செவ்வாய், 7 மார்ச், 2017

தமிழ் வேதங்களின் அருமையும் ஆற்றலும்



கருங்கல்லை மிதக்கும் தெப்பமாக்கியது / அபபர
நீற்றறையை பொய்கை போலாக்கியது  / அப்பர்
கொடிய விடத்தை அமிர்தமாக்கியது   / அப்பர்
மிதிக்க வந்த யானையை வணங்க செய்தது / அப்பர்
இறைவரை பொதித் சோறு சுமக்க வைத்தது  / அப்பர்


பொற்றாளம் பெற்றுத் தந்தது  / சம்பந்தர்
முத்துப்பந்தரும் குடையும் பெற்றது  / சம்பந்தர்
தீயிட்டவருக்கு வெப்பு நோய் வரச்செய்தது  / சம்பந்தர்
இறந்தவரை மீண்டும் உயிர் பெறச் செய்தது / சம்பந்தர், அப்பர்
நீங்காத நோய்களை நீக்கியருளியது  / சம்பந்தர், அப்பர்
அடைப்ட்ட கோவில் கதவுகளை திறக்கச் செய்தது  / சம்பந்தர் , அப்பர்
ஆன்பனைகளை பெண்பனையாக்கி காய்க்கச் செய்தது / அப்பர்

நள்ளிரவில் இறைவரை தூது போக வைத்தது / சுந்தரர்
பொன் முடிப்பை பெற்றுத் தந்தது   / சுந்தரர்
பாலை நிலத்தை விளை நிலமாக்கியது  / சுந்தரர்
முதலை உண்ட உடலை திரும்ப உய்யக்கச் செய்தது / சுந்தரர்

நீர் நெருப்பு காற்று இவற்றை கட்டுப்படுத்தியது
நரிகளை பரிகளாக்கியது  / மாணிக்க வாசகருக்காக எம்பெருமான்
பிரம்படி பட்டது, புட்டு தின்றது, மண் சுமந்தது /  மாணிக்க வாசகருக்காக

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்        

மகளிர் தின நல்வாழ்த்துகள்





பெண் என்பவள் அழகிய தேவதையா?
இல்லை சூனியக்காரக் கிழவியா?
ஒரு குட்டிக்கதை
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில்
என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சாென்னால் தான் நமக்கு திருமணம்
என்று சாெல்லியிருந்தாள்)
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர்
சொன்னதால் ஒரு சூனியக்காரக்
கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால்
அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன
கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச்
சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட
முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு
பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம்
சொல்ல,அவர்கள் திருமணம்
நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து
கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற
அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது
நான் கிழவியாக இருந்தால், உன்னுடன்
வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன்
வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில்
உன்னுடன் அழகிய தேவதையாக
இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?”
என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல்
சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று
அவள் சொன்னாள்”முடிவை
என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும்
அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து
விட்டேன்.!” என்றாள்
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை
அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்..
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
மகளிர் தின நல்வாழ்த்துகள்

திங்கள், 6 மார்ச், 2017

" பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது பக்கத்தில் நான் செல்வேன்"

" பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன்"

’’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்கிறார் திருமூலர். தேவன் ஒருவனே என்றாலும் அந்த தேவனுக்குத்தான் எத்தனை உருவங்கள்! எத்தனை பெயர்கள்! அவரவர்கள் உணர்ந்தவாறு, விரும்பியவாறு ஒவ்வொரு பெயரிட்டு வணங்கி வழிபாடு செய்து வருகிறோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ?

என்று அந்த தேவனுக்கு ஆயிரம் நாமங்களையும் சூட்டி மகிழ்ந்தனர். ’ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்றார் காந்தியடிகள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் இறைவனை எளிதில் உணர அவன் நாமங்களே நமக்கு உதவுகின்றன.அந்தந்த நாமங்களைச் சொல்லும் போதே அந்த உருவத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ராமா என்று சொல்லும் போது வில்லும் கையுமாக இருக்கும் உருவமும், முருகா என்னும் போது வேலும் மயிலும், சேவற்கொடி யோடு இலங்கும் உருவமும் கண்ணன் என்றால் குழலோடும் மயிற்பீலியோடும் திகழும் உருவமும் தோன்றுகிறது. காமாக்ஷி என்றால் அமர்ந்த கோலத்தில் கரும்பு வில்லோடு வீற்றிருக்கும் கோலமும் தெரிகிறது.

நாலு பவுன் எடையுள்ள தங்கக்கட்டி அல்லது தங்க பிஸ்கட் நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மிடம் இருப்பது தங்கம் என்றாலும் அதை நம்மால் அப்படியே அணிந்து கொள்ளமுடியாது. ஆனால் இந்த தங்கக்கட்டியைச் சங்கிலியாகவோ, வளையல்களாகவோ மாற்றினால் அதே தங்கம் மேலும் அழகும் வடிவமும் பெற்று உபயோக மாகவும் ஆகிறது. அந்த அணிகலன்களை அணிந்து அழகும் ஆனந்தமும் பெறுகிறோம். இறைவனும் கட்டிப்பொன் போன்றவன். இறைவனுக்கு இரண்டு நிலைகள் இருக்கிறது. ஒன்று நாம ரூபமற்ற நிலை. மற்றொன்று நாமமும் ரூபமும் கூடிய நிலை.

முதல் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காணவும் உணரவும் முடியாது. இறைவன் அருளைப் பெற்றவர்களாலேயே அவனைக் காண முடியும். இரண்டாம் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காண முடியும். அவனுடைய நாமங்கள் மூலம் அவனை உணர்கிறோம். மேலும் அவனுடைய நாமங்களை எல்லோரும்சொல்லலாம். வாய் பேசமுடியாதவர்கள் என்ன செய்வது யோசிக்க வேண்டாம். வாய்பேச முடியாதவர்களுக்கும்,சம்பந்தப் பெருமான் ஒருவழி சொல்கிறார்.

’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினமின் நாள் தொறும்’

நினைக்க நெஞ்சம் இருக்கிறதே! என்கிறார். ஆக இறைவனைவிட அவன் நாமங்களே எங்கும் எந்த நேரத்திலும் எளிதாகப் பயனாகிறது. இதையே

’’கட்டிப்பொன் போலே அவன்(இறைவன்)
பணிப்பொன் போலே (அவன்) திருநாமம்

என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. கட்டிப் பொன்னை எல்லோரும் அணிந்து அழகு பார்க்க முடியாது ஆனால் நகைகளாக்கப்பட்ட பொன்னையோ எல்லோரும் எளிதில் கையாண்டு அணிந்து அழகு பார்க்க முடியும். கட்டிப் பொன்னான இறைவனை விட பணிப் பொன்னான அவனுடைய திரு நாமங்களை எல்லோரும் பாடி, கூவியழைத்துப் பயன் பெறமுடியும் என்று விளக்குகிறார். இதற்கு ஆதாரமாக மஹாபாரத நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.

’திரௌபத்திக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே!’’. கோவிந்தா கோவிந்தா என்று அலறி அலறி அழைத்த அந்த நாமம் தானே அவளைக் காத்தது?

நாராயண நாமம்

hiranya

சிறுவன் ப்ரஹ்லாதன் குருகுல வாசம் செய்யப் போகிறான்.ஆசிரியர் ‘’ஓம் இரண்யாய நம; என்று ஆரம்பிக்கிறார். வெள்ளையர்கள் நம்மை ஆண்ட அக் காலத்தில் முதலில் ‘’ God save the King’’என்று சொல்லி விட்டுத்தான் தொடங்க வேண்டும். இரணியன் காலத்தில் அவன் பெயரைச் சொல்லி விட்டுத்தான் எதையும் தொடங்க வேண்டும். ஆனால் ப்ரஹ்லாதனோ, ‘’ஓம் நமோ நாராயணாய’’ என்று சொல்கிறான். இதைக் கேட்ட ஆசிரியர் நடுங்குகிறார்.’’ப்ரஹ்லாதா, இந்தப் பெயரை ஏன் சொல்கிறாய்? நம் தலைவனான உன் தந்தையின் பெயரைச் சொல்’’ என்கிறார்.ஆனால் ப்ரஹ்லாதனோ, மறுபடியும்’’ஓம் நமோ நாராயணாய’’என்கிறான்

ப்ரணவத்தின் பொருளைக் குழந்தை முருகன் தந்தைக்கு உபதேசித்தது போல் ப்ரஹ்லாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்கிறான்
அஷ்டாக்ஷர நாம மகிமையை விரிவாகச் சொல்கிறான். தன் எதிரியின் பெயரைக் கேட்டு அடங்காத சீற்றம் கொண்டு ப்ரஹ்லாத னுக்கு எத்தனையோ விதமான துன்பங்களைக் கொடுக்கிறான். ஆனால் அஷ்டாக்ஷர நாமத்தின் மகிமையால் அத்தனை துன்பங்களையும் விலக்கி கடைசியில் சிரஞ்சீவிப் பட்டமும் பெறுகிறான் ப்ரஹ்லாதன்.

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் " புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? "  அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பிற்காலத் தேவைகளுக்கு என்று எப்படி பணத்தைச் சேமித்து வைக்கிறோமோ அதேபோல கடைசி நேரத்துக்கு உதவும் என்று நாமங்களை ஜபித்து எழுதி சேமித்து வையுங்கள் என்கிறார்கள். அப்போது சொல்ல முடியாது நினைக்க முடியாது என்பதால் இப்போதே சொல்லி வைக்கிறேன் என்கிறார்கள்.

இதன் கருத்தையே பனிரெண் திருமுறையில் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
" குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி / வந்து உந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை "  என்கிறார்.

நம் வாயால் இறைவன் திருநாமம் செப்ப இயலாத முதுமையில் நோய்வாய் பட்ட நிலையில் வாய் பேசாத நிலை ஏற்படும்நிலை அடையும் முன்பே இறைவனின் திருநாமகங்களை சொல்லிச் சொல்லி பழகிக்கொள்ள வேண்டும். 

அருணகிரிநாதரும் ’’மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’’ என்று நாமங்களின் பெருமையைப் பேசுகிறார். அவன் நாமத்தை யாரும் எந்த இடத்திலும் சொல்லலாம். ’’எல்லோரும் ராம நாமத்தைச் சொல்லுங்கள்’’ என்று சம்பாதி சொல்ல வானரங்கள் ராம நாமம் சொல்லச் சொல்ல தீய்ந்துபோன தன் சிறகுகளைச் சம்பாதி பெறுகிறான் என்று ராம நாம மகிமையை ராமாயணம் சொல்கிறது. 


கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மிகவும்
நன்மையைத் தரும். பகவான் சொல்கிறார்

யோகி தன் உள்ளிலோ பரிதியிலோ
வைகுண்டம் தன்னிலோ வாசமில்லை
பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன் நாரதரே.

நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடங்களுக்கு இறைவனே வருவதால் அவன் நாமங்கள் என்னும் பணிப்பொன்னை நாவில் அணிந்து நலம் பெறுவோம். 

  இறைவனின் திருநாமங்கள் இவ்வளவு பெருமை உடையதாக இருப்பதால் அவற்றை அடிக்கடி சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமது பெரியோர்கள் குழந்தைகளுக்கு இறைவனது திருப்பெயரையே சூட்டினார்கள்.

ஆனால் இப்பொழுதெல்லாம் அபிமான நடிக நடிகைகள் பெயர்களையும் விளையாட்டு வீரர்களின் பெயர்களையுமே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 2 மார்ச், 2017

மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்




மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்
மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம் . பூர்வ ஜன்மத்தில் புரிந்த நல்ல கர்மவினையால் நாம் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த மனிதப் பிறவியை அபூர்வமான பிறவி என்றும் சொல்லலாம் . எத்தனையோ பிறவிகள் நாம் எடுத்திருப்போம் , அதிலும் மனிதப் பிறவி நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . இந்த பிறவியில் அறிவாற்றல் , மனோசக்தி , திறமை மூன்றும் இணைந்து மனிதனை செயல்படுத்துகிறது . இவைகளே மனித்னக்குள்ளிருக்கும் சக்தி என்று சொல்லலாம். இந்த சக்தியானது மனிதனுக்கு அவனை பற்றி தெரிந்து கொள்ளச் செய்கிறது . அவனுக்குள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறது . மனிதனுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது . தனம்பிக்கையுள்ள மனிதன் சாதனையை படைக்கிறான் . மாபெரும் வரலாற்றை உருவாக்குகிறான் . மனிதனுடைய சக்தியே மனிதகுலத்தை வளர்க்கிறது . இந்த சக்தி அழகிய நம்பிக்கையான சமுதாயத்தை படைக்கிறது . நம்பிக்கையானது மனிதனை சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும்படி செயல்படுத்துகிறது .
எதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயங்க வைக்கிறது . இந்த சக்தியை கடவுள் என்றும் சொல்லலாம் , மனிதனின் நம்பிக்கை என்றும் சொல்லலாம் . இதிலிருந்து நம்பிக்கை தான் கடவுள், கடவுள் தான் நம்பிக்கை என்ற அடிப்படை பதிலையும் நாம் பெறுகிறோம் . இந்த சக்தி உலகத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் இயங்க வைக்கிறது . இதனை மீறி இயங்கினால் உலகம் தன்னுடைய அழிவையும் காண நேரிடுகிறது . இயற்க்கை மற்ற அனைத்து ஜீவன்களும் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டால் உன்னதமான உலகத்தை உருவாக்கலாம் . இந்த ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு பக்கபலமாக அமைகிறது . அவனுடைய நம்பிக்கை துளிகள் மாபெரும் சாகரத்தை உருவாக்குகிறது . அதுவே அன்பு, அறிவு , பாசம், பண்பு ஆற்றல் , நேர்மை , பண்பாடு ஆகிய இயல்புகளை மனிதனுக்கு தருகிறது .

மனிதன் மட்டும் தான் ஆறு அறிவோடு பிறக்கிறான் . இந்த ஆறாவது அறிவானது மனிதனுக்கு சமீபத்தில் நிகழப் போகும் சம்பவத்தை முன்கூட்டியே உணர வைக்கிறது. இந்த அறிவாற்றலானது மனிதனை அபூர்வமான செயலை செயல்படுத்தச் செய்கிறது . நடக்கப் போகும் அசம்பாவிததிலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது . அவனுடைய அன்பும் பாசமும் சமுதாயத்தை வாழ வைக்கிறது , மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறான் . மனிதனுடைய பலம் நம்பிக்கையில் தான் என்ற உண்மையை அவனுக்கு அறிய வைக்கிறது.

அர்த்தமுள்ள இந்துமதம்

கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
" வாசலில் அமீனா நிற்கிறான் "


தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.

காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.

அதைப் பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்:

“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”

தமிழர் பதில் சொன்னார்:

“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது”.

ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.

அன்று முதல் இந்துமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

இன்றும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.

`யாக்கை நிலையாமையை’ இந்துசமய தத்துவஞானிகள் அடிக்கடிக் கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

`விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…’

என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.

இந்த ஞானம், ஒவ்வொரு சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.

ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது, “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.

அதையே `மயான வைராக்கியம்’ என்பார்கள்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.

`பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே, நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.

`இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.

இந்த உடல் இலவசமாகக் கொடுத்த பரிசு.

தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபகக் கடிதம்.

`நீ கையெழுத்துப்போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.

கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.

உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன்”.

என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

உயிரை ஜப்தி செய்தவற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.

அந்த அமீனாவுக்கு `யமன்’ என்றும், `கூற்றுவன்’ என்றும் பெயர் கொடுத்தார்கள்.

உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில் நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.

சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.

அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு ஒருவழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச்செய்வது, இந்துசமயவாதிகளின் நோக்கங் களில் ஒன்றாகும்.

எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.

ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!

மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!

செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!

வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!

வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை
தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!

அத்தனையும் மண்தின்ப
தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே?
இருப்பதுபொய் போவது
மெய் என்றெண்ணி நெஞ்சே!

ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

இவை பட்டினத்தார் பாடல்கள்.

காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.

“செத்தாரைப் போலே திரி”, என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.

அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத் தக்கது.

வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப் பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.

`சங்கம்’ என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும்; சங்கமம் ஆவதையும் குறிக்கும்.

`முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

`மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாவதைக் குறிக்கிறது.

`கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாவதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

`இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோமாம்.

`நாயும் நரியும், பேயும் கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப் போகிறோம்’ என்று காத்துக் கொண்டிருக்கின்றனவாம்!

நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்; எவ்வளவு வருணனைகள்!

இந்த உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?

அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.

கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசை தோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.

அதனால்தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.

இந்த உடம்புக்கான தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.

புதைபட்ட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.

எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.

தங்களைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ள நமது தத்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.

“அமீனா வாசலில் நிற்கிறான்”.

“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”.

புதன், 1 மார்ச், 2017

அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்!

அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்!

புதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத் தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக, நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தற்போது பலரிடம் இல்லையென்றாலும், அதிலுள்ள பயன்கள் மிகுதியானவை. ஆண்கள், புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் பெண்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடுவது நல்லது.

* செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  நகம் வெட்டக்கூடாது. மற்ற நாட்களில் நகம் வெட்டினாலும், வெட்டிய நகத்துணுக்குகளை வீட்டுக்குள் போடக்கூடாது. தலை வாரும்போது உதிரும் தலைமுடிகளை பேப்பரில் மடித்து குப்பையில் போட வேண்டும்.

 இரவில் துணி துவைப்பது, மரத்தின் அடியில் படுத்து உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது. இரவு உணவில், கீரை, தயிர் போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது.

* இரவில் விளக்கு வைத்த பிறகு, பெண்கள் தலை வாருவது, பேன் பார்ப்பது, காய்கறிகளை நறுக்குவது, குப்பைகளைப் பெருக்கி வெளியில் கொட்டுவது கூடாது.

ஆண்கள் விளக்கை ஏற்றவும்கூடாது, விளக்கை அணைக்கவும் கூடாது. ஆலயங்களில் ஆண்கள் விளக்கேற்றலாம். பெண்கள், தேங்காய், பூசணி முதலியவற்றை திருஷ்டி பரிகாரமாகத் தெருவில் உடைக்கக் கூடாது.

* மனைவி கருவுற்றிருக்கும்போது, கணவன் புதுமனை புகுதல், பழைய வீட்டை இடித்தல், பிரேதத்தைச் சுமந்துசெல்லுதல் கூடாது. 

* எலுமிச்சை விளக்குகளை வீட்டில் ஏற்றக்கூடாது. சனீஸ்வர பகவானுக்கு எள் விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது.

* காலையில் தூங்கி எழுந்ததும் கோயில், கோபுரங்கள், சுவாமிப் படங்கள், கடல், சூரியன், விளக்கு, தங்கம், வலது உள்ளங்கை ஆகியவற்றைப் பார்ப்பது நல்லது. கழுதை, எருமை, துடைப்பம் போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.

அதிகாலையில் எழுந்து, சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, அன்றாட பணிகளைத் தொடங்கினால், சிறப்பாகவும் நல்ல விதமாகவும் முடியும். அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளை முறையாகத் திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்படுவது நல்ல பலனை அளிக்கும்.

* பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களிலும் பிறந்தநாள், திருமணநாள், போன்ற நாள்களிலும் தாய் தந்தையைச் சந்தித்து ஆசிபெறுவது, கோயில்களுக்குச் சென்று இறைவனுக்கு நன்றிசெலுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது நல்ல உற்சாகத்தையும் தெளிவான மனநிலையையும் தரும்.  

* விரத நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், இறைசிந்தனையுடனும் தூய்மையான மனதுடனும் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ;ஆன்மீக மலர் விகடன்

விபத்துகளில் இருந்து காப்பாற்றும் கோயில்..! திருத்தலம்

விபத்துகளில் இருந்து காப்பாற்றும் கோயில்..!
திருத்தலம்
விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்தான் அது. அம்பாள் தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து, ஸ்ரீசிறுபிடியீசர், ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரர் என்ற திருநாமங்களோடு வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு ஸ்ரீமங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோயில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

கோயில் உருவான வரலாறு 

திருக்கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட, அதில் பார்வதி வெற்றிபெற்றுவிட்டாள். தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வெட்கத்தினால், சிவன் திடீரென எங்கோ மறைந்துவிட்டாராம். இதனால் மனக்கவலையடைந்த பார்வதி, ஈஸ்வரனைத் தேடியலைந்து, இந்த ஊருக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கினார். அதில், ஒரு பிடி ஈரமணலை எடுத்து, சிவலிங்கமாகப் பிடித்து சிவனை வழிபட, சுவாமி பிரத்யட்சமாகி பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.  கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால்,  அபிஷேகம் செய்வதில்லை.  மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது.  

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்' என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்துவந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்துபோன திருஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.  இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது என்பதால், கூடுதல் சிறப்பு என்கிறார்கள்.

முத்துசுப்ரமணிய குருக்களைச் சந்தித்தபோது, “சோழர்காலத்தைச் சேர்ந்த பழைமையான கோயில் இது. செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாகவும் இருக்கு.  பெரும்பாலும் கடன்தொல்லை, பயம், தற்கொலை எண்ணம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.  

முத்துசுப்ரமணியன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் 2-ல் இருந்தால் வாக்குவாதம், குடும்பத்தில் பிரிவு, 4-ல் இருந்தால்,  உடல் ஆரோக்கியம் பாதிப்பு, 7-ல் இருந்தால், கணவன் மனைவி பிரிவு, விபத்து, கண்டம், 8-ல்    இருந்தால், மாங்கல்ய தோஷம், அவமானம், 12-ல் இருந்தால் விரயம் போன்ற இன்னல்கள் ஏற்படும்.  இப்படி அனைத்து துன்பங்களில் இருந்தும் நம்மை செவ்வாய் பகவான் காப்பாற்றுகிறார்.

புதிதாக  வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து  அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு  மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள  தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.  

குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் காட்சிதரும் திருஞானசம்பந்தர், இங்கு வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் ஆகியோரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.  செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையிருந்தால் இங்கு வந்து வணங்க தடை அகலும்.  மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது.  

ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம் இங்கு விழாக்காலம். இது மிகவும் குக்கிராமம் என்பதால், இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள், தங்களுக்கு வேண்டிய அர்ச்சனைப் பொருட்களை வெளியிலிருந்து வாங்கி வருவது நலம்” என்றார்.  

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார்  2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.  
  
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; விகடன் ஆன்மீக மலர்