" பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன்"
’’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்கிறார் திருமூலர். தேவன் ஒருவனே என்றாலும் அந்த தேவனுக்குத்தான் எத்தனை உருவங்கள்! எத்தனை பெயர்கள்! அவரவர்கள் உணர்ந்தவாறு, விரும்பியவாறு ஒவ்வொரு பெயரிட்டு வணங்கி வழிபாடு செய்து வருகிறோம்.
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ?
என்று அந்த தேவனுக்கு ஆயிரம் நாமங்களையும் சூட்டி மகிழ்ந்தனர். ’ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்றார் காந்தியடிகள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் இறைவனை எளிதில் உணர அவன் நாமங்களே நமக்கு உதவுகின்றன.அந்தந்த நாமங்களைச் சொல்லும் போதே அந்த உருவத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ராமா என்று சொல்லும் போது வில்லும் கையுமாக இருக்கும் உருவமும், முருகா என்னும் போது வேலும் மயிலும், சேவற்கொடி யோடு இலங்கும் உருவமும் கண்ணன் என்றால் குழலோடும் மயிற்பீலியோடும் திகழும் உருவமும் தோன்றுகிறது. காமாக்ஷி என்றால் அமர்ந்த கோலத்தில் கரும்பு வில்லோடு வீற்றிருக்கும் கோலமும் தெரிகிறது.
நாலு பவுன் எடையுள்ள தங்கக்கட்டி அல்லது தங்க பிஸ்கட் நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மிடம் இருப்பது தங்கம் என்றாலும் அதை நம்மால் அப்படியே அணிந்து கொள்ளமுடியாது. ஆனால் இந்த தங்கக்கட்டியைச் சங்கிலியாகவோ, வளையல்களாகவோ மாற்றினால் அதே தங்கம் மேலும் அழகும் வடிவமும் பெற்று உபயோக மாகவும் ஆகிறது. அந்த அணிகலன்களை அணிந்து அழகும் ஆனந்தமும் பெறுகிறோம். இறைவனும் கட்டிப்பொன் போன்றவன். இறைவனுக்கு இரண்டு நிலைகள் இருக்கிறது. ஒன்று நாம ரூபமற்ற நிலை. மற்றொன்று நாமமும் ரூபமும் கூடிய நிலை.
முதல் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காணவும் உணரவும் முடியாது. இறைவன் அருளைப் பெற்றவர்களாலேயே அவனைக் காண முடியும். இரண்டாம் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காண முடியும். அவனுடைய நாமங்கள் மூலம் அவனை உணர்கிறோம். மேலும் அவனுடைய நாமங்களை எல்லோரும்சொல்லலாம். வாய் பேசமுடியாதவர்கள் என்ன செய்வது யோசிக்க வேண்டாம். வாய்பேச முடியாதவர்களுக்கும்,சம்பந்தப் பெருமான் ஒருவழி சொல்கிறார்.
’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினமின் நாள் தொறும்’
நினைக்க நெஞ்சம் இருக்கிறதே! என்கிறார். ஆக இறைவனைவிட அவன் நாமங்களே எங்கும் எந்த நேரத்திலும் எளிதாகப் பயனாகிறது. இதையே
’’கட்டிப்பொன் போலே அவன்(இறைவன்)
பணிப்பொன் போலே (அவன்) திருநாமம்
என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. கட்டிப் பொன்னை எல்லோரும் அணிந்து அழகு பார்க்க முடியாது ஆனால் நகைகளாக்கப்பட்ட பொன்னையோ எல்லோரும் எளிதில் கையாண்டு அணிந்து அழகு பார்க்க முடியும். கட்டிப் பொன்னான இறைவனை விட பணிப் பொன்னான அவனுடைய திரு நாமங்களை எல்லோரும் பாடி, கூவியழைத்துப் பயன் பெறமுடியும் என்று விளக்குகிறார். இதற்கு ஆதாரமாக மஹாபாரத நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.
’திரௌபத்திக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே!’’. கோவிந்தா கோவிந்தா என்று அலறி அலறி அழைத்த அந்த நாமம் தானே அவளைக் காத்தது?
