வியாழன், 12 ஜனவரி, 2023

தத்துவ சிந்தனைகள்

 தத்துவ சிந்தனைகள்

ஆன்மா விளக்கம்
ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்.
"பால்"பயனுள்ளதுதான்...
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும்....
கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது...
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....
அதை உருக்க வேண்டும்...
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......
கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்...
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு
இந்த பஞ்ச பூத உலகத்தில்,ஆன்மா என்னும் அணுவானது 84,லட்சம் யோனி பேதங்களிலும் பிறப்பு எடுத்து வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறப்பு கொடுக்கப் படுகின்றது,.மனிதப் பிறப்பை நீக்கி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்றால்,உண்மைக் கடவுளான அன்பால்,தயவால்,கருணையால்,ஆன்மாவில் உள்ள அருளைப் பெற்று,அசுத்த பூத காரிய தேகத்தை,சுத்த பூத காரிய தேகமாக மாற்றி,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று,ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல முடியும்
உடம்போடவோ,மரணம் வந்தோ இறைவனிடம் செல்ல முடியாது...ஆன்மா என்னும் அணு தன்னை உணர்ந்து ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்ல முடியும்.
மேலே கண்ட ஆன்ம அணுக்கள் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து ஒரு அணுக்கள் கூட வெளியே செல்ல முடியாமல்,வழி தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளது ...
இந்த உண்மையை ஆன்மாக்களுக்குத் தெரியப்படுத்தவே சைவ சித்தாந்தம் தெளிவு படுத்துகிறது.
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு பொருள் உண்டு.
3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.
5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை
6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை
7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது
8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்
9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.
10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.
திருச்சிற்றம்பலம்
May be an illustration of dog
Like
Comment
Share

0 comments

உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

 உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும், உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.
இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.
இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத் திரிகிறார்களே! தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.
மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.
தன்னைத் தயாராக (முக்தி) ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது. இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.
திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத் திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் (3 பதிக) அறியலாம். தன் நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது. “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.
“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”
“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”
“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”
“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “
“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”
“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”
“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “
“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”
“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”
“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”
என்ற வரிகள், நமக்கு எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
May be an image of 2 people

சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

 சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

உடல் உயிர், கண் அருக்கண்; அறிவு ஒளி போல் பிறிவரும் அத்துவிதம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது எனில் இறைவன் உயிர்களுடன் எப்போதும் 1) ஒன்றாயும், 2) வேறாயும், 3) உடனாயும் நிற்கும் சம்பந்தமாகும்.
இம்மூன்றினுள் ஒன்றாதல் என்பதை பற்றி சைவ சித்தாந்தம் உணர்த்துவது, இறைவனும் உயிர்களம் வேறு வேறு பொருள்கள்; ஆனால் இறைவன் உயிர்களோடு கலப்பினால் எப்போதும் ஒன்றாக இருக்கிறான்; எதுபோல எனில் உடலும் உயிரும் போல என்பதாகும். இறைவனும் உயிர்களும் வெவ்வேறு பாெருள்களாக உள்ளன, அப்படி இருந்தும் அவை கலப்பினால் ஒன்று பாேலத் தோன்றுவது போல. அது பற்றி அவை ஒன்று எனக் கூறப்படுவதன்றி அவை இரண்டும்ஒரே பாெருள் அல்ல.
வேறாதல் என்பது உடலும் உயிரும் போலக் கலப்பினால் ஒன்ற என்று கூறப்படும் இறைவனும், உயிரும் பாெருளால் வேறு வேறு தாம் அதாவது இறைவன் உயிர் அல்ல; உயிர் இறைவன் அல்ல, இதற்க சைவ சித்தந்தாம் கூறும் உவமை கண்ணும் சூரியனும் போல என்பதாகும்.
கண் ஒளி உடையது; சூரியனும் ஒளி உடையது, சூரியன் ஒளி கண் ஒளியோடு சேர்ந்தால் மட்டுமே கண் காணும். இல்லையென்றால்காண முடியாது, கண் ஒளி காண்பதற்கு சூரியன் ஒளி அதனுடன் சேர்ந்திருக்க வேண்டும், பொருளைக் காணும் பொழுது கண்ஒளியும், சூரிிய ஒளியும் பிரித்தறிய முடியாதபடி கலந்திருக்கின்றன, ஆனாலும்
கண் ஒளி காண்பது;
சூரியன் ஒளி காட்டுவது; எனவே கலப்பினால் இவை ஒன்றாக இருந்தாலும், பாெருளால் இவை வேறு வேறு தானே.
அதுபோல உயிர் அறிவுடையது, இறைவனும் அறிவுடையவன், ஆனால் இறைவன் அறிவு அறிவித்தால் அன்றி உயிர் அறிவு தானாக எதையும்அறிய முடியாது, இறைவனும் உயிரும் கலப்பினால் ஒன்றாக இருந்தாலும்,
இறைவன் அறிவிப்பவன் ( சூரியன் ஒளி காட்டுவது போல)
உயிர் (இறைவன்) அறிவிப்பதை அறிவது ( சூரியன் காட்டியதை கண் பார்ப்பது போல)
எனவே கலப்பினால் உயிரும் இறைவனும்ஒன்றாக இருந்தாலும் பாெருளால் இறைவன் உயிரிலிருந்து வேறானவன் தானே,
உடனாதல் என்பது இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாகவும் விளங்கும் அதே வேளையில் உயிர்களோடு உடனாயும் உள்ளான். அது எவ்வாறு எனில்;
கண் ஒரு பொருளைக் காணும் போது உயிரின அறிவும் அக்கண் ஒளியோடு உடனாக சென்று அறிந்தால்தான் உயிர்கள் அப்பொருளை அறியவும், அநுபவிக்கவம் முடியும், பொருள் கண்ணில் படுகின்றபோது , உயிரறிவு கண் ஒளியை செலுத்தி அறியாவிடில் உயிர் அப்பொருளை அறியாது. நம் அறிவு வேறாரு சிந்தனையில் ஆழந்திருக்கும் போது, எதிிரில் வருபவரை நாம் கவனிக்காமல் போவது நம்அன்றாட வாழ்வில் நிகழும்அநுபவம் தானே,
அது போல உயிர் ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால், உயிர் அறிவோடு இறைவன் அறிவும் (திருவருளும்) உடனாக இருந்து இயக்கினால் மட்டுமேஉயிர் அப்பொருளை அறிய முடியும், இறைவன் உயிரின் வேறாக இருந்து அறிவிப்பது மட்டுமன்றி, உயிருடன் உடனாக இருந்து இயக்கி அது பொருள்களை அறியும்படி செய்கிறான்,
ஆக இறைவன் உயிர்களுடன் 1) கலப்பினால் உடலும், உயிரும் பாேல ஒன்றாயும்,
2), பொருளால் கண்ணும், சூரியனும் போல வேறாயும்,
3), உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண் ஒளியும், உயிர் அறிவும் போல் உடனாயும் பிரிப்பின்றி நிற்கும் உறவே சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் ஆகும். அத்துவிதம் என்ற சொல்லுக்கு வேறின்மை என்று சைவ சித்தாந்தம் பொருள் கொள்ளும். இதனை இருமையின் ஒருமை என்றும் கூறுவர். இரண்டு பாெருள்களாயிருப்பதால் ஒன்று என்று சொல்லமுடியாமல் கலப்பினால் ஒன்றாக தோன்றுவதால் இரண்டு என்று சொல்ல முடியாத நிலையாகும்.
நன்றி ° சிவப்பிரகாசம்
திருச்சிற்றம்பலம்

திருக்குறளில் சைவ சித்தாந்தம் - கடவுளும் வீடு பேறும்

 திருக்குறளில் சைவ சித்தாந்தம்

கடவுளும் வீடு பேறும்


திருக்குறளில் " கடவுள்" என்னும் சொல்லும் " முத்தி" என்னும் பொருளைத்தரும் வீடு என்னும் சொல்லும் ஆட்சி பெறவில்லை. ஆதலின் திருவள்ளுவர் சமயக் கொள்கைகளை பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போத சூத்திரம், கருத்துரை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு வெண்பா ஆகியவற்றில் கூட கடவுள் என்ற செொல்லாட்சி இடம் பெறவில்லை, ஆதலின் மெய்கண்டார் கடவுள் கொள்கையை ஆதரிக்கவில்லை என கூறு முடியுமா? அப்படி கூறினால் அதைவிட பேதமை வேறெதுவும் இல்லை அல்லவா?, அவ்வாறே வள்ளுவரும் கடவுள் கொள்கையை ஆதரிக்க வில்லை என்று கூறுவதும் பேதமையுள் பேதமையே ஆகும். அதாவது தனக்கு பயன்படாத ஒழுக்க நெறியில் பற்று வைத்துக் கேடு விளைவிப்பவைகளை கைக்கொண்டு நன்மை விளைவிப்பவைகளைக் கைவிடுவதையே தொழிலாக உடையவர்கள் தாம் இவ்வாறு கூறுவர்.
கடவுளுக்கு உரிய இலக்கணம் மாறுபடாத சொற்கள் பலவற்றை மெய்கண்ட தேவ நாயனார் சிவஞான போதத்தில் அருளிச் செய்திருப்பது போலவே திருவள்ளுவ நாயனாரும் இறைவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான் தனக்குவமை இல்லாதான், எண் குணத்தான் முதலிய சொற்களில் வைத்து தமது கடவுள் கொள்கையினை உறைப்பை உணர்த்தியருள் கின்றார். அவ்வாறே வீடு பேற்றினை திருவள்ளுவர் சிறப்பு என்னும சொல்லாட்சியில் வைத்து பேசுகிறார், எடுத்துக்காட்டாக
" பிறப்பு என்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு " குறள் 356
இங்கு பேதமை என்ற சொற்கு ஆணவம் என்று பொருளாகும். பிறப்பிற்னுக் காரணம் ஆகிய ஆணவமல மறைப்பு உயிரை விட்டு நீங்குவதற்கு வீடு பேற்றிக்கு நிமித்த காரணம் ஆகிய செவ்விய பொருள் எனப்படும் பரம் பொருளைக் காண்பதே ஒருவருக்கு மெய்யுணர்வு ஆகும். என்பதே இந்த குறட்பாவிற் குரிய செம்பொருள் ஆகும். இதி்ல் வரும் சிறப்பு என்னும் சாெற்கு பொருள் கூறுகையில் எல்லா பொருளினும் சிறந்தது ஆதலின் வீடு சிறப்பு எனப்பட்டது என்று பரிமேலழகலர் கூறி யிருப்பது இங்கு கருத்தில் காெள்ளத்தக்கது. வீடு பேற்றை சிறப்பு எனவும் சிறந்தது எனவும் தொல்காப்பியரும் வழங்கியுள்ளதை நாம் நினைவில் காெள்ளத்தககது.
திருக்குறளில் இடம் பெறும் சிறப்பு என்னும் சொல் குறள் 31லும், 358லும் வீடு பேறு என்னும் பொருளையே குறிக்கிறது என்பது பெறப்படும். படவே திருவள்ளுவர் தமது நூலில் சமயக் கருத்தை குறித்து கூறியிருப்பது திருக்குறளும் சைய நூலே என்ற கருத்து நமக்கு தெளிவு படும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்குறளில் சைவ சித்தாந்தம் என்ற நூல்

திங்கள், 26 டிசம்பர், 2022

உழவாரப்பணி

 https://www.facebook.com/groups/666661527155103/permalink/1132746097213308/









இன்று 25,12,22 ஞாயிறு திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் இராஜபாளையம் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்புடன் சேர்ந்து மதுரை மாணிக்கவாசகரரின் பூர்வீகமான திருவாதவூர் என்னும் சிவத்தலத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக பெருமானின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது கோயிலை சுற்றியுள்ள இடம் மற்றும் தீர்த்த கிணறு அமைந்த பகுதியில் முட்புதர் மற்றும் வேண்டாத கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது, பின் அங்கு பக்கத்திலுள்ள அமைந்துள்ள அருள்மிகு வேதவல்லி சமயோத திருமறை நாதர் ஆலயம் சென்று வழிபாடும், அதன் பின் மதுரை சொக்கநாதர் திருக்கோயில் சென்று அருள்மிகு மீனாடசி சுந்தரேரசர் திருக்கோயில் தரிசனமும் செய்து இன்றைய உழவாரப்பணி சிறப்புடன் முடிக்கப்பட்டது

நன்றி,  சிவ, அய்யனார் அவர்கள் விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பு, மற்றும் மதுரை மாவட்ட உலக சிவனடியார் திருக்கூட்டம்