வியாழன், 26 பிப்ரவரி, 2015

பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார்


பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார் " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கணம் நின்று பணியச் சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றம்எரித்த தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே." சம்பந்தர் தேவாரம் - 1 மூவர்மற்றும் தேவர்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் நம்முடைய பாவங்கள் தொலைவதன் பொருட்டு நல்வினைகள் செய்வதற்கு அருள் புரிகின்றார் என்கிறார் திருஞான சம்பந்தர். " அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" - சம்பந்தர் தேவாரம் நாம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் நோய் மற்றும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த உண்மையை யாவரும் அறிவோம், இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உரிய வழியை தேடாமல் இருப்பது நம்முடைய குறையே ஆகும். புண்ணிய செயல்களை செய்து சிவபெருமானுடைய திருவடியை போற்றுவோம், இவ்வாறு செய்தால், நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை. நாம் பலபிறவிகளில் செய்துள்ள மொத்த தீவினைகளின் பயனை அனுபவிப்பது என்பது இயலாத ஒன்றாகும். நாம் தாங்க மாட்டோம். என்பது சிவபொருமானாருக்கு நன்கு தெரியும். இதன் பொருட்டு நல்வினைகளை செய்து பாவங்களை தீர்ப்பதற்கு பலப்பல சந்தர்ப்பங்களை இறைவர் நமக்கு அருளியுள்ளார். இந்த அரிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாம் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும். புண்ணிய செயல்களில் மனம் பழகப்பழக பாவங்கள் செய்யும் நிலை இல்லாமல் போகும். பாவச் செயல்களைச் செய்வதற்கு மனம் கூசும், இப்படி பாவங்களிலிருந்து விலகி, புண்ணியச் செயல்களில் மட்டும் ஈடுபடும் ஆன்மாக்களின் மீது இறையருள் தானே பதியும். இறையருள் பதிந்த ஆன்மா பிறவா நிலையை அடையும். இதனையே "முத்திப்பேறு" என்கிறோம். பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற கைதி, தன் தவற்றை உணர்ந்து சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டால் அவனுடைய சிறைவாசம் குறைக்கப்படுவதுபோல் நம் செய்த பாவச் செயல்களை உணர்ந்து நல்லொழுத்துடன் வாழ்ந்தால் இறைவர் நம் பாவங்களை குறைத்து புண்ணியச் செயல்களாக மாற்றுவார். அநேக பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை தவறு என்றுணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளைச் செய்தால் இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்கும் என்பதை மேற்கண்ட பாடல் வாயிலாக நாம்அறியலாம். இனி நம் பாவங்கள் தீர்தர செய்ய வேண்டிய சில நல்வினைகள் யாவை என்பதைக் காண்போம். 1. சிவாலயத் திருப்பணிகள்: சிவபெருமானார் எழுந்தருளியுள்ள சிவலாயங்களை புதுப்பித்தல், மிக மேலான நல்வினை - புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்ததுமான சிவலாயங்களை திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுப்பது தலையான நல்வினையாகும். இதனை வலியுறுத்தும் பதினொராம் திருமுறைப்பாடல். "காணீர் கதியொன்றும் கல்லீர் எழுந்தஞ்சும் வல்ல வண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. - பட்டினத்தடிகள் மும்மணிக்கோவை மருதப்பெருமானாராகிய சிவனாரின் திருவருளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஐந்து நல்வினைகளை (புண்ணியங்களை) செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்து அம்மயமான பட்டினத்து அடிகள் 1. திருஐந்தெழுத்தினை ஓதுதல் 2,சிவலாயத் திருப்பணிகளை செய்தல் 3, சிவபெருமானுடைய திருப்புகழினை பேசி மகிழ்தல் 4,உருத்திராட்சம் அணிந்து கொள்வது 5, உடலில் திருவெண்ணீறு அணிந்து மகிழ்தல் 2, சிவலாயத்தை தூய்மை ெசெய்தல்: சிவபெருமானார் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆலங்களை பெருக்குதல், மெழுகுதல், தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தல் ஆகிய நல்வினை செயல்களாகும். அன்று மலர்ந்த பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தல், வாயாரப் புகழ்ந்து பாடுதல், தலையால் வணங்குதல், செலவில்லாத புண்ணியச் செயல்களாகும், இவற்றை இயம்பி நிற்கும் அரிய தமிழ் திருமுறை பாடல். "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. " திருநாவுக்கரசர் தமிழ் திருமுறை - 6 3, மலர் தொண்டு செய்தல்: சிவலாயத்திற்கு வேண்டிய பூக்களை கொடுத்து உதவுதல் மேலான புண்ணியமாகும். ஆலயத்தில் உள்ள பூக்களை அதிகாலையில் எடுத்து, மாலையாக தொடுத்தளிக்கலாம். நம் வீட்டில் பூச்செடிகள் வைத்தும், பூக்கும் பூக்களை ஆலயத்திற்கு அளிக்கலாம், நறுமணமுள்ள மலர்களையே ஆலயத்திற்கு அளிக்க வேண்டும், " நறுமாமலர் கொய்து" என்பார் அப்பர் அடிகள். 4, இறைவருடைய திருநாமத்தைச் சிந்தித்தல்: " நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. - சம்பந்தர் தேவாரம் 3 "பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே" - நாவுக்கரசர் நம்முடை ய தீவினைகளை நீக்கி, நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திருநாமத்தை சிந்தித்தல் (செபித்தல்) அவசியமாகும். பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பாவங்கள் தொலைந்து நல்வினை பெருக உரிய வழியும், எளிய வழியும் இதுவே எனலாம். ஒரு நாளைக்கு காலை, நண்பகல், மாலை இரவு என நான்கு வேளைகளிலும் ஓதி நலம் பெறலாம். 5. சிவலாய வழிபாடு மற்றும் சிவத்தல யாத்ததிரை செய்தல்: பெற்ற பயன்களில் தலையாயது சிவபெருமானாருடைய ஆலயத்தை வலம் வந்து மலர் தூவி வழிபடுவது என்கிறார் அப்பர் சுவாமிகள். "ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். - நாவுக்கரசர் குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது ஆலயம் சென்று தொழ வேண்டும். என்பது அப்பர் பெருமானார் அருள்வாக்கு. மனிதன் தவிர மற்ற உயிரிகள் இதனை செய்ய இயலா. மனிதப் பிறவியில் மட்டுமே இது முடியும். "நாடு நகரமும் நல்திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே, - திருமூலர் திருமந்திரம் சிவத்தலயாத்திரை செய்வது நல்வினை பெறுவதற்கு சிறந்த வழியாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பட்டினத்து அடிகள் போன்ற பலரும் சிவத்தல யாத்திரை செய்துள்ளதை நாம் அறிவோம், 6, சிவலாயத்தில் விளக்கேற்றல்: விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்" திருநாவுக்கரசர் நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்புல்லர்,ஆகியோர், சிவலாயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணம் வாய்லாக அறியலாம், கலய நாயனார் சிவலாயத்தில் " குங்குலியம்" எனப்படும் நறுமணத்தை அளிக்கும் திருத்தொண்டினைச் செய்து நலம் பெற்றார், இவ்வாறு இயன்ற சிவத்தொண்டுகளை செய்து நல்வினைகளைப் பெறலாம். 7. தமிழ் வேதப் பதியங்களை பாராயணம் செய்தல்: மிகச் சிறந்த புண்ணியச் செயல் இதுவும் ஒன்றாகும், நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் ஞான சம்பந்தர். " ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசமபந்தன்உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே." சம்பந்தர் பதிகப பாராயணமும் மனிதப் பிறவியில் தான் இயலும். பேசும் திறம் பெற்ற நாம் இதை செய்தே ஆக வேண்டும். "...... வருங்கலை ஞான சமபந்தன் தமிழின் ஒலிகெழுமாலை யென்றுரை செய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார் மேல் மெலிகெழுதுயர் அடையா வினைசிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே". கலைஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருக்கழுமலப்பதிகத்தை உண்மையான அன்புடன் நினைந்து பாராயணம் செய்பவர்கட்குச் சோர்வை அளிக்கும் துன்பங்கள் வாரா. வினைகள் அழியும். விண்ணவர்கள் மேம்பட்ட ஆற்றலை பெறுவார்கள். " தமிழ் நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை பாடுவார்க்கு இல்லை பாவமே." 8. அடியார் தொண்டு செய்தல்: சிவபெருமானாரை இடைவிடாது மனத்தில் நினைந்து வாழும் சிவனடியார்களை " நடமாடக்கோயில்" என்கிறார், திருமூல நாயனார். இத்ததையவர்கட்கு எந்த உதவியைச் செய்தாலும் அது இறைவருக்கு சென்று சேரும் என்கிறார். "நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." - திருமந்திரம் மெய்பொருள் நாயனார் எப்படி வாழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறுவதைக் காண்போம். "தேடியமாடு நீடுசெல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடியமனத்தோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார். பெரியபுராணம் திருமறை 12 சித்த்தை சிவன்பால் வைத்த சிவனருட் செல்வர்கள் மெய்பொருள் நாயனாரிடம் ஏதேனும் வேண்டும் என்று வந்தபோது குறைவின்றி கொடுத்து வாழ்ந்தார் என்கிறது , இத்துடன் சிவனாடியார் பிள்ளைக்கரி கேட்டபோது தன் பிள்ளையே கறியாக்கி சமைத்து கொடுத்த சிறுத்தொண்ட நாயனார் வழியாகவும், சிவனாடியார் தொண்டே மகேசன் தொண்டு வாழ்ந்த அப்பூதியடிகள் வரலாற்றின் மூலம் சிவனடியார் தொண்டின் பெறுமையை நன்கு அறியலாம். 9. சான்றோர்களுடன் மட்டுமே சேரவேண்டும்: சான்றோர்களுடன் தான் உறவு வேண்டும் என்று வள்ளலார் கூற்று ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதிலிருந்து சான்றோர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அறியலாம் "வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்" திருமறை 4 புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும். மனம் நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும், நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும் வழியைத்தான் திருநாவுக்கரசர் "செந்நெறி" என்கிறார். இத்துடன் சுந்தரரும் " உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே." என்கிறார். 10. ஏழை எளியவர்கட்கு உதவுதல்: ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன் காரணம் ஏழைகட்கு உதவுவதற்குத்தான் என்கிறார் திருநாவுக்கரசர் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்றும் கூறியுள்ளார, அப்படி தேவைக்கு மேல் சேர்ந்துள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்காதவர்கட்குக் கடும் நரகங்களை வைத்துள்ளார் இறைவர் என்றம் அருளியுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் படைத்து நம்மிடம் தேவைக்கு மிஞ்சிய செல்வத்தையும் அளித்து நல்வினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆம். இதனால் நம் பாவங்கள் தீரும். நாம் செய்த தீவினைகள் நம்மை வந்து தீண்டா. இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் நாவரசரின் அரிய பாடல் " இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பர் தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்," - அப்பர் தேவாரம் " யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" - திருமூலர் திருமந்திரம் கொடுத்துக் கொடுத்துப் பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆசை அழியுமானால் தீவினை செய்யாமல் வாழலாம். 11. பிராணிகட்கு உணவிடுதல்: உலகத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும்தாவரங்கள் ஆகிய யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்படி இறைவர் படைத்துள்ளார். மனித வாழ்வில் பிராணிகள் பங்கு அதிகம். இவற்றிக்கு அன்றாடம் ஒருபிடி உணவு கொடுப்பது பாவங்கள் தீரும் வழியாகும். " யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை" - திருமூலர் திருமந்திரம் கூறும் வாக்கு பிராணிகளில் பசு மட்டும் அல்ல, காகத்திற்கு உணவிடுவது நம் இந்துமதத்தின் ஒரு மரபாகவே உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும் இதன் நோக்கம் தான்.எனவேதான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனமாக ஒவ்வொரு பிராணிகளை இணைத்துள்ளார்கள் முன்னோர்கள் 12. தாவரங்கள் வளர்த்தல்: உலகம் நலமாக திகழ்வதற்கு தாவரங்கள் பங்கு மிகமிக அதிகமாகும். உலக உயிர்கள் வாழ்வதற்கு இவற்றின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுவாசிக்கும் காற்று முதல் உயிர் வாழ்க்கைக்கு தேவையான யாவற்றையும் தாவரங்கள் தான் நமக்கு தருகின்றன. இதனை உணர்ந்த ஞானிகள் தாவரங்களைப் போற்றி பாதுகாப்பது பெரும் புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். "கரகத்தால் நீர்அட்டி காவினை வளர்ப்பீர்" - திருமூலர் திருமந்திரம் நான்காம் நூற்றாண்டிலேயே ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழர்களின் தொலை நோக்கு பார்வையைப் பாராட்ட வேண்டும். ஓவ்வொரு சிவாலயத்திலும் "தலமரம்" என்று சொல்லி மரங்களை தெய்வமாகவே போற்றியுள்ளதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும், மரம் வளர்ப்பது பாவங்களை தீர்க்கும் நல்வினையாகும். 13, உலக நன்மைக்கு வேண்டுவது: இறைவருடைய கருனையால் நடத்தப்படும் இந்த உலகமே இறைமயம் தான். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் மனதால் வேண்டவேண்டும், நாம் நலமாக வாழ்வோம். உலகத்தில் நாமும் ஒருவர்தான், இதனை விளக்கும் பாடல் "வையம் நீடுக மாமழை மன்னுக மெய்விரும்பிய அன்பர் விளங்குக சைவநன்னெறிதாம் தழைத்து ஓங்குக தெய்வ வென்திருநீறு சிறக்கவே" வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" பன்னிரு திருமுறையில் சேக்கிழார் அவர்களின் கடைசி வாழ்த்து பாடல் வழிதெரியாதவர்கட்கு வழிகாட்டலாம். அறியாமையில்உள்ளவர்கட்கு நல்ல அறவுரைகள் வழங்கலாம், பிரிந்த இருவரைச் சேர்த்து வைக்கலாம், நடைபாதையில் கிடக்கும் வேண்டாத தீங்குவிளைவிக்கும் பொருட்களை அப்புறப் படுத்தலாம். இனிய சொல்லே பேசுதல், இப்படி செலவில்லாத ஏராளமான நல்வினைச் செயல்களைச் செய்யலாம், நாம் தவறுகளைச் செய்யும் பொழுது இறைவர் மனசாட்சியாய் இருந்து " இதுதவறு" என்று உணர்த்துகிறார். ஆணவம் மற்றும் பேராசை காரணமாக நாம்தான் அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறோம், " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி" என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் மற்ற உயிர்கட்கு தீமையைச் செய்துவிடக் கூடாது, கருணை நிறைந்த ஆன்மா இறைவருடைய கருணையை எளிதில் பெற்றுவிடுகிறது, செல்வம் நிறைந்தவர்கள் , பொருட் செல்வங்களாலும், அதனால் முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவை மனப்பான்மையையும் கொண்டு பிறர் மனம் நோக வண்ணம் இனிது பேசியும் , உதவிகள் செய்தும், முடிந்த அளவு உழவாரப்பணிகள் செய்து, பாவச்செயல்ளை தீர்க்க வல்ல புண்ணிச் செயல்கள் செய்து, நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரையும் நலமுடன் வாழச்செய்து, இறையருளைப் பெற்று இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணிய செயல்களே என்பதை அறிந்து செயல்படுவோம். திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 25 பிப்ரவரி, 2015

என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!

என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!: அறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...

என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!

என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!: 12 மகாசக்தி மனிதர்கள் த ன்னிடம் அளவற்ற சக்திகள் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக த்ரைலங்க சுவாமி நினைத்தவரல்ல. பொருளாசை, புகழாசை, மற்...

புண்ணாக்குச் சித்தர் பாடல்


புண்ணாக்குச் சித்தர் பாடல் இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின் சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர் ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் வந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இவரது பாடல்கள் ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை. இவர் இப்படி முன்னிறுத்திய ஞானம்மா யாரென்பதைத் தம் முதல் பாட்டிலேயே தெரிவிக்கின்றார். ‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங் காணவென்று தவித்திருந்தேனே’ என்று கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை இவர் ஞானம்மா என்று குறிப்பிடுவது புலனாகிறது. அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார். காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்றும், ‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்றும் கூறும் சித்தர் வாக்கியத்தை, “காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு இப்பாடல் ‘கசமாலம்’ என்ற சென்னைத் தமிழ் வழங்குவதிலிருந்து இவர் சென்னைப் பகுதியில் நடமாடிய பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக் கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும். 20 கண்ணிகள் ஒரு பாடலும், 45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச் செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின் நடையையும் ஒப்புநோக்கக் கால வேறுபாடு தெள்ளெனப் புலப்படும். ஆகவே, முப்பூச் சுண்ணச் செயநீர் பாடிய புண்ணாக்குச் சித்தரும், மனோன்மணியாளைப் பாடிய புண்ணாக்குச் சித்தரும் வேறு வேறானவர் என்பது ஏற்பதற்குரியது. இப்பாடல் தொகுதி பிற்காலப் புண்ணாக்குச் சித்தருடையது. தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று தாவித்திரந்தேளே - ஞானம்மா சரணம் சரணம் என்றே. 1 அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா விலையிலா ரத்தினமடி 2 முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல் சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா தானுயிரு நிற்பதடி. 3 விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4 தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல் சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா சாகரத்திலே உழல்வார். 5 இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம். 6 முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் நித்திரையும்விட்டு - ஞானம்மா நினைவோடு இருக்கணுமே. 7 நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில் சினமாய்வரும் எமனும் - ஞானம்மா தெண்டநிட்டுப் போவானே. 8 யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் மோகம் எனும் குழியில் - ஞானம்மா மூழ்கியேபோவார்கள். 9 சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி ஆத்திதேட நினைத்து - ஞானம்மா அலைவார் வெகுகோடி. 10 பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும் ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா ஏதொன்றும் இல்லையடி. 11 கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா கலங்கி அழுதாரடி. 12 மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா நலிந்தே அழுவாரடி. 13 கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியாதே அலைவாரே. 14 செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் உத்தமர்போலப் பேசி - ஞானம்மா உலகில் திரிவாரடி. 15 காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும் காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா கண்டறிதல் ஆகாதே. 16 நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது இல்லாவெளிச்சமது - ஞானம்மா ஈனவெளிச்சமடி. 17 சம்சாரமென்றும் சாகரமாமென்றும் இம்சையடைவோர்கள் - ஞானம்மா இருந்து பயன் ஆவதென்ன. 18 காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஊத்தச் சடலமிது - ஞானம்மா உப்பிலாப் பொய்க்கூடு. 19 அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா தானமைத்த பொய்க்கூடே. 20

பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி


பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றில் திருப்பணி முடித்து வருங்கால் தன் எதிரில் ஒரு பெரியவர் அப்பர் பெருமானிடம் அய்யா முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார், அப்பர் சுவாமிகளிடம். உடனே அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், " அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் ஒருபொழுதேனும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?, அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையும், கேட்டும் ஏனையோருக்கு கூறியும் பாடியும் உள்ளீர்களா? , தினமும் உணவு அருந்தும் முன் அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து அவரை சேவித்துள்ளீர்களா? , இறைவனுக்கு மலர் பறித்து அவன் பாதங்களில் சமர்த்துள்ளீர்களா?, சைவ நெறியின் அடையாள சின்னமாகிய அனுதினமும், சிவாயநம என்று கூறி திருநீரு அணிந்து வந்துள்ளீர்களா?, சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?" என்றார், அதற்கு அப்பெரியவர் அய்யா இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும்இல்லை, கேட்டதும் இல்லை என்றார், உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து " அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீரே ! கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை நலுவ விட்டுவிட்டேரே! செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே துலைத்து விட்டு மேலும் மேலும் பாவ சுமைகளை ஏந்தியுள்ளீர்களே ! " என்றார். இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல் "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில் ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில் அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே " நாவுக்கரசர் தமிழ் வேதம் 6 இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும், இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும், தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும் , உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும், சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும். மிக முக்கியமான செயல் திருஐந்தெழுத்தைச் சொல்லுவதாகும், இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆவார், பெரும் பொருள் செலவு செய்து அர்த்தமற்ற சடங்குகள் ஆரவாரத்துடன் செய்வதால் பிறவாமையைப் பெற்றுவிட முடியாது. திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவல்களுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மனோபாவங்களில் மகேசனைக் காண்போம்


மனோபாவங்களில் மகேசனைக் காண்போம் " அரிது அரிது மாநுடராதல் அரிது" என்பார் ஒளவையார், மற்ற எல்லா பிராணிகளையும் விட மிக உயர்ந்த பிறப்பு மானிடப் பிறப்பு மட்டுமே ஆகும். " மற்ற உயிரை எல்லாம் மானிடம் வென்றதம்மா " என்பார் கம்பர், மனித வாழ்விற்கு அடிப்படையாக இருப்பதோடன்றி, மனிதனையே இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல் மனம். மனம்தான் மக்களை மாக்களிடமிருந்து உயர்த்தி காட்டுவது ஆகும். மனம் என்றால் என்ன? என்பதிலிருந்து மனோபாவத்தை பற்றி பார்ப்போம். " கடிகாரத்தின் முள் காலங்காடடிச் செல்வதற்க அதற்குள் ஒரு சுருள் விசை (ஸ்பிரிங்) இருப்பது போலவே நமது உடலுக்குள்ளும் ஓர் இயந்திரம் இயங்குகிறது, அதற்கு பெயர் "மனம்" என்று தபோவனம் தவத்திரு ஞானானந்தகிரி அவர்கள் கூறுகிறார், "மனம்" இச்சொல் நிலைபேறுடைய மனிதப்பிறவியின் தன்மையை உணர்த்தும் பெருமை மிக்க சொல்லாகும். மனம் என்பதை பிரித்தால் மன்- அம் என்று அமையும், மன் என்பது நிலைபேறு என்று பொருளைத் தரும், நிறை போற்றுவதற்குரிய பிறவி மனிதப் பிறவி மட்டுமே ஆகும். மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றி இருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்று இருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம், மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். ஆடு,மாடு முதலிய விலங்குகள் கால்நடைகள் எனப்படுகின்றன. மனிதனும் காலால் தானே நடக்கிறான்? மிருகங்களை மட்டும் கால்நடைகள் என்று ஏன் குறிப்பிடுகிறோம்? காலால் மட்டுமே நடப்பவை விலங்குகள் அவற்றுக்கு "மனநடை" " நா நடை", "ஓழுக்க நடை" முதலியன கிடையாது. நாநடை , ஓழுக்க நடை முதலியவைகள் உடையவன் உதாரணமாக நடை தவறி விட்டான் என்றால் கால்நடப்பதையா குறிக்கும்? இல்லை ஒழுக்க நடையைக் குறிப்பதுதாக் அதன் பொருள். மனிதர்கள் மட்டும் இறைவன் கொடுத்த வரப் பிரசாதங்களில் ஒன்று மனம் ஆகும். நமக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் என்ன? ஒன்றே ஒன்றுதான் அதுதான் இறைவனை நினைக்கும் மனம் ஆகும். உண்பது, உறங்குவது, மக்களை பெறுவது உலாவுவது முதலிய யாவும் விலங்குகளுக்கும் நமக்கும் பொதுவாக அல்லவா உள்ளது. ஆகவே மனிதர்களாகிய நாம் எந்த வகையில் விலங்குகளைவிட உயர்ந்தவன் என்ற வினா எழுகின்றது அல்லவா? " நான் யார்?" என் உள்ளம் யார், உடல், உயிர் எதற்கு? எங்கிருந்து வந்தோம்? எதற்காக பிறந்தோம்? பிறவியின் பயன் என்ன? குரு என்பவர் யார்? இறைவன் யார்? அவரை அறிவது அடைவது எவ்வாறு? என்பன போன்ற வினாக்களை உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு அவை பற்றி ஆழமாக நினைத்து தகுந்த விடைகளை அறிந்து அறவொழுக்கத்தில் நிற்பவன் தான் உண்மையான மனிதன், இல்லையேல் மனித உடம்பெடுத்த விலங்குதான்.மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் தான் மனம். அந்த மனத்தில் தெய்வீக மனேபாவம் தோன்றி இருந்தால் அவன மனிதன், இல்லை என்றால் அவன் எத்தனை அறிஞானாயினும் விலங்கோடு ஒப்பாவான், " உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்" என்கிறது ஒளவைக் குறள். இப்பிறவியின் பயன் இறைவனைக் காண்பாதும் அவரை அடைவதுமே ஆகும். மனத்தில் தோன்றும் எண்ணங்களை பாவம் என்றும் கூறுவதுண்டு. இந்த பாவத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவை பக்தி, சிந்தனை, நட்பு, பாசம், காதல், அன்பு, பகை, எண்ணம், மனோசக்தி, மனஉறுதி, நினைத்தல், அழுத்தம், யோசனை என்பன ஆகும், மனம் பாலைப் போன்றது. அது நீரிலும் விசத்திலும் அமிர்தம் எனப்படும் தேனிலும் சேரும், சேரும் இடத்திறகு தக்கவாறு மாறும் இயல்பை உடையதுதான் மனம். ஆகவே தான் மனத்தை புகழ்ந்தும், இகழ்ந்தும் பாடினார்கள் நமது பெரியோர்கள். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிறது சங்க நூல்,மனமே நண்பன் - மனமே பகைவன் என்கிறது கீதை." அறன் ஒன்றும் " தரு மனத்தான்" என்று மனத்திற்கு " திரு" என்ற அடைச் சொல் தருகிறார் கம்பர். சொர்க்கத்தை நரகமாக மாற்றவும், நரகத்தை சொர்க்கமாக மாற்றவும் வல்லமை படைத்தது மனம். அனுபவத்தின் ஆனந்தம் நிலவும், மனச்சக்தி, மனச் செயல், மனச் சாரம், என்று மூன்று வகையில் பாகுபாடு செய்து மனத்தை அறிதல் ேவ்ண்டும். இறைவனை அறிய , அடைய மனமே மார்க்கம் வழிகாட்டி, புலப்படுத்தும் கண்ணாடி, மனஒளி இறைவனை உருவகப்படுத்தவும், சிந்திக்கவும் தரிசிக்கவும் உதவுகிறது. பரிசுத்தமான மனச் சக்தி உள்ளொளியில் புலப்படுத்துகிறது. மனம் வெளிபடல் , வியாபித்தல், பங்கேற்றல் ஆகிய தன்மைகளால் மலர்ச்சி அடைகிறது. தன்னைத்தானே அலசிப்பார்த்து ஆய்ந்து சிந்தித்து, தெளிவுறுதல் வேண்டும். " மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - இனந்தூய்மை தூவா வரும்" - திருக்குறள் 455. மனத்தினுள் விளக்கொற்றி உன்னுவார் உள்ளதுள்ளார் - என்பார் நாவுக்கரசர். தேவையற்ற மனநிலைகளை மாற்றி இறைவனை நினைத்து, கிடைப்பதற்கு அரிதாகிய மனிதப் பிறவியின் பயனை அடைவோமாக. தெய்வீகச் சிந்தனையே மனோபாவம் ஆகும். " உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன் , உடம்பினுள்ளே உட்பொருள் கண்டேன் உடம்பிளே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினில் இருந்து யான் ஓம்புகின்றேனே" என்கிறது திருமந்திரப் பாடல் இறைவனை மனத்தில் நினைப்போம், மனோபாவமே எளிய வழிபாடு ஆகும், இந்த புனிதம் நிறைந்த நிலை மனோபாவம் என்பது இதன் மூலமாக மகேஸ்வரனைத் தரிசிக்கலாம், மாசற்ற கொள்கை மனத்தின் அடைந்தக்கால் ஈசனை காட்டும் உடம்பு. ஒளவை கூற்று. நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் என்கிறது பெரிய புராணம் மனோபாவங்களில் ஈசனை காணலாம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மன் ஒடுங்கினால் ஈசன் அருள் கிடைக்கும், இனி பிறவா நிலை கிட்டும் என்பது உறுதி. எனவே மனத்தினை ஒருங்கினைத்து தெய்வீக மனோபாவத்தினை வளர்த்து பிறவி பெருங்கடல் நீந்துவோம். நன்றி: அமைதி ஆன்மீகம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 18 பிப்ரவரி, 2015


எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:- 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்எவ்வளவு சுவையாக இருந்தாலும்உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும்பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும்பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும்முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக்கட்டி விடுங்கள். வேண்டாதசெலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால்எழுந்து விடுங்கள். ஒருநாளின்அலுவல்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள்சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக்குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும்காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும்உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ,கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். 13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள். 14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள். 15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். கசப்பான சம்பவங்களை திரும்ப திரும்ப நினைத்து அசைபோடவேண்டாம். 16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும். தேவையின்றி மற்றவர்களிடம் எதையும் பகிர வேண்டாம். 17. குடும்பம், தொழில் என்கிற எல்லையைக்கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள். 18. மாதம் ஒரு முறையாவது உங்கள்தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள். 19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள். 20. முடிந்த அளவு அடுத்தவர்க்கு உதவிடுங்கள். 21. சகிப்புத்தன்மை, பொறுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ~Leaders never stop learning