நாராயண நாமம்
சிறுவன் ப்ரஹ்லாதன் குருகுல வாசம் செய்யப் போகிறான்.ஆசிரியர் ‘’ஓம் இரண்யாய நம; என்று ஆரம்பிக்கிறார். வெள்ளையர்கள் நம்மை ஆண்ட அக் காலத்தில் முதலில் ‘’ God save the King’’என்று சொல்லி விட்டுத்தான் தொடங்க வேண்டும். இரணியன் காலத்தில் அவன் பெயரைச் சொல்லி விட்டுத்தான் எதையும் தொடங்க வேண்டும். ஆனால் ப்ரஹ்லாதனோ, ‘’ஓம் நமோ நாராயணாய’’ என்று சொல்கிறான். இதைக் கேட்ட ஆசிரியர் நடுங்குகிறார்.’’ப்ரஹ்லாதா, இந்தப் பெயரை ஏன் சொல்கிறாய்? நம் தலைவனான உன் தந்தையின் பெயரைச் சொல்’’ என்கிறார்.ஆனால் ப்ரஹ்லாதனோ, மறுபடியும்’’ஓம் நமோ நாராயணாய’’என்கிறான்
ப்ரணவத்தின் பொருளைக் குழந்தை முருகன் தந்தைக்கு உபதேசித்தது போல் ப்ரஹ்லாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்கிறான்
அஷ்டாக்ஷர நாம மகிமையை விரிவாகச் சொல்கிறான். தன் எதிரியின் பெயரைக் கேட்டு அடங்காத சீற்றம் கொண்டு ப்ரஹ்லாத னுக்கு எத்தனையோ விதமான துன்பங்களைக் கொடுக்கிறான். ஆனால் அஷ்டாக்ஷர நாமத்தின் மகிமையால் அத்தனை துன்பங்களையும் விலக்கி கடைசியில் சிரஞ்சீவிப் பட்டமும் பெறுகிறான் ப்ரஹ்லாதன்.
ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் " புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? " அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பிற்காலத் தேவைகளுக்கு என்று எப்படி பணத்தைச் சேமித்து வைக்கிறோமோ அதேபோல கடைசி நேரத்துக்கு உதவும் என்று நாமங்களை ஜபித்து எழுதி சேமித்து வையுங்கள் என்கிறார்கள். அப்போது சொல்ல முடியாது நினைக்க முடியாது என்பதால் இப்போதே சொல்லி வைக்கிறேன் என்கிறார்கள்.
இதன் கருத்தையே பனிரெண் திருமுறையில் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
" குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி / வந்து உந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை " என்கிறார்.
நம் வாயால் இறைவன் திருநாமம் செப்ப இயலாத முதுமையில் நோய்வாய் பட்ட நிலையில் வாய் பேசாத நிலை ஏற்படும்நிலை அடையும் முன்பே இறைவனின் திருநாமகங்களை சொல்லிச் சொல்லி பழகிக்கொள்ள வேண்டும்.
அருணகிரிநாதரும் ’’மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’’ என்று நாமங்களின் பெருமையைப் பேசுகிறார். அவன் நாமத்தை யாரும் எந்த இடத்திலும் சொல்லலாம். ’’எல்லோரும் ராம நாமத்தைச் சொல்லுங்கள்’’ என்று சம்பாதி சொல்ல வானரங்கள் ராம நாமம் சொல்லச் சொல்ல தீய்ந்துபோன தன் சிறகுகளைச் சம்பாதி பெறுகிறான் என்று ராம நாம மகிமையை ராமாயணம் சொல்கிறது.
கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மிகவும்
நன்மையைத் தரும். பகவான் சொல்கிறார்
யோகி தன் உள்ளிலோ பரிதியிலோ
வைகுண்டம் தன்னிலோ வாசமில்லை
பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன் நாரதரே.
நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடங்களுக்கு இறைவனே வருவதால் அவன் நாமங்கள் என்னும் பணிப்பொன்னை நாவில் அணிந்து நலம் பெறுவோம்.
இறைவனின் திருநாமங்கள் இவ்வளவு பெருமை உடையதாக இருப்பதால் அவற்றை அடிக்கடி சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமது பெரியோர்கள் குழந்தைகளுக்கு இறைவனது திருப்பெயரையே சூட்டினார்கள்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அபிமான நடிக நடிகைகள் பெயர்களையும் விளையாட்டு வீரர்களின் பெயர்களையுமே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக