வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மனோபாவங்களில் மகேசனைக் காண்போம்


மனோபாவங்களில் மகேசனைக் காண்போம் " அரிது அரிது மாநுடராதல் அரிது" என்பார் ஒளவையார், மற்ற எல்லா பிராணிகளையும் விட மிக உயர்ந்த பிறப்பு மானிடப் பிறப்பு மட்டுமே ஆகும். " மற்ற உயிரை எல்லாம் மானிடம் வென்றதம்மா " என்பார் கம்பர், மனித வாழ்விற்கு அடிப்படையாக இருப்பதோடன்றி, மனிதனையே இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல் மனம். மனம்தான் மக்களை மாக்களிடமிருந்து உயர்த்தி காட்டுவது ஆகும். மனம் என்றால் என்ன? என்பதிலிருந்து மனோபாவத்தை பற்றி பார்ப்போம். " கடிகாரத்தின் முள் காலங்காடடிச் செல்வதற்க அதற்குள் ஒரு சுருள் விசை (ஸ்பிரிங்) இருப்பது போலவே நமது உடலுக்குள்ளும் ஓர் இயந்திரம் இயங்குகிறது, அதற்கு பெயர் "மனம்" என்று தபோவனம் தவத்திரு ஞானானந்தகிரி அவர்கள் கூறுகிறார், "மனம்" இச்சொல் நிலைபேறுடைய மனிதப்பிறவியின் தன்மையை உணர்த்தும் பெருமை மிக்க சொல்லாகும். மனம் என்பதை பிரித்தால் மன்- அம் என்று அமையும், மன் என்பது நிலைபேறு என்று பொருளைத் தரும், நிறை போற்றுவதற்குரிய பிறவி மனிதப் பிறவி மட்டுமே ஆகும். மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றி இருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்று இருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம், மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். ஆடு,மாடு முதலிய விலங்குகள் கால்நடைகள் எனப்படுகின்றன. மனிதனும் காலால் தானே நடக்கிறான்? மிருகங்களை மட்டும் கால்நடைகள் என்று ஏன் குறிப்பிடுகிறோம்? காலால் மட்டுமே நடப்பவை விலங்குகள் அவற்றுக்கு "மனநடை" " நா நடை", "ஓழுக்க நடை" முதலியன கிடையாது. நாநடை , ஓழுக்க நடை முதலியவைகள் உடையவன் உதாரணமாக நடை தவறி விட்டான் என்றால் கால்நடப்பதையா குறிக்கும்? இல்லை ஒழுக்க நடையைக் குறிப்பதுதாக் அதன் பொருள். மனிதர்கள் மட்டும் இறைவன் கொடுத்த வரப் பிரசாதங்களில் ஒன்று மனம் ஆகும். நமக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் என்ன? ஒன்றே ஒன்றுதான் அதுதான் இறைவனை நினைக்கும் மனம் ஆகும். உண்பது, உறங்குவது, மக்களை பெறுவது உலாவுவது முதலிய யாவும் விலங்குகளுக்கும் நமக்கும் பொதுவாக அல்லவா உள்ளது. ஆகவே மனிதர்களாகிய நாம் எந்த வகையில் விலங்குகளைவிட உயர்ந்தவன் என்ற வினா எழுகின்றது அல்லவா? " நான் யார்?" என் உள்ளம் யார், உடல், உயிர் எதற்கு? எங்கிருந்து வந்தோம்? எதற்காக பிறந்தோம்? பிறவியின் பயன் என்ன? குரு என்பவர் யார்? இறைவன் யார்? அவரை அறிவது அடைவது எவ்வாறு? என்பன போன்ற வினாக்களை உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு அவை பற்றி ஆழமாக நினைத்து தகுந்த விடைகளை அறிந்து அறவொழுக்கத்தில் நிற்பவன் தான் உண்மையான மனிதன், இல்லையேல் மனித உடம்பெடுத்த விலங்குதான்.மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் தான் மனம். அந்த மனத்தில் தெய்வீக மனேபாவம் தோன்றி இருந்தால் அவன மனிதன், இல்லை என்றால் அவன் எத்தனை அறிஞானாயினும் விலங்கோடு ஒப்பாவான், " உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்" என்கிறது ஒளவைக் குறள். இப்பிறவியின் பயன் இறைவனைக் காண்பாதும் அவரை அடைவதுமே ஆகும். மனத்தில் தோன்றும் எண்ணங்களை பாவம் என்றும் கூறுவதுண்டு. இந்த பாவத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவை பக்தி, சிந்தனை, நட்பு, பாசம், காதல், அன்பு, பகை, எண்ணம், மனோசக்தி, மனஉறுதி, நினைத்தல், அழுத்தம், யோசனை என்பன ஆகும், மனம் பாலைப் போன்றது. அது நீரிலும் விசத்திலும் அமிர்தம் எனப்படும் தேனிலும் சேரும், சேரும் இடத்திறகு தக்கவாறு மாறும் இயல்பை உடையதுதான் மனம். ஆகவே தான் மனத்தை புகழ்ந்தும், இகழ்ந்தும் பாடினார்கள் நமது பெரியோர்கள். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிறது சங்க நூல்,மனமே நண்பன் - மனமே பகைவன் என்கிறது கீதை." அறன் ஒன்றும் " தரு மனத்தான்" என்று மனத்திற்கு " திரு" என்ற அடைச் சொல் தருகிறார் கம்பர். சொர்க்கத்தை நரகமாக மாற்றவும், நரகத்தை சொர்க்கமாக மாற்றவும் வல்லமை படைத்தது மனம். அனுபவத்தின் ஆனந்தம் நிலவும், மனச்சக்தி, மனச் செயல், மனச் சாரம், என்று மூன்று வகையில் பாகுபாடு செய்து மனத்தை அறிதல் ேவ்ண்டும். இறைவனை அறிய , அடைய மனமே மார்க்கம் வழிகாட்டி, புலப்படுத்தும் கண்ணாடி, மனஒளி இறைவனை உருவகப்படுத்தவும், சிந்திக்கவும் தரிசிக்கவும் உதவுகிறது. பரிசுத்தமான மனச் சக்தி உள்ளொளியில் புலப்படுத்துகிறது. மனம் வெளிபடல் , வியாபித்தல், பங்கேற்றல் ஆகிய தன்மைகளால் மலர்ச்சி அடைகிறது. தன்னைத்தானே அலசிப்பார்த்து ஆய்ந்து சிந்தித்து, தெளிவுறுதல் வேண்டும். " மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - இனந்தூய்மை தூவா வரும்" - திருக்குறள் 455. மனத்தினுள் விளக்கொற்றி உன்னுவார் உள்ளதுள்ளார் - என்பார் நாவுக்கரசர். தேவையற்ற மனநிலைகளை மாற்றி இறைவனை நினைத்து, கிடைப்பதற்கு அரிதாகிய மனிதப் பிறவியின் பயனை அடைவோமாக. தெய்வீகச் சிந்தனையே மனோபாவம் ஆகும். " உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன் , உடம்பினுள்ளே உட்பொருள் கண்டேன் உடம்பிளே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினில் இருந்து யான் ஓம்புகின்றேனே" என்கிறது திருமந்திரப் பாடல் இறைவனை மனத்தில் நினைப்போம், மனோபாவமே எளிய வழிபாடு ஆகும், இந்த புனிதம் நிறைந்த நிலை மனோபாவம் என்பது இதன் மூலமாக மகேஸ்வரனைத் தரிசிக்கலாம், மாசற்ற கொள்கை மனத்தின் அடைந்தக்கால் ஈசனை காட்டும் உடம்பு. ஒளவை கூற்று. நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் என்கிறது பெரிய புராணம் மனோபாவங்களில் ஈசனை காணலாம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மன் ஒடுங்கினால் ஈசன் அருள் கிடைக்கும், இனி பிறவா நிலை கிட்டும் என்பது உறுதி. எனவே மனத்தினை ஒருங்கினைத்து தெய்வீக மனோபாவத்தினை வளர்த்து பிறவி பெருங்கடல் நீந்துவோம். நன்றி: அமைதி ஆன்மீகம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக