன்உயிர் பிரிகின்றதோ அதே நிலையில் மறுபிறப்பும் அமையும். இதனைத்தான் கிராமப்புறங்களில் மரணப்படுக்கையில் உள்ளபோது காலம் தாழ்ந்து உயிர் பிரியும் நிலை ஏற்படும் தருணத்தில் " சாகப்போகும் போது சங்கரா, சங்கரா " என்றால் பல்ன கிடைக்காது எ்ன்பனர் பெரியோர்க்ள.
" புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அமந்த போதாக அஞ்சே்ல் என்று அருள் செய்வான் ... " திரு ஞான சம்பந்தர் / திருவையாறு பதிகம்
திருசிற்றம்பலம் / ஓம்நமசிவாய ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக