வியாழன், 26 பிப்ரவரி, 2015

பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார்


பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார் " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கணம் நின்று பணியச் சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றம்எரித்த தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே." சம்பந்தர் தேவாரம் - 1 மூவர்மற்றும் தேவர்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் நம்முடைய பாவங்கள் தொலைவதன் பொருட்டு நல்வினைகள் செய்வதற்கு அருள் புரிகின்றார் என்கிறார் திருஞான சம்பந்தர். " அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" - சம்பந்தர் தேவாரம் நாம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் நோய் மற்றும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த உண்மையை யாவரும் அறிவோம், இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உரிய வழியை தேடாமல் இருப்பது நம்முடைய குறையே ஆகும். புண்ணிய செயல்களை செய்து சிவபெருமானுடைய திருவடியை போற்றுவோம், இவ்வாறு செய்தால், நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை. நாம் பலபிறவிகளில் செய்துள்ள மொத்த தீவினைகளின் பயனை அனுபவிப்பது என்பது இயலாத ஒன்றாகும். நாம் தாங்க மாட்டோம். என்பது சிவபொருமானாருக்கு நன்கு தெரியும். இதன் பொருட்டு நல்வினைகளை செய்து பாவங்களை தீர்ப்பதற்கு பலப்பல சந்தர்ப்பங்களை இறைவர் நமக்கு அருளியுள்ளார். இந்த அரிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாம் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும். புண்ணிய செயல்களில் மனம் பழகப்பழக பாவங்கள் செய்யும் நிலை இல்லாமல் போகும். பாவச் செயல்களைச் செய்வதற்கு மனம் கூசும், இப்படி பாவங்களிலிருந்து விலகி, புண்ணியச் செயல்களில் மட்டும் ஈடுபடும் ஆன்மாக்களின் மீது இறையருள் தானே பதியும். இறையருள் பதிந்த ஆன்மா பிறவா நிலையை அடையும். இதனையே "முத்திப்பேறு" என்கிறோம். பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற கைதி, தன் தவற்றை உணர்ந்து சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டால் அவனுடைய சிறைவாசம் குறைக்கப்படுவதுபோல் நம் செய்த பாவச் செயல்களை உணர்ந்து நல்லொழுத்துடன் வாழ்ந்தால் இறைவர் நம் பாவங்களை குறைத்து புண்ணியச் செயல்களாக மாற்றுவார். அநேக பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை தவறு என்றுணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளைச் செய்தால் இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்கும் என்பதை மேற்கண்ட பாடல் வாயிலாக நாம்அறியலாம். இனி நம் பாவங்கள் தீர்தர செய்ய வேண்டிய சில நல்வினைகள் யாவை என்பதைக் காண்போம். 1. சிவாலயத் திருப்பணிகள்: சிவபெருமானார் எழுந்தருளியுள்ள சிவலாயங்களை புதுப்பித்தல், மிக மேலான நல்வினை - புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்ததுமான சிவலாயங்களை திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுப்பது தலையான நல்வினையாகும். இதனை வலியுறுத்தும் பதினொராம் திருமுறைப்பாடல். "காணீர் கதியொன்றும் கல்லீர் எழுந்தஞ்சும் வல்ல வண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. - பட்டினத்தடிகள் மும்மணிக்கோவை மருதப்பெருமானாராகிய சிவனாரின் திருவருளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஐந்து நல்வினைகளை (புண்ணியங்களை) செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்து அம்மயமான பட்டினத்து அடிகள் 1. திருஐந்தெழுத்தினை ஓதுதல் 2,சிவலாயத் திருப்பணிகளை செய்தல் 3, சிவபெருமானுடைய திருப்புகழினை பேசி மகிழ்தல் 4,உருத்திராட்சம் அணிந்து கொள்வது 5, உடலில் திருவெண்ணீறு அணிந்து மகிழ்தல் 2, சிவலாயத்தை தூய்மை ெசெய்தல்: சிவபெருமானார் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆலங்களை பெருக்குதல், மெழுகுதல், தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தல் ஆகிய நல்வினை செயல்களாகும். அன்று மலர்ந்த பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தல், வாயாரப் புகழ்ந்து பாடுதல், தலையால் வணங்குதல், செலவில்லாத புண்ணியச் செயல்களாகும், இவற்றை இயம்பி நிற்கும் அரிய தமிழ் திருமுறை பாடல். "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. " திருநாவுக்கரசர் தமிழ் திருமுறை - 6 3, மலர் தொண்டு செய்தல்: சிவலாயத்திற்கு வேண்டிய பூக்களை கொடுத்து உதவுதல் மேலான புண்ணியமாகும். ஆலயத்தில் உள்ள பூக்களை அதிகாலையில் எடுத்து, மாலையாக தொடுத்தளிக்கலாம். நம் வீட்டில் பூச்செடிகள் வைத்தும், பூக்கும் பூக்களை ஆலயத்திற்கு அளிக்கலாம், நறுமணமுள்ள மலர்களையே ஆலயத்திற்கு அளிக்க வேண்டும், " நறுமாமலர் கொய்து" என்பார் அப்பர் அடிகள். 4, இறைவருடைய திருநாமத்தைச் சிந்தித்தல்: " நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. - சம்பந்தர் தேவாரம் 3 "பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே" - நாவுக்கரசர் நம்முடை ய தீவினைகளை நீக்கி, நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திருநாமத்தை சிந்தித்தல் (செபித்தல்) அவசியமாகும். பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பாவங்கள் தொலைந்து நல்வினை பெருக உரிய வழியும், எளிய வழியும் இதுவே எனலாம். ஒரு நாளைக்கு காலை, நண்பகல், மாலை இரவு என நான்கு வேளைகளிலும் ஓதி நலம் பெறலாம். 5. சிவலாய வழிபாடு மற்றும் சிவத்தல யாத்ததிரை செய்தல்: பெற்ற பயன்களில் தலையாயது சிவபெருமானாருடைய ஆலயத்தை வலம் வந்து மலர் தூவி வழிபடுவது என்கிறார் அப்பர் சுவாமிகள். "ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். - நாவுக்கரசர் குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது ஆலயம் சென்று தொழ வேண்டும். என்பது அப்பர் பெருமானார் அருள்வாக்கு. மனிதன் தவிர மற்ற உயிரிகள் இதனை செய்ய இயலா. மனிதப் பிறவியில் மட்டுமே இது முடியும். "நாடு நகரமும் நல்திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே, - திருமூலர் திருமந்திரம் சிவத்தலயாத்திரை செய்வது நல்வினை பெறுவதற்கு சிறந்த வழியாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பட்டினத்து அடிகள் போன்ற பலரும் சிவத்தல யாத்திரை செய்துள்ளதை நாம் அறிவோம், 6, சிவலாயத்தில் விளக்கேற்றல்: விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்" திருநாவுக்கரசர் நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்புல்லர்,ஆகியோர், சிவலாயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணம் வாய்லாக அறியலாம், கலய நாயனார் சிவலாயத்தில் " குங்குலியம்" எனப்படும் நறுமணத்தை அளிக்கும் திருத்தொண்டினைச் செய்து நலம் பெற்றார், இவ்வாறு இயன்ற சிவத்தொண்டுகளை செய்து நல்வினைகளைப் பெறலாம். 7. தமிழ் வேதப் பதியங்களை பாராயணம் செய்தல்: மிகச் சிறந்த புண்ணியச் செயல் இதுவும் ஒன்றாகும், நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் ஞான சம்பந்தர். " ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசமபந்தன்உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே." சம்பந்தர் பதிகப பாராயணமும் மனிதப் பிறவியில் தான் இயலும். பேசும் திறம் பெற்ற நாம் இதை செய்தே ஆக வேண்டும். "...... வருங்கலை ஞான சமபந்தன் தமிழின் ஒலிகெழுமாலை யென்றுரை செய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார் மேல் மெலிகெழுதுயர் அடையா வினைசிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே". கலைஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருக்கழுமலப்பதிகத்தை உண்மையான அன்புடன் நினைந்து பாராயணம் செய்பவர்கட்குச் சோர்வை அளிக்கும் துன்பங்கள் வாரா. வினைகள் அழியும். விண்ணவர்கள் மேம்பட்ட ஆற்றலை பெறுவார்கள். " தமிழ் நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை பாடுவார்க்கு இல்லை பாவமே." 8. அடியார் தொண்டு செய்தல்: சிவபெருமானாரை இடைவிடாது மனத்தில் நினைந்து வாழும் சிவனடியார்களை " நடமாடக்கோயில்" என்கிறார், திருமூல நாயனார். இத்ததையவர்கட்கு எந்த உதவியைச் செய்தாலும் அது இறைவருக்கு சென்று சேரும் என்கிறார். "நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." - திருமந்திரம் மெய்பொருள் நாயனார் எப்படி வாழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறுவதைக் காண்போம். "தேடியமாடு நீடுசெல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடியமனத்தோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார். பெரியபுராணம் திருமறை 12 சித்த்தை சிவன்பால் வைத்த சிவனருட் செல்வர்கள் மெய்பொருள் நாயனாரிடம் ஏதேனும் வேண்டும் என்று வந்தபோது குறைவின்றி கொடுத்து வாழ்ந்தார் என்கிறது , இத்துடன் சிவனாடியார் பிள்ளைக்கரி கேட்டபோது தன் பிள்ளையே கறியாக்கி சமைத்து கொடுத்த சிறுத்தொண்ட நாயனார் வழியாகவும், சிவனாடியார் தொண்டே மகேசன் தொண்டு வாழ்ந்த அப்பூதியடிகள் வரலாற்றின் மூலம் சிவனடியார் தொண்டின் பெறுமையை நன்கு அறியலாம். 9. சான்றோர்களுடன் மட்டுமே சேரவேண்டும்: சான்றோர்களுடன் தான் உறவு வேண்டும் என்று வள்ளலார் கூற்று ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதிலிருந்து சான்றோர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அறியலாம் "வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்" திருமறை 4 புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும். மனம் நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும், நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும் வழியைத்தான் திருநாவுக்கரசர் "செந்நெறி" என்கிறார். இத்துடன் சுந்தரரும் " உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே." என்கிறார். 10. ஏழை எளியவர்கட்கு உதவுதல்: ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன் காரணம் ஏழைகட்கு உதவுவதற்குத்தான் என்கிறார் திருநாவுக்கரசர் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்றும் கூறியுள்ளார, அப்படி தேவைக்கு மேல் சேர்ந்துள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்காதவர்கட்குக் கடும் நரகங்களை வைத்துள்ளார் இறைவர் என்றம் அருளியுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் படைத்து நம்மிடம் தேவைக்கு மிஞ்சிய செல்வத்தையும் அளித்து நல்வினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆம். இதனால் நம் பாவங்கள் தீரும். நாம் செய்த தீவினைகள் நம்மை வந்து தீண்டா. இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் நாவரசரின் அரிய பாடல் " இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பர் தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்," - அப்பர் தேவாரம் " யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" - திருமூலர் திருமந்திரம் கொடுத்துக் கொடுத்துப் பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆசை அழியுமானால் தீவினை செய்யாமல் வாழலாம். 11. பிராணிகட்கு உணவிடுதல்: உலகத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும்தாவரங்கள் ஆகிய யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்படி இறைவர் படைத்துள்ளார். மனித வாழ்வில் பிராணிகள் பங்கு அதிகம். இவற்றிக்கு அன்றாடம் ஒருபிடி உணவு கொடுப்பது பாவங்கள் தீரும் வழியாகும். " யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை" - திருமூலர் திருமந்திரம் கூறும் வாக்கு பிராணிகளில் பசு மட்டும் அல்ல, காகத்திற்கு உணவிடுவது நம் இந்துமதத்தின் ஒரு மரபாகவே உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும் இதன் நோக்கம் தான்.எனவேதான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனமாக ஒவ்வொரு பிராணிகளை இணைத்துள்ளார்கள் முன்னோர்கள் 12. தாவரங்கள் வளர்த்தல்: உலகம் நலமாக திகழ்வதற்கு தாவரங்கள் பங்கு மிகமிக அதிகமாகும். உலக உயிர்கள் வாழ்வதற்கு இவற்றின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுவாசிக்கும் காற்று முதல் உயிர் வாழ்க்கைக்கு தேவையான யாவற்றையும் தாவரங்கள் தான் நமக்கு தருகின்றன. இதனை உணர்ந்த ஞானிகள் தாவரங்களைப் போற்றி பாதுகாப்பது பெரும் புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். "கரகத்தால் நீர்அட்டி காவினை வளர்ப்பீர்" - திருமூலர் திருமந்திரம் நான்காம் நூற்றாண்டிலேயே ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழர்களின் தொலை நோக்கு பார்வையைப் பாராட்ட வேண்டும். ஓவ்வொரு சிவாலயத்திலும் "தலமரம்" என்று சொல்லி மரங்களை தெய்வமாகவே போற்றியுள்ளதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும், மரம் வளர்ப்பது பாவங்களை தீர்க்கும் நல்வினையாகும். 13, உலக நன்மைக்கு வேண்டுவது: இறைவருடைய கருனையால் நடத்தப்படும் இந்த உலகமே இறைமயம் தான். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் மனதால் வேண்டவேண்டும், நாம் நலமாக வாழ்வோம். உலகத்தில் நாமும் ஒருவர்தான், இதனை விளக்கும் பாடல் "வையம் நீடுக மாமழை மன்னுக மெய்விரும்பிய அன்பர் விளங்குக சைவநன்னெறிதாம் தழைத்து ஓங்குக தெய்வ வென்திருநீறு சிறக்கவே" வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" பன்னிரு திருமுறையில் சேக்கிழார் அவர்களின் கடைசி வாழ்த்து பாடல் வழிதெரியாதவர்கட்கு வழிகாட்டலாம். அறியாமையில்உள்ளவர்கட்கு நல்ல அறவுரைகள் வழங்கலாம், பிரிந்த இருவரைச் சேர்த்து வைக்கலாம், நடைபாதையில் கிடக்கும் வேண்டாத தீங்குவிளைவிக்கும் பொருட்களை அப்புறப் படுத்தலாம். இனிய சொல்லே பேசுதல், இப்படி செலவில்லாத ஏராளமான நல்வினைச் செயல்களைச் செய்யலாம், நாம் தவறுகளைச் செய்யும் பொழுது இறைவர் மனசாட்சியாய் இருந்து " இதுதவறு" என்று உணர்த்துகிறார். ஆணவம் மற்றும் பேராசை காரணமாக நாம்தான் அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறோம், " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி" என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் மற்ற உயிர்கட்கு தீமையைச் செய்துவிடக் கூடாது, கருணை நிறைந்த ஆன்மா இறைவருடைய கருணையை எளிதில் பெற்றுவிடுகிறது, செல்வம் நிறைந்தவர்கள் , பொருட் செல்வங்களாலும், அதனால் முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவை மனப்பான்மையையும் கொண்டு பிறர் மனம் நோக வண்ணம் இனிது பேசியும் , உதவிகள் செய்தும், முடிந்த அளவு உழவாரப்பணிகள் செய்து, பாவச்செயல்ளை தீர்க்க வல்ல புண்ணிச் செயல்கள் செய்து, நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரையும் நலமுடன் வாழச்செய்து, இறையருளைப் பெற்று இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணிய செயல்களே என்பதை அறிந்து செயல்படுவோம். திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக