வியாழன், 27 அக்டோபர், 2022

மானிட வாழ்வின் முக்கியத்துவம்

 மானிட வாழ்வின் முக்கியத்துவத்தை ரிஷபதேவர் தனது புதல்வர்களுக்கு எடுத்துரைத்தல்.

மாமுனிவரான ரிஷபதேவர் தனது புத்திரர்களுக்கு அறிவுறுத்தினார்: “அன்பார்ந்த மகன்களே! இப்பிறவியில் நீங்கள் பெற்றுள்ள அற்புதமான சரீரத்தை நாய்களையும் பன்றிகளையும் போன்று இன்பம் காண பயன்படுத்தாமல், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை உட்கொள்ளும் பன்றிகளே புலனின்பத்திற்காக வாழ வேண்டும், உயர்நிலையில் வாழும் மனிதன் தாழ்ந்த உயிரினங்களின் வழி நடக்கக் கூடாது.”

    அனைத்து ஜீவன்களும் மூவகை பௌதிகத் துன்பங்களுக்கு உட்பட்டவை; இதில் சரீரம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பங்களும் அடங்கும். தாங்கள் துன்பப்படுவதை மிருகங்களால் அறிய முடியாது. ஆனால், மனிதர்களால் அறிய முடியும். தான் துன்பப்படுவதை உணராதவன் மிருகமாகவே கருதப்பட வேண்டும். வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் கொல்லப்பட இருப்பதை மிருகங்கள் உணர்வதில்லை. ஆனால், மனிதர்களாகிய நாம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களால் அவதியுறுகிறோம் என்பதை உணர வேண்டும். இத்துன்பங்களை போக்கும் வழியை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.


 நமது பிறப்பு முதலே நாம் துன்பப்படுகிறோம். சிசுவாக தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் குழந்தை துன்பப்பட்டது. தாய் குழந்தையின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றபோதும், குழந்தை ஏன் அழுகிறது? துன்பப்படுவதால்தான். மூட்டைப்பூச்சி கடிக்கலாம், வயிற்றுவலி போன்ற வியாதிகளால் அவதிப்படலாம். எவ்விதத்திலும் துன்பம் இருக்கவே செய்கிறது. பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது கட்டாயத்தின் பேரில், குழந்தை விருப்பமில்லாத கல்வியைக் கற்க நேரிடுகிறது. நமது வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் தொடர்வதைக் காணலாம். பொதுப்படையாகப் பார்க்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்கள் புத்தி மிகுந்தவையல்ல. ஆகையால், ஏன் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகிறோம் என்பதை அறியாமலேயே அவை தொடர்ந்து துன்பப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாம் துன்பப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கான தீர்வினை அறிந்து மேன்மையடைய வேண்டும்.

தகாத உடலுறவு, புலால் உண்ணுதல், போதை பழக்கம், சூதாட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது வாழ்வதற்கான அடிப்படை விதிகளாகும்; இவ்வாறாக நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டால், படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுவோம். ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், “வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்” என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.ஆன்மீக உலகம் வறட்சியானதோ அறிந்துகொள்ள முடியாததோ அல்ல. முன்னரே தெரிவித்தவாறு அங்கே பலவகையான மகிழ்ச்சிகள் உண்டு. நாம ஸங்கீர்த்தனத்தில் நடனமாடுவதால் நாம் பெறும் ஆனந்தம் சொர்க்கத்தில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தின் ஒரு பகுதியே. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் இளமை மிகுந்தவர்கள்; உண்மையில் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துன்பங்கள் அங்கு இல்லை. ஆன்மீக உலகிலுள்ள நமது உண்மையான தன்மைகளான அளவற்ற ஆனந்தம், அறிவு, மற்றும் நிரந்தர வாழ்க்கையைப் பெற விரும்பினால், புலனின்பங்களிலும் பன்றித் தொழுகைகளிலும் நாம் நமது நேரத்தை விரயமாக்கக் கூடாது. ஞான உணர்வை பெருக்கிக் கொள்வதற்கான வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள வேண்டும். 

திருச்சிற்றம்பலம


புதன், 19 அக்டோபர், 2022

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

  திருவருட் பயன் பாடல் எண் 54

ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்

தான் உணர்வோடு ஒன்றாம் தாம்


     உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது.  உடம்போடு கூடிய உயிர்.  அறிவு வடிவான திருவருளோடு ஒன்ற பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல் போன்றதாகும்.

  உடம்பில் கலந்துள்ள உயிர்  தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும் கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளது என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்

  அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் (2)) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்

ேவற்றுமை படாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்

  தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும் நிற்றல். 

  உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனியே ெசயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை. 

  திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும் உயிர் உணர வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். 

மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, 

உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்)  பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது. 

உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்

 கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

  உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.

 கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது. 

திருச்சிற்றம்பலம்

சனி, 15 அக்டோபர், 2022

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


செவ்வாய், 11 அக்டோபர், 2022

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்







சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக!

 இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

கொல்லிமலைஆன்மீக பயணம்

 திருநாவுக்கரசர் திருச்சபையின் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் மூலம் ஒரு ஆன்மீக பயணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர்  மற்றும் மாசி பெரியசாமி எட்டுக்கை அம்மன் வழிபாடு நிமித்தமாக பயணம் அமைக்கப்பட்டு 4.9,22 அன்று பயணம் மன்ற அடியார்களோடு சென்ற செய்தியினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சென்றது ஆன்மீக பயணமாக இருந்தாலும் இது ஒரு மலை வாஸஸ் தலமாக இருந்தபடியால் அருமையான பொழுதுபோக்கு பயணமாகவும் அமைந்தது.



 இங்குள்ள சுற்று சூழல் ஏலகிரி சதுரகிரி மற்றும் மேகமலை போன்றே அமைந்துள்ளது.70 பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. முதலில் அங்குள்ள சிற்றறிவில் குளியல் செய்து அறப்பளீஸ்வரர் தரிசணம் ெசய்தோம்.மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறப்பளீஸ்வரர் கோவில்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.  திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்

கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.

கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. இதுவே எட்டுக்கை அம்மன் என்று மலையின் காவல் தெய்வமாக நமக்கு காட்சி தருகிறது. கிராமக் கோயில் வழக்கமாக மலையில் சிறந்து விளங்குகிறது. அதுவும் தரிசணம் செய்தோம்.



கொல்லிமலையின் மிக சிறப்பாக அமைந்தது் இங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அது சென்ற சில தினங்களின் தொடர் மழையான காரணத்தால் சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் அதற்கு அடுத்தபடியாக உள்ள நம்ம நீர் வீழ்ச்சியில் அடியார்கள் அனைவரும் மனம் மகிழ்ந்து குளித்து மனம் மகிழ்ந்தனர். நாங்கள் சென்ற நேரம் சற்று கூட்டம் குறைவாக இருந்தபடியால் மிகவும் வசதியாக ரம்மியமான குளியலாக குளித்து புத்துணர்வு பெற்றோம். குளித்து இறைவனை வேண்டிம் முகத்தான் எல்லா அடியார்களும் சேர்ந்து தேவார திருவாசகப் பதிகம் பாடி இறைவனை வணங்கி மகிழ்ந்து சுற்றுலாவினை முடித்து கீழே இறங்கி, நாமக்கல் அடைந்து அங்குள்ள இராம பக்தர் ஸ்ரீ அனுமன் கோவில் தரிசனம் பெற்று ஆன்மீக பயணம் முடித்தோம்.








திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு

 

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு


தற்காலத்தில் கிரகங்களும் நட்சத்திரங்களும் (நாளும் கோளும்) சரியில்லை என்று வருத்தப்பட்டு அலைந்து திரிந்து இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதனால் சிவன் கோவில்களில் நவக்கிரங்களின் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அனுதினமும் காணும் உண்மை. இது பற்றிக் கடவுளைக் கண்டவர்கள் கூறியுள்ள உண்மைகள் யாவை என்பதை காண்போம்.


"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர் த.வே.2


தற்காலத்தில் மக்கள் கோள்கள் தான் தங்களுக்கு நன்மையைச் செய்யும் என்று நினைத்து அவற்றையே பெருந்தெய்வமாக கருதி (முழுமுதற் பொருளாக) வழிபட்டும் வருகிறார்கள். இது முற்றிலும் பொருந்தாத செயலாகும்.

கோள்கள் யாவும் தமக்குவமை இல்லாத சிவபெருமானாரை வணங்கியே கிரகப்பதங்கள் பெற்றுள்ளன. இவை யாவும் சிவபெருமானாருடைய ஆனையின்படி செயல்படக்கூடியவை என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்


" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்


பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் நவக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யா. மேலும் நமக்கு நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்


" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ........... ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்


சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

போலிவேடதாரிகளை நம்பி வேண்டாப் பொருளற்ற சடங்குகளைச் செய்து காலத்தையும், செல்வத்தையும் வீண் செய்ய வேண்டாம். கடவுள் நிலையறிந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ளனவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


திருமுறைப் பாடல்கள் பாடியே இறைவரை நாம் வணங்க வேண்டும். நமக்கு பசி வந்தால் நாம் தான் சாப்பிட வேண்டும். நமக்கு நோய் வந்தால் நாம் தான் மருந்து உட்கொள்ள வேண்டும் நமக்கு தாகம் எடுத்தால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைப்போல நம்முடைய தீயவினைகள் நீங்கி நல்வினை பெருகி நலம் பெறுவதற்கு நாம்தான் பாடிப்பரவ (வணங்க ) வேண்டும்.


"பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார் வினை ஓல்லையே" .............. ஞான சம்பந்தர் தி,முறை 1


உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிகள் உள்ளன. அவற்றுள் பேசும் திறம் பெற்றுள்ளவன் மனிதன் மட்டுமே. அதனால் வாயினால் பாடி வணங்குவதுதான் நலம் தருவதாகும்.

" நீரார் சடையானை நித்தல் ஏத்துவான்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே" .................... ஞான சம்பந்தர் தி.மு. 1


ஒன்பது கோள்களும் சிவபெருமானாரை வழிபட்ட தலங்கள் பற்றியும், அத்தலங்களுக்குரிய பதிகங்களையும் " தமிழ் மாலைகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் " எனும் நூலில் காணலாம்.


பொதுவாக மக்கள் துன்பங்கள் வரத் தொடங்கும் பொழுது கிரகங்கள் பற்றியும், தாங்கள் வாழுமிடங்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

" நோய்எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" எஎன்பது திருக்குறள்


பிற உயிர்கட்கு ஏற்கனவே நாம் செய்துள்ள துன்பங்கள்தான் இப்பொழுது நமக்கு வருகின்றன என்பதை தான் மறுக்க முடியாத உண்மை.


"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையினால் முடிந்தது" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திருமந்திரம்


எந்த வகையில் துன்பங்கள் வருகின்றனவோ அந்த வகையில் முற்பிறவிகளில் நாம் பிற உயிர்கட்குத் துன்பங்கள் செய்கின்றோம் என்று உணர வேண்டும், இப்பொழுது அவ்வகையில் புண்ணியங்களைச் செய்துவிட வேண்டும்.


நாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது இன்பங்களை அனுபவித்து வருகின்றோம். புண்ணியம் முடிந்து விட்ட பொழுது, துன்பங்கள் தொடர ஆரம்பிக்கின்றன.ஆதலால், அன்றாடம் புண்ணியங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும் ( வங்கியில் நம் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே இருப்பது போல)

விதைத்தைத் தான் அறுவடை செய்கிறோம். முள்ளை விதைத்தால் நெல்லை எதிர்பார்த்தால் கிடைக்காது தானே? புண்ணியத்தால் நற்செயல்களால் நலன்கள் பல பெறலாம் இதுவன்றி வெற்றுச் சடங்குகளால் பெற்றுவிட முடியாது.


எங்குச் சென்றாலும் நம்முடைய நிழல் நம்மைத் தொடர்வது போலு, நாம் செய்யும் நல்லனவும் தீயனவும் நம்மைத் தொடர்ந்து வரும். இதை உணர்ந்து விட்டால், போலித் துறவிகளிடம் சென்று ஏமாற மாட்டோம். ஏழைகட்கு உதவும் செல்வந்தர் நீண்ட நன்மையை தேடிக் கொள்கிறார். என்பதை மனதில் கெர்ள்ள வேண்டும், நாம் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்வதன் பொருட்டுப் பிற உயிர்கட்கு கனவிலும் தீமையை நினைக்க க் கூடாது. அனுதினமும் " சிவாயநம" எனும் திருஐந்தெழுத்து மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலி நலமாக வாழலாம் என்பது ஞானசம்பந்தர் சொல்வது போல் உண்மை. இவர்கள் வானில் அரசாழ்வார் என்பது சம்பந்தரின் கட்டளை,


திருச்சிற்றம்பலம்

நன்றி: தமிழ் வேதம்