புண்ணாக்குச் சித்தர் பாடல்
இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின்
சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர்
ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ
பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று
அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி
மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர்
அல்லது புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் வந்ததற்கான காரணம்
புலப்படவில்லை.
இவரது பாடல்கள் ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை.
இவர் இப்படி முன்னிறுத்திய ஞானம்மா யாரென்பதைத் தம் முதல் பாட்டிலேயே தெரிவிக்கின்றார்.
‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங்
காணவென்று தவித்திருந்தேனே’
என்று கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை இவர் ஞானம்மா என்று
குறிப்பிடுவது புலனாகிறது.
அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு
கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார்.
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்றும்,
‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்றும் கூறும் சித்தர்
வாக்கியத்தை,
“காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா
ஊத்தச் சடலமிது
உப்பிலாப் பொய்க்கூடு
இப்பாடல் ‘கசமாலம்’ என்ற சென்னைத் தமிழ் வழங்குவதிலிருந்து
இவர் சென்னைப் பகுதியில் நடமாடிய பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ
என்றும் எண்ணத் தோன்றுகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்
கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும்.
20 கண்ணிகள் ஒரு பாடலும், 45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச்
செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின்
நடையையும் ஒப்புநோக்கக் கால வேறுபாடு தெள்ளெனப் புலப்படும்.
ஆகவே, முப்பூச் சுண்ணச் செயநீர் பாடிய புண்ணாக்குச் சித்தரும்,
மனோன்மணியாளைப் பாடிய புண்ணாக்குச் சித்தரும் வேறு வேறானவர்
என்பது ஏற்பதற்குரியது. இப்பாடல் தொகுதி பிற்காலப் புண்ணாக்குச்
சித்தருடையது.
தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே. 1
அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3
விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4
தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார். 5
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம். 6
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே. 7
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே. 8
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள். 9
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி. 10
பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி. 11
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி. 12
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி. 13
கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே. 14
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி. 15
காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே. 16
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி. 17
சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன. 18
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு. 19
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக